Last Updated : 06 Apr, 2015 09:48 AM

 

Published : 06 Apr 2015 09:48 AM
Last Updated : 06 Apr 2015 09:48 AM

ஒரு பிடி மண்

காவிரி ஆற்றின் மணலில் வெயில் தகித்துக்கொண்டிருக்கிறது. ஆற்றங்கரைக்கு அப்பால் உள்ள நிலத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகளை மரத்தடிப் பக்கமாக ஒதுக்கிவிட்டு, தலையில் முக்காடோடு ஒண்டுகிறார்கள் அந்தக் கிழவர்கள்.

“என்னய்யா செய்யிறது? முன்ன காலமா? எங்கெ பாத்தாலும் நிலத்தை மனை போட்டு வத்திப்பொட்டி வத்திப்பொட்டிக் கணக்கா வூட்டைக் கட்டிவெச்சிடுறான். பச்ச தென்படுற பொட்டவெளிய தேடல்ல வேண்டியிருக்கு இப்ப. கருக்கல்ல கெளம்புனோம்னா பொழுது சாயுறதுக்குள்ள ஒரு நாளைக்கு இருவது இருவத்தியஞ்சு மைலு நடக்க வேண்டியிருக்குய்யா. மனுசன் பூமியில எல்லாத்தயும் தனக்குன்னு நெனச்சுட்டா இந்த வாயில்லா சீவனெல்லாம் எப்படிய்யா வாழுறது? ஏதோ எங்க காலம் முடியப்போவுது. உங்க காலம் முடியயில நெலம்தான் இருக்கப்போவுதா, மாடுதான் இருக்கப்போவுதா, மாடு மேய்க்கக் குடியானவன்தான் இருக்கப்போறானா?”

தீர்க்கதரிசனம் மாதிரி தோன்றுகிறது, அந்தப் பெரியவர்கள் பேசியது. மூக்கையன், வேலுச்சாமி. மூன்று ஆண்டுகளுக்கு முன் காவிரிப் பிரச்சினை தொடர்பாக எழுதுவதற்காக மேற்கொண்ட ஒரு பயணத்தின்போது அவர்களைச் சந்தித்தேன்.

விவசாயிகளின் வாழ்க்கையும் அவர்கள் எதிர் கொள்ளும் பல சிக்கல்களையும் இன்றைக்கு நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத தூரத்துக்கு வந்துவிட்டதை அந்த உரையாடல் உணர்த்தியது.

“நாளெல்லாம் இந்த மொட்ட வெயில்ல சுத்துறோமே, இங்கெ தண்ணிக்கு எங்கெ போறது சொல்லுங்க. அட, நம்மள வுடுங்க, வாயை நனச்சுக்கவாவது தண்ணியத் தூக்கிட்டு வந்துருலாம். இந்த வாயில்லா சீவனுங்களுக்கு எங்கெ தண்ணி காட்டுறது, சொல்லுங்க. ஒரு சர்க்காருன்னா எல்லாத்தயும் யோசிக்கணுமில்ல? யோசிக்கணுமா, வேணாமா? நம்ம சர்க்காரு என்ன பண்ணுது? குடியானவங்களே வேணாம்டானு ஒதுக்கி வெச்சிடுது. எல்லாத்துக்கும் ஒரு பிரச்சினைனு வரும் போது, அவங்கவுங்க தரப்பு ஆளுங்களக் கூப்புட்டு, ‘அய்யா! இதப் பத்தி உன்னோட ரோசனை என்ன?’னு சர்க்காரு கேட்குதுல்ல. விவசாயிங்க பிரச்சினயப் பத்தி வர்றயில மட்டும் ஏன்யா எங்களக் கேக்காம யார் யாரோ வெள்ளாம பண்றாங்க?”

டெல்லியிலிருந்து, ரேடியோவில் ‘இதயத்தின் வார்த்தைக’ளில் (மன் கி பாத்) “நான் விவசாயிகளின் சகோதரன், உங்களுக்குத் துரோகம் இழைக்க மாட்டேன்” என்று பேசும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மூக்கையன் - வேலுச்சாமியின் இந்த வார்த்தைகள் காதில் விழுமா?

“இந்தியாவின் வளர்ச்சிக்குப் பன்னாட்டு நிறுவனங் களுக்கு உகந்த சூழலை உருவாக்குவது அவசியம்... இந்தியாவின் வளர்ச்சிக்கு இது வரலாற்று வாய்ப்பு. நான் எதிர்க் கட்சிகளைக் கைகூப்பிக் கேட்கிறேன்... தயவுசெய்து முட்டுக்கட்டை போடாதீர்கள்” என்று கை கூப்பும் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு மூக்கையன் - வேலுச்சாமியின் இந்த வார்த்தைகள் காதில் விழுமா?

“நிலம் கையகப்படுத்தும் மசோதாவால் என் இரவுகள் தூக்கமற்ற இரவுகளாகிவிட்டன. நானும் ஒரு விவசாயி. இந்த மசோதாவால் விவசாயிகளுக்கு எந்தத் தீங்கும் இல்லை” என்று தூக்கக் கலக்கத்துடனேயே பேசிக்கொண்டிருக்கும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் சௌத்ரி வீரேந்திர சிங்குக்கு மூக்கையன் - வேலுச்சாமியின் இந்த வார்த்தைகள் காதில் விழுமா?

அரசின் சமிக்ஞைகள் தெளிவாகக் காட்டுகின்றன. ‘நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் சட்ட’த்துக்காக எந்த விலையையும் இந்த அரசு கொடுக்கும். அதை நிறைவேற்றியே தீரும். ஏனென்றால், எந்த ‘வளர்ச்சி’யின் பெயரால் நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வந்தாரோ, அந்த ‘வளர்ச்சி’யைக் கொண்டுவர இந்தச் சட்டமே கள ஆதாரம். யாரெல்லாம் மோடி பிரதமராக வேண்டும் என்று பின்நின்றார்களோ ‘அவர்கள்’ அத்தனை பேரும் இந்தச் சட்டத்திலிருந்தே ஆட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பிரதமர் மோடி கொண்டுவரத் துடிக்கும் ‘நிலம் கையகப் படுத்தல், மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் சட்டம்’ சொல்வது என்ன? இந்திய விவசாயத்தில் அது என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும்?

(நிலம் விரியும்…)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x