Published : 22 May 2014 12:00 AM
Last Updated : 22 May 2014 12:00 AM
“எல்லாவற்றையும் மறந்துவிடும் காலத்தில் நாம் வாழ்கிறோம்” என்றார் வரலாற்றாசிரியர் டோனி ஜூட் தன்னுடைய ‘ரீ-அப்ரெய்சல்ஸ்' (2008) என்ற நூலில். பழைய சம்பவங்களை வெகு விரைவாக மறக்கும் இந்தக் காலத்தில், இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடிநிலை, 1984-ல் நடந்த டெல்லி சீக்கியர் படுகொலை, அயோத்தியில் நடந்த பாபர் மசூதி இடிப்பு, 2002-ல் குஜராத்தில் நடந்த படுகொலை, மகாத்மா காந்தி படுகொலை, சுதந்திரப் போராட்ட இயக்கம் ஆகியவைகுறித்தெல்லாம் மக்கள் அதிகம் கவலைப்படவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. மக்களுடைய இந்த ஒட்டுமொத்த மறதி, காங்கிரஸைவிட பாரதிய ஜனதாவுக்கே சாதகமாக இருந்திருக்கிறது.
“இன்னும் பழைய விஷயங்களையே கட்டிக்கொண்டு அழ வேண்டுமா, முன்னோக்கிச் செல்லக் கூடாதா?” என்ற இந்திய வாக்காளர்களின் - குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் - குரலையே பா.ஜ.க-வின் பிரச்சாரம் எதிரொலித்துள்ளது. “தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்தது என்னுடைய தகப்பனார்தான்” என்று ராகுல் காந்தி நினைவூட்டியதையும் மக்கள் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதத்தை நன்றாகப் பராமரித்ததையும், வேலை வாய்ப்பை உருவாக்கியதையும்கூட மக்கள் மறக்க விரும் பியதைப் போலவே தெரிகிறது.
பிரச்சார பாணிகளும் தகவல்களும்
விலைவாசி உயர்வு, தலைமையில் வெற்றிடம், ஊழல்கள், பொருளாதார மந்தநிலைதான் அனைவரின் மனங்களையும் ஆக்கிரமித் திருந்தது. நடந்ததை மறந்து, நிகழ்காலத்தில் வாழ்ந்து, எதிர்காலத்தில் உயர்வதையே மக்கள் விரும்புவதை மோடி புரிந்துகொண்டார். ராகுல் காந்தி இதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். மக்கள் மறந்திருப்பதைத் தங்களுடைய பிரச்சாரம் மூலம் உரிய வகையில் நினைவுபடுத்துவதே வெற்றிகரமான தலை வரின் இலக்கணம். அதில்தான் மோடி சாதித்தார், ராகுல் தோல்வியடைந்தார்.
மோடியைப் பொறுத்தவரை ‘குஜராத்தின் படுகொலை களுக்குப் பிறகுதான்' வரலாறு தொடங்குகிறது. அவருடைய பிரச்சாரம் முழுக்க குஜராத் அடைந்த வெற்றிகளைப் பற்றித்தான். கேள்விக்குரியதாக இருந்தாலும் காங்கிரஸால் அலட்சியப்படுத்தப்பட்டாலும் அதை அவரால் நம்பவைக்க முடிந்தது. குஜராத்தின் வரலாற்றையே சுருக்கி, அதன் பெருமைகளைத் தனதாக்கிக்கொண்டார். உலக வர்த்தகப் பாதையின் கேந்திரத்தில் அது இருப்பதையும் தொழில் - வர்த்தகத்தில் அது காலங்காலமாக முன்னணியில் இருப் பதையும், அதன் கலாச்சாரச் சிறப்புகளையும் தன்னுடைய சாதனையில் இணைத்து, ‘நாடு முழுக்க இது சாத்தியம்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார்.
வரலாற்றுடனும் சமூகத்துடனும் தனக்குள்ள தொடர்பு குறித்து ராகுலுக்குத் தெளிவான சிந்தனை இல்லை. தன்னுடைய பரம்பரையின் பெருமையைப் பேச ஆரம்பித்து, ‘பரம்பரை ஆட்சி கூடாது’ என்று முடித்தார். மிகச் சிலவற்றைத் தான் அவர் ‘செய்வேன்’ என்றார். அப்படிச் சொன்ன எதையும் வெகு சீக்கிரத்தில் செய்ய முடியாது என்பதை அவர் உணரவில்லை.
லாலு பிரசாத்தும் முலாயமும் 25 ஆண்டுகளுக்கு முன்னால் செய்த பிரச்சாரத்தை ராகுல் இப்போது செய்தால் எடுபடுமா? ‘பா.ஜ.க. என்பது நான்கு மாநிலங்களில் மட்டுமே செல்வாக்குள்ள மாநிலக் கட்சிதான்’ என்று தன்னுடைய ஆலோசகர்கள் கூறியதையே கூறிக்கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்பது புரியாமலே பேசினார் ராகுல். பேச வேண்டிய சமயங்களிலெல்லாம் மௌனம் காத்தார், பேட்டிகளுக்கு ஒப்புக்கொண்டதே இல்லை, இளைஞராக இருந்தும் ராகுல் ட்விட்டர் பக்கம் போகவே இல்லை. மோடியோ ட்விட்டரில் கலக்கினார். எதை, எங்கே, எப்படிப் பேச வேண்டும் என்று திட்டமிட்டுப் பேசினார். சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவினார். இந்திரா காந்தி பரம்பரையால் நாடு எப்படிப் பின்தங்கிவிட்டது என்ற மோடியின் பிரச்சாரம்தான் ஏற்கப்பட்டது.
எங்கே சென்றார் ராகுல்?
ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பை அவ்வப்போது விட்டுவிட்டுச் சென்றார். தேர்தல் முடிகிற கடைசி கட்டத்தில் திடீரென ‘எங்கோ’ புறப்பட்டுப் போய்விட்டார். மோடியோ தேர்தல் களத்திலிருந்து என்னென்ன தகவல்கள் வருகின்றன என்று கேட்டு, அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே இருந்தார். திரும்பி வந்த ராகுல், சோனியா காந்தி பிரதமருக்கு அளித்த கடைசி விருந்தைப் புறக்கணித்தார். மக்களை விடுங்கள், கட்சிக்காரர்களிடமாவது அது ஏன் என்பதை விளக்கியிருக்கலாம். அவசியமில்லை என்று கருதிவிட்டார். தேர்தலில் தோல்வி நிச்சயம் என்ற நிலையில், தொண்டர் களுக்கு ஆறுதல் தரும் வகையிலாவது களத்தில் இருந்திருக்க வேண்டும். லாலுவிடம் இதை அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.
“புனிதமான கங்கைத் தாய் தன்னை அழைத்து வாரணாசி யில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுத்தாள்” என்று பிரச்சாரத்தைத் தொடங்கினார் மோடி. ராகுல் காந்தியோ இயற்கையே அவருக்குத் தந்த தலைமை வாய்ப்பை முறையாக வகிக்காமல், அவ்வப்போது உதறிக்கொண்டே யிருந்தார். ராகுல் திட்டவட்டமாக எதையும் சொல்லாமல், அருவமாகச் சொல்லியதற்கு மாற்றாக, பிரச்சினைகளையும் சொல்லித் தீர்வையும் சொன்னார் மோடி.
முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம்
பாபர் மசூதி இடிப்பும் குஜராத் கலவரமும் முஸ்லிம்களின் நினைவுகளிலிருந்து அகலாது. யாரையும் தாஜா செய்ய மாட்டோம், எல்லோரையும் சமமாக நடத்துவோம் என்பதை முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள். அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்பது தீர்வாகாது. அவர்கள் ஜனநாயக அமைப்புகளிலிருந்து விலக்கப்படுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
குஜராத்தில் முஸ்லிம்களைச் சமாதானப்படுத்தவும் அவர் களுடைய ஆதரவைப் பெறவும் ‘சத்பாவன யாத்திரை’ நடத்தினார் மோடி. அவருடைய பொதுக்கூட்டங்களில் முஸ்லிம்கள் பங்கேற்றனர். ஆனால், வேட்பாளர்கள் பட்டியலில் அவர்களுக்குப் போதிய இடம் தரப்படவில்லை. முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் குறைந்திருப்பதைச் சரிசெய்வது மோடியின் கடமை மட்டுமல்ல, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் அது இருக்கிறது. முஸ்லிம்களின் ஆதரவைப் பெற டெல்லியில் இமாமின் ஆதரவைக் கோருகிறார் சோனியா. அவருடைய கட்சியில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்ற ஒரு தலைவர் இல்லை. முஸ்லிம்களை மிரட்டித் தங்களுக்கு வாக்களிக்குமாறு அச்சுறுத்தும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவற்றுக்கும் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் தரும் கடமை இருக்கிறது. மதச்சார்பற்ற, முற்போக்கான முஸ்லிம் தலைமையை அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும்.
நடந்ததை மறப்பவர்களின் வாக்குகளால் மோடி வெற்றி பெற்றிருக்கிறார்; நடந்தவற்றை மறக்க முடியாதவர்களுக்காக, அவர்களையும் முன்னேற்றப் பாதையில் இணைத்துச்செல்லும் நடவடிக்கைகளை மோடி தொடங்க வேண்டும்.
‘தி இந்து’ (ஆங்கிலம்); தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT