Published : 13 Mar 2015 10:07 AM
Last Updated : 13 Mar 2015 10:07 AM
ஸ்மைல் ப்ளீஸ்
தென்அமெரிக்க நாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்களுக்கு நிறைய பலன்கள் உண்டு. பயண அனுபவம், மாறுபட்ட இயற்கைச் சூழல், வித்தியாசமான தோற்றம் கொண்ட மனிதர்களைக் கண்டுகளிப்பது என்று பல விஷயங்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன. ஆனால், உள்ளூர் மக்களுக்குக் கிடைப்பது என்ன? ஒன்றுமேயில்லை என்கிறார்கள் ஈக்வெடாரின் ஹியேரானி இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள். “காட்சிப் பொருட்களைப் போல் எங்களைப் புகைப்படம் எடுத்து நகரங்களில் அவற்றை விற்றுவிடுகிறார்கள். ஆனால், எங்களுக்குக் கொஞ்சம் கூடப் பணம் கிடைப்பதில்லை” என்கிறார்கள் அம்மக்கள். பயணிகளுடன் ஆர்வத்துடன் நடனமாடும் பழங்குடியினர், ஏதாவது பணம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறார்கள். உடலை வருத்தித் தயாரிக்கும் பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்குமாறு சுற்றுலாவுக்கு வரும் பயணிகளிடம், உள்ளூர் வழிகாட்டிகள் சொல்லிவைத்திருப்பதாக அம்மக்கள் குமுறுகிறார்கள். எண்ணெய் நிறுவனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்த நிலையில் வருமானம் இன்றித் தவிக்கும் பழங்குடி மக்களை வெளிநாட்டுப் பயணிகளுடன் சேர்ந்து உள்ளூர் வழிகாட்டிகளும் ஏமாற்றுகிறார்கள். சுரண்டலுக்கு எல்லை ஏது?
அடைக்கலம் தருமா ஐரோப்பா?
உள்நாட்டுப் போர், வறுமை போன்ற பல காரணங்களால் மத்தியத் தரைக்கடல் பகுதி நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் பலர் படையெடுக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் சட்டவிரோதமாகப் படகுகளில் வந்தவர்களில் 3,500 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்நிலையில், புகலிடம் தேடும் மக்கள் துருக்கி, நைகர், எகிப்து போன்ற நாடுகளில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களில் விண்ணப்பிக்கலாம்; தேர்வுசெய்யப்படுபவர்களைப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரித்து அனுப்பலாம் என்னும் யோசனையை ஐரோப்பிய ஆணையம் முன்வைத்தது. ஆனால், இத்தாலிக்குத்தான் அதிகமானோர் அடைக்கலம் தேடி வருகிறார்கள் என்பதால், இந்தப் பிரச்சினையை இத்தாலியே பார்த்துக்கொள்ளட்டும் என்று மற்ற ஐரோப்பிய நாடுகள் ஒதுங்கி நிற்கின்றன. பரிதாபத்துக்குரிய மக்கள் வாழ்வில் கரைசேர்வது ஐரோப்பிய நாடுகளின் முடிவில் இருக்கிறது.
சுவரில்லாச் சித்திரங்கள்
ஜப்பானில் 2011-ல் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி, புகுஷிமா அணு உலை விபத்து ஆகிய சம்பவங்களின் அதிர்ச்சி இன்னும் மறையவில்லை. பெரும் பாதிப்பைச் சந்தித்த இவாட்டே, மியாகி, புகுஷிமா மாவட்டங்களில், பல மீட்டர் உயரத்துக்குப் பாய்ந்துவரும் சுனாமி அலைகளைத் தடுக்க, கடற்கரையோரப் பகுதிகளில் மொத்தம் 573 தடுப்புச் சுவர்கள் எழுப்பத் திட்டமிடப்பட்டது. அவற்றில் 8%தான் கட்டிமுடிக்கப்பட்டிருக்கின்றன. 55% சுவர்களின் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கிறது. 37% சுவர்களின் கட்டுமானப் பணி இன்னும் தொடங்கவேயில்லை என்று ஜப்பான் அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட வேண்டிய தடுப்புச் சுவர்கள், தற்போதைய நிலையைப் பார்க்கும்போது 2018-ல்தான் கட்டிமுடிக்கப்படும் என்று தெரிகிறது. இடையில் சுனாமி ஏற்பட்டால் என்ன செய்வது என்று அச்சப்படுகிறார்கள் மக்கள். அரசு என்றால் அகிலம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்போல!
கணவர்களை இழந்த தேசம்
போகோ ஹராம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த நைஜீரியாவில், கணவரை இழந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. போகோ ஹராம் அமைப்பு தோன்றிய மைதுகுரி நகரத்தில் உள்ள ‘நேஷனல் கவுன்சில் ஆஃப் விமன் சொசைட்டீஸ்’ அமைப்பில் கணவரை இழந்த 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். இவர்களில் பலரது கணவர்கள் போகோ ஹராம் அமைப்பினர், நைஜீரியப் பாதுகாப்புப் படைகள் மற்றும் இதர ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டவர்கள். இதுதவிர, கணவரை இழந்த முஸ்லிம் பெண்களுக்கான சங்கத்தில் 4,000 பெண்களும், கிறிஸ்தவச் சங்கத்தில் 2,000 பெண்களும் பதிவுசெய்திருக்கிறார்கள். பதிவுசெய்யப்படாதவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. குழந்தைகளுடன் பரிதாபமான வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கும் அந்தப் பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் பெரும்பாலான ஆண்கள் முன்வருவதில்லை. போகோ ஹராமின் கொடும் விளைவுகளில் ஒரு உதாரணம் மட்டுமே இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT