Published : 12 Apr 2015 10:03 AM
Last Updated : 12 Apr 2015 10:03 AM
ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் நம் உடலைத் துளைத்துச் செல்கின்றன. இவை பூமியையும் துளைத்துச் செல்பவை. சூரியனிலிருந்து வரும் இந்தப் புதிரான துகள்கள்பற்றி ஆராய்வதற்காகத்தான் தேனி மாவட்டத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது.
பூமியில் தாவரங்களும் விலங்குகளும் மனிதனும் தோன்றிய காலத்துக்கு முன்பிருந்தே சூரியனிலிருந்து நியூட்ரினோ துகள்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனினும், சுமார் 30 ஆண்டுகளாகத்தான் நியூட்ரினோக்கள் பற்றி விரிவான ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது. உலகில் ஏற்கெனவே பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் நியூட்ரினோ ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. நியூட்ரினோ பற்றி ஆராய இந்தியாவில் இப்போதுதான் முதல் தடவையாக ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்படுவதாகச் சொல்ல முடியாது.
கர்நாடக மாநிலத்தில் கோலார் தங்கச் சுரங்கத்தின் அடியில் 1965-ம் ஆண்டிலேயே சிறிய அளவில் நியூட்ரினோக்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது ஒரு முக்கியக் கண்டுபிடிப்பும் செய்யப்பட்டது. இப்போது தேனி அருகே பெரிய அளவில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது.
எலெக்ட்ரான் பற்றி அனைவருக்கும் தெரியும். எலெக்ட்ரான் துகளே மிகமிக நுண்மையானது. நியூட்ரினோ அதையும்விட நுண்மையானது. எலெக்ட்ரான் நேர் மின்னேற்றம் கொண்டது. நியூட்ரினோவுக்கு எந்த மின்னேற்றமும் கிடையாது. மிக மிகச் சிறியது என்பதாலும், மின்னேற்றம் இல்லை என்பதாலும் நியூட்ரி னோக்களால் எதையும் துளைத்துச் செல்ல முடிகிறது.
சூரியனில் நான்கு ஹைட்ரஜன் புரோட்டான்கள் சேர்ந்து ஹீலியம் என்ற வேறு பொருளாக மாறுகிறது. இதுவே அணுச் சேர்க்கை. இதன் பலனாகத்தான் பூமிக்கு ஒளியும் வெப்பமும் கிடைக்கின்றன. இந்த அணுச்சேர்க்கையின்போதுதான் நியூட்ரினோக்கள் தோன்றுகின்றன. சூரியனில் ஒவ்வொரு வினாடியும் 60 கோடி டன் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறு கிறது. ஆகவேதான் அங்கிருந்து கோடிக்கோடிக் கணக்கான நியூட்ரினோக்கள் பூமிக்கு வருகின்றன.
நியூட்ரான் வேறு; நியூட்ரினோ வேறு!
இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். நியூட்ரினோ வேறு. நியூட்ரான் வேறு. நியூட்ரான்கள் அனேகமாக எல்லா அணுக்களிலும் மையப்பகுதியில் வெவ்வேறு எண்ணிக்கையில் இருப்பவை. நாம் குடிக்கும் தண்ணீரிலும் நியூட்ரான்கள் உள்ளன. பொதுவில் இவை அணுக்களுக்குள்ளாகச் சமர்த்தாக இருப்பவை. சில சந்தர்ப்பங்களில் இவை வெளியே வந்து தாக்கினால் உடலுக்குக் கடும் தீங்கு நேரிடும். இத்துடன் ஒப்பிட்டால் நியூட்ரினோக்கள் பரம சாது. அவை எந்தத் தீங்கையும் ஏற்படுத்துவதில்லை.
பகல் நேரத்தில் சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்கள் நமது உடலைத் துளைத்துக்கொண்டு பின்னர் பூமியையும் துளைத்துச் செல்கின்றன. எனவே, பகலில்தான் நியூட்ரினோக்கள் நம் உடல் வழியே செல்கின்றன என்று நினைத்துவிடக் கூடாது. நமக்கு இரவு என்றால், அமெரிக்காவில் பகல். அப்போது நியூட்ரினோக்கள் அமெரிக்கரின் உடல் வழியே பாய்ந்து பூமியைத் துளைத்து நம்மைத் துளைத்துச் செல்கின்றன. பகலில் நம் தலைக்கு மேலிருந்து வருகின்றன. இரவில் நிற்கையில் காலுக்கு அடியிலிருந்து வருகின்றன.
தேனி ஆய்வுக்கூடம்பற்றி விவரமாகத் தெரியாமல் இருந்த காலகட்டத்தில் நியூட்ரினோக்களால் பாறை உருகிவிடும் என்றும் நியூட்ரினோக்கள் நிலநடுக்கத்தை உண்டாக்கலாம் என்றும் தகவல்கள் கிளம்பின. அப்படி நடப்பதாக இருந்தால், இமயமலை என்றோ உருகியிருக்க வேண்டும். தினமும் நிலநடுக்கம் நிகழ வேண்டும். ஆனால், அப்படி எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.
நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தைக் கட்டி முடிக்கும் வரை தற்காலிக அளவில் ஓரளவு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அது உண்மைதான். அது கடுமையானதா அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பதை வைத்து வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. அது தனி விஷயம்.
சரி, நியூட்ரினோக்களை ஏன் ஆராய வேண்டும்? நியூட்ரினோ என்று ஒன்று இருப்பதாலேயே அதுபற்றி ஆராய வேண்டும். இதுதான் விஞ்ஞானிகள் கூறும் பதில். நியூட்ரினோ என்பது அடிப்படையான துகள்களில் ஒன்று. மற்ற துகள்கள்பற்றி ஏற்கெனவே அறிந்துகொண்டுள்ளது போலவே நியூட்ரினோ பற்றியும் அறிந்துகொள்ள விஞ்ஞானிகள் விரும்புகிறார்கள்.
என்ன பயன்?
நியூட்ரினோ பற்றிய ஆராய்ச்சியால் மக்களுக்கு ஏதேனும் பலன் இருக்குமா என்பது மற்றொரு கேள்வியாகும். ஜே.ஜே. தாம்சன் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி 1897- ல் முதன்முதலில் எலெக்ட்ரான் என்ற அடிப்படைத் துகளைக் கண்டுபிடித்தார். அப்போது இந்தக் கண்டுபிடிப்பால் பெரிய பலன் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்றோ எலெக்ட்ரானிக்ஸ் என்பது பெரிய துறையாக வளர்ந்து, எண்ணற்ற மின்னணுக் கருவிகள் பயனுக்கு வந்துள்ளன. கணிப்பொறிகளும் கைபேசிகளும் இதில் அடக்கம்.
ஆகவே, நியூட்ரினோ ஆராய்ச்சியால் உடனடிப் பலன் இருக்குமா என்பதுபற்றித் திட்டவட்டமாக எதுவும் கூற முடியாது. அடிப்படையான ஆராய்ச்சி என்பது உடனடிப் பலனை எதிர் பார்த்துச் செய்யப்படுவது அல்ல.
எனினும், அமெரிக்காவில் நடந்த ஓர் ஆராய்ச்சியின்போது, நியூட்ரினோ துகள்களை உண்டாக்கி அவற்றைச் சில எழுத்துகளைக் கொண்ட ஒரு சொல்லாக மாற்றி 800 மீட்டர் குறுக்களவுள்ள பாறை வழியே செலுத்தியபோது, அந்தச் சொல் மறுபுறத்தில் அதே சொல்லாக வந்து சேர்ந்தது. எனவே, எதிர்காலத்தில் தகவல் தொடர்புக்கு ஒருவேளை நியூட்ரினோக்களைப் பயன்படுத்த முடியலாம். இதுகுறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியுள்ளது.
நியூட்ரினோக்கள் சூரியனிலிருந்து வருவதாகச் சொன்னோம். நடுப் பகலில் புறங்கையைக் காட்டினால் கட்டை விரல் நகம் வழியே மட்டும் வினாடிக்கு 6,500 கோடி நியூட்ரினோக்கள் ஊடுருவிச் செல்கின்றன. நியூட்ரினோக்கள் எதையும் துளைத்துச் செல்பவை. சொல்லப் போனால் பத்து பூமிகளை அடுக்கி வைத்தாலும், அந்தப் பத்து பூமிகளையும் நியூட்ரினோக்கள் துளைத்துக்கொண்டு மறுபக்கம் சென்றுவிடும்.
எப்படிப் பிடிப்பது?
நியூட்ரினோக்களை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது. அப்படியானால், நியூட்ரினோக்களை எப்படிப் ‘பிடித்து’ ஆய்வு செய்கிறார்கள்? நியூட்ரினோக்களைப் பிடிக்க ‘கண்ணி’எதுவும் கிடையாது. இரவில் பாலைக் குடிக்க வந்த பூனையை விரட்டும்போது, அது தப்பிச் செல்லும்போது பாத்திரங்களை உருட்டிச் செல்கிறது. அதுபோல நியூட்ரினோக்கள் ஊடுருவிச் செல்லும்போது மிக அபூர்வமாகச் சில அணுக்களை ஒரு தள்ளு தள்ளிவிட்டுச் செல்கின்றன. அல்லது அணுக்களைச் சுற்றியுள்ள எலெக்ட்ரான்கள் மீது மோதித் தள்ளிவிட்டுச் செல்கின்றன.
நியூட்ரினோக்கள் இப்படி ‘உதைத்துத் தள்ளுவதால்’ ஏற்படும் விளைவுகளைக் கண்காணிக்க நுட்பமான கருவிகள் உள்ளன. அக்கருவிகளில் பதிவாகும் தகவல்களை வைத்து நியூட்ரினோக் களின் தன்மைகளை அறிவதில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
நியூட்ரினோக்கள் ஏற்படுத்தும் விளைவுகளைக் கண்டறிவதற்கு வெவ்வேறான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பானில் மிக சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கனடாவில் உள்ள ஆய்வுக்கூடத்தில் கனநீர் பயன்படுத்தப்படுகிறது. ரஷ்யாவில் பைகால் ஏரிக்கு அடியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் உள்ளது. இத்தாலிக்கு அருகிலும் கடலுக்கு அடியில் ஓர் ஆய்வுக்கூடம் உள்ளது. பனிக்கட்டியால் நிரந்தரமாக மூடப்பட்ட அண்டார்டிகாவில் பனிக்கட்டிக்கு அடியில் பெரியதொரு ஆய்வுக்கூடம் சில ஆண்டுக் காலம் செயல்பட்டது.
தேனி ஆய்வுக்கூடம்
இந்தியாவில் தேனியில் அமையும் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட இரும்புத் தகடுகள் பயன்படுத்தப்படும். இவற்றின் மொத்த எடை 50 ஆயிரம் டன். இரும்புத் தகடுகளுக்கு நடுவே சீலிடப்பட்ட கண்ணாடிக் கூடுகளில் பதிவுக் கருவிகள் இருக்கும். அமெரிக்காவில் மின்னிசோட்டா நகருக்கு அருகே ஒரு சுரங்கத்தின் அடியில் அமைக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடத்திலும் இதே போல இரும்புத் தகடுகள் (எடை 5,400 டன்) பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஒப்பிட்டால் தேனி நியூட்ரினோ ஆய்வுக்கூடம் மிகவும் பெரியது.
போகிறபோக்கில் நியூட்ரினோக்கள் விளைவுகளை ஏற்படுத்திச் செல்வதாகக் குறிப்பிட்டோம். கோடானு கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்து சென்றாலும் அவை ஏற்படுத்தும் விளைவுகள் ஒரு நாளில் மூன்றுகூட இராது. பெரும்பாலான நியூட்ரினோக்கள் எதன் மீதும் மோதாமல் அணுவுக்குள்ளும் ஊடுருவிச் சென்றுவிடுவதே அதற்குக் காரணம். அப்படியும்கூட விஞ்ஞானிகள் விடுவதாக இல்லை.
நியூட்ரினோக்கள் பற்றி விஞ்ஞானிகள் அப்படி என்ன கண்டுபிடிக்க விரும்புகிறார்கள் என்று கேட்கலாம். நியூட்ரினோக் களுக்கு நிறை என்பது (மாஸ்) கிடையாது என்று ஒரு சமயம் கருதப்பட்டது. ஆனால், அவற்றுக்கு மிக நுண்ணிய அளவில் அதாவது, எலெக்ட்ரான் எடையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு அளவுக்கு எடை இருக்கலாம் என்று பின்னர் ரஷ்யாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்தது.
சூரியனில் உற்பத்தியாவதை சோலார் நியூட்ரினோக்கள் என்று குறிப்பிட்டாலும் அவை எலெக்ட்ரான் நியூட்ரினோக்களே. இவை அல்லாமல் மியுவான் நியூட்ரினோ, டாவ் நியூட்ரினோ என்ற வேறு வகை நியூட்ரினோக்கள் உள்ளன. இவை பற்றியும் தேனி ஆய்வுக்கூடத்தில் விரிவாக ஆராயப்படும்.
பிரபஞ்சம் பற்றி மேலும் விரிவாக அறியவும் அதே போல சூரியன் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் நியூட்ரினோ ஆய்வுகள் உதவும் என்று கருதப்படுகிறது.
- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com
தேனியைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
உலகில் உள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடங்கள் சுரங்கங்களுக்கு அடியில் அமைந்துள்ளன. அல்லது மலையில் சுரங்கப்பாதை அமைத்து அதற்குள்ளாக அமைந்துள்ளன. இதற்குக் காரணம் உண்டு.
காற்று மண்டலத்தில் பல வகையான துகள்கள் உள்ளன. ஆகவே, நியூட்ரினோ விளைவுகளைப் பதிவதற்கான கருவிகளில் நியூட்ரினோ துகள்கள் மட்டுமே வந்து சேர வேண்டும் என்பதில் விஞ்ஞானிகள் குறியாக இருக்கிறார்கள். வேறு துகள்கள் பதிவானால் ஆய்வின் நோக்கமே கெட்டுவிடும். சுரங்கத்துக்கு அடியில் ஆய்வுக்கூடம் அமைத்தால் பிற துகள்கள் பாறை அடுக்குகளால் வடிகட்டப்பட்டுவிடும். நியூட்ரினோ துகள்கள் எதையும் துளைத்துச் செல்பவை என்பதால், அவை மட்டும் பாறைகளைத் துளைத்துக்கொண்டு பிரச்சினையின்றி வந்து சேரும்.
தேனி அருகே உள்ள குன்று தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம், இந்தியாவில் இமயமலை வட்டாரத்திலும் பிற இடங்களிலும் பாறைகள் உருமாறிய, படிவுப் பாறைகளாக உள்ளன. ஆனால், நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க, இரும்பை உருக்கி வார்த்த கட்டிபோல ஒரே வகைப் பாறையிலான குன்றாக இருக்க வேண்டும். உறுதியான, கடினமான, பாறையாக இருக்க வேண்டும். அருகே பெரிய நகரம் இருக்க வேண்டும். அதிக மழை கூடாது. பூகம்ப வாய்ப்பு இருத்தல் கூடாது. கூடிய வரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே இருக்க வேண்டும். இப்படியான அம்சங்களை வைத்து இடம் தேடப்பட்டது. நாட்டின் பிற இடங்களில் உள்ள பாறைகளுடன் ஒப்பிட்டால், தென்னிந்தியாவில் உள்ள பாறைகள் மிகப் பழமையானவை. தரமானவை.
முதலில் நீலகிரிக்கு அருகே ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அது வனவிலங்குகள் நடமாடும் இடமாக இருந்ததால் ஆட்சேபம் எழுப்பப்பட்டது. ஆகவே, அந்த இடம் கைவிடப்பட்டது. தேனி அருகே அமைந்துள்ள குன்று மேற்படியான எல்லா அம்சங்களையும் பூர்த்திசெய்ததால் அது தேர்ந்தெடுக்கப்பட்டது.
பூமிக்கு ஒரு எக்ஸ்ரே
எதிர்காலத்தில் ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடங் களிலிருந்து தேனி நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு பூமியின் வழியே நியூட்ரினோக்கள் அனுப்பப் படலாம். அவை தேனி ஆய்வுக் கூடத்தில் பதிவாகும்.
இப்படி அனுப்பும்போது நியூட்ரினோக்கள் பூமியின் மையப் பகுதியைக் கடந்து வந்தாக வேண்டும். இதன் மூலம் பூமியின் மையப் பகுதி எவ்விதமாக உள்ளது என்பது பற்றி அறிய முடியலாம் என்று கருதப்படுகிறது. இது பூமியை எக்ஸ்ரே எடுப்பது போன்றதே.
நியூட்ரினோக்கள் சூரியனிலிருந்து வருவதாகச் சொன்னோம். நடுப் பகலில் புறங்கையைக் காட்டினால் கட்டை விரல் நகம் வழியே மட்டும் வினாடிக்கு 6,500 கோடி நியூட்ரினோக்கள் ஊடுருவிச் செல்கின்றன.
எவ்வளவு வகை நியூட்ரினோக்கள் உள்ளன?
சூரியனிலிருந்து மட்டுமின்றி நட்சத்திரங்களிலிருந்தும், பெரு நட்சத்திரங்கள் வெடிப்பிலிருந்தும் (சூப்பர்நோவா) நியூட்ரினோக்கள் வருகின்றன. விண்வெளியில் எங்கிருந்தோ வரும் அண்டவெளிக் கதிர்கள் (காஸ்மிக் ரேய்ஸ்) பூமியின் காற்று மண்டலத்தில் உள்ள அணுக்களைத் தாக்கும்போதும் நியூட்ரினோக்கள் தோன்றுகின்றன. இவை காற்றுமண்டல நியூட்ரினோக்கள் எனப்படுகின்றன. கோலார் தங்கச் சுரங்கத்தில் 1965-ம் ஆண்டில் நடந்த ஆராய்ச்சியின்போதுதான் இவ்வித நியூட்ரினோக்கள் இருப்பது முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
பூமிக்குள் யுரேனியம் போன்ற கதிரியக்கத் தனிமங்கள் உள்ளன. இவை இயற்கையாகச் சிதையும்போது சிறு அளவில் நியூட்ரினோக்கள் வெளிப்படுகின்றன. தவிர, அமெரிக்காவில் சிகாகோ அருகிலும், ஐரோப்பாவில் ஜெனீவா அருகிலும் பாதாளத்தில் அமைந்த ஆராய்ச்சிக் கூடங்களில் அடிப்படைத் துகள்களை அதிவேகத்தில் பாயச் செய்யும் ராட்சதத் துகள் முடுக்கிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி, புரோட்டான்களிலிருந்து நியூட்ரினோக்களைப் பிரித்தெடுக்க முடியும். அதாவது, நியூட்ரினோக்களை உற்பத்தி செய்ய முடியும்.
தேனியில் அமையவிருக்கும் ஆய்வுக்கூடம் முதலில் காற்றுமண்டல நியூட்ரினோக்களை ஆராயும். பின்னர், இதர நியூட்ரினோக்களையும் ஆராயும்.
பூமி வழியே நியூட்ரினோ பார்சல்
ஜெனீவா அருகே நிலத்துக்கு அடியில் பிரம்மாண்டமான துகள் முடுக்கி இயந்திரம் உள்ளது. அங்கிருந்து சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் இத்தாலியில் மலைக்கு அடியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் உள்ளது. ஜெனீவாவில் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்து, அவற்றை இத்தாலியில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு ‘பார்சல்’ அனுப்பி ஆராய்ச்சி செய்துவருகின்றனர். நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகள் வழியே நியூட்ரான்கள் செல்லக்கூடியவை என்பதால், இதற்கெனத் தனிச் சுரங்கப் பாதை தேவையில்லை.
அமெரிக்காவில் சிகாகோ அருகே உள்ள பெர்மிலாப் ஆய்வுக்கூடத்திலிருந்து இதே போல சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின்னிசோட்டா நியூட்ரினோ ஆய்வுக்கூடத்துக்கு நியூட்ரினோக்களை அனுப்பிவருகின்றனர். ஜப்பானிலும் இதே போல நிலத்துக்கு அடியில் பாறைகள் வழியே நியூட்ரினோக்களை அனுப்பி ஆராய்கின்றனர்.
ஜெனீவா பரிசோதனைகளின்போது 2011-ல் ஒரு குழப்பம் ஏற்பட்டது. ஜெனீவாவி லிருந்து இத்தாலிக்கு வந்துசேரும் நியூட்ரி னோக்கள் ஒளி வேகத்தை மிஞ்சும் வேகத்தில் செல்வதாகக் கருவிகள் காட்டின. எதுவுமே, ஒளி வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்ல முடியாது என்று மேதை ஐன்ஸ்டைன் 1905-ல் ஆண்டில் திட்டவட்டமாகக் கூறி யிருக்கிறார். நியூட்ரினோக்கள் அதைப் பொய்ப்பித்துவிட்டனவோ என்று சில விஞ்ஞானிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
கடைசியில் நியூட்ரினோக்களின் வேகத்தைப் பதிவுசெய்யும் கருவி களில்தான் கோளாறு என்பது மறு ஆண்டில் தெரியவந்தது. ஐன்ஸ்டைன் கூறிய கொள்கை சரியானதே என்பது நிரூபிக்கப்பட்டது.
‘சட்டை மாற்றும்’
நியூட்ரினோக்கள் சூரியனில் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு சோலார் (எலெக்ட்ரான்) நியூட்ரி னோக்கள் உற்பத்தியாகின்றன என்று விஞ் ஞானிகள் கணக்குப் போட்டு வைத்திருந் தனர். அங்கிருந்து எவ்வளவு சோலார் நியூட்ரினோக்கள் பூமிக்கு வந்துசேர்கின்றன என்று 1968-ல் பரிசோதனைகள் மூலம் ஆராய்ந்தபோது, மூன்றில் ஒரு பங்கு நியூட்ரினோக்களே வந்துசேர்வதாகக் கருவிகள் காட்டின. பல இடங்களில் நடத்திய பரிசோதனைகளிலும் இதே விடைகள்தான் கிடைத்தன. சூரியனில் நிகழும் அணுச் சேர்க்கை பற்றித் தாங்கள் போட்ட கணக்கு தவறோ என்று என்று விஞ்ஞானிகள் சிந்திக்க முற்பட்டார்கள். ‘காணாமல் போன’ நியூட்ரினோக்கள் விஞ்ஞானிகளைக் குழப் பத்தில் ஆழ்த்தின.
ரயில் ஏறும் பயணிகள் நடுவழியில் சட்டை மாற்றிக்கொள்வதுபோல சூரியனி லிருந்து கிளம்பும் சோலார் நியூட்ரினோக் களில் பலவும் நடுவழியில் டாவ் நியூட்ரினோ அல்லது மியுவான் நியூட்ரினோக்களாக மாறுகின்றன என்பது 2002 வாக்கில் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நியூட்ரினோக்களையும் சேர்த்து எண்ணியபோது கணக்கு சரியாக வந்தது.
தேனியில் அமையும் ஆய்வுக்கூடத்தில் நியூட்ரினோக்கள் இப்படி மாறுவதுகுறித்தும் ஆராயப்படும்.
நியூட்ரினோ ஆய்வுகுறித்த மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
தொடர்புக்கு: editpage@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT