Published : 23 May 2014 12:00 AM
Last Updated : 23 May 2014 12:00 AM
எல்லாம் முடிந்துவிட்டது. மக்களவைப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் வகையில் அமோக வெற்றி பெற்றுவிட்டார் நரேந்திர மோடி. அவருடைய அரசியல் எதிர்ப்பாளர்கள் என்ன நடந்தது என்றே புரியாமல், பேச வார்த்தைகளின்றி வாயடைத்துப்போயிருக்கிறார்கள். தங்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு என்ன காரணம், யார் காரணம் என்று கூற முடியாமல் திகைப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள். நான் அரசியல் விமர்சகன் அல்ல. மோடியின் பிரச்சாரத்திலிருந்து நிர்வாக மேலாண்மை மற்றும் பொருள்களைச் சந்தைப்படுத்தும் மேலாண்மைப் பாட மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்களைப் பற்றி மட்டும் எனக்குத் தெரிந்த வகையில் தெரிவிக்க விரும்புகிறேன்.
சரியான நேரத்தில் சரியான சரக்கு!
சரியான நேரத்தில், சரியான சரக்கை, சரியான விகிதத்தில் கொண்டுபோய்ச் சேர்த்ததுதான் பல நிறு வனங்களின் மாபெரும் வெற்றிக்குக் காரணங்கள் என்று சந்தையில் பல முன்னுதாரணங்கள் உண்டு. குஜராத்தைச் சேர்ந்த சோப்பு நிறுவனமான நிர்மா அவற்றில் உண்டு. இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத் தின் ஏகபோகத்தை ‘வாஷிங் பவுடர் நிர்மா’ முறியடித் தது. நிர்மாவின் தரமும் குறைந்த விலையும் அதற்கு உதவின. வெற்றிகரமான சரக்குகள், சேவைகள், மனிதர் கள் அனைத்துமே தேவைப்படும் நேரத்தில், தேவைப் பட்ட இடத்தில் வெளிப்படுவதுதான் வெற்றிக்கு முக்கி யக் காரணம். மத்திய அரசின் தலைமை சரியில்லை, அடுத்துத் தலைமைக்கு யார் வருவார் என்பது நிச்சய மில்லாமல் வெற்றிடம் ஏற்பட்டதால், திறமை, அனுப வம் உள்ள தன்னை அந்தப் பதவிக்கு முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்து வெற்றி கண்டார் மோடி.
ஆட்ட விதிகளை மாற்றினார்
பொதுவாக, இந்தியாவில் ஒரு கட்சியை எதிர்த்து இன்னொரு கட்சி போட்டிபோடுவதுதான் அரசியலாக இருந்துவந்திருக்கிறது. இந்த முறை மோடி அந்த வழக்கத்தைச் சிறிதே மாற்றினார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா ஆகியோர் எப்படி அந்தக் கட்சியின் முகமாக மக்களிடம் அறிமுகமாகிப் போட்டிபோடுகிறார்களோ அப்படியே மோடியும் களத்தில் இறங்கினார். பாரதிய ஜனதா வென்றால், மோடிதான் பிரதமர் என்பது உறுதியாக்கப்பட்டது. ராகுல் காந்தியோ பிரதமர் பதவிக்கான வேட்பாளராகக் களமிறங்க மிகவும் தயங்கினார்.
பாரதிய ஜனதாவும் மோடியும் இதை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. டி-20 கிரிக்கெட் போட்டி சமயத்தில் ஒரு தேர்தல் விளம்பரம்கூட இதையொட்டி வெளியானது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னால் நடுவர் ‘பூவா தலையா’ போட வருவார். ஒரு அணியின் தலைவர் மட்டும் வந்திருப்பார், இன்னொருவர் ‘பூவா தலையா’போடும் இடத்துக்கே வர மாட்டார். நம்முடைய வலிமையையும் எதிராளியின் பலவீனத்தையும் ஒப்பிட்டுக் காட்டும் உத்தி காலம்காலமாக இருந்துவருகிறது.
மோடி, பா.ஜ.க-வின் சச்சின்
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் மற்ற வீரர்கள் எப்படி விளையாடினார்கள் என்பதைவிட, சச்சின் எவ்வளவு ரன் எடுத்தார் என்பதுதான் சராசரி ரசிகர்களுக்கு முக்கியமாக இருந்தது. சச்சின் நன்றாக ஆடுகிறார், எஞ்சிய 10 பேரும் சரியாக ஆடவில்லை என்பதைச் சிலேடையாக ஆங்கிலத்தில் உணர்த்தும் விதத்தில் அமுல் நிறுவனம் ‘டென்டு டென் டோன்ட்’(Tendu ten don’t) என்று கேலியாக விளம்பரம் செய்திருந்தது.
இந்த முறை பா.ஜ.க-வைவிட மோடிக்கு வாக்களிக்க மக்கள் விரும்புவதைக் கட்சியும் உணர்ந்துகொண்டது. பெங்களூரூ தெற்குத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரின் கடந்தகாலம் குறிப் பிடும்படி இல்லையென்றாலும், மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காகவே வாக்களித்தேன். என்னைப் போல லட்சக் கணக்கானவர்கள் மோடிக்காக வாக்களித் துள்ளனர். இதை நான் அழுத்திச் சொல்வதற்குக் காரணம், மோடியை முன்னிறுத்திய அக்கட்சியின் உத்தி வெற்றி பெற்றது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே.
விளம்பர உத்தி என்பதும் தியாகம்தான்
குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மட்டும் அழுத்தமாக, அதே சமயம் சுருக்கமாக, எளிமையாகச் சொல்லும் விளம்பரங்கள்தான் வெற்றி பெறுகின்றன. வளர்ச்சி, நல்ல நிர்வாகம் இரண்டைப் பற்றி மட்டுமே மோடி பேசினார். வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஏற்படுவது நமக்கும் நல்லது என்ற எண்ணம் முதல்முறையாக வாக்களித்த லட்சக் கணக்கான இளைஞர்களிடம் இருந்த தால், அவர்களில் கணிசமானவர்கள் மோடியை ஆதரித் தனர். காங்கிரஸ் கட்சியின் குழப்பமான விளம்பரங்களை இத்துடன் ஒப்பிடுங்கள்.
தொடக்கத்தில் மிகவும் தெளிவாகத் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி, அரசியல் களத்தின் சூடு அதிகரித்தபோது பாதைமாறிப் பயணித்தது.
வால்வோ வாகனங்கள் ஏன் வெற்றிபெற்றன? அவை பாதுகாப்பானவை என்பது பதிந்துவிட்டது. இன்டிகோ விமான நிறுவனத்தை அதிகம் பேர் நாடுவது ஏன்? குறித்த நேரத்துக்குச் செல்ல எங்களை நாடுங்கள் என்று அது விளம்பரம் செய்கிறது.
உங்களுடைய லட்சியத்திலும் வழிமுறைகளிலும் தெளிவாகவும் கூர்மையாகவும் இருங்கள் என்பதே மோடியிடமிருந்தும் பிற வெற்றியாளர்களிடமிருந்தும் நாம் கற்க வேண்டிய பாடம். இந்தத் தலைமுறையில் மிகவும் வெற்றிகரமான நிறுவனம் ‘ஆப்பிள்’. அதை வாங்குகிறவர்கள் மற்றவர்களிடமும் அதைப் பரிந்துரைப்பார்கள். அதன் விலை சிறிது அதிகம் என்பதை யாரும் பொருட்படுத்துவதில்லை.
அப் கி பார்
தொழில்துறையைச் சேர்ந்த பல பிரமுகர்கள் மோடியின் உரைகளைத் தயாரிப்பதிலும் விளம்பர வாசகங்களுக்கும் தனிப்பட்ட முறையில் உதவியுள்ளனர். “அப் கி பார் மோடி சர்க்கார்” என்ற வாசகத்தை பியூஷ் பாண்டே என்பவர்தான் எழுதிக்கொடுத்தார். மாடிசன் என்ற இந்திய விளம்பர நிறுவனம்தான் மோடியின் தேர்தல் பிரச்சாரங்களை வடிவமைத்து நாட்டையே கலக்கிவிட்டது. இணையத்தில் குறிப்பாக டிவிட்டரில் மோடிக்காக நடந்த பிரச்சாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ‘டைம்ஸ் நவ்’தொலைக்காட்சியில் அர்ணாப் கோஸ்வாமிக்கு மோடி அளித்த பேட்டி நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றது. அவருக்கும் முன்னால் ராகுல் காந்தியை அவர் கண்ட பேட்டி தொடக்கத்திலேயே நொண்டியடிக்க ஆரம்பித்து, முழுப் பேட்டியையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவில்லை.
மோடியை விளம்பர நுணுக்கம் தெரிந்த அறிஞர் என்று இதைக்கொண்டு முடிவுகட்டுவது அரைவேக் காட்டுத்தனம். அதே சமயம், தன்னுடைய சக்தி என்ன, தன்னிடம் உள்ள சரக்கு என்ன என்பதைச் சரியாகக் கணக் கிட்டு, அதை வேண்டுவோரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் அவர் வெற்றி கண்டிருக்கிறார் அதற்காக அவர் உழைத்த உழைப்பு சாதாரண மானதல்ல.
தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT