Last Updated : 08 May, 2015 09:07 AM

 

Published : 08 May 2015 09:07 AM
Last Updated : 08 May 2015 09:07 AM

காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா



சட்டத்தை மீறக் கூடாது என்ற உணர்வு ஹாங்காங் கல்விமுறையின் அடிப்படை போதனைகளுள் ஒன்று!





கடந்த வாரம் ஹாங்காங்கில் ஓர் இந்திய அங்காடிக்குப் போயிருந்தேன். பொருட்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றேன். எனக்கு முன்னால் ஓர் இளம்பெண். கைபேசியில் தனது மூன்று வயது மகனின் குறும்புகளைப் பற்றிப் பெருமையாக அலுத்துக்கொண்டிருந்தார்- ஆங்கிலத்தில். கடைக்காரர் அந்தப் பெண் வாங்கியிருந்த காய்கறிகள், மளிகைப் பொருட்கள், நறுமணப் பொருட்கள், தின்பண்டங்கள் முதலானவற்றைத் தனித்தனி பிளாஸ்டிக் பைகளில் போட்டார். பின் அவற்றை இரண்டு பெரிய பிளாஸ்டிக் பைகளில் அடுக்கிக் கொடுத்தார்.

ஹாங்காங்கில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதற்கொண்டு அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகள் கொடுக்கப்படக் கூடாது; வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் மட்டும், பையொன்றுக்குக் குறைந்தபட்சம் 50 சதம் (ரூ. 4) கட்டணமாக வசூலித்துக்கொண்டு வழங்கலாம். என் முறை வந்தபோது கடைக்காரரிடம் கேட்டேன்: “அந்தப் பெண்ணிடம் பைகளுக்குக் கட்டணம் வாங்கினீர்களா?”. அவர் தலையைச் சரித்து என்னைப் பார்த்துக் கமுக்கமாகச் சிரித்தார். ஹாங்காங்கின் ஒரு லட்சம் அங்காடிகளில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு சட்டம், ஓர் இந்திய அங்காடியில் வணிகராலும் பயனராலும் எவ்வித உறுத்தலுமின்றி மீறப்படுகிறது.

கிராமங்களில் சிலர் கேட்பார்கள்- ‘படித்தவன் மாதிரியா நடந்துகொள்கிறான்?’. படிப்பு பண்பைத் தர வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. நான் சந்தித்த கடைக்காரரும் இளம் பெண்ணும் படித்தவர்கள்தான். ஆனால், சட்டத்தை மதிப்பதும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் இருப்பதும் படித்தவர்கள் பின்பற்ற வேண்டிய பண்புகளாக அவர்களுக்குத் தெரியவில்லை.

இலகு ரயில்

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, நான் ஹாங்காங் வந்த புதிதில், இருபதாண்டுகளுக்கு முன்னால், புறநகர் ஒன்றில் உள்ள கட்டிடப் பணித்தலத்துக்கு உடன் பணியாற்றும் இளைஞன் என்னை அழைத்துச் சென்றான். மெட்ரோ ரயிலிலிருந்து இலகு ரயிலில் மாறிச் செல்ல வேண்டும். இலகு ரயில் புறநகர்களில் மட்டும் ஓடும், இரண்டு பெட்டிகள் மட்டுமே இருக்கும். தண்டவாளங்களும் நடைமேடையும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் நிலையங்களைப் போல பொது வெளியோ கட்டணக் கதவுகளோ இராது. பயணச்சீட்டு வாங்க சிறிய இயந்திரம் இருக்கும்.

சீட்டு இல்லாமலும் ரயிலில் ஏற முடியும், இறங்கவும் முடியும். நான் பணித்தலத்துக்குப் போகும்போதும் திரும்ப வரும்போதும் கவனித்துக்கொண்டே இருந்தேன். சீட்டு இல்லாமல் யாரும் பயணிக்கவில்லை. உடன் வந்த இளைஞனிடம் “இது உங்களுக்கு எப்படிச் சாத்தியமானது?” என்று கேட்டேன். “நாங்கள் இதைப் பள்ளிகளில் சொல்லிக் கொடுத்துவிடுவோம்” என்று பதிலளித்தான். அதாவது சட்டங்களை மதிக்க வேண்டும் என்று ஹாங்காங் பள்ளிகளில் சொல்லித்தருகிறார்கள்.

கல்வியும் சமூகமும்

நமது இந்நாளையக் கல்வித் திட்டத்தில் இப்படியான போதனைகளுக்கு இடமில்லை. கல்வி வணிகமயமாகி விட்டது. இந்தத் திட்டத்தில் படிக்கிறவர்கள் பண்பாளர்களாக வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் என்பது கல்வியாளர்கள் சிலர் எழுப்பும் கேள்வி. இந்தக் கேள்வியில் நியாயமில்லாமல் இல்லை. ஆனால், கூடவே இன்னொரு கேள்வியும் எழுகிறது. கல்வி வியாபாரமாவதற்கு முன்னால் படித்தவர்கள் எல்லாம் பண்பாளர்களாக இருந்தார்களா?

1916-ல் நடந்த காசி காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய காந்தியடிகள் மக்கள் பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில்லை என்று வருத்தப்படுகிறார். மாணவர்கள் ரயில் பெட்டிகளிலேறி அனைத்து இருக்கைகளையும் ஆக்கிரமித்துக்கொள்வது குறித்துக் கவலைப்படுகிறார். மாணவர்களைப் பற்றிக் கைப்புடனும் வசைப்பாங்குடனும் சொல்கிறார்: ‘அவர்கள் ஆங்கிலம் படித்திருக்கிறார்கள்’. தொடர்ந்து முயற்சித்தால் சுதந்திரத்துக்கு முன்னால் நமது பண்பு நலன்களை மேம்படுத்திக்கொண்டுவிடலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

‘மதுவையும் தீண்டாமையையும் ஒழிக்க வேண்டும், கதர் அணிய வேண்டும், புறத்தில் தூய்மையும் அகத்தில் நேர்மையும் வேண்டும்’ போன்ற போதனைகள் அவருக்கு அரசியல் விடுதலையைவிட முக்கியமானவையாக இருந்தன. காந்தியடிகள் சட்டத்தை மீறினார். அது எதிர்ப்பைக் காட்டுகிற அவரது போராட்ட வடிவம். சத்யாக்கிரகிகளிடம் அவர் வலியுறுத்திச் சொன்னார்: ‘பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்காதீர்கள்; போலீஸ் கைதுசெய்ய வந்தால் உடனே கீழடங்குங்கள்’. ஒரு நல்ல சிவில் சமூகம் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று அவர் நம்பினார்.

காந்தி தேசத்தின் இன்றைய நிலை என்ன? தாம்பரத்தில் அதிகாலை நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு நான் கண்ட காட்சி எடுத்துக்காட்டாக அமையலாம். தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்த பேருந்திலிருந்து அந்தக் குடும்பம் இறங்கியது. சாலையைக் குறுக்காகக் கடந்து மையத்தை அடைந்தது. அங்கே சாலையைப் பிரிக்கும் கட்டைச் சுவரின் மீது நான்கடி உயரத்துக்கு இரும்புக் கிராதி கட்டப்பட்டிருந்தது. நடுத்தர வயதிலிருந்த தந்தை முதலில் கிராதியிலேறி மறுபக்கம் குதித்தார். அடுத்து ஏழெட்டு வயதிலிருந்த மகன் உற்சாகமாகத் தாண்டிக் குதித்தான்.

தொடர்ந்து பதின்பருவத்திலிருந்த மகள் பயணப் பொதிகளை எடுத்துக்கொடுக்க மறுபக்கத்திலிருந்த தந்தையும் மகனும் வாங்கி வைத்துக்கொண்டார்கள். அடுத்தடுத்துத் தாயும் மகளும் மறுபுறம் தாவினார்கள். பிறகு மொத்தக் குடும்பமும் சாலையின் அடுத்த பாதியை குறுக்காகக் கடந்து சென்றது. ஏன் இத்தனை பிரயாசை? பேருந்து நிறுத்திய இடத்திலிருந்து சிறிது தொலைவில் பாதசாரிகள் கடப்பதற்கான வெள்ளைக்கோட்டுப் பாதை இருந்தது. அவ்வளவு தூரம் நடப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. இந்தக் குடும்பத்தில் வளர்கிற சிறுவனுக்குச் சட்டத்தைக் குறித்து என்னவிதமான மதிப்பீடுகள் உருவாகும்?

ஹாங்காங் பள்ளிகளில் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதை உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சொல்லித்தருகிறார்கள். அதே வேளையில் மொத்த சமூகமும் சட்டத்தின் மாட்சிமையை (ரூல் ஆப் லா) பேணுவதைக் கடமையாகக் கொண்டிருக்கிறது. பிள்ளைகள் பள்ளியிலிருந்தும் கற்கிறார்கள், சமூகத்திட மிருந்தும் கற்கிறார்கள்.

காந்தி ஏமாந்தார்

இந்த இடத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னால் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். அதிகாலை நேரம். நல்ல கூட்டம். மற்ற நகரங்களில் அலுவலகங்கள் திறக்கிற நேரத்திற்குள் போய்ச்சேர்கிற அவசரத்தில் கார்பரேட் கனவான்கள் வரிசைகளில் நின்றிருந்தார்கள். ஒரு இளைஞன் வரிசையை முறித்துச் சோதனை வாயிலை நோக்கி முன்னேறினான். நான் தடுத்தேன். தன்னிடத்தில் மடிக்கணினி இருக்கிறது, அதைத் தனியாகச் சோதிப்பார்கள், அதனால் முன்னால் செல்ல வேண்டும் என்றான். அந்நேரம் வரிசையில் நின்றவர்களில் பாதிப் பேர்களின் தோள்பட்டைகளில் மடிக்கணினிப் பைகள் தொங்குவதைச் சுட்டிக்காட்டினேன்.

தன்னுடைய விமானம் புறப்படுவதற்கு அதிக அவகாசமில்லை என்றான். வரிசையில் நிற்கும் பலருக்கும் அப்படியே என்றேன். இதற்கு மேல் என்னுடன் வாதிடுவது தன்னுடைய நேரத்தை வீணாக்குகிற செயல் என்று அவன் கருதியிருக்க வேண்டும். அவனது அடுத்த செய்கை நான் முற்றிலும் எதிர்பாராதது. ஏர்-இந்தியா விளம்பரத்தில் வரும் மகாராஜாவைப் போல் சிரம் தாழ்த்தி ‘ ஐயா, செல்லுங்கள்’ என்பதுபோல் கையை முன்னோக்கிக் காட்டினான். என்னை அவமானப்படுத்துவது அவன் நோக்கமாக இருக்கலாம். இந்த இளைஞனுக்கு இவ்வளவு சூழ்ச்சியைக் கற்றுத்தந்தது எது? அவன் கற்ற கல்வியா? அவன் வாழும் சமூகமா?

அந்த இளைஞனின் கண்களைப் பார்த்தேன். அதில் களிப்பு இருந்தது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு அதே களிப்பை ஹாங்காங் இந்திய அங்காடி வணிகரின் கண்களிலும் பார்த்தேன். அது ஆங்கிலக் கல்வி தந்த களிப்பு, சட்டத்தை மீறுவதால் உண்டாகிற களிப்பு, நூறாண்டுகளாகக் காந்தியை ஏமாற்றிவருகிற களிப்பு.

- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x