Published : 28 May 2014 10:00 AM
Last Updated : 28 May 2014 10:00 AM
சீனாவில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக சுரங்கத் தொழிலதிபரான லியூ ஹானுக்கும் அவரது சகோதரருக்கும் சில நாட்களுக்கு முன்னர் மரணதண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் அந்நாட்டின் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் உள்ள குவாங்கான் பகுதியில் சுரங்கத் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர் லியூ. போர்ப்ஸ் இதழ் 2012-ல் நடத்திய கணக்கெடுப்பின்படி சீனாவின் பணக்காரத் தொழில்நிறுவனங்களில் 148-வது இடத்தைப் பிடித்த சிச்சுவான் ஹான்லாங் குழுமத்தின் தலைவராக இருந்தவர் அவர்.
1990-களின் ஆரம்பத்தில் தொடங்கிய அவரது வளர்ச்சிக்கு அந்தக் காலகட்டத்தில் சிச்சுவான் மாகாண கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த சோவு யாங்காங் பெருமளவில் உதவினார். சீன அரசின் பாதுகாப்புத் துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற சோவு யாங்காங் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
1993-ல் ஒரு குற்றப்படையை அமைத்த லியூ சட்டவிரோத ஆயுத விற்பனை முதல் கொலைகள் வரை பல குற்றங்களில் ஈடுபட்டதாகக் கடந்த ஆண்டு லியூ சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் லியூவின் கும்பலில் இருந்தவர்களில் சிலருக்கு மரண தண்டனையும் சிலருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து ஹியூபே மாகாண நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
சோவு யாங்காங் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்தத் தீர்ப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீன அதிபராகக் கடந்த ஆண்டு பதவியேற்ற ஜீ ஜின்பிங், ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்துவருகிறார். இந்த வழக்கில் லியூ சகோதரர்களுக்குக் கிடைத்திருக்கும் உச்சபட்ச தண்டனை, முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை நடவடிக்கை என்றே சீன அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT