Last Updated : 24 May, 2015 11:14 AM

 

Published : 24 May 2015 11:14 AM
Last Updated : 24 May 2015 11:14 AM

ஒருங்கிணைந்த போராட்டமே திருட்டு டிவிடிக்கு முடிவுகட்டும்! - இயக்குநர் சேரன் நேர்காணல்

‘சினிமா டூ ஹோம்’ திட்டத்தில் (சிடூஎச்) ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் டிவிடியில் வெளியிடப்பட்ட பின் அதிலும் திருட்டு டிவிடி, திருட்டி கேபிள் டிவி கும்பல் நுழைந்து தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். தகவல் கிடைத்து அதைக் களையும் முயற்சியாக மதுரை, திருச்சி, ஊத்துக்குளி, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் எடுத்த முயற்சிகளின் அனுபவங்களையும், சிடூஎச் திட்டத்தின் பிற சவால்களையும் விவரிக்கிறார், திரைப்பட இயக்குநர் சேரன்.

சிடூஎச் திட்டம் மக்களிடம் எந்த அளவுக்கு கவனத்தை ஈர்த்துள்ளது?

இந்தத் திட்டத்தில் வெளியிடப்பட்ட முதல் படமான ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ கிட்டத்தட்ட 15 லட்சம் டிவிடி விற்பனை ஆகி யுள்ளது. அப்படியென்றால், குறைந்தது 60 முதல் 70 லட்சம் பேர் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்கள். ஒரு படைப்பாளி இத்தனை லட்சம் மக்களிடம் நேரடியாகவும் உடனடியாகவும் இப்படி ஒரு ஆதரவைப் பெற்றதையே பெரிய விஷயமாக நினைக்கிறேன்.

‘பாரதி கண்ணம்மா’ படம் தொடங்கியது முதல் ஒவ்வொரு படத்தின்போதும் ஜீரோவிலிருந்துதான் தொடங்குகிறேன். நல்ல எண்ணம், நல்ல பெயர் இதுதான் என்னிடம் இருக்கிறது. ‘ஆர்ட்டிஸ்ட் வேல்யூ’ என்கிற பக்கம் போகாமல், சமூகத்துக்கான விஷயத்தை எப்படிக் கொடுப்பது என்பதில் கவனம் செலுத்தியதாலேயே சினிமா சந்தை என்னை விலக்கி வைத்திருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்துதான் திரும்பத் திரும்பப் போராடிப் படம் எடுத்துவருகிறேன். சிடூஎச் திட்டமும் இதைப் போலத்தான். நல்ல எண்ணம் படைத்தவர்கள் சிலர் கைகொடுக்கிறார்கள். கண்டிப்பாக நல்ல இடத்தை அடைவோம்.

இந்தத் திட்டத்தில் அடுத்தடுத்த படங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்?

வீடுகளுக்கு நேரடியாக சினிமாவைக் கொண்டுபோய் சேர்ப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். ஒரு பெரிய நெட்வொர்க்கை ஒருங்கிணைத்துக் கொண்டுபோவதில்தான் எங்கள் கவனம் இருக்கிறது. இப்படி எழும் சிறுசிறு பிரச்சினைகளை எல்லாம் ஆராய்ந்து சரிசெய்வதற்காகக் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்கிறோம். அடுத்து ‘அர்ஜுனன் காதலி’, ‘ஆக்கி’ உள்ளிட்ட படங்களை வெளியிடும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறோம். ‘எட்டுத்திக்கும் மதயானை’, ‘வெண்ணிலா வீடு’ போன்ற சில படங்கள் திரையரங்கில் வெளியானபோது மக்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை. அந்தப் பட நிறுவனங்களும் இப்போது இந்தத் திட்டத்தின் கீழ் தங்கள் படங்களை டிவிடியில் வெளியிட முன்வந்திருக்கிறார்கள். இதுவும் ஒரு ஆரோக்கியமான சூழலாகவேபடுகிறது. அதேபோல, தொழில்நுட்பரீதியில் வேறு சில முயற்சிகளும் நடந்துவருகின்றன. இன்றைக்குப் பலரும் பென் ட்ரைவில் படம் பார்க்கிறார்கள். ஆகவே, நகலெடுக்க முடியாத பென் ட்ரைவ் மூலம் சிடூஎச் படங்களைக் கொண்டுவரும் முயற்சிகள் நடக்கின்றன. இப்போதும் திரையரங்கத்தினர் ஒத்துழைத்தால் இதை இரண்டு பக்கங்களிலும் லாபம் ஈட்டும் ஒரு கருவியாக்கிக் கொண்டுபோகலாம். அவர்கள்தான் விடாப்பிடியாக உள்ளே வர மறுக்கிறார்கள்.

சமீபத்தில் சில நகரங்களில் உங்கள் படத்தை கேபிள் டிவியிலும், திருட்டு டிவிடியாகவும் வெளியிட்டதைக் கண்டித்துப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறீர்கள். உங்கள் புகார்களுக்கு யாரும் செவிசாய்க்கவில்லையா?

எங்கள் திட்டத்தில் 3,500 முகவர்கள் இருக்கிறார்கள். ஏதாவது முறைகேடுகள் நடந்தால் அவர்கள் வழியே அதைக் கண்டறிந்து சரியாக நடவடிக்கை எடுக்கவும் தயார்படுத்தப்பட்டிருந்தது. அப்படி இறங்கியபோதுதான் மதுரையில் 2 கோடவுன்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 10 லட்சத்துக்கும் மேலான டிவிடிகளைக் கண்டுபிடித்தோம். இதற்குக் காவல் துறை ஒத்துழைப்பும் கிடைத்தது. அதேபோல திருச்சி, புதுச்சேரி நகரங்களிலும் அதிக அளவு திருட்டு டிவிடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாங்கள் படத்தை வெளியிட்ட உடனே, அதை புதுச்சேரியின் உள்ளூர் கேபிள் டிவியில் ஒளிபரப்பினார்கள். உரிய ஆதாரத்துடன் காவல் துறையினரிடம் புகார் கொடுத்தோம். அந்த மாநில ஆளுங்கட்சியினர் சிலருக்கு நெருக்கமான ஆட்கள் அந்த கேபிள் டிவியை நடத்துகிறார்கள் என்பதால் காவல் துறையினர் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார்கள். எங்கள் முகவர்களில் 500-க்கும் மேற்பட்டவர்களை அழைத்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டதும் அந்த கேபிள் டிவிகாரர்கள் மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். இப்படி அறந்தாங்கி, ஊத்துக்குளி என்று பல இடங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் திருட்டு டிவிடியை எதிர்த்து இப்படி ஒரு முயற்சி நடந்ததாகத் தெரியவில்லை. ஒருங்கிணைந்து போராடினால் திருட்டு டிவிடியை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும்.

இந்த முயற்சிக்குத் திரைத்துறை சார்ந்த முக்கியமான படைப்பாளிகளின் ஆதரவு, உதவிகள் கிடைப்பது மாதிரி தெரியவில்லையே?

அவர்கள் எதிராகவும் இல்லை, ஆதரிப்பதாகவும் காட்டிக்கொள்ளவில்லை, அமைதியாக இருக்கிறார்கள் என்றுதான் நான் எடுத்துக்கொண்டேன். ஜெயித்து நிறைய வருமானம் வரும் என்பது தெரிந்தால், எல்லோரும் ஆதரவு கொடுக்கத் தயாராவார்கள் என்று நினைக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் வருகிறார்கள். பெரிய ஆட்கள் இன்னும் அவநம்பிக்கையோடுதான் இருக்கிறார்கள். அதற்காக நான் கவலைப்படவில்லை. இன்னும் சில மாதங்கள் கடந்தால் எல்லாம் சரியாகிவிடும்.

அதேபோல, இன்றைய திரைப்பட இயக்குநர்கள் தங்கள் படங்கள் பெரிய திரையில் பார்க்கப்பட வேண்டும் என்பதில்தான் ஆர்வம் செலுத்துகிறார்கள். சினிமாவில் தோல்வி அடைந்து, எங்கோ ஒரு ஓரமாய் அமர்ந்து அழுதுகொண்டிருக்கிற படைப்பாளிக்குத்தான் திரையரங்கத்தால் எந்த வித லாபமும் இல்லை என்ற உண்மை புரியும். நமது படம் திரையரங்கில் வெளியாகி அரங்க முதலாளிக்கு லாபம் வர வேண்டும் என்று ஒரு படைப்பாளி நினைப்பதைப் போல, திரையரங்கத்தினர் இந்தப் படைப்பாளிக்கும் லாபம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.

அரசு உங்களின் சிடூஎச் நகர்வுகளை எப்படிப் பார்க்கிறது?

இது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் வேலை. அரசிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது. அரசு பதிவு எண், அங்கீகாரம் கொடுத்து அனுமதித்திருப்பதே போதுமான விஷயம். மற்றபடி வரிச்சலுகை மட்டும் கேட்டிருக்கிறோம். மக்களிடம் நேரடியாகக் கொண்டுபோய் ஒரு நல்ல படத்தைச் சேர்க்கும்போது அதற்கு 14% வரி இல்லாமல் 2 அல்லது 3% வரி விதித்தால் சிறு தயாரிப்பாளர்களுக்குப் பயனளிக்கும். அதற்காக மனு கொடுக்கும் திட்டமும் இருக்கிறது.

- ம. மோகன், தொடர்புக்கு: mohan.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x