Published : 05 Apr 2015 12:36 PM
Last Updated : 05 Apr 2015 12:36 PM

ஒரு கருப்பட்டிக் களவாணியின் டைரிக்குறிப்பு!

அரைக்கால் சட்டை போட்டுத் திரிந்த காலத்தில் அநேகம் பேர் நிச்சயம் இந்த அனுபவத்தைக் கடந்திருப்பார்கள்.

தீபாவளி வருகிறதென்றால் அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே, தீபாவளிக்கு என்ன பலகாரம் பண்ணலாம் என்று எங்கள் வீட்டில் தீவிரமாய்ப் பேச்சுவார்த்தை நடக்கும். ‘அது வேண்டாம்… இது நல்லாருக்காது…’ என்று ஐக்கிய நாடுகள் சபை அளவுக்கு அத்தைக்கும் அப்பத்தாவுக்கும் வாதப் பிரதிவாதங்கள் நடக்கும். “போன வருசம் முறுக்கு மாவு சேத்து வெச்சு கடுக்குமுடுக்குன்னு நல்லாவே வரல ஆத்தா’’ - இது அத்தை. “பேசாம, கருப்பட்டிப் பணியாரத் துக்கு மாவு சேத்து வெச்சுட்டு இனிப்புச் சீயம் (சுழியம்) போடுவோமோ’’ - அப்பத்தா எடுத்துக் கொடுத்துக் கொண் டிருக்கும்போதே, “டேய்… நம்மால எல்லாம் மாவு இடிச்சு சேர்க்க முடியாதுடாப்பா’’ உள்ளே இருந்து ஐயா என்னிடம் சொல்வதுபோல் அப்பத்தாவுக்கு சேதி அனுப்புவார் ஐயா. (ஐயாவும் அப்பத்தாவும் அவ்வளவு அந்நியோன்னியம்!)

எங்கள் வீட்டில் கருப்பட்டிப் பணியாரம் சுடுவதாக இருந்தாலும் இனிப்புச் சீயம் போடுவதாக இருந்தாலும் ஐயா தலையில்தான் அனைத்துப் பொறுப்பும். ‘அது சரியில்லை… இது சரியில்லை…’ என்று தரநிர்ணயம் செய்ய மட்டும்தான் அப்பத்தாவும் அத்தையும் வருவார்கள். பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் கடைசியில், முந்தைய தீபாவளியைப் போலவே கருப்பட்டிப் பணியாரமும் இனிப்புச் சீயமும்தான் அடுத்த தீபாவளிக்கும் ‘ஓகே’ஆகும்.

எறும்புகளுக்குப் போட்டி!

ஊற வைத்த பச்சரிசியை மர உரலில் போட்டு இடித்து மாவாக்கும் பொறுப்பு எனக்கும் அப்பத்தாவுக்கும். இந்த சாக்கில் அரை நாள் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போடலாம் என்பதால் ஆர்வமாய் இருப்பேன். இடித்த மாவைச் சலித்து அலுமினிய பேசினில் கொட்டுவதற்குள் வேம்பாறு கருப்பட்டியில் பாகு காய்ச்சித் தயாராக வைத்திருப்பார் ஐயா. சூட்டின் பதம் மாறுவதற்குள் பாகை அந்த மாவில் கொட்டி மரத் துடுப்பால் ஐயா மெல்லக் கிண்ட, அதை வேடிக்கை பார்த்தபடியே, அங்கே இங்கே சிந்திக் கிடக்கும் கருப்பட்டிச் சிதறல்களை எறும்புகளுக்குப் போட்டியாக மோப்பம்பிடித்துப் பொறுக்கி எடுத்து சுவைத்துக்கொண்டிருப்பேன்.

கருப்பட்டிப் பாகை சரியான அளவுக்குச் சேர்த்துக் கருப்பட்டிப் பணியார மாவை பெரிய உருண்டையாக உருட்டி அதை அலுமினியச் சம்படத்தில் அடக்கி மூடிவிடுவார் ஐயா. மாவுக்கு ஊத்தியது போக எஞ்சி இருக்கும் கருப்பட்டிப் பாகில் இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி, வரக் காபி (கட்டங் காபி) போட்டுக் கொடுப்பார். அந்த டம்ளரைக் கையில் வங்கும்போது கையில் சுளீரென்று வலி தெரியும். அப்போதுதான், மாவு இடித்த கையில் சின்னதாய்க் கொப்புளங்கள் முகவரி தந்திருப்பது தெரியும்.

‘ஆபரேஷன்’ ஆரம்பம்

தீபாவளிக்கு முதல் நாள் மதியம் கருப்பு பீரோவில் இருந்து கருப்பட்டி மாவை எடுப்பார் ஐயா. கை படாமல் அதில் ஒரு பகுதியை மட்டும் தோசைக் கரண்டியால் வெட்டி எடுத்துக் கரைத்துப் பணியாரம் ஊற்ற உட்கார்ந்தால் ரெண்டு மணி நேர ஆகும். எஞ்சிய மாவு மறுபடியும் அலமாரிக்குள் போய்விடும். தீபாவளிக்கு மறு நாள் வரை வயிறு மப்பாக இருக்கும். அதற்கு அடுத்த நாள் மாலை பள்ளிக்கூடம் விட்டு வந்தால் ஏதாவது தின்னத் தேடும்.

அந்த நேரம் பார்த்து, அலமாரியில் இருக்கும் கருப்பட்டி மாவு கண் முன்னே வந்து போகும். உடனே ‘ஆபரேஷன்’ ஆரம்பம்தான். ஐயா பாணியில் சின்னதாய்க் கொஞ்சம் பணியார மாவை வெட்டி எடுத்து, அதை உருண்டையாக றஉருட்டி ‘டவுசர்’ பைக்குள் திணித்துக்கொண்டு சிட்டாய்ப் பறந்துவிடுவேன்.

நண்பர்களோடு விளையாடும்போது நடுநடுவே பணியார மாவையும் ஒரு கை பார்த்துவிடுவேன். “பணியார மாவு நாள்பட நாள்படதான் நல்லாருக்கும்” என்று எப்போதோ அப்பத்தா சொன்னது அப்போதுதான் ஞாபகத்துக்கு வரும். அவ்வளவு ருசியாய் இருக்கும்.

அடுத்தடுத்த நாளும் இப்படியே மாவு சுரண்டல் தொடரும். வாரக் கடைசியில் எனக்கே பயம் வந்துவிடும். இனி கை வைத்தால் ‘கம்பெனி’ திவாலாகிவிடும் என்று முடிவுக்கு வந்து பேசாமல் இருந்துவிடுவேன். ‘இருக்குற மாவுல பணியாரம் சுட்டு அப்பா, சித்தப்பா, அத்தை வீடுகளுக்குக் கொண்டுட்டு போய்க் குடுத்துட்டு வரணும்னு கணக்குப் போட்டு வெச்சிருக்கிற அப்பத்தாவுக்கு மாவு ஸ்டாக் நிலவரம் தெரிஞ்சா என்னாவது?’ என்று இன்னொரு பக்கம் மனது அடித்துக்கொள்ளும்.

‘சீக்கிரம் மாவு டப்பாவைத் திறந்து பாத்து ஸ்டாக் எடுத்து நாலு திட்டுத் திட்டிட்டாங்கன்னா காலாகாலத்துல கஞ்சியக் குடிச்சுட்டுப் படுக்கலாம்’- இன்னொரு பக்கம் இப்படியும் நினைக்கத் தோன்றும்.

வாழ்த்து மழை

“இந்த களவாணிப் பய என்ன பண்ணிருக்கான் பாத்தியா ஆத்தா…’’ திடீரென ஒருநாள் அலாரம் அடிப்பார் அத்தை. ‘இன்னைக்கி நமக்குப் பொறந்த நாளுதான்’ என்று நினைத்துக் கொள்வேன். வெளிச்சத்தில் திறந்து பார்த்தால் நானே மிரளும் அளவுக்குப் பணியார மாவு ‘பணால்’ஆகியிருக்கும். “வெச்ச பண்டத்த இப்படி வயிறெரிய பண்ணிட்டானே பட்டுக் கெடப்பான்’’ என்று ஆரம்பித்து வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அத்தனை வசை மொழிகளிலும் மூவரும் மூச்சு விடாமல் என்னை வாழ்த்துவார்கள்(!). ‘என்ன சொல்லி என்ன ஆகப் போகுது. போன மாவு வரவா போகுது?’ என்று நினைத்துக் கொஞ்ச நேரத்தில் மூவரும் களைத்துப்போய்விடுவார்கள். ‘அப்பாடா! இனிமே நிம்மதியா இருக்கலாம்டா சாமி’ என்று நினைத்துக்கொண்டு நானும் வெளிக்கிளம்பிவிடுவேன்.

அப்பத்தா வீட்டில் தீபாவளிக்குத் தீபாவளி எனது கருப்பட்டிக் களவுப் படலம் தொடர்ந்துகொண்டிருந்தது; அதற் கெல்லாம் அசராமல் அவர்களும் தொடர்ந்து பணியாரம் சுட்டுக்கொண்டுதானிருந்தார்கள்! ஆனால், அதெல்லாம் ஒரு காலம்.

‘எண்ணிச் சுட்ட பணியாரத்தப் போணி (பேணி) தின்னுடா மருமகனே’என்கிற சொலவடைதான் இப்போதெல்லாம் நினைவுக்கு வருகிறது. இதுவும் அப்பத்தா அடிக்கடி சொல்லும் செட்டிநாட்டுச் சொலவடைதான். யாராவது இப்போது கருப்பட்டிப் பணியாரம் சுட்டால்தானே மருமகன் எண்ணுவதற்கு!

- குள. சண்முகசுந்தரம், தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x