Published : 09 Apr 2015 10:35 AM
Last Updated : 09 Apr 2015 10:35 AM
லீ போலிங்கர். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முதல்வர், எழுத்தாளர், வழக்கறிஞர், பேச்சுரிமை ஆர்வலர். அமெரிக்கர்கள் பலருடைய எதிர்ப்பையும் மீறி கொலம்பியா பல்கலைக் கழகத்துக்கு உரையாற்ற ஈரானின் அந்நாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாதுக்கு அழைப்பு விடுத்தவர் லீ போலிங்கர்.
கருத்துரிமையைப் பொறுத்தவரை இந்தியாவை உலக அளவில் எப்படி மதிப்பிடுவீர்கள்?
கருத்துரிமையில் இந்தியா சிறப்பான இடத்தை வகிக்கிறது என்றே கருதுகிறேன்… இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதுடன் அதன் அரசியலமைப்புச் சட்டம் கருத்துரிமையைப் பாதுகாக்கும் வகையில் இருக்கிறது. பிரிவு 66 (ஏ) குறித்து சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் வரவேற் கிறேன். சர்வதேச அளவுகோல்களின்படி பார்த்தாலும் இது ஒரு நல்ல தீர்ப்புதான்.
அரசாங்கம் அல்ல; நீதிமன்றம்தான் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டிக்காக்கிறது என்பதைப் பார்க்கும்போது, நமது சமூகம் சுதந்திரமானதுதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அமெரிக்காவிலும்கூட இப்படியெல்லாம் நடந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் போன்றவற்றுக்கு உச்சபட்ச அளவுகோல்களாக இருப்பது சுதந்திரமான நீதியமைப்பின் மகத்தான கடமைகளில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். இந்த விஷயங்களெல்லாம் எப்போதுமே இப்படித்தான் இருக்கும்; இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் வலுவுடன் நமது அமைப்புகள் இருக்கின்றனவா என்பதைத் தான் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்துக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டிருக்கும் தடையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தடை தவறு! சர்வதேச நெறிமுறைகளின்படி சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 19-பிரிவின்படி பேச்சு, திரைப்படங்கள் போன்றவையெல்லாம் கருத்துரிமையின் கீழ் காப்பாற்றப்பட வேண்டும். கருத்து வெளிப்பாட்டைத் தடைசெய்வதென்பது மிகவும் ஆபத்தானது, அந்தக் கருத்து வெளிப்பாடு மற்றவர்கள் மனதைக் காயப்படுத்துவதாக இருந்தாலும்கூட. ஏனென்றால், இந்தச் சட்டங்களெல்லாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம்.
எனவேதான், கருத்துச் சுதந்திரத்தை மிகவும் அக்கறையுடன் நாம் பேண வேண்டும். வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுதல், அவதூறு, ஆபாசம் போன்றவற்றை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால், பொதுப் பிரச்சினைகுறித்த கருத்து வெளிப்பாடுகளை நாம் அப்படிச் செய்துவிடலாகாது. ஜனநாயகத்தை நாம் பேணுவதற்கான அடிநாதமே அதுதான்.
வக்கிரமான ஆணாதிக்கக் கண்ணோட்டங்களுக்கு இந்தப் படம் களம் ஏற்படுத்திக்கொடுக்கக்கூடும்; இந்தியாவைப் பற்றி தவறான பிம்பத்தை உலக அரங்கில் இந்த ஆவணப்படம் முன்வைக்கக் கூடும் என்றெல்லாம் தனது முடிவுக்கு ஆதரவாக நிறைய வாதங்களை இந்திய அரசு முன்வைத்தது. இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?
அந்த ஆவணப்படத்தில் பாலியல் குற்றவாளி பேசியிருப்பது நம் சமூகத்தைத் தவறான வகையில் காட்டும் என்று ஒரு அரசாங்கமே சொல்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. ‘இது மிகவும் ஆபத்தானது, இதனால் மக்களிடையே சங்கடமான உணர்வு ஏற்படும், அல்லது அவர்களுடைய உணர்வுகள் காயப்படும்’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, ஒரு அரசு தன்னுடைய கடமையைத் தட்டிக்கழித்துவிட முடியாது. பொதுப் பிரச்சினைகள்குறித்து மக்கள் விவாதித்து, எது நல்லது, எது கெட்டது என்று பிரித்தறிந்து, இறுதியாக, சமூகத்தின் பதில் என்னவாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்களாகவே வரும் நிலைக்கு அரசாங்கத்தின் இத்தகைய அணுகுமுறை அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும்.
இந்தியாவில் இருக்கும் மதப்பூசல்கள், பிளவுகள், வெறுப்புப் பேச்சுகளால் ஏற்படும் மோசமான விளைவுகள்… இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது எல்லையற்ற கருத்துச் சுதந்திரம் என்பதற்கு வாய்ப்பில்லாத இந்தியா வேறு எந்த வழியில்தான் செல்வது?
பெரிய பிரச்சினைதான் இது. ஒரு கருத்தால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்று சமூகத்தின் வெவ்வெறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கருதுவார்கள் என்றால், அதுபோன்ற கருத்துகளைக் கருத்துகளாலேயே மக்கள் எதிர்கொள்ள வேண்டும். நாம் என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக் கூடாது என்பதையெல்லாம் அரசாங்கம் கட்டுப்படுத்தக் கூடாது.
வன்முறையைத் தூண்டக்கூடிய பேச்சுக்கும் இடமளிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
புது நாஜிக்கள், மதநிந்தனைகள் போன்ற உதாரணங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இவையெல்லாம் மோசமான கருத்துகள் என்று நமக்குத் தெரியும். ஆனால், அவற்றை ஏன் அனுமதிக்கிறோம்? உண்மை என்னவென்றால், நீங்களும் பேச்சு மூலமாக உங்கள் எதிர்வினையைச் செய்யலாம், அந்தக் கருத்துகள் மோசமானவை என்று நீங்கள் சொல்லலாம்.
நல்ல நோக்கங்கள் கொண்டவை என்று தோன்றக்கூடிய தடை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வதை நாம் அனுமதித்தால், நாளை நல்ல நோக்கம் இல்லாத நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள் வதற்கு ஏதுவாகிவிடும்.
முழுக்க முழுக்க நியாயமான கருத்து வெளிப்பாட்டைக்கூட ஏதேதோ காரணங்கள் சொல்லித் தடுத்து நிறுத்திவிட முடியும். மக்கள் இயல்பாகவே சகிப்புத்தன்மையற்றவர்கள் என்றே நான் நினைக்கிறேன். நாம் நினைப்பதையே மற்றவர்களும் நினைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஆனால், ஜனநாயகம் என்பது வனாந்திரம் போன்றது; வனாந்திரத்தைப் போலவே ஜனநாயகத்திலும் எல்லாவிதமான கருத்துகளும் உருவாகவும் வளரவும்தான் செய்யும்.
எல்லாவிதமான கருத்துகளையும் எதிர்கொண்டு நமது கருத்துகளுக்கு ஒரு சமநிலையைக் கண்டறிய வேண்டும்.
ஈரானின் அந்நாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாதை கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு நீங்கள் அழைத்திருந்தபோது நிறையப் பேர் அதை எதிர்த்தார்கள். ஆனாலும், நீங்கள் விட்டு விடவில்லை. ஆனால், வார்ட்டன் கல்லூரியில் நரேந்திர மோடி பேசவிருந்தது அதேபோன்ற காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதே?
மஹ்மூத் அஹ்மதிநிஜாதை அழைத்துவந்ததில் எந்தத் தவறும் கிடையாது என்றே நான் வாதிட்டேன். அவரை அழைத்துவந்ததற்குக் கல்வி சார்ந்த மதிப்பு இருந்தது, அவர் ஒரு நாட்டின் தலைவர்கூட. அதே நேரத்தில், அவருடைய பேச்சை அப்படியே வாயை மூடிக்கொண்டு நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. கலந்துரையாடலின்போது அவருக்கு நான் சவால் விடுத்தேன்.
வார்ட்டன் விவகாரத்தில், மோடி பேசுவது ரத்தானது குறித்து வருத்தமடைந்தேன். ஒருவருக்கு அழைப்பு விடுத்துவிட்டு, சிலரின் எதிர்ப்பு காரணமாக அப்படி நடந்துகொண்டிருக்கக் கூடாது. அது ஒரு கேலிக்கூத்து. பெரிய கல்வி நிறுவனங்களில் இப்படியெல்லாம் நடக்கக் கூடாது. இவையெல்லாம் கருத்துச் சுதந்திரத்துக்கும் கல்வித் துறையின் மாண்புக்கும் எதிரானவை.
ஊடக சுதந்திரத்தைப் பற்றிப் பேசும்போது, சமீப காலமாகத் துல்லியத்தின் இடத்தை வேகம் என்பது பிடித்துவிட்டிருக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டுமல்லவா, என்ன சொல்கிறீர்கள்?
உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புவதால் சிந்தனைரீதியில் விரிவாகவும் ஆழமாகவும் இதழியல் பணியை மேற்கொள்வது சிரமமாகியுள்ளது. பொருளாதாரமும் இதழியலுக்கு ஒரு முட்டுக்கட்டை. எனவேதான், உலகளாவிய செய்திசேகரிப்பு தேவைப்படும் இந்தக் காலத்தில் மேலும் குறைவான அளவே செய்திசேகரிப்பு செய்யப்படுகிறது. எனவே, எதிர்கால இதழியல் பெரும் பிரச்சினையில் இருக்கிறது என்றே நினைக்கிறேன்.
பத்திரிகையாளர்களுக்கிடையே ஒரு விதமான ஆபத்தான போக்கு நிலவுகிறது. ‘ஆழமான அறிவின் மீதான வெறுப்பு தான்’ அது. ‘எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக நீங்கள் தெரிந்துகொள்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சிறப்பான பத்திரிகையாளராக நீங்கள் ஆகலாம்’ என்பது போன்று பத்திரிகையாளர்கள் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். பைத்தியக்காரத்தனம் இது!
- ©‘தி இந்து’ (ஆங்கிலம்),
சுருக்கமாகத் தமிழில்: ஆசை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT