Published : 21 Mar 2015 09:31 AM
Last Updated : 21 Mar 2015 09:31 AM
பழங்குடியினர் உதவி இல்லாமல் வனப் பாதுகாப்பு என்பது சாத்தியமே இல்லை!
ஜீரகஹள்ளி வன ஓய்வு விடுதி எதிரே இருக்கும் வனக்குட்டை அது. அதிகாலையில் கரையோரம் அமர்ந்திருந்தபோது, எதிர்த் திசை புதரிலிருந்து ‘ஹிம்... ஹிம்... ஹிம்...’ என்று சத்தம் கேட்டது. நேரமாக நேரமாகச் சத்தம் அதிகரித்துக்கொண்டே போனது. சத்தத்தைக் கேட்டதும், ‘‘வந்துடுங்க சார், உள்ளே போயிடலாம். ஆண் புலி இணை சேர்வதற்காகப் பெண் புலியை அழைக்கிறது’’ என்றார் ராமசாமி. சொல்லி முடிக்கவில்லை. கண்ணிமைக்கும் கணத்தில் ஒரு பெரிய உருவம் மின்னல்போலப் புதரிலிருந்து பாய்ந்து, கடந்து மறைந்தது.
“பார்த்தீங்களா சார் புலி” என்றார் ராமசாமி. எல்லோருடைய கண்ணிலும் படாதது அவர் கண்ணில் தெளிவாகப் பட்டிருக்கிறது.
இன்னொரு முறை மானாம்பள்ளி மலைப் பாதையில் ஜீப்பில் சென்றபோது, குட்டிகளுடன் இருந்த யானைக் கூட்டம் வழிவிட மறுத்தது. கூட்டத்துக்குத் தலைவியான ‘பெரியம்மா’ யானை மூன்று முறை பிளிறியபடி ஜீப்புக்கு மிக அருகே ஓடி வந்து தும்பிக்கையை வீசி எச்சரிக்கை விடுத்தது. “அடுத்த முறை எச்சரிக்கை கொடுக்காது, அடிச்சுடும்” என்றபடியே ஜீப்பை விட்டு இறங்கினார் வடிவேலன். கண்ணாடி பாட்டிலை எடுத்துச் சிறு கல்லைக் கொண்டு உரசினார். மெதுவாக முன்னேறிச் சென்று, வினோதமான ஒலிகளை எழுப்பினார். கிட்டத்தட்ட அந்த யானைக் கூட்டத்தை நெருங்கிவிட்டார் அவர். அசையாமல் அமர்ந்து யானைகளைப் பார்த்தபடி இருந்தார். சிறிது நேரத்தில் அவை காட்டுக்குள் சென்றுவிட்டன.
இப்படி ஒன்றிரண்டு சம்பவங்கள் அல்ல. களக்காடு வனத்தில் நாள் முழுவதும் நடந்து உணவு, தண்ணீர் இல்லாமல் மயக்கம் அடைய நேரிட்டபோது, பச்சிலைகளைப் பறித்துக்கொடுத்து பசியையும் களைப்பையும் போக்கினார் ஜான். ஊருக்குள் புகுந்த சிறுத்தையுடன் நேரடியாகக் களம் கண்டு, கூண்டில் அடைக்கும் வித்தையில் கை தேறியவர் பாபு. இப்படி அளப்பரிய திறமைகளைக் கொண்ட இவர்கள் அனைவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள். ஆனால், அடர்ந்த காட்டுக்குள் இப்படியான ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் என்பது வெளியுலகுக்குத் தெரியுமா என்றால், அது அநேகமாக இல்லை.
வேட்டைத் தடுப்புக் காவலர்களின் பணிகள் என்ன?
தமிழகத்தின் வனத் துறையில் அதிகாரபூர்வமாக சுமார் 5,700 பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால், அதிகார பூர்வமில்லாமல் 1,240 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அபாயகரமான நிலையில் பணிபுரிகிறார்கள்.
அரிய வகை கடல், வன உயிரினங்கள், மரங்கள் கடத்தப்படுவதை இவர்கள் தடுக்க வேண்டும். மன்னார் வளைகுடா உள்ளிட்ட தீவுகளில் அந்நிய நபர்கள் ஊடுருவுவதைக் கண்காணிக்க வேண்டும். கடற்கரைகளில் ஒதுங்கும், காடுகளிலிருந்து வெளியேறும் உயிரினங்களை மீட்டு, அவற்றின் வாழ்விடங்களில் விட வேண்டும். இறக்கும் பெரிய உயிரினங்களின் பிரேதப் பரிசோதனைகளில் உதவியாளராகப் பணியாற்ற வேண்டும். கஞ்சா பயிரிடுதல், சாராயம் காய்ச்சுதல், அந்நியர் ஊடுருவல் இவற்றைத் தடுக்க வேண்டும். வனத்தில் தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வன உயிரினங்களைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
மரபு வழி வந்த வேலைத் திறன்!
ஆனால், இவர்கள் செய்யும் வேலைகளை வேறு ஒருவர் செய்ய இயலாது. கோடைக் காலங்களில் தண்ணீர் இல்லாமல் காட்டுத் தீயை அணைப்பது எளிதல்ல. காற்றின் வேகம், காற்று அடிக்கும் திசையைக் கணித்தும், பச்சிலைகளைக் கொண்டும், நீண்ட பள்ளங்களை வெட்டியும் தீயை அணைப்பார்கள் இவர்கள். ஊருக்குள் புகுந்த யானைகளுடன் பேச்சுக் கொடுத்தே காட்டுக்குள் அனுப்பி வைப்பார்கள் காடர்கள். பெரும் வனப் பரப்பில் வாசனையை முகர்ந்தே கஞ்சா பயிரிடப்பட்டிருக்கும் இடத்தைச் சொல்வார்கள் மலசர்கள். மன்னார் வளைகுடாவின் சில பகுதிகளில், சில நீர்த் தண்டுகளின் உதவியுடன் மணிக் கணக்கில் கடலுக்குள் முங்கி ஆய்வுப் பணிகளுக்கு உதவுகிறார்கள்.
காடுகளில் பல நாட்கள் குடிநீர் இல்லாமல்கூட வேலை பார்க்க இவர்களால் முடியும். முகாம், கட்டிடங்கள் இல்லாத காடுகளில் மரங்களிலும் குகைகளிலும் இரவுகளைக் கழிக்கிறார்கள். தொலைதூரச் சிறு அசைவையும் மெல்லிய ஒலியையும் துல்லியமாக இவர்களால் பகுத்தறிய முடிகிறது. ஏனெனில், இவர்களின் பணித் திறன் என்பது இவர்களின் மரபு வழி வந்தது.
என்ன தருகிறது அரசு?
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ. 3,500. இப்போது ரூ. 6,750. அபாயகரமான வேலை அல்லாத ஓர் அரசுத் துறையின் கடைநிலை ஊழியர் வாங்கும் ஊதியத்தைவிட மிகக் குறைவு இது. எல்லாவற்றையும்விட இவர்கள் அதிகாரிகளுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்பது வனத் துறையில் எழுதப்படாத சட்டம். ஒரு வனவர் அல்லது சரகரின் சுய விருப்புவெறுப்பின் அடிப்படையில் இவர்களை வேலையை விட்டு நீக்கிவிட முடியும். இதுவரை யானைத் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் சுமார் 15 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் இறந்துள்ளனர். யானை தாக்கிப் பொதுமக்கள் இறந்தால்கூட ரூ. 3 லட்சம் கொடுக்கும் அரசு, இவர்கள் இறந்தால் எதையும் கொடுப்பதில்லை.
பழங்குடியினர் மீதான அலட்சியம் காரணமா?
வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மீதான புறக்கணிப்பைப் பழங்குடியினர் மீதான புறக்கணிப்பு என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியாவில் 2,690 வனக் கிராமங்கள் இருக்கின்றன. 1,70,379 கிராமங்கள் வனத்தை வாழ்வுக்காகப் பயன்படுத்துகின்றன. ஆனால், நாடு முழுவதும் கடந்த காலங்களில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான பழங்குடியினர் (தமிழகத்தில் மூன்று லட்சம் பேர்) காட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பொதுவாக, இங்கே வனப் பாதுகாப்பு, வன உயிரினப் பாதுகாப்பு என்பதில் நுட்பமான அரசியல் நிலவுகிறது. அது பெரும்பாலும் பழங்குடியினரை வஞ்சிக்கிறது. பல உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் தொடங்கி உலக வன விலங்கு நிதியம் (WWF) வரை காட்டை விட்டுப் பழங்குடியினரை வெளியேற்றுவதுதான் சரி என்கிறரீதியிலேயே கருத்துக்களை வெளியிடுகின்றன. இதன் பின்னணியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நம் காட்டின் மீது இருக்கும் தீவிரமான ஆசையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நவீன மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் மருந்து கண்டுபிடிப்பு போன்ற பரிசோதனைகள், பழங்குடியினரின் பாரம்பரிய அறிவு இல்லாமல் சாத்தியமானதில்லை. இன்று பல நூறு கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட புத்துணர்வு மருந்து ‘ஜீவனி’ மாதன் குட்டி காணி என்கிற பழங்குடியினர் பாரம்பரிய அறிவிலிருந்து பெறப்பட்ட ஒன்றே. ஆனால், அரசாங்கம் ‘வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் - 1972’, ‘வனப் பாதுகாப்புச் சட்டம் -1980’ ஆகிய சட்டங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ‘பழங்குடி மக்கள் மற்றும் வனத்தில் வாழ்வோரின் வன உரிமைச் சட்டம் - 2006’ சட்டத்துக்குக் கொடுப்பதில்லை.
காட்டின் பல்லுயிர்ச் சமநிலை என்பது பழங் குடியையும் உள்ளடக்கியதே. அவர்களைப் பூர்விக வாழ்விடத்தை விட்டு அகற்றாமல், அங்கேயே அவர்களுக்கான வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுப்பதே காடுகளுக்கான உண்மையான பாதுகாப் பாக அமையும். இந்தக் கோணத்தில்தான் வேட்டைத் தடுப்புக் காவலர்களாக இருக்கும் பழங்குடியினரை அணுக வேண்டும். இடஒதுக்கீட்டில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒட்டுமொத்த சதவீதமான ஒரு சதவீதத்தை வனத் துறையின் களப்பணியில் மட்டுமாவது தவிர்த்து, அவர்களுக்குக் கூடுதல் இடஒதுக்கீடு அளிப்பது பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
- டி.எல்.சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
இன்று உலக வன நாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT