Published : 17 Mar 2015 09:19 AM
Last Updated : 17 Mar 2015 09:19 AM

பன்றிக் காய்ச்சல்: உண்மைகள் மறைக்கப்படுவது ஏன்?

வழக்கமாகக் குளிர் காலத்தில் வீரியம் கொள்ளும் பன்றிக் காய்ச்சல் பிப்ரவரிக்கு பிறகான கோடைக் காலத்தில் படிப்படியாக வீரியம் இழந்துவிடும். மருத்துவ உலகம் இப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தது. அந்த நம்பிக்கையை முதல் முறையாகத் தகர்த்திருக்கிறது H1N1 வைரஸ். இது தனது தாக்குதலை இந்தியாவில் ஆரம்பித்த 2009 மே முதல் 2011 ஜனவரி வரை அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 29,000 பேர். இறந்தவர்கள் 2,700 பேர். ஆனால், இம்முறை 2015 ஜனவரி முதல் மார்ச் 10-ம் தேதி வரை மட்டுமே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,234. பலியானோரின் எண்ணிக்கை 1,537.

2,700 பேரைக் கொல்வதற்கு 21 மாதங்கள் எடுத்துக் கொண்ட வைரஸ், இந்த முறை 1,537 பேரைக் கொல் வதற்கு எடுத்துக்கொண்ட கால அவகாசம் வெறும் 69 நாட்கள் மட்டுமே. அப்படி எனில் வைரஸின் வீரியம் அதிகரித்திருக்கிறதா, இல்லையா? ‘இல்லை’ என்கிறது மத்திய அரசு. ‘அதிகரித்திருக்கிறது’ என்கிறார்கள் மருத்துவத் துறை வல்லுநர்கள். இடையே கிடந்து சாகிறார்கள் அப்பாவி மக்கள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது?

பதறும் உயிரி தொழில்நுட்ப விஞ்ஞானிகள்!

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினரான ரஃபி அகமது, “பன்றிக் காய்ச்சலின் வைரஸைப் பகுப்பாய்வு செய்து அதன் மூலக்கூறில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிவது மிகவும் அவசரம். இறப்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துக்கொண்டே போகிறது. சுகாதாரத் துறை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தவறான புள்ளிவிவரங்களைத் தர வேண்டாம். துல்லியமான புள்ளிவிவரங்கள் மட்டுமே ஆராய்ச்சிகளை மேம்படுத்த உதவும். இதில் அரசியல் வேண்டாம்.” என்கிறார்.

இந்தியாவில் நடந்த 21 முழு பகுப்பாய்வுகள்!

‘செல் ஹோஸ்ட் அண்டு மைக்ரோப்’ (Cell Host and Microbe) மருத்துவ இதழில் மருத்துவர்கள் கண்ணன் தாரகராமனும் ராம் சசிசேகரனும் இந்தியாவில் நடந்த பன்றிக் காய்ச்சல் வைரஸ் பகுப்பாய்வு விவரங்களைக் கடந்த மார்ச் 11-ம் தேதி வெளியிட்டார்கள். அதில் “இந்தியாவில் கடந்த 2013-ம் ஆண்டு வரை 21 முறை (2009 - 4, 2010 - 3, 2011 - 4, 2012 - 6, 2013 - 4) பன்றிக் காய்ச்சல் வைரஸ் முழுமையாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்கிறது. 2014-ல் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பகுதி அளவில் இரு பகுப்பாய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. இதில் 15 அமினோ அமிலங்களில் மாற்றங்கள் இருப்பது தெரிந்தது. இந்த முடிவுகள் ‘எல்லாக் காய்ச்சல்கள் பற்றிய தரவுகளையும் பகிர்ந்துகொள்வதற்கான சர்வதேச மையத்’துக்கு (ஜி.ஐ.எஸ்.ஏ.ஐ.டி.-GISAID) அனுப்பப் பட்டுள்ளது. அதன் பின்பு 2015-ம் ஆண்டுக்கான பகுப் பாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தற்போது நடைமுறையிலுள்ள டாமிஃப்ளு மாத்திரை மற்றும் தடுப்பூசிகள் பலன் இல்லாமல் போக வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், தற்போது நாங்கள் செய்த பகுப்பாய்வுகளில் H1N1 வைரஸின் K166Q, T200A, D225N ஆகிய மூன்று அமினோ அமிலங்களின் மூலக்கூறுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது” என்கிறது அந்தக் கட்டுரை.

அதிகாரபூர்வமாக ஏன் அறிவிக்கவில்லை?

ராம் சசிசேகரனின் ஆய்வுக் கட்டுரை குறித்து ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் கடந்த 12-ம் தேதி செய்தி வெளியான மறுநாளே அரசுத் தரப்பில் அதிர்வுகள் தொடங்கின. மறுநாள் தேசிய வைரஸ் இயல் நிறுவனம் (என்.ஐ.வி.) சொன்னதாக ஒரு தகவல் பத்திரிகைகளில் வெளியானது. “நாங்கள் 2015-ல் ஆறு பன்றிக் காய்ச்சல் வைரஸ்களில் முழு மூலக்கூறுகளைப் பகுப்பாய்வு செய்துள்ளோம். அதில் அவர்கள் (ராம் சசிசேகரன்) குறிப்பிடுவதுபோல மாற்றங்கள் நிகழவில்லை” என்றது அந்தத் தகவல். ஆனால், இந்தத் தகவலை தேசிய வைரஸ் இயல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதுதான் அரசாங் கத்தின் மீது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

டாமிஃப்ளு: உண்மை நிலவரம் என்ன?

உலகின் மிகப் பழமையான மருத்துவ இதழான பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் (பி.எம்.ஜே.) மருத்துவர் டாம் ஜெப்ஃரஷன் உள்ளிட்ட உலகின் முக்கியமான மருத்துவ வல்லுநர்கள் கடந்த 5 ஆண்டுகளாகவே டாமிஃப்ளு பற்றிய கேள்விகளை எழுப்பிவருகிறார்கள். கடந்த ஆண்டு அந்த இதழும் காக்ரேன் கூட்டமைப்பும்(மருந்துகளின் உண்மைத் தன்மையை உறுதிசெய்யும் 130 நாடுகளின் வல்லுநர்கள் அடங்கிய உலகளாவிய அமைப்பு) வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையின் சாரம்சம்:

1.டாமிஃப்ளு அளிப்பதால் பன்றிக் காய்ச்சலின் வீரியம் ஒன்று முதல் ஒன்றரை நாள் வரை மட்டுமே குறைகிறது. இதன் மூலம் நோயாளி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது.

2.டாமிஃப்ளு சாப்பிடுவர்களுக்கு வாந்தி, குமட்டல், சிறுநீரகக் கோளாறு, மனநோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

3.பன்றிக் காய்ச்சலுக்குள்ளான 24 ஆயிரம் பேரிடம் டாமிஃப்ளு மாத்திரை அளித்து பரிசோதனை மேற் கொண்டோம். இதில் நோய்ப் பரவலை டாமிஃப்ளு தடுக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

இப்போது நம் முன் எழும் கேள்விகள் இவை...

1. H1N1-ல் இரண்டுக்கும் மேற்பட்ட வைரஸ்கள் இருந்தும் 2014-ல் இரண்டு வைரஸில் மட்டும் பகுதி பகுப்பாய்வு செய்யப்பட்டது ஏன்?

2. இதற்கு முந்தைய ஆண்டுகளில் 21 வைரஸ்களில் பகுப்பாய்வு செய்திருந்தும் இந்த முறை ஏன் பகுப்பாய்வு மேற்கொள்ளவில்லை?

3. 2015-ம் ஆண்டில் 6 வைரஸை பகுப்பாய்வு செய்த தாகவும், அதில் மூலக்கூறு மாற்றம் நிகழவில்லை என்றும் சொல்லும் தேசிய வைரஸ் இயல் நிறுவனம் இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்காதது ஏன்? 2014-ல் இரு பகுதி பகுப்பாய்வு முடிவுகளை ஜி.ஐ.எஸ்.ஏ.ஐ.டி-உடன் பகிர்ந்துகொண்ட அரசு இந்த முறை 6 பகுப்பாய்வு முடிவுகளைப் பகிர்ந்துகொள்ளாதது ஏன்?

4. ‘செல் ஹோஸ்ட் அண்ட் மைக்ரோப்’ மருத்துவ இதழில் மருத்துவர்கள் கண்ணன் தாரகராமனும் ராம் சசிசேகரனும் வெளியிட்ட கருத்துகளை அரசுத் தரப்பு மறுக்கிறது. அப்படியென்றால், மாற்றங்கள் ஏற்பட்டதாகச் சரியாக 3 அமினோ அமிலங்களின் பெயர்களை அந்த மருத்துவர்களால் எப்படிக் குறிப்பிட முடியும்?

5. பன்றிக் காய்ச்சல் வைரஸ் மீதான பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று வற்புறுத்திவருகிறார் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் ரஃபி அகமது. ஆனால், அரசோ 2015-ம் ஆண்டு அரசு தரப்பில் 6 பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்களை வெளியிடுகிறது. அப்படியெனில் பகுப்பாய்வுகள் அவருக்குத் தெரியாமல் ரகசியமாக நடந்ததா? இல்லை அவர் பொய் சொல்கிறாரா?

6. சமீபத்தில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலோட் பன்றிக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டார். அதையொட்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அங்கு வைரஸ் பகுப்பாய்வு செய்து, அதன் மூலக்கூறில் இரு இடங்களில் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக அறிக்கை அளித்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பொய் சொல்கிறதா?

7. வைரஸின் வீரியம் அதிகமாக இருக்கிறது என்பதை இந்திய அரசு ஒப்புக்கொள்கிறது. மூலக்கூறில் மாற்றம் ஏற்படாமல் வீரியம் அதிகரிக்காது என்கிற அடிப்படை உண்மைகூட அரசுக்கு தெரியாதா?

8. D225N என்கிற குறிப்பிட்ட மூலக்கூறு மாற்றத்தினால் வீரியம் அதிகரித்துள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் சொல்கிறார்கள். குறிப்பிட்ட அந்த மூலக்கூறை அரசுத் தரப்பில் பகுப்பாய்வு செய்து உண்மையான முடிவுகளை வெளியிட என்ன தயக்கம்?

9. கோடைக் காலம் வந்தால் நோயின் தீவிரம் படிப்படி யாகக் குறைந்துவிடும் என்று அரசு சொன்னது. மாறாக நோயின் தீவிரம் அதிகரிப்பது ஏன்?

10. இந்திய அரசு பன்னாட்டுத் தனியார் மருந்து நிறுவனங் களின் சுய லாபத்துக்காகவும், கொள்முதல் செய்து குவித்து விட்டோம் என்பதற்காகவும், புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை என்பதற்காகவும் பலன் தராத, பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்ற, நோய்க் கிருமியின் வீரியம் அதிகரித்துள்ள நிலையில் பழைய கிருமியை மட்டுமே கட்டுப்படுத்துவதாகக் கருதப்படும் மருந்துகளை மக்கள் மீது திணிக்கிறதா?

பன்றிக் காய்ச்சல் விஸ்வரூபமெடுத்துவரும் இந்த நேரத்தில் ஒரு கொள்ளை நோயைப் போல அதைக் கருதி போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், இதைப் பற்றி சிறு பதற்றம்கூட அரசிடம் தென்படாததைக் கண்டால் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசிடம் சற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை. இதுதான் இந்த நோயை மேலும் ஆபத்தானதாக ஆக்குகிறது. இதை எப்போது உணரப்போகிறது இந்திய அரசு?

தற்கொலை எண்ணங்களைத் தூண்டுகிறதா டாமிஃப்ளூ?- மருத்துவர் புகழேந்தி

டாமிஃப்ளு மாத்திரை தற்கொலை எண்ணங்களைத் தூண்டியதாகச் சொல்லி ஜப்பான் அரசு, குழந்தைகளுக்கு இந்த மருந்துகளை அளிக்கத் தடை விதித்துள்ளது. மேலும், இதன் பக்க விளைவுகள் குறித்த சரியான ஆய்வு முடிவுகளை அளிக்காததால் இந்த மருந்து நிறுவனத்தை ஐரோப்பிய மருந்து முகமை விசாரித்துவருகிறது. டாமிஃப்ளுவின் தயாரிப்பு நிறுவனமான ‘ரோச்சி’ டாமிஃப்ளு ஆய்வுகள் முடிந்து, 10 ஆண்டுகளுக்கு பின்னரும் மருத்துவர் டாம் ஜெஃப்ர்ஷன் உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி விஞ்ஞானிகள் வற்புறுத்திக் கேட்டும் ஆய்வு முடிவுகளைக் கொடுக்கவில்லை. இதிலிருந்தே அதன் ஆய்வுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது தெளிவாகிறது.

ஆனால், உலகில் பல நாடுகள் இந்த மருந்தை ஏராளமாகக் கொள்முதல் செய்திருக்கின்றன. இதன் மூலம் அந்த அரசுகளின் பொதுச் சுகாதாரம் மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளின் மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஒரு மருந்தின் அனுமதி என்பது ஒருதலைபட்சமாகவோ அல்லது தவறான தகவல்களின் அடிப்படையிலோ இருக்கக் கூடாது. இது மக்களின் ஆரோக்கியம் மீதும் பொருளாதாரத்தின் மீதும் மிக, மிக அதிகப்படியான சிக்கலை ஏற்படுத்தும்.

- டி.எல்.சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x