Published : 20 Apr 2015 09:05 AM
Last Updated : 20 Apr 2015 09:05 AM
சித்திரையின் அடையாளம் நிலவு. தைப்பூசம், மாசி மகம் என்று மற்ற மாதங்களுக்கு நட்சத்திரங்களே அடையாளம். சித்திரை மாத நிலவு பாலையையும் அழகாக்கும். அறுவடைக்குப் பிறகு, உளுந்தும் பயிறும் எடுத்த பிறகு, பில்பசலி என்ற நரிப்பயிறும் காய்ந்த பிறகு, கீழத்தஞ்சையின் வயல்வெளி வெட்டவெளியாகிவிடும். இதனைப் பட்டக்கால் என்போம். வரப்பில் நிற்கும் பனையும் இலையே தெரியாத கருவையும் வெளியைக் கலைக்காது. பார்வையின் ஓட்டத்தை வாங்கிக் கடத்திக்கொண்டே இருக்கும். வெளியைக் காட்டவே வரைந்த ஓவியத்தில் இருக்கும் புள்ளிகளைப் போல.
நிலவுக்குப் பொங்கல்
சித்திரைப் பவுர்ணமியில் வீட்டைக் கழுவி, மாக்கோலமிட்டு, மாவிலைத் தோரணம் கட்டுவார்கள். வரவைக் காட்டும் பாதங்களை நிலைப்படியிலிருந்து வீட்டுக்குள் சித்திரக் கோலமாக வரைவார்கள். மாலையில் பொங்கலிட்டுப் படைப்பது வழக்கம். தைப்பொங்கல் சூரியனுக்கு; சித்திரைப் பொங்கல் நிலவுக்கு. சித்திரையும் வைகாசியும் வசந்த காலம். ஆனால், வசந்தம் என்ற இளவேனில் சித்திரை வரை காத்திருப்பதில்லை. இலை கொட்டிய புங்க மரம் மாசிக் கடைசியிலேயே தளிர்த்துவிடும். மாமரம் துளிர்வைத்து அடுக்கு தீபங்களாகப் பூத்துவிடும். வாகையும் அவற்றோடு தளிர்க்கும். இந்த மரங்களின் இலைகள் நாளொரு நிறமாகத் தடித்து மாறும். அரக்கு நிறத்துக்கு வரும்போதுதான் இன்ன வண்ணமென்று மொழியின் கரங்கள் அதனைப் பிடித்து நமக்குக் காட்டும். பங்குனியில் மாவடுவைப் படியில் அளந்து வாங்கிக்கொள்ளலாம். அடுத்த சில வாரங்களில் புங்கமரம் மழைத்தூறலாகப் பூத்துக்கொட்டும். கொட்டிய பூ விரித்த நடைபாவாடையாகத் தரையில் பரவும். திருவாரூர் போன்ற ஊர்களில் பெருங்கோயில்களில் வசந்தன் என்ற வசந்தத் திருவிழாவும் மாசிக் கடைசியில் தொடங்கி பங்குனித் தேரோட்டத்தோடு முடிந்துவிடும்.
சித்திரைத் தேரோடுமா?
முயன்றாலும் முடியாத காரியத்தை, ‘அதற்கு சித்திரைத் தேர் ஓட வேண்டும்’ என்பார்கள். ‘சித்திரையில் தேர் ஓடினாலும் ஓடும், ஆனால் இது முடியாது’ என்று அதற்குப் பொருள். அப்போதெல்லாம் வடம்பிடிக்கக் கிராமங்களிலிருந்து ஆயிரக் கணக்கில் ஆட்களைத் திரட்டி அனுப்புவார்கள். தேரோடும் வீதியில் வரும்போது எங்காவது ஆச்சலில் இறங்கியோ, மரத்தில் இடித்தோ தேர் நின்றுவிடும். அப்படியே போட்டுவிட்டு ஆட்கள் ஊருக்குத் திரும்பிவிடுவார்கள். நின்ற இடத்திலேயே சாமிக்குப் பூஜையெல்லாம் நடக்கும். மீண்டும் ஆட்களைத் திரட்டி வடம்பிடிக்க மாதங்களாகலாம்.
தேரின் பீடம் இலுப்பை மரம். பனை வாரைகள் அதன் மேல் குத்துக்கால்களாக நிற்கும். அதற்கு மேல் மூங்கில் கழிகளால் பட்டை வைத்துக் குடை போன்று கூரை. கூரையைப் போர்த்தியிருக்கும் தேர்ச் சீலையில் வண்ணக் கோலங்கள் பொலிந்துகிடக்கும். நான்கு மறைகளே குதிரைகளாக, சூரியனும் சந்திரனும் சக்கரங்களாக, பிரம்மாவே சாரதியாக பிரபஞ்சத் தலைவன் தேரில் வருவான். கூரையிலிருந்து தொங்கும் தொம்பைகள் தோரணையோடு அசைந்தாடும். தேரின் பின்கால்களுக்கும் சாலைக்கும் இடையில் உஞ்சா மரத்தைச் செலுத்தி உலுக்குவார்கள். அதிர்வேட்டும் ஆரவாரமும் சேர்ந்துகொள்ளும். முட்டுக்கட்டைகளைக் கொடுத்துத் திருப்பும்போது ரதவீதி மூலைகளில் தேர் கம்பீர மாகக் குலுங்கித் திரும்பும்.
வரத்து நின்றால் வறட்சி
கீழத்தஞ்சையில் சித்திரை-வைகாசி வறட்சியைப் பார்ப் பவர்கள், “அந்தத் தைமாத வளத்தை இந்த இடத்திலா பார்த்தோம்!” என்று சந்தேகிப்பார்கள். பயிர் செய்த பகுதிகள் எல்லாம் நீரற்ற குளமாகக் காய்ந்து வெடித்திருக்கும். வெடிப்பில் கை நுழைக்கலாம். காவிரியில் நீர் வந்தால் வளம்; வரத்து நின்றால் வறட்சி. பெரும் நிலப்பரப்பு ஒன்றில் நாடகக் காட்சியின் மிகையோடு எதிர்எதிரான மாயங்கள் கண்முன் நிகழும்.
இங்கு வாழ்க்கையின் சுழற்சி இரண்டே சலனங்களில் அடங்கும். தண்ணீர்க் காலத்து வயல் வேலை; சித்திரைக் கோடையில் மராமத்து வேலை. மூன்றாவதாக ஒன்றைச் சொல்ல வேண்டுமானால், இரண்டுக்கும் இடையில் வரும் திருவிழாக்களைச் சொல்லலாம். கிராமம் என்பதற்கு அடை யாளம், அதற்காக ஒரு பிடாரியும் ஐயனாரும் இருப்பதாகும். மண்ணில் குதிரையும் மாடும் செய்து, சுட்டு, கண்திறந்து, தாரை தப்பட்டையோடு ஐயனார் கோயில்களுக்குத் தூக்கிச் செல்வார்கள். இது புரவி எடுப்பு. கைகூப்பிய மனித உருவமாக மண்ணில் செய்த மதலைகள் மாரியம்மனுக்கான நேர்த்திக் கடன். ஊர்ப்பிடாரியும், ஐயனாரும் திருவிழா கண்ட பிறகுதான் பெருங்கோயில்களில் சிவனுக்கும் பெரு மாளுக்கும் திருவிழா கொடியேற்றம் நடக்கும்.
உடைத்து உள்ளே வந்த வெள்ளம்
விடையாற்றியில் ராம நாடகம், லவ குசா, அரிச்சந்திர மயான காண்டம், இரணியன், பவளக்கொடி, பாரதக் கதைகள் போன்ற புராண நாடகங்கள் நடக்கும். ஒரு நாடகத்தில் வரும் “என் கண்கொள்ளாச் சேனை எங்கே? கர்ணனும் சகுனியும் எங்கே, எங்கே?” என்ற திருதராஷ்டிரனின் புலம்பல் காதில் ஒலிக்கிறது. இவற்றின் வழியாக, சித்திரைப் பிறப்பிலிருந்து எட்டுக்குடி முருகனுக்கு வந்துகொண்டேயிருக்கும் காவடிகளின் வழியாக, அருணாச்சலக் கவியின் கீர்த்தனைகளும், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தும் பலருக்குப் பழக்கமாகியிருந்தன. ‘ரத்தக் கண்ணீர்’ என்ற சமூக நாடகமும் திருவிழாக்களில் நடந்தது, எதையோ உடைத்து உள்ளே வந்த வெள்ளமாகத் தெரிகிறது.
இரவு சாப்பிட்டுவிட்டு ஆற்று மணலில் விளையாடச் சென்றுவிடுவோம். இரண்டு மூன்று மணி வரை உப்புக்கோடு விளையாடி, உடம்பில் இருக்கும் மணல் போக மடுவில் குளித்துவிட்டுத் தூங்குவதற்கு வீடு திரும்புவோம். வாசலில் காற்றுக்கொட்டகை போட்டிருக்கும் வீடுகளில் விசுப்பலகை மீது தென்றல் வீசச் சுகமாகத் தூங்கலாம். உயரமாக வளரும் டெயின்சா என்ற பசுந்தாள் பயிரை வயலில் தெளிப்பதுண்டு. இது காடாகவே வளர்ந்துவிடும். இந்தக் காட்டில் ஒளிந்து பிடித்து விளையாடுவது சிறுவர்களுக்கு ஓய்வறியாத பகற் பொழுது விளையாட்டு.
காலையில் கடைந்த பசு மோர் மண்பானையில் உறியில் இருக்கும். வெயிலில் சென்று வீட்டுக்கு வந்தால் அதை மூக்குக் குவளையில் ஊற்றிக் குடிக்கலாம். விளாமிச்சை வேரைத் துணியில் முடிந்து மண்பானைத் தன்ணீரில் போட்டு வைப்பார்கள். தஞ்சாவூர்க் கீழவாசலின் குணங்குடிதாசன் நன்னாரி சர்பத் விருந்தாளிகளுக்குப் பெருமையாக வாங்கித்தரும் பண்டம். கொல்லையில் இருக்கும் கேணிகளுக்கு நெல்லிக் கட்டைச் சூறாவளி வைத்துக் கட்டியிருப்பார்கள். பகல் பொழுது குளியலை அந்தத் தண்ணீர் காசில்லாமல் கிடைக்கும் சொகுசாகவே மாற்றிவிடும்.
மென்மையின் ஈர்ப்பைக் கற்கலாம்
கொக்காலடி பாமணியிலிருந்து விசாலமான வெட்டுக் கூடையில் வரும் விரிந்த வெள்ளரிப் பழம் அலர்ந்த மலராகவே இருக்கும். மண்ணில் விளைந்தது என்று சொன்னால்தான் நம்பலாம். மென்மையின் ஈர்ப்பை அதன் நிறமும் மணமும் நமக்குக் கற்றுத்தரும். நீர்த்திவலைகள் மணற் குருணைகளாகத் திரண்டிருக்குமோ! வாழை இலைக்குத் தட்டுப்பாடு வந்தால் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் வாழைச் சருகில் சாப்பிடலாம். வாழைப் பட்டையை அளவாக வெட்டி, புறணியைக் கழித்து, இரண்டிரண்டாக ஒட்டித் தைத்து வயிற்றுப் பகுதியில் சாப்பிடுவார்கள். இப்படியே தென்னை ஓலையை வெட்டித் தைத்து அதன் முதுகுப் பகுதியில் சாப்பிடலாம்.
சித்திரைக்கு முன்பிருந்தே ராமனாதபுரத்திலிருந்து செம்மறியாட்டுக் கிடைகளுடன் கீதாரிகள் வருவார்கள். கிடைகள் வடக்கே கொள்ளிடக்கரை வரை சென்று காவிரியில் தண்ணீர் வருவதற்குச் சற்று முன்பு ஊர் திரும்பும். ஒருவராகவே மனைவியுடன் நூறு, இருநூறு ஆடுகளை ஓட்டிவருவார்கள். கையில் ஒரு கம்பும், ராஜபாளையம் வகை நாய் ஒன்றும்தான் பாதுகாப்புக்கு. நெல்லுக்கு வயலில் கிடை கட்டி, ஊர் திரும்பும்போது அந்த நெல்லை அரிசியாக்கி எடுத்துச்செல்வார்கள். இவர்களிடம் குறவஞ்சி என்ற சிலம்ப விளையாட்டைத் தஞ்சாவூர்க்காரர்கள் கற்றுக்கொண்டார்கள்.
கும்பகோணம் குடமிளகாய்
மாசி, பங்குனியிலிருந்தே தஞ்சாவூரிலும் கும்பகோணத் திலும் குடமிளகாய் கிடைக்கும். விவரமுள்ளவர்கள் சித்திரையில் மறுதாம்புக் காய் வரும்வரை காத்திருந்து வாங்குவார்கள். வயலில் வெட்டுமாலை வைத்து புறணியைத் தணிப்பார்கள். கீற்று முடைவது, பாளை கிழிப்பது, பனைமட்டையின் அகணியைக் கிழித்து நாராக்கிக்கொள்வதெல்லாம் கோடையில் மும்முரமாக நடக்கும். சித்திரையின் பிற்பகுதியும், வைகாசியின் முற்பகுதியும் அக்னி நட்சத்திரக் காலம். அப்போது வைக்கோல்போர் போடுவதையும், கூரைக்குக் கீற்றுபோடுவதையும் தவிர்ப்பார்கள்.
சித்திரை கழிந்து பத்து நாட்களுக்கெல்லாம் குளிப்பதற்குக் குளம் தேட வேண்டும். குட்டைகள் காய்ந்துவிடும். குளத்து நீர் பாசி பிடித்துக் கிடக்கும். தாமரைக் குளங்கள் மட்டும் விரைவில் கெட்டுப்போகாது. மேட்டூர் திறந்து ஆற்றில் தண்ணீர் வரும் வரை கேணியைத்தான் நம்ப வேண்டும்.
- தங்க. ஜெயராமன்,
ஆங்கிலப் பேராசிரியர், ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com
இந்தக் கட்டுரையின் முழு வடிவம் ‘தி இந்து’ சித்திரை மலரில் வெளியாகியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT