Published : 19 Mar 2015 09:40 AM
Last Updated : 19 Mar 2015 09:40 AM

என்னம்மா, இப்படிப் பண்றீங்களேம்மா?

ஃபிராய்டு காலம் தொடங்கி இன்று வரை நிலவும் உளவியல் முறைகளும் மனநலமும் குறித்த பார்வை!

இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிவிட்ட ஒரு சொற்றொடர். வீட்டில் பிள்ளைகள் இதைப் பேசி அம்மாக்களைக் கிண்டலடிக்கிறார்கள், அதற்கு விடை அம்மாவுக்கே தெரியாது!

மனிதர்களோ, விலங்குகளோ ஒரு சந்தர்ப்பத்தில் என்ன செய்வார்கள், செய்யும் என்பதை முன்கூட்டியே ஊகிக்க முடியாது. பல கூறுகளைக் கொண்டிருக்கும் உயிரினம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விதிகளால் முழுமையாக இயக்கப்படுவதில்லை.

உயிரற்ற பருப்பொருட்களின் நடத்தைகளிலேயே நிச்சயமற்ற, ஊகிக்க முடியாத பல கூறுகள் உள்ளன என்று ஐன்ஸ்டைனின் குவாண்டம் விசையியல் கூறும். பிரபஞ்சமே ஒருவர் பார்க்கிற அல்லது அளவீடு செய்கிற சாதனங்களைப் பொறுத்து அந்தந்த கணங்களில் அமையும் என்று மனிதக் கண்ணோட்டத் தத்துவம் கூறுகிறது. அவ்வாறு இருக்கும்போது, சஞ்சல சித்த முள்ள மனிதர் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பச் சூழ்நிலையில் என்ன செய்வார் என உறுதியாக ஊகிக்க முடியாது.

மெஸ்மரின் துயரக் கதை

மனித மனத்தின் செயல்பாடுகள், மனித நடத்தைகளை நிர்ணயிப்பதைப் பற்றி ஆதிகாலம் தொட்டே ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் ஆன்டன் மெஸ்மர் என்ற ஆஸ்திரிய மருத்துவர் நோயாளியை ஒருவிதமான சமாதி நிலையில் ஆழ்த்திவிட்டு, உங்களுக்குக் குணமாகிவிட்டது என்று நோயாளியின் காதில் திரும்பத் திரும்ப ஓதுவார். அது ஒருசில நோயாளிகளுக்குப் பலனளித்தது. சில நோய்கள் சுய அறிவுரை (ஆட்டோ சஜஷன்) என்ற விளைவால் குணமாகின்றன என்பதை மருத்துவ இயல் ஒப்புக்கொள்கிறது. ஆனால், அக்காலத்தில் வாழ்ந்த லவாய்சீ, பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அறிஞர்கள் மெஸ்மரின் சிகிச்சை ஒரு மோசடி என்று தீர்ப்பளித்துவிட்டனர். அதனால், மெஸ்மர் மனமுடைந்து மருத்துவம் செய்வதையே நிறுத்திவிட்டார். என்றாலும் வசப்படுத்தல் என்ற பொருள்தரும் ‘மெஸ்மரைஸ்’ என்ற சொல்லின் மூலம் அவர் ஆங்கில அகராதியில் நிரந்தரமான இடத்தைப் பெற்றுவிட்டார்.

1850-களில் ஜேம்ஸ் பிரைட் என்ற ஆங்கிலேய அறுவைச் சிகிச்சை நிபுணர் மெஸ்மரின் உத்திக்கு ‘ஹிப்னாட்டிஸம்’ (ஆழ்மனத் துயிலில் ஆழ்த்துதல்) என்று பெயரிட்டுப் பிரபலப்படுத்தினார். 1880-களில் ஜோசப் பிரேயுவர் என்ற ஆஸ்திரிய மருத்துவர் அந்த உத்தியைப் பயன்படுத்தி, உளவியல் மற்றும் உணர்ச்சிக் கோளாறுகளைக் குணப்படுத்தினார்.

அடிமனது எனும் ஆழ்குழி

நம் நாட்டில் பல சித்தர்கள் தியானம், சமாதி என்ற பெயர்களில் ஆழ்நிலைத் தியான முறைகளில் நோய்களைக் குணப்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படு கிறது. மனிதப் பிரக்ஞையில் அடிமனது என்ற கூறு உள்ளதை ஆழ்நிலைத் துயில் காட்டுகிறது என்றனர் மேலைநாட்டு மருத்துவர்கள். ஒருவருக்குத் தெரியாமலே, பல எண்ணங்களும் நோக்கங்களும் அவருடைய அடிமனதில் புதைந்திருக்கும். ஹிப்னாடிசத்தின் மூலம் அவற்றை ‘அறிமனது’க்குக் கொண்டுவர முடியுமென அவர்கள் கருதினார்கள். அந்த எண்ணங்களும் நோக்கங் களும் பெரும்பாலும் கெட்டவையாகத்தான் இருக்கும். எனவே, அவற்றை அறிமனதுக்குத் தெரியாமல் அடிமனதில் புதைத்துவிடுவது மனித இயல்பு.

ஹிப்னாடிசத்தைப் பயன்படுத்தி உணர்ச்சி சார்ந்த நடத்தைக் கோளாறுகளுக்கான ரகசியக் காரணங்களைக் கண்டறிய முயன்றார் பிரேயுவர். அவரும் அவருடைய மாணவரான சிக்மண்ட் ஃபிராய்டும் பல ஆண்டுகளுக்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார்கள். நோயாளியைச் சமாதி நிலையில் ஆழ்த்தி அவரிடம் கேள்விகளைக் கேட்டுப் பேச வைத்தார்கள். நோயாளி தன் மனப் புழுக்கங்களையெல்லாம் வெளியே கொட்டித் தீர்த்த பிறகு, அவருடைய உளவியல் கோளாறுகள் படிப்படியாகக் குறைந்து மறைந்தன.

ஏராளமான நோயாளிகளை ஆய்வு செய்த பிறகு, அடிமனதில் அமுக்கப்பட்டுவிடுகிற ஆசைகளும் எண்ணங்களும் நோக்கங்களும் பெருமளவில் காமம் தொடர்பாகவே தோன்றுவதாக ஃபிராய்டு முடிவு செய்தார். சமூகத்தின்மீதான பயத்தின் காரணமாகக் காமம் தொடர்பான உணர்வுகள் குழந்தைப் பருவத்திலிருந்தே அடிமனதில் அழுத்தப்பட்டுவிடுகின்றன. ஆனால், அவை அடங்காமல் திமிறி வெளிப்படவே முயல்கின்றன. இதன் விளைவாக மனதில் ஓயாத போராட்டங்கள் நிகழும். அந்தப் போராட்டங்களை அறிமனம் அங்கீகரிக்க மறுக்கும்போது, உளவியல் பிரச்சினைகள் உருவாகின்றன என்று ஃபிராய்டு கருதினார்.

ஆனால், ஃபிராய்டின் கருத்துக்களை ஏற்க மறுத்தார் பிரேயுவர். 1894-ல் ஃபிராய்டு அவரிடமிருந்து பிரிந்து தனியே தொழில் நடத்தத் தொடங்கினார். ஹிப்னாடிசத்தைப் பயன்படுத்தாமல் நோயாளிகளை முழு நினைவுடன் தங்கள் மனதில் தோன்றுவதையெல்லாம் வெளிப்படையாகப் பேச விட்டார். மருத்துவர் விருப்புவெறுப்பின்றித் தம் பேச்சுகளை அனுதாபத்துடன் கேட்கிறார் என்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன் நோயாளி தன் மனச்சுமைகளையெல்லாம் வெளியே கொட்டிவிட்டு, மனம் லேசாகிவிட்டதாக உணர்கிறார். நீண்ட காலமாகத் தன் அடிமனதில் அடக்கிவைத்து மறந்துபோன விஷயங்களைக்கூட வெளியிட்டுவிடுகிறார். ஃபிராய்டு தமது உத்திக்கு உளவியல் பகுப்பாய்வு எனப் பெயரிட்டார். கனவுகளுக்கெல்லாம் அவர் பாலுறவு அடிப்படையிலான விளக்கங்களை அளித்தார். மகன்களுக்குத் தம்மையும் அறியாமலேயே தாயின் பேரிலும் மகள்களுக்குத் தந்தையின் பேரிலும் ஈர்ப்பு உண்டாகும் என்பதைப் போன்ற அவருடைய பல கருத்துக்கள் சிலருக்கு வெறுப்பையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கின. எனினும், 1920-களில் போர்களாலும் உள்நாட்டுக் குழப்பங்களாலும் மக்கள் மனக்கோளாறுகளால் பீடிக்கப்பட்டு, உளவியல் நிபுணர்களின் உதவியைப் பெருமளவில் நாடத் தொடங்கினார்கள். பல நிறுவனங்களில் மனிதவளப் பிரிவில் உளவியல் நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுத் தொழிலாளர்களுக்கு ஆலோசனை கூறுகிறார்கள்.

மனநோய் பல வடிவங்களில் வரும். சிலருக்குத் தீராத மனச்சோர்வு மட்டும் இருக்கும். சிலருக்கு உலகைப் பற்றிய கண்ணோட்டமே மாறி, யதார்த்தத்திலிருந்து விலகித் தமக்கென்று ஒரு புதுவிதமான மாயாலோகத்தைப் படைத்துக்கொள்கிற அளவுக்குப் போய்விடும். இவ்வித மனநோய்கள் ‘ஸ்கிட்சோப்ரீனியா’ என வகைப்படுத்தப்படுகின்றன.

அமைதியூட்டி மருந்து

அண்மைக் காலம் வரை இந்த நோய்களுக்கு மூளையின் முன்நெற்றிக் கதுப்பை அறுத்து நீக்குதல், மின்சார அதிர்ச்சி போன்ற கடுமையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. 1933-ல் மான்பிரட் சாக்கேல் என்னும் ஆஸ்திரிய மருத்துவர் இன்சுலினை உட்செலுத்தும் சிகிச்சையை அறிமுகப்படுத்தினார். 1,000 ஆண்டுகளுக்கு முன்பே சர்ப்பகந்தி மூலிகையை மன அமைதிக்காக இந்திய மருத்துவர்கள் பயன்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த மூலிகைச் சாற்றிலிருந்து அமெரிக்க ஆய்வர்கள் ரிசர்ப்பீன் என்ற மருந்தை 1952-ல் உருவாக்கினார்கள். முதன்முதலாக உருவாக்கப்பட்ட அமைதியூட்டி மருந்து அதுதான்.

அமைதியூட்டிகள் ஒருவகை வலி மரப்பு வேதிப் பொருட்கள்தான். அவை பொதுவான மனச் செயல் பாடுகளைப் பாதிக்காமல், மனச்சோர்வையும் கவலை யையும் தணித்துத் தூக்கமூட்டும். அரிதாக, வேண் டாத பக்க விளைவுகளும் ஏற்படுவதுண்டு. அந்த மருந்துகள் நோயாளிகளின் துன்பத்தைத் தணித்து அமைதிப்படுத்துகின்றன. மூர்க்கமான நடத்தைகளையும் விரோத மனப்பான்மைகளையும் பயங்களையும் குறைத்து உளவியல் மருத்துவரின் பணியை அவை எளிதாக்குகின்றன. 150 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட உளவியல் பகுப்பாய்வு மற்ற அறிவியல் துறைகளைப் போலக் கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளின் அடிப் படையில் முடிவுகளை வெளியிட முடியவில்லை. உளவியல் மருத்துவர்கள் தமது உள்ளுணர்வுகளின் அடிப்படையில் அல்லது நோயாளி தரும் தகவல் களின் அடிப்படையில்தான் சிகிச்சை உத்திகளை வகுத்துக்கொள்கிறார்கள். எனினும், அவை பல நோயாளிகளுக்குப் பெருமளவில் நிவாரணமளித் துள்ளன. எனினும், ‘பைத்தியம்’ என்று சொல்லப்படும் மனநோயை முழுமையாகக் குணப்படுத்தவோ, வராமல் தடுக்கவோ முடியவில்லை. அத்துடன் மனநோய் பற்றி பொதுவான, எல்லோரும் ஒப்புக்கொள்கிற ஒரு கொள்கையை உருவாக்க முடியவில்லை. ஒவ்வொரு நிபுணரும் ஒவ்வொருவிதமான கருத்தை வெளியிடுகிறார்கள். மருத்துவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான சிகிச்சை முறைகளைக் கையாளுகிறார்கள். இப்போது மூளையின் ரசாயனச் செயல்பாடுகளைப் பற்றியும் மருந்துகள் செயல்படும் விதங்களைப் பற்றியும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற சில உண்மைகள், உளவியல் சிகிச்சை முறைகள் முன்னேற்றியுள்ளன.

எது எப்படிப் போனாலும் குணசீலமும், ஏர்வாடி தர்காவும் தம் புகழை இழந்துவிடப் போவதில்லை.

- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x