Published : 20 May 2014 08:03 AM
Last Updated : 20 May 2014 08:03 AM
உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா வென்ற தொகுதிகளில் பாதிக்கும் கொஞ்சம் அதிகமான தொகுதிகளில்தான் தேசிய அளவில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? நரேந்திர மோடி அலை என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால், அந்த அலையை உத்தரப் பிரதேசத்தில் பேரலையாக மாற்றிக் காட்டியவர் அமித் ஷா.
ஆமாம், நரேந்திர மோடியின் வலதுகரம், குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர், ஷோரப்தீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர், மோடிக்காக இளம் பெண் வேவுபார்க்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர் என பல சர்ச்சைகளுக்கு ஆளான அமித் ஷாதான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு வித்திட்டிருக்கிறார். யார் இந்த அமித் ஷா? குஜராத்திலும், உத்தரப் பிரதேசத்திலும் இவர் சாதித்தது என்ன?
நதிமூலம்
பெரிய தொழில்குடும்பத்திலிருந்து வந்தவர்தான் இந்த அமித் ஷா. இவரும் ஒரு தொழிலதிபர்தான். ஆர்.எஸ்.எஸ். இயக்கம், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இயக்கங்களில் ஈடுபட்டுப் பின்னர் பா.ஜ.க-வில் சேர்ந்தவர். 1985-ம் ஆண்டில் பா.ஜ.க-வில் நரேந்திர மோடி களமிறங்கிய பிறகு அவருக்குக் கீழ் இளைஞரணிப் பிரிவில் பணியாற்றியவர். 1991-ம் ஆண்டில் தொடங்கி குஜராத்தில் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அத்வானிக்காகத் தேர்தல் பொறுப்பாளராக அமித் ஷா பலமுறை பணியாற்றியிருக்கிறார். இதன்மூலம் அத்வானியுடன் அமித் ஷாவுக்கு நல்ல அறிமுகம் உண்டு. இப்படித்தான் நரேந்திர மோடியுடனும் நெருக்கம் ஏற்பட்டது.
ஆட்சியில் முக்கியத்துவம்
2002-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றவுடன் அமைச்சரவையில் அமித் ஷாவுக்கு இடம் கிடைத்தது. அமைச்சரவையில் இளையவரான அமித் ஷாவுக்கு உள்துறை உள்பட 10 துறைகள் வழங்கப்பட்டன, பலரது புருவங்களை உயர்த்தின. நரேந்திர மோடியின் வலதுகரமாக மாற இது ஒரு கருவியாக இருந்தது. 2007-ம் ஆண்டில் மீண்டும் நரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றபோதும் அமைச்சரவையில் அமித் ஷாவுக்கு முக்கியத்துவம் கிடைத்தது.
குஜராத்திலிருந்து உ.பி-க்கு…
இந்தக் காலகட்டத்தில் அவர் பதவியில் இருந்தபோதுதான் சோரப்தீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில் சிக்கினார். 2005-ம் ஆண்டில் நடந்த சோரப்தீன் ஷேக் கொலை வழக்கு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி சி.பி.ஐ. விசாரணைக்கு மாறியது. இதன்பிறகே என்கவுன்ட்டரில் அமித் ஷா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் பங்கு தெரியவந்தது. 2009-ம் ஆண்டில் நரேந்திர மோடியின் உத்தரவின்படி இளம் பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் அமித் ஷா தலையும் உருண்டது இந்தக் காலக்கட்டத்தில்தான். போலி என்கவுன்ட்டர் வழக்கின் ஒரு பகுதியாகவே கடந்த ஆண்டு குஜராத்தை விட்டு வெளியேறுமாறு அமித் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுவே, நரேந்திர மோடிக்கு வசதியாகப் போனது. சரியாக ஓராண்டுக்கு முன்னர் பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்ட பிறகு, அமித் ஷாவை உத்தரப் பிரதேசத்தில் போய்த் தங்குமாறு உத்தரவிட்டார். அதோடு, உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். சாதி அரசியல் ஆதிக்கம் உள்ள உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்கள், தலித்துகள் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதே அமித் ஷாவுக்கு மோடி கொடுத்த பணி. கடந்த ஓராண்டு காலமாக அங்கு தங்கி, கிராமங்கள்தோறும் சென்று பா.ஜ.க. தொண்டர்களை உசுப்பிவிட்டார். உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட வேண்டும் என்று ஆலோசனை வழங்கி, அதைச் செய்தும் காட்டினர் அமித் ஷா. மோடி போட்டியின் மூலம் உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாசம் அடைந்ததோடு புலிப் பாய்ச்சல் பிரச்சாரத்தில் ஈடுபட இந்த உத்தி அமித் ஷாவுக்கு உதவியது.
வெறுப்பு வித்தை
அயோத்தி பிரச்சினையைத் தூசுதட்டி, ராமர் படத்துடன் கூடிய பிரச்சாரத்தையும் இந்தத் தேர்தலில் அமித் ஷா முன்னெடுத்தார். இடையே முசாபர்நகர் கலவரத்துக்குப் பழிவாங்க வேண்டும் என்று வெறுப்பு அரசியலை பா.ஜ.க-வினர் மத்தியில் அமித் ஷா தூண்டிவிட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், அவை வாக்குகளைப் பெறவும் உதவியது. குறிப்பாக, சமாஜ்வாடி ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகளின் வாக்குகளைக் கவர வேண்டும் என்றால் எவ்வளவு கஷ்டம்? அதைத் திறம்படச் செய்து களப்பணியாற்றிய வகையில் அமித் ஷாவுக்கு இப்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது.
சமாஜ்வாடி வெறும் ஐந்து இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் குடும்பத் தொகுதிகளாகப் பார்க்கப்படும் அமேதியும், ரேபரேலியும் மட்டும் காங்கிரஸ் வசம். அப்னாதளம் இரண்டு இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. எதிர்க் கட்சிகளுக்குக் கிடைத்தது அவ்வளவுதான். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை.
இந்த இடத்தில் ஒன்றை நினைவுகூர வேண்டும். சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமா பாரதியை இங்கு களம் இறக்கிப் பார்த்தது பா.ஜ.க. ஆனால், பெரிய வெற்றி கிடைக்கவில்லை. வாஜ்பாய், அத்வானி போன்ற பெரிய தலைவர்கள் கோலோச்சிய காலத்திலேயே 1991-ல் 51 தொகுதிகளும், 1996-ல் 52 தொகுதிகளும், 1998-ல் 59 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க-வால் வெற்றி பெற முடிந்தது. குறிப்பாக, வாஜ்பாய் நான்கரை ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட 29 தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க-வால் வெல்ல முடிந்தது.
கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் தலா 10 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்த பா.ஜ.க., தற்போது மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை அள்ளியுள்ளது. நரேந்திர மோடியின் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாக இது இருந்தாலும், இதன் பின்னணியில் முழுக்க முழுக்க இருப்பவர் அமித் ஷாதான். அமித் ஷாவுடன் ஷோரப்தீன் என்கவுன்ட்டரைத்தான் தொடர்புபடுத்திப் பேசுவார்கள். உண்மையில், அவர் சமீபத்தில் ஏராளமான என்கவுன்ட்டர்களை நிகழ்த்தியிருக்கிறார். உ.பி-யில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என்று எல்லாக் கட்சிகளையும் சரமாரியாக என்கவுன்ட்டர் செய்திருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க-வுக்குப் புது ரத்தம் பாய்ச்சியதில் அமித் ஷாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதை நீர்த்துப்போகாமல் செய்வது இனி நரேந்திர மோடி ஆட்சியின் கையில் உள்ளது.
- டி. கார்த்திக், தொடர்புக்கு: karthikeyan.di@kslmedia.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT