Last Updated : 15 Apr, 2015 08:22 AM

 

Published : 15 Apr 2015 08:22 AM
Last Updated : 15 Apr 2015 08:22 AM

ஒரு பிடி மண் 6 - இந்திய விவசாயத்தின் இதயத்தில் ஆழமாகக் குத்தப்படும் கத்தி

காற்றின் சுகந்தமோ, நீரின் பளபளப்போ நமக்கே சொந்தமில்லை. அப்படியிருக்க நம்மிடமிருந்து மற்றவர்கள் எப்படி அவற்றை வாங்க முடியும்? - செவ்விந்தியத் தலைவர் சீல்த்

எல்லாவற்றையும்விடப் பெரிய கேள்வி இது: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவரும் முன் மோடியும் அவருடைய சகாக்களும் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டார்களா, இல்லையா? ஏனென்றால், உலகின் ஆறில் ஒரு பங்குக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாடு தவிர்க்கவே முடியாத சவால் இது.

இன்றைக்கு 135 கோடியுடன் மக்கள்தொகையில் சீனா முதலிடத்தில் இருக்கலாம். அதற்கேற்ற நிலப்பரப்பும் அந்த நாட்டிடம் இருக்கிறது. கிட்டத்தட்ட 95.72 லட்சம் சதுர கி.மீ. நிலப்பரப்புடன் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு அது. இந்தியாவின் நிலை என்ன? நாம் எட்டாவது இடத்தில் இருக்கிறோம், 31.66 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுடன். சீனாவுடன் ஒப்பிட்டால், மூன்றில் ஒரு பங்கு. சரியாக அடுத்த 10 ஆண்டுகளில், 2025-ல் சீனாவைக் கடந்து, உலகிலேயே அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்கிறார்கள். இப்போதே உலகின் பட்டினி நாடுகளின் வரிசையில் முதல் வரிசையில்தான், இந்தியா இருக்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 23 கோடிப் பேர் இரவில் பட்டினி வயிறோடு தூங்கச் செல்கிறார்கள். குடிமக்களில் 21% பேர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள். அதாவது, உலகின் பட்டினி வயிறுக்காரர்களில் கிட்டத்தட்ட நான்கில் ஒருவர் இந்தியர். நம்முடைய ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 44% பேர் எடைக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள். மிகச் சமீப சமூக வளர்ச்சிக் குறியீட்டுப் பட்டியலில்கூட 101-வது இடத்தில், அவமானகரமான சூழலில்தான் இருக்கிறோம் நாம். மேலும் மேலும் வளரும் மக்கள்தொகையின் உணவுத் தேவையை எப்படிச் சமாளிக்கப்போகிறோம்?

வேண்டா வெறுப்பாக விவசாயம்

சர்வதேச அளவில் உணவுப் பாதுகாப்பை ஆராயும் பல ஆய்வாளர்களும் இந்தியாவைப் பற்றிப் பேசும்போது கவலையோடு சுட்டிக்காட்டும் விஷயங்கள் இவை: முதலாவது, இந்தியாவின் நீர் தேவையும் தட்டுப்பாடும். இந்தியாவின் நீர் தேவை 2025-ல் 75,000 கோடி கன மீட்டரிலிருந்து 1.02 லட்சம் கோடி கன மீட்டராக உயரும். குறிப்பாக, பாசனத் தேவை 73,000 கோடி கன மீட்டராக உயரும். ஆனால், இந்தியாவின் நீராதாரங்களோ தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் சூறையாடப்பட்டுவருகின்றன. இரண்டாவது, இந்தியாவின் உணவுக் களஞ்சியம் என்று நம்பப்படும் பகுதிகள் யாவும் அதன் உச்சபட்ச உற்பத்தி நிலையை எட்டிவிட்டன. அதீத ரசாயன உரங்கள் - பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டால் மண் செத்துக்கொண்டிருக்கிறது. மூன்றாவது, இந்த உணவுத் தேவையை எதிர்கொள்ள எந்தச் சமூகம் பலமாக நிற்க வேண்டுமோ, அந்த விவசாயச் சமூகம் இந்தியாவில் மிகப் பலவீனமான நிலையில் இருக்கிறது; அச்சப்படத் தக்க வகையில், விரக்தியால் தொழிலிலிருந்து வேகமாக வெளியேறுகிறது. இந்திய விவசாயிகள் எந்த அளவுக்கு இப்போது தொழிலில் ஆர்வமாக இருக்கிறார்கள்? வளர்முக சமூகங்கள்குறித்த ஆய்வுக்கான மையத்தின் ஆய்வறிக்கை சொல்லும் தகவல்கள் இவை: “62% விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேற விரும்புகிறார்கள், வேறு ஒரு பிழைப்புக்கான வாய்ப்பு கிடைத்தால். 37% விவசாயிகள் தங்கள் குழந்தைகள் விவசாயத்துக்கு வருவதை விரும்பவில்லை. 22% விவசாயிகள் விவசாயத்தையே விரும்பவில்லை.” வேறு வழியில்லாமல் செய்யும் பிழைப்பாக, வேண்டாவெறுப்பாகத் தொடரும் பிழைப்பாகவே பெரும்பாலானோருக்கு இன்றைக்கு விவசாயம் மாறிவிட்டது. இந்த ஆய்வை விடவும் நம்முடைய விவசாயிகளின் விரக்திக்கு கண்கூடான பெரிய ஆதாரம், கிராமங்களில் விவசாய வேலைகளுக்கு நிலவும் ஆள்பற்றாக்குறை.

அதிர வைக்கும் கணக்குகள்

எல்லாமே நாம் அலட்சியப்படுத்தும் மிகப் பெரிய அபாயங்கள். இன்னொரு அபாயத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். நிலத்தின் வீழ்ச்சி. விவசாயம் செய்யத்தக்க நிலப்பரப்பின் வீழ்ச்சி. ஆங்கிலேயர்கள் காலத்தில் நடந்த கதைகள் இருக்கட்டும், சுதந்திர இந்தியாவில் மட்டும் இதுவரை நிலம் கையகப்படுத்தலால், பறிபோயிருக்கும் நிலங்கள் / பறிகொடுத்தவர்கள் / தங்களுடைய வாழிடங்களைவிட்டு வெளியேற்றப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வால்டர் பெர்னாண்டஸ் ஆய்வு சொல்லும் தரவு இது. நிலமெடுப்பால் 1947 தொடங்கி 2004 வரையில் கிட்டத்தட்ட 6 கோடிப் பேர் தங்களுடைய வாழிடங்களைவிட்டு வெளியேற நேர்ந்திருக்கிறது. நம்முடைய அரசு அமைப்புகள் சார்ந்த கணக்குகளும்கூட அதிரவைப்பவை. 2009-ல் ஊரக வளர்ச்சி அமைச்சகம், ‘அரசின் வேளாண் உறவும் முற்றுப்பெறாத நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளும்’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. நிலங்களிலிருந்து இந்தியப் பழங்குடிகள் விலக்கப்பட்டதுதான் கொலம்பஸ் காலத்துக்குப் பிறகு நடைபெற்ற மிகப் பெரிய நிலப்பறிப்பு என்று சொன்னது இந்த அறிக்கை. 1991-ல் 40% ஆக இருந்த நிலமற்றோர் எண்ணிக்கை 2004-05-ல் 52% ஆக உயர்ந்துவிட்டதையும் அது சுட்டிக்காட்டியது. ஒருவேளை மோடி அரசு புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றி, அது நினைப்பதுபோலவே தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டால், குறுகிய காலத்தில் மாபெரும் நிலப்பறிப்பை நிகழ்த்திய அரசாக இந்த அரசு மாறும். ஏனென்றால், நம் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட அளவுக்கு ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தலுக்காக நிறுவனங்கள் காத்திருக்கின்றன. பாஜக செய்தித்தொடர்பாளர் கிருஷ்ணசாகர் ராவ், நிலம் கையகப்படுத்தலுக்கு ஆதரவாக முன்வைக்கும் வாதங்களில் நான்கு லட்சம் வளர்ச்சித் திட்டங்கள் காத்திருப்பதாகச் சொல்கிறார்; அவற்றில் 75% திட்டங்கள் சமூகத் தாக்க அறிக்கை போன்ற வளர்ச்சிக்குத் தடையான விதிகளாலேயே தேங்கி நிற்பதாகச் சொல்கிறார். கூடவே, பிரதமர் மோடியும் அவருடைய அமைச்சர்களும் சொல்லும் / நம்பும் விஷயங்கள் யாவும் நடந்தால், இந்திய விவசாயத்தின் இதயத்தில் ஆழமாகக் குத்தப்படும் கத்தியாகவே நிலம் கையகப்படுத்தும் சட்டம் அமையும்.

வரலாற்றுத் தவறு

நம் எல்லோர் கண்ணுக்கும் தெரிந்த ஒரு துறை மட்டும் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு இது. மோடி அரசின் திட்டப்படி அவர்கள் மிகப் பெரிய வளர்ச்சியைத் தரக் கூடிய துறைகளில் ஒன்றாக நம்புவது ரியல் எஸ்டேட் துறை. ஏற்கெனவே, 2000-01-ல் இந்தியப் பொருளாதாரத்தில் 14.7% பங்களித்த ரியல் எஸ்டேட் துறை 2010-11-ல் 19% பங்களிக்கும் துறையாக உருவெடுத்திருக்கிறது. இப்போது புதிய அரசு கொடுக்கும் உத்வேகம், 2025-ல் உலகின் மூன்றாவது இடத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறையை உட்காரவைக்கும் என்கிறார்கள். அதாவது, ஆண்டுக்கு 1.15 கோடி வீடுகளுடன். பேய்க்கு ஆயிரம் இரும்புப் பற்களைப் பொருத்திப் பார்ப்பதற்கு இணையாக இருக்கிறது இந்த மதிப்பீடு. இவ்வளவு வீடுகளுக்குமான இடம் எங்கே இருக்கிறது? இந்த வீடுகளைச் சுற்றி உருவாகும் குடியிருப்புப் பகுதிகளுக்கான இடம் எங்கே இருக்கிறது? இந்தக் கொடூரக் கனவுக்கு எவ்வளவு நிலங்களும் விவசாயிகளும் பலியாவார்கள்? நிலங்கள் பறிபோக, பறிபோக இந்திய விவசாயமும் உணவுப் பாதுகாப்பும் என்னவாகும்? அவர்கள் வேறு பதிலைச் சொல்வார்கள்: “இப்போது 11% பேருக்கு ரியல் எஸ்டேட் துறை வேலை அளிக்கிறது. இது மேலும் மேலும் பெருகும்.”

கிராமத்தில் விவசாய வேலையை விட்டுவிட்டு சித்தாள் வேலைக்கு வருவது வளர்ச்சியா? தெரியவில்லை. ஆனால், விவசாய நிலத்தை ஒரு வெறும் அலுவலகம்போல, தொழிற்சாலைபோல வெறும் வேலைக் களமாக மட்டுமே அணுகும் இந்த அரசாங்கத்தின் பார்வை நிச்சயம் வரலாற்றுத் தவறென்று கூற முடியும்.

(நிலம் விரியும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x