Published : 24 May 2015 11:17 AM
Last Updated : 24 May 2015 11:17 AM
திருட்டு டிவிடி மாஃபியாவுக்கு எதிரான போராட்டம் சற்றே சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புத் தனிப்படையை தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்படுத்தியுள்ளது. தமிழகக் காவல் துறையின் திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவில் டி.ஐ.ஜி-யாகப் பணியாற்றி, ஓய்வுபெற்றுள்ள ஜான் நிக்கல்சனுடன் பேசியதிலிருந்து…
“திருட்டு டிவிடியை ஒழிக்க முடியவில்லை என்றால் தமிழ் சினிமாவை மட்டுமல்ல, சினிமா தொழிலை நம்பியுள்ள பல லட்சம் குடும்பங்களையும் காப்பாற்ற முடியாது. எனவேதான் திருட்டு டிவிடிக்கு எதிரான சிறப்புத் தனிப்படை உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து ஓய்வுபெற்ற 32 காவல் துறை ஆய்வாளர்கள் இந்த சிறப்புப் படையில் உள்ளனர். தங்களது மாவட்டங்களில் திருட்டு டிவிடிகள் தயாரிக்கும் இடங்கள், அவற்றை விற்பனை செய்யும் கடைகள், பின்னணியில் உள்ளவர்கள்குறித்த தகவல்களைச் சேகரித்து இவர்கள் எனக்குக் கொடுப்பார்கள். நாங்கள் அங்கு சென்று தனியாகச் சோதனை நடத்த முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட, மாநகரக் காவல் துறை அதிகாரிகள், சிபிசிஐடி திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவினர் ஆகியோருக்கு இதுபற்றிய தகவலைத் தெரிவித்து, அவர்களுடன் இணைந்து சோதனை நடத்துவோம். காவல் நிலையங்களிலும் புகார் செய்வோம்.
தற்போதைய நிலையில், ஒரு படம் வெளியாகி 10 நாட்கள் வரை திருட்டு டிவிடி வெளிவராமல் பார்த்துக்கொண்டாலே போதும். அதற்குள் வணிகரீதி யாக அந்தப் படம் உரிய வசூலைப் பெற்றுவிடும். இதை நோக்கிய எங்கள் பயணத்துக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். சமீபத்தில் வெளியான கொம்பன், நண்பேன்டா உள்ளிட்ட படங்களின் திருட்டு டிவிடிகள் உடனடியாக வெளியாகாமல் பார்த்துக்கொண்டதால், அந்தப் படங்கள் வெற்றி பெற்றன.
திருட்டு டிவிடிகளை முற்றிலும் ஒழிக்க முடியும். அதற்குச் சில வழிமுறைகளைக் காவல் துறையினர் கடுமையாக்க வேண்டும். கடைகளில் டிவிடி விற்பனை செய்வதைக் கண்டறிந்தால், அங்குள்ள பணியாளர்களைக் கைதுசெய்வதற்குப் பதில், கடை உரிமையாளரைக் கைதுசெய்ய வேண்டும். அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டங்களைக் கடுமையாகப் பயன்படுத்த வேண்டும். கைதாகும் நபர்கள் நீதிமன்றங்களில் அபராதம் மட்டும் செலுத்திவிட்டு வெளியேறுவதைத் தடுத்து, அவர்களுக்குச் சிறைத் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இதுதவிர, டிவிடி விற்பனை மூலம் அரசின் வருமானத்தைக் கோடிக் கணக்கில் பெருக்கும் வழிமுறைகளை வணிக வரித் துறை மூலம் மேற்கொள்ளலாம். அதாவது, ஒவ்வொரு ஒரிஜினல் டிவிடியிலும், வணிக வரித் துறை மூலம் பெறப்பட்ட அரசின் முத்திரையுடன் கூடிய ‘ஹாலோகிராம்’ஒட்டப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு டிவிடிக்கு ரூ. 3 வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும். முத்திரை இல்லாத டிவிடி விற்பவர்களைக் கண்டறிந்து கைதுசெய்வதற்கும் எளிதாக இருக்கும். நான் டி.ஐ.ஜி-யாக இருந்தபோது இதுதொடர்பாக அரசுக்கு விரிவான அறிக்கை அளித்தேன். உரிய நடவடிக்கை எடுத்தால் பலனுள்ளதாக இருக்கும்.
டிவிடி மட்டுமல்ல, உள்ளூர் கேபிள் டிவிகளில் உரிமம் பெறாத, புதிய படங்கள், அவற்றின் காட்சிகளை ஒளிபரப்புவதைத் தடுக்கவும், பென் டிரைவ், மெமரி கார்டுகளில் திரைப்படங்களைப் பதிவுசெய்து விற்பனை செய்வதைத் தடுக்கவும் நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதுதவிர, இணையதளங்களில் புதிய திரைப்படங்கள் வெளியானால், உடனடியாக அந்த இணைய முகவரியை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறோம்.
திருட்டு டிவிடி என்பது அடியோடு ஒழிக்கப்பட வேண்டியது. அதை முற்றிலும் ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்கள் குழுவினரிடம் உள்ளது. இதற்காக சென்னையில் எங்களுக்குத் தனி அலுவலகம் அமைத்துத்தருமாறு கேட்டுள்ளோம். அதேபோல், மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை போன்ற இடங்களில் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி-க்களைக் கண்காணிப்பாளர்களாக நியமிக்கவும் திட்டம் உள்ளது” என்றார்.
- அ. வேலுச்சாமி, தொடர்புக்கு: velusamy.a@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT