Published : 08 May 2015 10:24 AM
Last Updated : 08 May 2015 10:24 AM
மழையின் பெருமையைப் பேச அக்கினி வெயிலை விடவும் பொருத்தமான தருணம் ஏது? தமிழகமே இன்று வானம் பார்த்த பூமியாகிவிட்ட நேரத்தில் மழை மேலும் மேலும் அரிய பொருளாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், தமிழகம் மட்டுமல்ல, உலகமே வானம் பார்த்த பூமிதான் என்று வள்ளுவர் முன்பே சொல்லியிருக்கிறார்:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
மழையைப் போற்றியது மட்டுமல்ல; வசைபாடவும் செய்திருக்கிறார்கள். கெடுப்பதும் மழைதான் கொடுப்பதும் மழைதான் என்கிறார் திருவள்ளுவர். சங்க இலக்கியத்தில் வரும் தோழியோ ‘வம்பு பிடித்த மழை’ என்று மழையை வைகிறாள்.
பொருள் வயின் தலைவியைப் பிரியும் தலைவன் ‘கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவேன்’ என்று உறுதியளித்துவிட்டுப் பிரிகிறான். கார்காலம் வருகிறது. மழை பெய்ய ஆரம்பிக்கிறது. அதைத் தொடர்ந்து கொன்றைப் பூக்கள் பூக்க ஆரம்பிக்கின்றன. ஆனால், தலைவன் வரவில்லை. இதைக் கண்டு மனம் வாடும் தலைவியைத் தேற்றுவதற்காக ‘கார்காலம் இன்னும் வரவேயில்லை. இது வம்ப மாரி.
இதைக் கண்டு கார்காலம்தான் வந்துவிட்டதோ என்ற அறியாமையில் கொன்றைப் பூக்கள் பூக்கின்றன’ என்கிறாள் தோழி. உரிய காலத்தில் பெய்யாத மழையை வம்ப மாரி என்று சொல்லும் வழக்கு இருந்திருக்கிறது. இதுபோல் ஒரு தோழியோ தலைவியோதான் ‘வம்ப மாரி’ என்ற சொல்லைத் தமிழுக்குத் தந்திருக்க வேண்டும்.
அந்தப் பாடல்:
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா வளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிண ரூழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே.
(குறுந்தொகை-66)
மழைத் தமிழ் அடுத்த சில வாரங்கள் தொடர்ந்து பொழியும்!
சொல் தேடல்
‘யூ-னோ-ஹூ’வுக்கு இணையான தமிழ்ச் சொல்லைப் பலரும் சரியாகக் கணித்திருந்தார்கள். பொருத்தமான வேறு சொற்களையும் வாசகர்கள் அனுப்பியிருக்கிறார்கள்.
பரவலாகப் பயன்படுத்தப்படும் சொல்: மேற்படியான். பேச்சு வழக்கில் மேப்படியான். மேற்படி ஆள், மேற்படி ஆசாமி போன்ற சொற்களையும் பயன்படுத்தலாம். ‘மேற்படியான்’ என்ற சொல்லைக் கணித்தவர்கள்: ம. அஹமது நவ்ரோஸ் பேகம், கே.எஸ். முகமத் ஷூஐப், பீ. காதிர் நிசாம், கோ. மன்றவாணன்.
பெண்ணைக் குறிப்பதற்கு ‘மேற்படியாள்’ என்ற சொல்லையும், இரண்டு பாலுக்கும் பொதுவாக ‘மேற்படியார்’ என்ற சொல்லையும் பயன்படுத்தலாம்.
‘புள்ளிக்காரன்’ என்ற சொல்லை மீனா பாலன் அனுப்பியிருக்கிறார். ‘ஆக்கதா’ என்ற சொல் முஸ்லிம் மக்கள் சிலரிடம் மட்டும் புழக்கத்தில் உள்ளதாக கே.எஸ். முகமத் ஷூஐப் தெரிவிக்கிறார். தவிர, ‘ஆசாமி வந்தான். நான் பாட்டுக்கும் பேசாம வந்துட்டேன்’ என்று சொல்வோமல்லவா, இதில் ‘ஆசாமி’ என்பது கிட்டத்தட்ட ‘யூ-னோ-ஹூ’வுக்கு இணையான சொல்தான். ‘இன்னார்/ இன்னான்’ ஆகிய சொற்களைப் பரிந்துரைத்து கீழ்க்கண்ட குறளை மணி வேலுப்பிள்ளை மேற்கோள் காட்டியிருக்கிறார்:
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.
‘தெரியுதா, மட்டுப்படுதா’ போன்ற பயன்பாடுகளை ஆர். பாலமுருகனும் கல்யாண கிருஷ்ணனும் அனுப்பியிருக்கிறார்கள். ‘யாரைச் சொல்றேன்னு தெரியுதா? அவனேதான்’ என்பதும் ‘யூ-னோ-ஹூ’வுக்கு இணையானதுதானே!
அடுத்த சொல் தேடலுக்கான கேள்வி:
குற்றச் சம்பவம் போன்ற ஒன்று நடந்த சமயத்தில் தான் வேறு இடத்தில் இருந்ததாக ஒருவர் முன்வைக்கும் சாட்சியம்தான் ‘அலிபை’ (alibi). இந்தச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment