Last Updated : 30 Mar, 2015 08:23 AM

 

Published : 30 Mar 2015 08:23 AM
Last Updated : 30 Mar 2015 08:23 AM

விளையாட்டாக அரங்கேறும் விபரீதங்கள்

ஆசை இருக்கு தாசில் பண்ண என்பார்கள். எங்கள் வீட்டு ஒரியா சமையல்கார வாலிபர் கமலிலிருந்து தெரு ஓர சாயாக்கடை பீமப்பா, இஸ்திரி போடும் ராமு, எங்கள் கட்டிடத்தில் உள்ள செக்யூரிட்டி என எல்லோரும் ஆசைப்பட்டார்கள். கனவு கண்டார்கள். அதை உறுதியுடன் நம்பினார்கள். நான் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஆடும்போது கமலிடம் சொன்னேன் - இந்தியா ஜெயிக்காது என்று. அவனுடைய முகம் தொங்கிப்போயிற்று. ‘பார்ப்போம்’ என்று கிளம்பிப் போனான்.

இந்தியா - ஆஸ்திரேலியா அரை இறுதி ஆட்டத்தை வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் காண பெங்களூரில் அநேக அலுவலங்கள் விடுமுறை விட்டன. பல முக்கியமான போர்டு மீட்டிங்குகள் மாலை ஐந்து மணிக்கு மேல் என்று தள்ளிவைக்கப்பட்டன. இந்தியா ஜெயிக்கும் என்று வெடிக்கச் சித்தமாகப் பலர் சர வெடிப் பட்டாசுகளை வைத்திருந்தார்கள். ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்களும் வசதிமிக்க இந்தியர்கள் சிலரும் ஆட்டத்தை நேரில் காண சிட்னிக்குப் பறந்தார்கள். எல்லா இந்தியத் தொலைக்காட்சி சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு யார் ஜெயிப்பார்கள் என்று விவாதித்தன. பத்திரிகைகள் பத்தி பத்தியாக எழுதின. இந்தியா மீண்டும் உலகக் கோப்பையைக் கைப்பற்றப் பரிபூரணத் தகுதி உடையது என்று சொன்னார்கள். அப்படிச் சொல்பவர்களைப் பார்த்துப் பொறுக்கி எடுத்துப் பேச வைத்தார்கள். வர்த்தக விளம்பரங்கள் எல்லாம் இந்தியா வெல்வது போன்ற ஒரு மாயையை எழுப்பின. ஒரு மாபெரும் தேசிய எழுச்சிபோல, அந்த வெற்றியில் நமது மானமும் மரியாதையும் தொக்கி நின்றதுபோல ஒரு பிம்பம் எழுந்தது. இதுவரை ஆஸ்திரேலியர்கள் எப்படி நமது வீரர்களைக் கிண்டல் செய்து அசிங்க வார்த்தைகள் பேசியிருக்கிறார்கள் [sledging] என்று ஒரு சேனல் வேலை மெனெக்கெட்டு விவாதித்தது. இந்த பிம்பங்கள் நமக்குக் காண்பித்த சமிக்ஞைகள் யார் கண்ணிலும் படவில்லை.

‘தன்மானப் பிரச்சினை’!

ஆசைப்பட்டதில் ஒரு அர்த்தம் இருந்தது. இந்த உலகக் கோப்பை விளையாட்டுகளில் அரை இறுதிக்கு வரும்வரை இந்திய அணி எவரிடமும் தோற்கவில்லை. நன்றாகவே ஆடிப் பாராட்டைப் பெற்றது. அதுவே அணிக்கு அதீத தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கலாம். ஆஸ்திரேலிய அணியை நேருக்கு நேர் சந்தித்தபோது தனது பலவீனம் புரிந்து தளர்ந்திருக்கலாம். ஆனால், நாம் வெல்வது ஒரு தன்மானப் பிரச்சினையாகப் பாமர இந்தியர்கள் நினைக்க ஆரம்பித்ததற்கு ஊடகங்கள் கிளப்பிய பிம்பங்களே காரணம் என்று படுகிறது.

ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடியதை நமது தீவிர கிரிக்கெட் ‘தேசியவாதிகள்’ ரசித்தார்கள் என்று தோன்றவில்லை. மிட்செல் ஜான்சன் ஒன்பது பந்துக்கு 27 ரன் குவித்தபோது வாயைப் பிளக்கவில்லை. 329 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா முடித்துக்கொண்டபோது, இந்தியப் பார்வையாளர்கள் பீதி அடைந்தார்கள். நமது பலவீனம் ஷிகர் தவன் அவுட்டானபோதே வெளிப்பட்டுவிட்டது. ஆஸ்திரேலியாவின் அபார திறமை ரன் குவிப்பதில் மட்டுமல்ல, பந்து வீச்சிலும் தெரிந்தபோது நமது அணி துவண்டது.

இலக்கான அனுஷ்கா

விராட் கோலி ஒரு ரன்னில் அவுட்டாகி வெளியேறியபோது அவரது காதலி, நடிகை அனுஷ்கா ஷர்மா திகைத்து அமர்ந்திருந்தது மறக்காமல் தொலைக்காட்சியில் பதிவு செய்யப்பட்டது. 65 ரன்கள் எடுத்தும் தோனியால் பாவம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்தியா 95 ரன் வித்தியாசத்தில் தோற்றது. செய்திச் சேனல்கள் உடனடியாக விஷயத்தை ஒளிபரப்பியபோது கூடவே ஒரு காட்சி தெரிந்தது. ராஞ்சியில் தோனி வீட்டுக்கு முன் பலத்த போலீஸ் காவல் நின்றிருந்தது. எனக்கு மிக அவமானத்தை ஏற்படுத்திய காட்சி, பெங்களூர் ரசிகர்களின் வெறி பிடித்த நடத்தை. தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்தார்கள். இந்திய வீரர்களின் புகைப்படங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

விராட் கோலியையும் அனுஷ்காவையும் இணைத்து அசிங்கமாகத் திட்டினார்கள். நவ்தீப் சிங் இயக்கத்தில் அனுஷ்கா கதாநயகியாக நடிக்கும் ‘NH10’ என்ற ஒரு அருமையான படம் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. சாதி விட்டுச் சாதி திருமணம் செய்துகொண்ட சகோதரியை அவளது சகோதரர்கள் கவுரவக் கொலை செய்த ஒரு சம்பவத்தை ஒட்டிப் பின்னப்படும் கதை. அந்தக் கொலையை எதிர்க்கும் போராளியாக அனுஷ்கா நடிக்கிறார். திரை அரங்கிலும் அவரையும் கோலியையும் இணைத்து அரங்கத்தில் இருந்த சில இளைஞர்கள் கேவலமாகப் பேசியதாக ஒரு தோழி அதிர்ச்சியுடன் விவரித்தார்.

உலகக் கோப்பை அரை இறுதிப்போட்டியில் தோற்றதற் காகச் சில பெங்களூர்வாசிகள் தோனியையும் விராட் கோலியையும் நாற்சந்தியில் ‘கொலை’ செய்தார்கள். அது அவர்கள் செய்யும் ‘கவுரவக் கொலை’. அவற்றைப் படமாக்க கேமராவைத் தூக்கிக்கொண்டு அலையும் ஊடக இளைஞர்களுக்கு மெல்ல அவல் கிடைத்ததாக நினைப்பிருந்தால், அதற்கு ஒத்துழைப்பு அளிப்பதுபோல அந்த வெறி பிடித்தவர்கள் அதிக உற்சாகத்துடன் டிவி பெட்டிகளை உடைத்தார்கள். புகைப்படங்களை எரித்தார்கள். அவர்கள் முகத்தில் தெரிந்த கொலை வெறி பீதியை அளித்தது. காட்சி ஊடகமும் 24/7 சேனல்களும் தொடங்கிய காலத்திலிருந்து இத்தகைய வன்முறைக் காட்சிகள் அந்த கேமராக்களுக்காகவே அரங்கேற்றப்படுகின்றன. அதிகக் கூச்சல், அதிக வெறுப்புப் பேச்சு, ட்விட்டரில் சகட்டு மேனிக்கு வசைகள். எந்த விதப் பொறுப்பும் இல்லாமல் முகமற்று விஷ வார்த்தைகளைக் கக்கலாம். பிடிபடுவோம் என்கிற ஆபத்து இல்லை. ‘பேசுவோம். இந்தத் தோல்வி தேசத்துக்கு அவமானம்’. ஆட்டத்தைப் பார்க்க அனுஷ்கா ஷர்மா சிட்னிக்குச் சென்றதால்தான் இந்தியா தோற்றது என்ற வசைகள். அனுஷ்கா ஒரு நடிகை என்பதால் எத்தனை கீழ்த்தரமாக வேணுமானாலும் பேசலாம் என்ற நினைப்பு இந்த ‘தேசியவாதிகளுக்கு’.

எது அவமானம்?

இதில் இருக்கும் முரண் ஆச்சரியம் அளிக்கிறது. ஆட்டத்தில் இருக்கும் தீவிர அபிமானம், ஏமாற்றம் ஏற்பட்டால் தீவிர வெறுப்புக்கு இட்டுச் செல்லுமா? விளையாட்டு உணர்வு (Sportsman spirit) என்பதற்கு இங்கு அர்த்தமே இல்லையா? ஒருவர் வெல்ல, மற்றவர் தோற்பது என்பது ஆட்டத்தின் நியதி அல்லவா? அது சரி, அவமானப்பட வேண்டிய விஷயத்துக்கெல்லாம் இவர்கள் என்றாவது ரோஷப்பட்டிருக்கிறார்களா? கடன் தொல்லை தாங்காமல் ஒரு இந்திய விவசாயி தற்கொலை செய்துகொண்டால், அது நமக்கு அவமானமில்லையா? அதைவிட, அரை இறுதியில் உலகக் கோப்பை இழப்பு அவமானமா? பாகிஸ்தானில் கிரிக்கெட் மிக உணர்வுபூர்வமான விஷயம். இந்தியாவிடம் தோற்கும்போது தேசமே தலைகுனிந்து போகிறது, யுத்தத்தில் தோற்றதுபோல. இந்தியாவில் கிரிக்கெட் மிக உணர்வுபூர்வமான விஷயமானதற்கு ஊடக விளம்பரம் ஒரு காரணம் என்றாலும் முதிர்ச்சியற்ற ‘தேசிய’ப் பெருமையும் ‘கவுரவ’ எண்ணங்களும் சகிப்புத்தனமற்ற அடாவடித்தனங்களுக்குத் தூண்டுதலாகிவிட்டன. எல்லா அடாவடித்தனங்களுக்கும் ஊடக விளம்பரம் கிடைத்து விடுகிறது.

மேம்போக்காகப் பார்க்க்கும்போது எல்லாப் பிரச்சினை களுமே காலவரைக்கு உட்பட்டவைபோலத் தோன்றலாம். ஆனால், இவற்றின் தோற்றுவாயில் மனித விரோதப் போக்கும் சகிப்புதன்மையற்ற வெறியும் உள்ளன. நிச்சயமாக இதை ‘விளையாட்டாக’ எடுத்துக்கொள்ள முடியாது.

- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x