Last Updated : 27 May, 2015 08:40 AM

 

Published : 27 May 2015 08:40 AM
Last Updated : 27 May 2015 08:40 AM

நேரு என்ற மாபெரும் சாகசக்காரர்

நேருவின் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியாது!

நேருவின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை ராமச்சந்திர குஹா தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.

அது 1942-ம் ஆண்டு. காந்தி தனது ஆசிரமத்தில் காங்கிரஸ் கூட்டம் ஒன்றை நடத்துகிறார். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அலகாபாத் செல்வதற்காக ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசரத்தில் நேரு கிளம்புகிறார். ‘சீக்கிரமாகப் போய் ரயிலைப் பிடிப்பதற்குக் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக’என்று கஸ்தூர் பா, நேருவை ஆசிர்வதித்திருக்கிறார். அந்த அவசரத்திலும் நேருவுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. ‘காட்டுமிராண்டித்தனமான போர்களை அனுமதிப்பவர்தான் கடவுளா? விஷவாயு கொண்டு யூதர்கள் படுகொலை செய்யப்படுவதை அனுமதிப் பவர்தான் கடவுளா? ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கமும் வேட்டையாட அனுமதிப்பவர்தான் கடவுளா?’ என்றரீதியில் நேரு பொரிந்துதள்ளியிருக்கிறார். சுற்றிலும் அப்படியொரு அமைதி. கஸ்தூர் பாவை எதிர்த்துப் பேசும் தைரியம் காந்திக்குக்கூடக் கிடையாது. சங்கடமான இந்தச் சூழலில் காந்தி நுழைகிறார், “பா, ஜவாஹர்லால் என்ன சொல்லியிருந்தாலும் நம்மையெல்லாம்விட கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர் அவர்தான்” என்கிறார்.

நிலைமையைச் சமாளிப்பதற்காகவோ, நேருவைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ காந்தி சொன்ன வார்த்தைகளில்லை இவை. அப்படியெல்லாம் ஒருபோதும் சொல்லக்கூடியவரல்ல காந்தி. பிறகு ஏன் இப்படிச் சொன்னார்? இங்கே ‘கடவுள்’ என்ற சொல்லையும் அதற்கு காந்தி தன் வாழ்க்கையில் கொடுத்திருக்கும் அர்த்தத்தையும் நாம் பார்க்க வேண்டும். சத்தியத்தை மட்டுமே காந்தி தன் வாழ்நாள் முழுவதும் கடவுளாகக் கருதியவர். மதங்கள் குறிப்பிடும் கடவுள் தரிசனம் தனக்குக் கிடைத்ததில்லை எனவும், ஆனால் சத்தியத்தின் தரிசனம் கிடைத்திருக்கிறது எனவும் சொல்லியவர் அவர். அந்த சத்தியத்துக்கு மிகவும் நெருக்கமானவர் நேரு என்று தான் கருதியதால், மேற்கண்ட சம்பவத்தின்போது காந்தி அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். நேருவைத் தன் அரசியல் வாரிசாகவும், இந்தியாவின் முதல் பிரதமராகவும் காந்தி தேர்ந்தெடுத்ததை மேற்கண்ட சொற்களின் பின்னணியிலும் வைத்துப்பார்க்கலாம்.

சத்தியத்துக்கு நெருக்கமானவராக நேருவை காந்தி கண்டதுபோல் நாம் இன்று காண்பதில்லை, காணவும் முடியாது. அதற்கு அவரவர் சார்ந்த சித்தாந்தங்கள் மட்டுமின்றி, ஒரு பெரும் தேசத்தின் ஆட்சியாளராக இருந்ததால் அறிந்தோ அறியாமலோ நேரு இழைத்த தவறுகளும்கூடக் காரணம். ஆனால், நேரு ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆகப்போகின்றன. அவர் இறந்து 51 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த வரலாற்றுப் போக்கில், விருப்புவெறுப்பற்று நேருவைப் பார்க்கக்கூடிய ஒரு வசதியான இடத்தில் நாம் இருக்கிறோம். ஆகவே, நேருவைப் பற்றிய நியாயமான ஒரு மதிப்பீடு காலத்தின் கட்டாயம்.

எஞ்சுவது சிலிர்ப்பே

கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக நேரு மீது எவ்வளவு குற்றச்சாட்டுகள், அவதூறுகள், வசைகள்! நேருவின் நண்பர்கள், எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்று அனைத்துத் தரப்பிலிருந்தும். இவையெல்லாம் நேருவையும், அவர் மீதான பொது மதிப்பீட்டையும் மாற்றியமைத்திருக்கின்றன. ஆனால், எல்லாவற்றையும் மீறி எப்படிப்பட்ட காரியத்தை அவர் செய்து முடித்திருக்கிறார் என்பதை நினைத்துப்பார்த்தால் எஞ்சுவது சிலிர்ப்பு மட்டுமே.

செல்வச் செழிப்பான நாடுதான் இந்தியா; அதாவது ஆங்கிலேயர் நுழைவதற்கு முன். அவர்கள் நம்மை விட்டுச் சென்றபோது நிலைமை அப்படியில்லை. உலகிலேயே அதிகமான பசித்த வயிறுகளைத்தான் இந்தியாவில் விட்டுச்சென்றார்கள். 1779-ல் ஆரம்பித்து 1944 வரை ஏற்பட்ட 14 பெரும் பஞ்சங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 6 கோடிக்கும் மேலே என்று கணிப்புகள் சொல்கின்றன. கடைசியாக 1944-ல் ஏற்பட்ட வங்காளப் பஞ்சத்துக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். மீன்கள் நிறைந்திருந்த குளம் திடீரென்று வற்றி அந்த மீன்களெல்லாம் செத்து மடிந்ததைப் போல வங்காள நகரங்களின் தெருக்களிலெங்கும் பிணங்கள். பஞ்சமும் கொள்ளை நோயும் தாண்டவமாடின.

இந்த பஞ்சங்களைப் பற்றியும் அவற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றியும் கொஞ்சமாவது நாம் அறிந்திருக்கிறோம். ஆங்கிலேயர் இந்தியாவை நேரு உள்ளிட்ட தலைவர்களின் கையில் தந்துவிட்டு போனபோது இருந்த மக்கள்தொகை முற்கண்ட பஞ்ச காலங்களில் இருந்த மக்கள்தொகையை விட மிகவும் அதிகம். அந்தத் தருணத்தில் மிக மோசமான ஒருவரின் கையிலல்ல, ஓரளவு திறமை கொண்டவரின் கையில் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் போயிருந்தால்கூட இந்தியாவின் நிலை என்ன ஆகியிருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா?

தேசத்துக்காகப் பிச்சைப்பாத்திரம் ஏந்தியவர்

சுதந்திரம் பெற்றவுடன் இந்த நிலைமை சீராகி, பஞ்சங்கள் இல்லாத நாடாகிவிடவில்லை இந்தியா. இந்த நிலையில் நேருவும் அவரது சகாக்களும் பஞ்சத்தை எப்படிச் சமாளித்தார்கள்? சமீபத்தில் ஜெயமோகன் இதுகுறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

“…கஜானா காலியான அரசை நேரு ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அப்போதும் பெரும் பஞ்சங்கள் தொடர்ந்தன. பிகாரும் உத்தரப் பிரதேசமும் உணவில்லாமல் தவித்தன… ஆனால் அதில் ஒருவர், ஒரே ஒருவர்கூடச் சாகாமல் இந்திய அரசு கவனித்துக்கொண்டது. அதற்குப் பொறுப்பேற்றவர்கள் இருவர். நேரு. இன்னொருவர், ஜெயப்பிரகாஷ் நாராயணன். நேருவின் அரசு பஞ்ச நிவாரணத்துக்காகக் களத்தில் நின்றது. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் மகத்தான கஞ்சித்தொட்டி இயக்கம் கிராமம் கிராமமாக மக்களுக்கு உணவூட்டிக் காத்தது. கலிஃபோர்னியாவில் பெர்க்லி பல்கலையில் ஒரு இந்திய நூல் பகுதி உள்ளது. அங்கே நேருவின் ஒரு கடிதத்தைக் கண்டேன். 1950-களின் பஞ்சத்தில் நேரு எழுதிய கடிதம் அது. அந்தப் பஞ்சத்தைச் சமாளிக்க நேரு அன்று உலகிலிருந்த அனைத்துத் தலைவர்களுக்கும் கடிதமெழுதினார்… உங்களிடம் என் நாட்டு மக்களுக்காகப் பிச்சைப்பாத்திரத்தை நீட்டுகிறேன் என எல்லா சுயமரியாதையையும் இழந்து கெஞ்சினார். அதிக நிதியுதவி செய்தது அமெரிக்க தேசம். அதில் மிக அதிக உதவிசெய்தது கலிஃபோர்னியா மாநிலம். கலிஃபோர்னியா மாநிலத்துக்கு நன்றி தெரிவிக்கும் நேரு அவர்கள் செய்த உதவியைத் திருப்பிச் செய்ய முடியாது, நன்றிக்கடனாகச் சில புத்தகங்கள் அனுப்புவதாகச் சொல்லி எழுதிய கடிதம் அது… அங்கே அறிமுகமான ஒரு நண்பர்தான் அதைக் கொண்டுசென்று காட்டினார்… ‘பாத்தீங்களா சார்… எப்டிக் கேவலப்படுத்துறானுங்கன்னு’ என்றார் அவர். ‘எனக்குப் பெருமிதமாக இருக்கிறது. தனக்காக நேரு கையேந்தவில்லை, தன் மக்களுக்காகக் கையேந்தினார் அந்தப் பெரிய மனிதர். அப்படி ஒரு தலைவனை அடைந்திருந்தோம், அதற்கான தகுதி நமக்கிருந்தது என நான் விம்மிதம் கொள்கிறேன்’ என்று சொன்னேன்” என்று ஜெயமோகன் எழுதிச்செல்கிறார்.

வரலாற்றின் மிகப் பெரிய மறுகுடியமர்த்தல்

அது மட்டுமா, நேருவின் ஆட்சிக் காலம்தான் உலகத்திலேயே மிகப் பெரிய, மிக மோசமான மனிதகுல இடப்பெயர்வைச் சந்தித்தது. பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையில் இருந்த நாட்டை மேலும் படுகுழியில் தள்ளுவதற்கு இதைவிட மோசமான நிலைமை இருக்க முடியாது. ஆனால், அப்படியெல்லாம் ஆவதற்கு நேருவும் அவரது சகாக்களும் அனுமதிக்கவில்லை. தேசப் பிரிவினையால் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல். இவர்களில் ஆகப் பெரும்பாலானோரை நேருவின் அரசு மறுகுடியமர்த்திய அற்புதத்தை நம்மால் இன்று கற்பனைகூடச் செய்துபார்க்க முடியாது. ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் நடுவே கயிறு கட்டி, பிடித்துக்கொள்ள ஏதுமில்லாமல் ஒருவர் நடப்பதைப் போன்ற மாபெரும் சாகசத்தை நேரு நிகழ்த்தியிருக்கிறார்.

நேரு இறந்தபோது வலதுசாரியும் அவரது பிரதான எதிர்ப்பாளருமான ராஜாஜி இப்படி எழுதினார்: “என்னை விட 11 ஆண்டுகள் இளையவர், என்னை விட 11 மடங்கு முக்கியமானவர், என்னை விட 11 ஆயிரம் மடங்கு இந்த தேசத்தால் நேசிக்கப்படுபவர்… திட்டங்கள் தீட்டுவதில் உள்ள பிழைகளுக்காக அவரை எதிர்த்து கடந்த 10 ஆண்டுகளாக அவரைக் கடுமையாக எதிர்த்துவந்திருக்கிறேன்… அதே நேரத்தில் இந்தப் பிழைகளையெல்லாம் அவரால் மட்டுமே சரிசெய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும்… எனது போராட்டத்தில் முன்பை விட என்னை மிகவும் பலவீனப்படுத்திவிட்டு அவர் போய்விட்டார்.”

நேருவைக் கடுமையாக எதிர்த்துவந்த ராஜாஜியும் இப்படி இளகிப்போனதற்கு என்ன காரணம்? அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால், ‘நேருவின் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியாது!’ என்பதுதான்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

இன்று நேரு நினைவு தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x