Published : 05 Mar 2015 08:49 AM
Last Updated : 05 Mar 2015 08:49 AM
நீர் எப்படியெல்லாம் அவதாரம் எடுக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் காளமேகப் புலவரின் பாடல் ஒன்று இருக்கிறது.
காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும்போது
நீரென்று பேர் படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததன்பின்
வாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப்பட்டதன்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.
(இந்தப் பாடலுக்கு நிறைய பாடபேதங்கள் இருக்கின்றன)
வானத்தில் இருக்கும்போது (கார்) மேகம் என்றும் தரைக்கு வந்த பின்பு நீர் என்றும் ஆய்ச்சியர் கையில் பட்ட பின்பு மோர் என்றும் பெயர் பெற்றது என்பது இதன் பொருள். மோர் அவ்வளவு தண்ணீராக இருக்கிறது என்பதைக் கிண்டலடித்துக் காளமேகம் பாடிய பாடல் அது.
நீர் எப்போதும் நீராகத்தான் இருக்கிறது. அதன் அளவு, இடம், அது சேரும் பொருட்கள் போன்ற அடிப்படைகளில் அதற்கு வெவ்வேறு பெயர்கள் கிடைக்கின்றன. நீரின் அவதாரங்களில் நீர்நிலைகள் முக்கியமானவை. ஆகவேதான், மீனவர்கள் கடலைக் கொண்டாடுவதுபோல் சமவெளிப் பகுதியினர் ஆறு, குளங்களைக் கொண்டாடுகிறார்கள்.
நடந்தாய் வாழி காவேரி!
"உழவ ரோதை மதகோதை
உடைநீ ரோதை தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி"
என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோ பாடியது இன்று இரண்டு கரைகளுக்கு இடையே கிடக்கும் மணல்பரப்பையல்ல. அதில் தளுக்கு நடை போட்டு வந்த நீரைத்தான். அப்படியென்றால் தொட்டி நீரும் காவேரியா என்று கேட்கலாம். காவேரி என்பது நீரும்தான் இடமும்தான், அதன் மனிதர்களும்தான், அதன் பண்பாடும்தான். ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை இவை.
தஞ்சை வட்டார மக்கள் காவேரியில் ஓடும் நீரை மட்டுமல்ல, மற்ற நீரையும் ‘காவேரி’ என்று கருதுவதும் உண்டு. ‘தண்ணீரும் காவிரியே, தார்வேந்தன் சோழனே’ என்று ஆரம்பிக்கும் தனிப்பாடல் கவனிக்கத் தக்கது. அந்த அளவுக்கு நீரோடு ஒன்றிய பண்பாடு தஞ்சைப் பண்பாடு.
மேட்டூரில் தண்ணீர் திறந்த பிறகு தஞ்சை வட்டாரத்தில் எங்கு பார்த்தாலும் தண்ணீர்தான். ஆறு, குளம், குட்டைகளில் மட்டுமல்ல வீசும் காற்றிலும் தண்ணீர் இருக்கும். மதிய வெயில், பார்ப்பதற்குத்தான் பளிச்சென்று இருக்கும். நீரைத் தழுவிக்கொண்டு வரும் காற்று அந்த வெயிலின் கோபத்தைத் தணித்துவிடும். ஆகவேதான், கீழத்தஞ்சை வட்டாரத்தில் அந்தப் பருவத்தை ‘தண்ணீர்க் காலம்’ என்று அழைப்பார்கள்.
அதெல்லாம் அந்தக் காலம் என்று தஞ்சை வாசகர்கள் பெருமூச்செறியப்போவது இப்போதே கேட்கிறது!
வட்டாரச் சொல் அறிவோம்:
கடந்த பத்தியில் ‘குதாப்பு’ (இடையூறு) என்ற தஞ்சை வட்டாரத்தில் வழங்கும் சொல்லொன்றைக் கொடுத்து அது ‘எந்த மொழியிலிருந்து வந்த சொல்?’ என்று கேட்டிருந்தோம். அந்தச் சொல் அரபியிலிருந்து வந்திருக்கக் கூடும் என்று வாசகர் முகம்மது ஆசிஃப் கருத்து தெரிவித் திருக்கிறார். தஞ்சை வட்டாரத்தில் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவில் இருப்பதால் இதற்கு சாத்தியம் இருக்கிறது. அரபி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமையுடையோர் இதை உறுதிப்படுத்துவது அவசியம்.
இந்த வாரத்துக்கான வட்டாரச் சொல்: மொக்கு மாவு. வட ஆர்க்காடு மாவட்டத்தில் வழங்கப்படும் சொல் இது என்று நண்பர் தெரிவிக்கிறார். ‘கோலமாவு’க்குத்தான் அந்தப் பெயர்! ‘மொக்கு’ என்ற சொல்லுக்கு ‘கோலம்’ என்றொரு பொருளும் இருக்கிறது. வாசகர்கள் தங்கள் வட்டாரத்துக்கே உரித்தான சொற்களை எங்களுக்கு அனுப்பிவைக்கலாமே!
சொல்தேடல்
இதுவரை சொல்தேடல் பகுதிக்கு அனுப்பப்பட்ட பரிந்துரைகளில் ‘இன்பாக்ஸ்’ என்ற சொல்லுக்கு அனுப்பப்பட்ட பரிந்துரைகள்தான் அதிகம்.
வாசகர்களின் பரிந்துரைகளில் சில:
செ.வே. திருமலை:
வருமடல்
கோ. மன்றவாணன்:
வரவஞ்சல், வரவகம், அஞ்சல் வரவகம், உள்ளஞ்சல், உள்பெட்டி, உள்ளஞ்சல் பெட்டி, வரவஞ்சல் பெட்டி
கே. உதயகுமார்:
உள்வாங்கிப் பெட்டி
ராபர்ட்:
வந்தஞ்சல்
ஆர். ராஜகோபாலன்:
கிடைத்தன
எஸ். கோபாலகிருஷ்ணன்:
வருதகவல் பெட்டகம்
கண்ணன்:
வருசேதிப் பேழை
ஆர். விஜயராகவன்:
அகப்பெட்டி
கணேஷ் குமார்:
செய்திப்பெட்டி, மடல்பெட்டி, உள்தகவல் பெட்டி, உள்பெட்டகம்
எம். ராஜேந்திரன்:
மின்னஞ்சலகம், மின்னஞ்சல் பெட்டி
சரண்யா:
அகக்கடித சேமிப்பறை
தேவ்குமார் ஆறுமுகம்:
மின்னஞ்சல் பெட்டகம்
ராஜா:
தகவல் பேழை, தகவல் பெட்டி, தகவல் பெட்டகம்
ஒலியரசு:
வரவுப் பெட்டி, மின்னஞ்சல் பெட்டி
செந்தில். பாண்டியராஜன்:
கடித வருகைப் பெட்டி, வரவுப் பெட்டகம்
டி.கே. ரகுநாதன்:
மின்னஞ்சல் பெட்டி
சந்திரா மனோகரன்:
மின்னஞ்சலறை, மின்னஞ்சல் கூடம்
அரு. சிங்காரவேலு:
தகவல் ஏற்பி, தகவல் காப்புப் பெட்டி
‘வானவில்’ மூர்த்தி:
சேகரப்பெட்டி, செய்திசேகரப் பெட்டகம்
இதில் பல சொற்கள் ‘இன்பாக்ஸ்’ என்ற சொல்லுக்குப் பொருத்தமாக இருக்கின்றன. எளிமை, துல்லியம் ஆகிய அடிப்படை களில் வருமடல், வருமடலகம், வரவகம் ஆகிய சொற்களில் ஒன்றை நாம் இறுதிசெய்து கொள்ளலாம்.
‘இன்பாக்ஸ்’ என்று சொன்னால் ‘அவுட்பாக்ஸ்’ என்ற சொல்லை விட்டுவிட முடியுமா? ‘அவுட் பாக்ஸ்’ என்ற சொல்லுக்கு வாசகர் திருமலை பரிந்துரைத்திருக்கும் ‘செல்மடல்’ என்ற சொல்லை இறுதிசெய்துகொள்ளலாம்.
மின்னஞ்சலில் இருக்கும் ‘இன்பாக்ஸ்’ போலவே ‘ஃபேஸ்புக்’கிலும் ஒரு ‘இன்பாக்ஸ்’ இருக்கிறதல்லவா? அதற்கு என்ன சொல் பொருத்தமாக இருக்கும்? வாசகர் ஈ.ர.கி. குலசேகர் அதற்கென்று ஒரு சொல்லைப் பரிந்துரைத் திருக்கிறார்: தனிச்செய்தி. இந்தச் சொல்லை சற்றே விரிவுபடுத்தி ‘தனிச்செய்தியகம்’ என்ற சொல்லை இறுதிசெய்துகொள்ளலாம்.
அடுத்த வார ‘சொல்தேடல்’ பகுதிக்கு ‘பென் டிரைவ்’ என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்து அதற்கான தமிழ்ச் சொல்லையும் பரிந்துரைத்து மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார் டி.கே. ரகுநாதன். அந்தச் சொல் அடுத்த பத்தியில் பகிர்ந்துகொள்ளப்படும். வாசகர்களே நீங்களும் உங்கள் பரிந்துரைகளை அனுப்பிவையுங்கள். எது பொருத்தமாக இருக்கிற தென்று பார்க்கலாம்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT