Published : 20 May 2015 09:26 AM
Last Updated : 20 May 2015 09:26 AM

நுகர்வுப் பண்டமாகிவிட்ட வன்முறை!

வன்முறை என்பது உற்பத்தியாவதல்ல, அது நுகரப்படும் ஒரு சடங்கு

தேசப் பிரிவினை முதல் நெருக்கடி நிலைப் பிரகடனம் வரை, அணை கட்டுவதற்காக வசிப்பிடங்களிலிருந்து ஆயிரக் கணக்கானோர் வெளியேற்றப்பட்டது, போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஆயிரக் கணக்கானோர் இறந்தது, கடன் சுமை தாளாமல் 1.6 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது, கலவரங்களால் நூற்றுக் கணக்கில் இறப்பது என்று வன்செயல்களால் நேரிடும் துயரங்கள் ஏராளமாக இருந்தாலும் அத்தனையையும் மனதால் செரிமானித்து இயல்பாக வாழக் கற்றுக்கொண்டுவிட்டோம் நாம்.

சில பத்தாண்டுகளாகவே வன்முறைச் சம்பவங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறேன். வன்முறையைச் சரியாக வர்ணிக்கக் கடினமான முயற்சி தேவைப்படுகிறது. வன்முறையின் வெவ்வேறு வடிவங்களை முதலில் புரிந்துகொண்டு அதற்கு எப்படி ஈடுகொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். வன்முறையை விவரிக்க மிகவும் சிரமப்பட்டேன். காரணம், வன்முறை எப்படி உற்பத்தி யாகிறது என்பதை அறிய நீண்ட காலத்தைச் செலவிட வேண்டியிருந்தது.

வன்முறை என்பது உற்பத்தியாவதல்ல, அது நுகரப்படும் ஒரு சடங்கு என்று என்னுடைய நண்பர் கூறிய போது அதிர்ச்சி அடைந்தேன். இன்றைய இந்தியாவில் வன்செயல்களை வேடிக்கை பார்ப்பவர்களும் வன்செயல் களை நுகர்வோரும் சேர்ந்து வன்முறைக்கான ஆதாரங் களை வலுப்படுத்தியிருக்கிறார்கள். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வன்செயல்களில் ஈடுபடுவதில்லை. தேசப் பிரிவினைக் கதைகளைப் படிக்கும்போது ஒன்று புரியும், அப்போது நடந்த வன்செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் கலவரங்களில் ஈடுபட்டதே இல்லை. கலவரம்குறித்தும் பாதிப்புகள் குறித்தும் கதைகளைக் கேட்டவர்கள்தான் வன்செயல் களில் அதிகம் ஈடுபட்டனர். வன்முறையை நுகர்பவர்தான் உண்மையான வகுப்புவாதி. வரலாற்றைத் திருத்துவதாக நினைத்துக்கொண்டு வன்செயலில் இறங்கும் பார்வை யாளன்தான் ரத்த வெறிகொண்டு அலைகிறான்.

நுகர்வும் வன்முறையும்

என்னுடைய நண்பர் மிகைப்படுத்திக் கூறுகிறாரோ என்று முதலில் நினைத்தேன். பிறகு, எனக்கு நானே கூறிக்கொண்டேன்: முதலாளித்துவம் என்பது உற்பத்தி யிலிருந்து நுகர்வுக்கு ஒரு செயல்திட்டம் என்ற வகையில் நகர முடியும் என்றால், வன்முறையும் ஏன் அப்படி நகர முடியாது?

தொடர்ந்து வன்செயல்களையே பார்த்துக்கொண்டிருப் பவர்களின் உணர்ச்சிகள் மரத்துவிடுகின்றன. அது அன்றாடச் சடங்குபோலவும் அடிக்கப்படுகிறவர் காரணமாகத்தான் அந்த தண்டனைக்கு உள்ளாகிறவர் போலவும் மனம் கற்பித்துக்கொண்டுவிடுகிறது. காஷ்மீரிலும் மணிப்பூரிலும் கலவரம், சிலர் இறப்பு என்ற செய்திகளை அன்றாடம் பார்க்கும்போது நம் மனம் கவலைப்படுவதேயில்லை. அம்மாநிலப் பிரச்சினைகளை நாம் உணர்ச்சியற்றுத்தான் விவாதிக்கிறோம். அங்கு ஆட்கள் இறப்பது இயற்கைதான் என்றும் அந்தச் சமூகத்தவரின் துர்க்குணத்தால் இத்தகைய மரணங்கள் அவர்களுக்கு நேர்கின்றன என்றும் நாமே நியாயம் கற்பிக்கிறோம்.

சில வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுத்தும் சுயமோக உணர்வு மலைக்க வைப்பதாக இருக்கின்றன. நன்றாக உடை அணிந்தவர்கள், நல்ல காலணிகளை அணிந்தவர்கள் அப்பாவிகளிடம் மோசமாக நடந்து கொள்கின்றனர். அதைப் பார்க்கும் முதியவரோ, நல்லவரோ அதைக் கண்டித்தால் அவர்களைப் புரட்டி எடுத்துவிடுகின்றனர். ஒவ்வொரு சம்பவத்திலும் தங்களுடைய செயல்பாட்டைத் தங்களுடைய ஆண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதி புளகாங்கிதம் அடைகின்றனர். தங்களை முன்னிறுத்திக் கொள்ளவே இப்படி வன்செயல்களில் இறங்குகின்றனர். டெல்லியிலும் ஹரியாணாவிலும் இது அனேகம்.

நாம் விவரிப்பதைப் போல, வரிசைப்படுத்துவதைப் போல சிலர் வன்செயல்களை நுகர்கின்றனர். வன்செயல் களை வெறும் எண்ணிக்கையாக மாற்றி, அது கூடியிருப் பதாகவோ குறைந்திருப்பதாகவோ கூறி அதன் மீதான விவாதத்தையே மாற்றிவிடுகிறோம்.

இப்போது மிகவும் சக்திவாய்ந்த பொருளாதார நிபுணராக இருக்கும் ஒருவர் கருத்தரங்கில் பேசும்போது நகர்மயமாதலின் அவசியம், தன்மைகுறித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் குறுக்கிட்டு, ‘‘இந்தத் திட்டத்தால் சிலர் பாதிக்கப்படுவார்களே’’ என்றார். அப்போது அவர் தோளைக் குலுக்கிக்கொண்டே சொன்னார், “நகர்ப்புறத் திட்டமிடல் என்பதே துயர மயமானதுதான், அதிகத் துன்பம் அனுபவிக்க வேண்டியவர்கள் யார் என்பதைத்தான் திட்டமிடல் அதிகாரி தீர்மானிக்கிறார்” என்றார். இந்தத் துன்பத்தை நம்மால் தவிர்க்க முடியாது, எப்போது இந்தத் துன்பத்தைத் தரலாம் என்று மட்டுமே நம்மால் தீர்மானிக்க முடியும்” என்றார் அவர்.

வன்முறை பற்றிய அறிக்கைகள், சிலவற்றைப் பற்றி ஏதும் பேசாமல் மவுனம் சாதிக்கின்றன. வெறும் எண்ணிக்கையாகத்தான் அது தெரிவிக்கப்படுகிறது. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஆல்பெர் காம்யு ஒரு முறை சொன்னார், “புள்ளிவிவரங்களில் ரத்தம் வடிவதில்லை” என்று. ஒரு அணை கட்டப்படுவதால் 2 கோடிப் பேர் தங்களுடைய வாழிடங்களைவிட்டு வெளியேற நேர்கிறது என்றாலோ, ஒரு கலவரம் காரணமாக 1 கோடிப் பேர் வேறிடங்களுக்குச் சென்றார்கள் என்றாலோ இதன் உண்மையான பொருள் என்ன என்று நாம் கேட்பதில்லை. நர்மதை திட்டத்தால் வீடு, வாசலை இழந்து வெளியேறியவர்களை இப்போது அரசே மறந்துவிட்டது. தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஜலசமாதி என்ற கிளர்ச்சியை மேற்கொண்டபோது. சில தொலைக்காட்சிகளில் செய்தியாக மட்டும் சில வரிகளில் சொல்லி முடித்துவிட்டு விளம்பரதாரர் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டார்கள். அவர் களுக்கு இரங்கல் தெரிவிப்பதோ, அவர்களுடைய மகிழ்ச்சி யான வாழ்க்கையை நினைவுகூர்வதோ ஏதுமில்லை.

வன்முறைச் சம்பவங்களும் மக்களுடைய நினைவுகளிலிருந்து விரைவாக அழிந்துவிடுகின்றன. சில வேளைகளில் வன்செயல்கள் அல்லது துயரச் சம்பவங்களை நினைவுபடுத்தி அவற்றால் பாதிக்கப் பட்டோரைக் காட்டினால், நாம் பாதிக்கப்பட்டவர்கள் மீது அனுதாபப்படுவதற்குப் பதிலாக கோபமோ எரிச்சலோ அடைகிறோம். போபால் விஷவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஊர்வலமாகச் சென்றபோது, அவர்களைப் பார்த்தவர்களில் பலர் அனுதாபப்படுவதற்குப் பதிலாக, இன்னும் என்ன அதையே சொல்லிக்கொண்டு திரிகின்றனர் என்று முணுமுணுத்தனர்.

அளவைத் தீர்மானிப்பது எப்படி?

வன்செயல்களை எண்ணிக்கைக்குள் கொண்டுவர முடிவதாலும், பெரிதாக ஒன்றுமில்லை என்று கூறுவதாலும் வன்செயல்களைச் சமூகம் செரிக்குமாறு செய்துவிடலாம். பாதிப்பும் வன்செயலின் தீவிரமும் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். நம்முடைய தார்மிகம் என்பது சிலவகை பலன்கள் கிடைக்கும் என்றால், சிலர் வன்செயல்களுக்கு ஆளாவதும் சரியே என்று கூறுகிறது. சமூக அறிவியலாளர்கள் இதை ‘நுண் அரசியல்’ என்று முத்திரையிடுகின்றனர். ஒரு பிரச்சினைக்குத் தீர்வு வந்து பெரும்பாலானவர்களுக்குப் பலன் கிட்டும் என்றால், சிலர் மீது வன்செயல்கள் பாய்வதும் அதனால் அவர்களுக்கு இழப்பு ஏற்படுவதும் சரியே என்று ‘செலவு - பயன்’ கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கிவிட்டனர். அதனால்தான் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் நம் மக்கள் ஆண்மைத் தனத்துடன் இந்த வன்செயல்களை நோக்குகின்றனர்.

தேசப் பிரிவினை முதல் நெருக்கடி நிலைப் பிரகடனம் வரையில், நர்மதை அணைப் பிரச்சினை, போபால் விஷவாயுச் சம்பவம், விவசாயிகள் தற்கொலை, கலவரங்கள் போன்ற எத்தனை சம்பவங்கள் நடந்தாலும் இந்தியா அவற்றைத் தாங்கிக்கொள்ளும் என்பதே வேதவாக்காகிவிட்டது. வன்செயல்களைத் திட்டமிடுபவர்கள், நிகழ்த்துபவர்கள், நுகர்வோர்களாக அவற்றைப் பயன்படுத்திக்கொள்கிறவர்கள் இடையே புதிய ஒத்திசைவு காணப்படுகிறது. வரலாற்றின் புதிய அங்காடியிலிருந்து வன்செயல்களை எளிதில் தேர்ந்தெடுத்து, நிகழ்த்திப் பலன் காணத் தொடங்கி விட்டனர். ஆபாசக் காட்சிகளும் புதிய வன்முறை விளையாட்டுகளும் நுகர்வோரால் பலமுறை திரும்பத் திரும்ப பார்த்து ரசிக்கும் சரக்குகளாகிவிட்டன. இவற்றைக் குறுக்கவோ மாற்றவோ வழியிருக்கிறது. என்னுடைய ஆய்வு முடிவு இதுதான். புதிய நுகர்வோரியம் காரணமாக வன்செயல்கள் என்பவை திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்பட்டு ரசிக்கப்பட வேண்டியவை. இது கதைசொல்லியின் கதையையே முடித்துவிடுகிறது. செயற்கையான உலகம் உருவாக்கப்பட்டு அங்கே வன்செயல்கள் எந்தவித லஜ்ஜையுமின்றி இனி நுகரப்படும். மனிதாபிமானமுள்ள உலகம் போய், இயந்திரமயமாகிவிட்ட மனதை உருவாக்கும் உலகம் ஆரம்பித்துவிட்டது.

‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில் சுருக்கமாக: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x