Published : 12 Mar 2015 08:48 AM
Last Updated : 12 Mar 2015 08:48 AM
நீரைக் குறிக்கும் சொற்கள், நீரின் இயல்பு களையும் செயல்களையும் குறிக்கும் சொற்கள் தமிழில் நிறைய இருக்கின்றன. அது போலவே நம் பழமொழிகள், சொலவடைகள், மரபுத் தொடர்கள் போன்றவற்றிலும் நீரின் ஆதிக்கம் அதிகம். ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்பதிலிருந்தே தண்ணீருக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் தெரிகிறதல்லவா?
ஒருவர் செலவாளி என்பதைக் குறிக்க ‘காசைத் தண்ணியா செலவழிக்கிறான்’ என்றும், ஆபத்துக்குக் கூட ஒருவர் உதவ மாட்டார் என்பதைக் குறிக்க ‘தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுக்க மாட்டான்’ என்றும் நம் அன்றாடப் பேச்சில் தண்ணீரைப் பயன்படுத்துவது வழக்கம். அதேபோல் நேர்மையான அதிகாரியாக இருந்தால் ‘தண்ணி இல்லாக் காட்டுக்கு’ மாற்றப்படுவதும் வழக்கம். தண்ணீர் என்பது அந்த அளவுக்கு ‘தண்ணீர் பட்ட பாடு’ நமக்கு.
நீர் குறித்த பழமொழிகள், சொலவடைகள், மரபுத் தொடர்கள் போன்றவற்றில் சில:
அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை, ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
(தகுதிக்கு மேல் ஆசைப்படு வதைக் குறித்துச் சொல்வது.)
உப்புல தெரியுமாம் துப்பு, நீருல தெரியுமாம் சீரு.
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.
(தப்பு செய்தால் தண்டனை நிச்சயம்).
கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.
தை மாதம் போட்ட விதை தண்ணீரில்லாமல் வளரும்.
நீர் மேல் எழுத்துபோல்
(பேச்சு வழக்கில் ‘உன் பேச்சைத் தண்ணி மேலதான் எழுதிவைக்கணும்’ என்பார்கள்).
நீரடித்து நீர் விலகுமா?
(நெருங்கிய உறவுக்குள் ஏற்படும் மனவருத்தத்தால் உறவு பிரியுமா?)
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாய்வதைப் போல.
தண்ணீர் குடிப்பதுபோல
(ஒரு செயலைச் செய்வதென்பது ஒருவருக்கு மிகச் சாதாரணம் என்ற பொருளில்.)
தண்ணீர் தெளித்துவிடு
(ஒருவரை ஏதும் செய்ய முடியாது என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடுதல்.)
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
தலையால் தண்ணீர் குடி
(கடுமையாக முயற்சி செய்தல்.)
தவித்துத் தண்ணீராக உருகு
(மிகவும் நெகிழ்ந்து போதல்)
தாமரை இலைத் தண்ணீர் போல.
மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
வட்டாரச் சொல் அறிவோம்:
‘திருப்பாகம்’ என்ற இனிப்புப் பண்டத்தைப் பற்றி எங்கோ கேள்விப்பட்டு, பலரிடமும் கேட்டுப் பார்த்தாகிவிட்டது. யாருக்கும் தெரியவில்லை. இணையத்தில் தேடியபோது ஒரு வலைப்பூ கண்ணில் பட்டது. திருப்பாகத்தைப் பற்றி அதில் விளக்கியிருந்தார் அந்த வலைப்பூ நண்பர்:
“இந்த மழைநாள் மாலையில், எங்கள் ஊர் திருநெல்வேலியின் ஞாபகங்களில் ஒன்றாக இருக்கும் திருப்பாகம் என்னும் இனிப்பைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை தோன்றிவிட்டது. சில ஆசைகள் நிறைவேறிவிடக் கூடியவை. ஆனால், திருப்பாகம் என்னும் அரிய தெய்வீக இனிப்பைச் செய்வது சுலப சாத்தியமில்லை.
வெண்ணெய்த் தாளில் மெல்லிதாக, டைமண்ட் வடிவில் பொதியப்பட்டிருக்கும். வாயில் போட்டுத் தித்திப்பின் படிகளில் மெதுவாக ஏறி உச்சத்தில் லேசாகப் பச்சைக் கற்பூரத்தின் சுவையுடன் கரையக் கூடியது. பால்கோவாவின் மென்மைக்குக் கொஞ்சம் மேலாக, சற்று நெருநெருவென்று இருக்கும். திருநெல்வேலி டவுனில் உள்ள போத்தி கடையில், காலையில் ‘வாக்கிங்’ என்ற பெயரில் வீட்டை விட்டுக் கிளம்பும் பெரியவர்கள், சந்திப் பிள்ளையார் முக்கில் கூடி, அன்றைய அரசியலை விவாதித்து முடித்து, வீட்டுக்குப் போகும்போது, நெய் உப்புமாவையும், ஒரு திருப்பாகத்தையும் விழுங்கிவிட்டு, ஒரு காபியையும் வக்கணையாகச் சாப்பிட்டுவிட்டு, கலோரிகளை ஏற்றி, வீட்டிலும் ‘பெயருக்கு’ காலை உணவுக்குக் கொஞ்சம்போல வயிற்றில் இடம் வைத்துவிட்டுச் செல்வார்கள்…
திருநெல்வேலியில் ஓரளவு வசதியானவர் கல்யாணங்களில் திருப்பாகம், இலையின் ஓரத்தில் இடது பக்கத்தில் பிரிப்பதற்கு ஏற்றாற் போல வெண்ணெய்த் தாளின் மடிப்பில் இடம் பெறுவது உண்டு. இப்போது அங்கே நடக்கும் கல்யாணங்களில் திருப்பாகம் போடுகிறார்களா என்று விசாரிக்க வேண்டும்.
…புட்டாரத்தி அம்மன் கோயில் தெரு அத்தையைத் தொலைபேசியில் கூப்பிட்டேன். கடலை மாவு, பால், சீனி, நெய் எல்லாம் சேர்த்துக் கடைசியில் பச்சைக் கற்பூரத்தைப் போடுவார்கள் என்று சொன்னார். பக்குவம் சொல்ல அவருக்கும் தெரியவில்லை. திருப்பாகம் செய்வதற்கென்றே ‘ஸ்பெசல்’ ஆட்கள் கல்யாணங்களில் அழைக்கப் படுவார்களாம்.
திருநெல்வேலியில் திருப்பாகம் இருக்கிறது என்ற தகவல் நிம்மதியாக இருக்கிறது. இல்லை யெனில், எனது கற்பனை ஊரில் உள்ள ஒரு கற்பனை இனிப்பு என்று என் மகளும் நண்பர் களும் ஒரு நாள் கேலி செய்யகூடும்.”
- (‘யானை’ என்ற வலைப்பூவிலிருந்து)
திருநெல்வேலிப் பகுதி வாசகர்கள் யாராவது திருப்பாகத்தின் புகைப்படத்தை அனுப்பினால் நம் வாசகர்களுக்கு விருந்து படைக்கலாம்!
சொல் தேடல்:
‘பென் டிரைவ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வாசகர்களின் பரிந்துரைகளில் சில:
ராம்ஜி:
தகவல் தேக்கி
கோ. மன்றவாணன்:
தரவுக்கோல், செருகுப் பதிவகம்
வீ. சக்திவேல்:
சேமிப்புக் கோல், தரவு சேமிப்புக் கலன், தரவு சேமிப்புக் கோல்
சரண்யா:
குறு நினைவுப்பேழை, குறு நினைவகம்
ஜனார்த்தனசாமி:
குறு நினைவகம்
கணேஷ் குமார்:
சேமிப்பி, விரலி
சென்ற வாரம் டி.கே. ரகுநாதன் ‘பென் டிரைவ்’ என்ற சொல்லுக்கு அனுப்பிய பரிந்துரைகள்: செருகு நினைவகம், நினைவகச் செருகி.
மொத்தத்தில் பார்க்கும்போது ‘விரலி’ என்ற சொல் ‘கணினி’ என்ற சொல்லைப் போலச் சிறியதாகவும் எளிமையாகவும் இருக்கிறது. இணையத்தில் ‘விக்சனரி’யிலும் இந்தச் சொல் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக, தரவுக்கோல் என்ற சொல்லையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ‘செருகு நினைவகம்’ என்ற சொல் செருகக் கூடிய ‘பென்டிரைவ்’, ‘எக்ஸ்டெர்னல் ஹார்டு டிஸ்க்’ ஆகியவற்றைப் பொதுவாகக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
அடுத்த வாரச் சொல் தேடலுக்கு இரண்டு சொற்கள்: ‘மெமரி கார்டு’, ‘மெமரி சிப்’.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT