Last Updated : 24 Apr, 2015 09:59 AM

 

Published : 24 Apr 2015 09:59 AM
Last Updated : 24 Apr 2015 09:59 AM

அறிவோம் நம் மொழியை: கடலுக்கு இத்தனை பெயர்களா!

‘அறிவோம் நம் மொழியை’பகுதியில் நீரைக் குறித்துத் தொடர்ந்து பதிவுகள் வருவதைக் கண்டு வாசகர் கோ. மன்றவாணன் ‘கடல்’ குறித்து க.பொ. இளம் வழுதி எழுதிய நூலிலிருந்து சிறு பகுதியை அனுப்பிவைத்திருக்கிறார். இதில் கடலைக் குறிக்கும் 32 சொற்களைக் கொண்டு அமைந்த இரண்டு வெண்பாக்களை காங்கேயன் என்பவர் இயற்றிய உரிச்சொல் நிகண்டிலிருந்து ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார் (ஆசிரியர் 31 என்று சொல்கிறார். எண்ணிப் பார்த்தால் 32 வருகிறது.)

அந்த வெண்பாக்கள்

நீர்புணரி நேமி பரவைவே லாவலய

மார்கலி யத்தி திரைநரலை - வாரிதி

பாராவா ரம்பௌவம் வேலைமுந் நீருவரி

காராழி வாரி கடல்.

(நீர், புணரி, நேமி, பரவை, வேலாவலயம், ஆர்கலி, அத்தி, திரை, நரலை, வாரிதி, பாராவாரம், பௌவம், வேலை, முந்நீர், உவரி, கார், ஆழி, வாரி, கடல்)

சலராசி தோயநிதி யம்பர முப்புச்

சலநிதி யேயுததி சிந்து - சலதி

யளப்பரும் வெள்ள நதிபதி வீரை

யளக்கர் சமுத்திர மாம்.

(சலராசி, தோயநிதி, அம்பரம், உப்பு, சலநிதி, உததி, சிந்து, சலதி, வெள்ளம், நதிபதி, வீரை, அளக்கர், சமுத்திரம். இச்சொற்களில் பல தமிழ்ச் சொற்கள் அல்ல.)

‘முந்நீர்’ என்ற சொல்லைப் பற்றி ஆசிரியர் எழுதியிருப்பது கவனிக்கத் தக்கது: “இவற்றுள் ‘முந்நீர்’ என்பது காரணப் பெயராக அமைந்துள்ளது. உலகில் நான்கில் மூன்று பகுதி கடலால் சூழப்பட்டிருப்பதால் ஏற்பட்டதல்ல இச்சொல். கடல் மூன்று வழி நீரால் ஆனது என்பதாலேயே முந்நீர் எனப்பட்டது. கடலில், அதனடியில் சுரக்கும் ஊற்று நீர், மலைகளில் பொழிந்த மழை நீர் வழிந்தோடி ஆறாக உருவாகி ஓடி வந்து கலக்கும் ஆற்று நீர், மேகங்கள் கருவுற்று நேரடியாகக் கடலில் பொழியும் மழை நீர் என மூன்றும் கடலில் கலந்திருப்பதால் இதற்கு முந்நீர் என்னும் காரணப் பெயர் உண்டாயிற்று. இச்சொல்லின் தொன்மையை, “முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை” என்னும் தொல்காப்பியச் சூத்திரம் (தொல். பொருள். அக: 37) கூறுகிறது. தலைமகன், தலைமகளை உடன் அழைத்துக்கொண்டு கடல் கடந்து செல்வதில்லை என்பது இதன் பொருள்.”

கடந்த வாரம் மழைக்கால் குறித்த பதிவைப் பார்த்தோமல்லவா! க.பொ. இளம்வழுதி தன் நூலில் மழைக்கால், முந்நீர் ஆகிய இரண்டு சொற்கள் இடம்பெறும் ‘முக்கூடற்பள்ளு’ பாடலைக் கொடுத்திருக்கிறார்.

சூலானது முதிர்ந்தால் தோன்றாதோ பேறுசெங்கண்

மாலாசூர் நன்னாட்டில் மழையுமந்த வண்ணமன்றோ

வேலா வலயமுந்நீர் மேய்ந்துகருக் கொண்டமுகில்

காலான தூன்றியந்தக் காலமுறை காட்டியதே

(முக்கூடற்பள்ளு பாடல்-38)

நான்காவது வரியில் ‘காலானது ஊன்றி’ என்றிருக்கிறதல்லவா அந்தக் ‘கால்’தான் மழைக்கால்!

(இனி ‘வட்டாரச் சொல்லறிவோம்’ பகுதியும் ‘சொல்தேடல்’ பகுதியும் மாறி மாறி இடம்பெறும்.)

சொல்தேடல்:

‘மெமரி கார்டு’, ‘மெமரி சிப்’ ஆகியவற்றுக்கு வாசகர்களின் பரிந்துரைகளில் சில…

கூத்தப்பாடி மா. கோவிந்தசாமி - நினைவுத்தகடு (மெமரிகார்டு)

ஜீவரத்தினம் ராம்ஜி - நினைவுச் சில்லு, நினைவு செயலி (மெமரி சிப்)

வீ. சக்திவேல் - நினைவக அட்டை (மெமரிகார்டு)

ப. ஜெகநாதன் - நினைவகப் பட்டை (மெமரி சிப்)

மா. வெற்றிவேல் - குறுநினைவி (மெமரி கார்டு)

கோ. மன்றவாணன் - நினைவட்டை, நினைவி, நினைவுப் பட்டை, நினைவு வில்லை (மெமரி கார்டு). நினைவகச் சில்லு, நினைவுச்சில்லு (மெமரி சிப்).

சரண்யா லலிதா- நினைவுப் பட்டை (மெமரி கார்டு)

இந்தச் சொற்களில் ‘மெமரி கார்டு’க்கு ‘குறுநினைவி’ என்ற சொல்லும், ‘மெமரி சிப்’புக்கு நினைவுச் சில்லு என்ற சொல்லும் பொருத்தமாக இருக்கின்றன.

அடுத்த வாரச் சொல் தேடலுக்கான கேள்வி

ஆங்கிலத்தில் ‘யூ-னோ-ஹூ’ (you-know-who) என்ற பயன்பாடு இருக்கிறது. இரண்டு பேருக்கு இடையிலான உரையாடலின்போது, தங்களுக்கு நன்றாகத் தெரிந்த மூன்றாம் நபர் ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல் மேற்கண்ட வழக்கைப் பயன்படுத்துவார்கள். தமிழிலும் இப்படிப் பேசும்போது பயன்படுத்தப்படும் ஒரு சொல் இருக்கிறது. கண்டுபிடியுங்கள்!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x