Published : 18 Feb 2015 09:33 AM
Last Updated : 18 Feb 2015 09:33 AM
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு, பிப்ரவரி 19 மற்றும் 20-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளது. இதனால் அவர்கள் புறக்கணிப்பு செய்யும் இரு நாட்கள் தவிர, மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட நான்கு நாட்கள் நீதி நிர்வாகம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நாட்களில் கைதுசெய்யப்படும் அப்பாவிகள் பிணையில் வெளிவர முடியாது. அதேபோல் வியாழன் மற்றும் வெள்ளியில் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ள வழக்குகள் வேறு தேதிக்குத் தள்ளிவைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எந்த வழக்காடிகளிடமிருந்து வக்காலத்தும் கட்டணமும் பெற்று வழக்கு நடத்திவருகிறார்களோ, அவ்வழக்காடி களுக்குப் பொருள் மற்றும் கால விரயங்கள் இதனால் ஏற்படும் என்பதைப் பற்றி வழக்கறிஞர்களுக்குக் கவலை யில்லை. நான்கு நாட்கள் பிணையில் வர முடியாமல் தவிக்கப்போகும் அப்பாவிக் கைதிகளின் மனித உரிமைகள் பற்றியும் அவர்களுக்கு அக்கறையில்லை. இந்தச் செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பது அவலமே.
தீபாவளி விடுமுறைகளை அதிகமாக உயர் நீதிமன்றம் அறிவிப்பதைப் பற்றி சமீபத்தில் போடப்பட்ட பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி, அந்த வழக்காடிக்கு ரூ.20,000 விதித்ததோடு, நீதிமன்ற வேலை நாட்கள் அறிவிப்பில் யாரும் தலையிட முடியாது என்று குறிப்பிட்டார். ஆனால், அவருக்கு ஒரு விஷயம் தெரிய நியாய மில்லை. கடந்த 2010 முதல் பிப்ரவரி 19-ம் தேதி நீதிமன்றங்களுக்கு வேலை நாள் என்றிருப்பினும் கடந்த ஐந்தாண்டுகளாக அந்தத் தேதியில் வழக்கறிஞர்கள் கண்டன நாள் என்று அறிவித்து, நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். (2009-ம் ஆண்டு நடைபெற்ற வழக்கறிஞர்கள்-போலீஸ்காரர்கள் மோதலின் நினைவாக) அதனால், நீதிமன்றத்தின் வேலை நாட்களைத் தற்போது நிர்ணயிப்பது வழக்கறிஞர்கள்தானேயொழிய நீதிமன்றமல்ல. நீதிமன்றங்கள் ஓராண்டில் 210 நாட்கள் வேலை செய்ய வேண்டுமென்று இருப்பினும், நீதிமன்றப் புறக்கணிப்புகள் சராசரியாக 30 முதல் 40 நாட்கள் வரை ஏதேனும் ஒரு சாக்கிட்டு நடத்தப்பட்டு, வழக்காடிகள் தண்டிக்கப்பட்டுவருவதே உண்மை.
ஏன் இந்தப் போராட்டம்?
பிப்ரவரி 20-ம் தேதியன்று வழக்கறிஞர் கூட்டமைப்பு புறக்கணிப்புக்கு விடுத்த காரணம், மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் மூன்றில் ஒரு பங்கு பதவிகளை ஒதுக்க வேண்டுமென்பதுதான். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சில நாட்களுக்கு முன் வேலைநிறுத்தம் செய்ததோடு, தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறது. பிப்ரவரி 11-ல் ஏற்கெனவே இருந்த நீதிமன்றத் தடைகளை மீறி உயர் நீதிமன்ற வளாகத்தில் கோஷங்கள் எழுப்பிக்கொண்டு ஊர்வலமாகச் சென்றதோடு, தலைமை நீதிபதி வீற்றிருக்கும் நீதிமன்றத்தில் நுழைந்து, அவரை அவரது சொந்த மாநிலத்துக்குத் திரும்பிப் போகும்படி கோஷங்கள் எழுப்பியது அருவருக்கத் தக்க நிகழ்வு.
“தற்போது உயர் நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகள் பதவி களுக்கான பரிந்துரை அனைத்தையும் ஒரே பட்டியலாக அனுப்புவதோடு, தமிழகத்தில் இதுவரை பிரதிநிதித்துவப்படாத சாதியினருக்கு உரிய பங்கீட்டை வழங்க வேண்டும். மேலும், பரிசீலிக்கப்படும் பெயர்களைத் தெரிவித்து சங்கத்துடன் அதுபற்றி கலந்தாலோசிக்க வேண்டும். காலியாக உள்ள பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு பெண் வழக்கறிஞர்களுக்கு ஒதுக்க வேண்டும். உயர் நீதிமன்றத்திலுள்ள மொத்த நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கினரை மதுரை வழக்கறிஞர் களை மட்டும் வைத்து நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களைப் பரிசீலிக்கக் கூடாது.” இந்தக் கோரிக்கைகளே பிரதானமாகக் காதில் ஒலிக்கின்றன.
எப்படி இருக்கிறது நியமன நடைமுறை?
அரசமைப்புச் சட்டத்தில் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்கள் பற்றி கூறப்பட்டுள்ள பிரிவுகளைத் திருத்தும் வண்ணம் புதிய சட்டத்திருத்தத்தையும், நீதிபதிகள் நியமனத்துக்கான தேசிய ஆணையச் சட்டத்தையும் நாடாளுமன்றம் 2014-ல் இயற்றியுள்ளது. அதற்கான உள் கட்டமைப்பு வசதிகள் செய்வதற்காக இன்னும் அச்சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்படவில்லை. அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் தற்போதைய நீதிபதிகள் நியமன நடைமுறை முடிவுக்கு வந்துவிடும்.
நீதிபதிகள் நியமனத்துக்கான தேசிய ஆணையச் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள குழுவில், இரண்டு முக்கியமான நபர்களுக்கு அதில் இடம் கிடைக்கும். அதில் ஒருவரை சட்ட நிபுணத்துவம் பெற்றவராக அறிவிப்பதற்கு மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால்தான் கொலிஜிய நடைமுறை மாற்றப்பட்டு அதில் நீதிபதிகள் இல்லாத சிலருக்கும் நியமனத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கிடைக்கப்பெறும். ஆனால், அச்சட்டம் அமலுக்கு வருவதற்கு மேலும் சில காலம் தேவைப்படலாம் என்பதாலும், ஏற்கெனவே உயர் நீதிமன்றப் பதவிகளுக்கு நாடு முழுவதும் கிட்டத்தட்ட 250 காலியிடங்கள் இருப்பதாலும், ஏற்கெனவே உள்ள நடைமுறையையே பின்பற்ற அனுமதியளித்துள்ளனர்.
இப்போதுள்ள நீதிபதிகள் நியமன நடைமுறை 1993-ல் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் ‘அட்வகேட்ஸ்-ஆன்-ரெகார்டு’ என்ற வழக்கின் தீர்ப்பு அதற்குப் பின்புலமாக இருந்தது. உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அத்தீர்ப்பின் மூலம் நீதிபதிகள் நியமனத்தை நீதித் துறையே தன் கையிலெடுத்துக்கொண்டது. நீதித் துறையின் சுதந்திரத் தன்மையை பாதுகாக்கவே அத்தீர்ப்பு என்ற நியாயமும் கூறப்பட்டது.
1993-ம் வருட நியமன நடைமுறைப்படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி நியமனத்துக்குத் தகுந்த வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து, மூத்த நீதிபதிகள் இருவரின் கருத்துகளைப் பதிவுசெய்து பட்டியலை மாநில ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அப்பட்டியல் பற்றி முதல்வரின் கருத்துகளை அறிந்துகொண்டு, மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்ப வேண்டும். மத்திய அரசின் சட்டத் துறை அப்பட்டியலை உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பும்போது வேண்டுமெனில் உளவுத் துறையின் குறிப்புகளையும் உச்ச நீதிமன்றத்துடன் பகிர்ந்துகொள்ளலாம். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, பட்டியல் வரும் மாநிலத்திலிருந்து உச்ச நீதிமன்றத்தில் பதவி வகிக்கும் நீதிபதியின் கருத்தையும் தெரிந்துகொண்டு, அவருக்குக் கீழேயுள்ள இரு மூத்த நீதிபதிகளின் கருத்தை எழுத்து மூலமாக, பதிவுசெய்து, நியமனப் பட்டியலை மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அமைச்சரவையின் உயர் நியமனக்குழு ஒப்புதலுக்குப் பின் அப்பட்டியல் குடியரசுத் தலைவர் நியமன ஆணை வழங்க அனுப்பப்படும்.
எவ்வித ஏற்பாடுமில்லை
சிபாரிசு செய்யப்பட்ட பெயர் ஏதேனுமொன்றில் ஆட்சேபணையிருந்தால், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் தனது கருத்தைத் தெரிவிக்கலாம். அதற்குப் பின்னும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் மறுபடியும் பரிந்துரைத்தால், அந்தப் பெயரைக் குடியரசுத் தலைவருக்குக் கட்டாயமாக மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும். இதன் பின்னரே குடியரசுத் தலைவர் நீதிபதி நியமனத்துக்கான உத்தரவை பிறப்பிப்பார். அப்படியொரு நபர் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுவிட்டால், அவரைப் பதவியிலிருந்து நீக்க நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு வாக்களிப்பு தேவை. இன்றுள்ள நடைமுறையில் வழக்கறிஞர்களின் பிரதிநிதிகளைக் கலந்தாலோசிக்க எவ்வித ஏற்பாடுமில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த 20 ஆண்டுகளில் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தில் அனேகமாக எவ்விதப் பங்கும் அரசுக்கு வழங்காமல் நியமனங்கள் நடைபெற்றதுபற்றி பலத்த விமர்சனங்கள் எழுந்தன. ஓய்வுபெற்ற நீதிபதிகள் பலரும் கட்டுரைகள் மற்றும் சுயசரிதைகள் வாயிலாக கொலிஜியம் நியமன நடைமுறையைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கமும், மெட்ராஸ் பார் அசோசியேஷனும் இப்புதிய நியமன சட்டத் துக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இப்புதிய சட்ட நடைமுறை வராவிட்டால், நீதிபதி நியமனங்கள் பழையபடி கொலிஜியத்தின் பரிந்துரைகள்படிதான் நடக்கும். அதில் வழக்கறிஞர்களுக்கு எவ்விதப் பங்கும் இருக்கப்போவதில்லை. அப்படி இருக்கும்போது நியமனங்களில் வழக்கறிஞர்களின் கருத்துகள் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கும் சட்டத்தில் இடமில்லை. அதேபோல் கொலிஜியத்தில் இடம்பெறும் தலைமை நீதிபதியும், இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருக்கும் நீதிபதிகள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாகிவிடுவதால் அவர்களுக்கு உள்ளுர் வக்கீல்கள் பற்றி போதிய ஞானம் இருக்காது என்று கூறுவது கொலிஜிய நியமன நடைமுறையை மறைமுகமாக எதிர்ப்பதாகும்.
நீதிபதி அகர்வால் பரிந்துரை
கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அகர்வால் பரிந்துரைத்த பெயர்கள் மீது பலத்த சர்ச்சைகள் எழுந்தன. நீதிமன்றப் புறக்கணிப்பு தவிர, நீதிமன்றத்திலேயே அப்பெயர்களுக்கு எதிராக வழக்கு போடப்பட்டதோடு, அவ் வழக்கு விசாரணையின்போது பதவியில் இருந்த ஒரு நீதிபதியே நேரில் ஆஜராகி அப்பெயர்களுக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தது நாடுதழுவிய செய்தியானது. அவ்வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதோடு அதை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அவ் வழக்கை 5.3.2014 அன்று தள்ளுபடி செய்தனர். அத்தீர்ப்பில் நீதிபதிகள் வழக்கறிஞர்களின் செயல்பாடுகளைக் கண்டித்தனர். அத்தீர்ப்பின் சாராம்சம் இது:-
“நீதிபதி பதவிகளில் தகுதியான பிரதிநிதித்துவம் வழங்குவது ஒரு வழக்கறிஞரின் தொழில் வெற்றி மட்டு மல்லாமல் அவரது சமூகம் மற்றும் சட்டப் பின்னணி தவிர அவருடைய அறிவாற்றல், குணம், நேர்மை, பொறுமை, உணர்ச்சி இவற்றையெல்லாம் பரிசீலிக்க வேண்டும். பொதுவாக, அனைத்துத் தரப்பினருக்கும் பங்களிக்க வேண்டு மென்ற கோரிக்கையைக் கணக்கிலெடுக்கும்போது பங்களிப்பு தரவேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக திறமையற்ற நபர்களை நியமிக்க முடியாது.
நீதிபதி நியமனங்களில் பல தரப்பினருக்கும் பங்கு உண்டென்றாலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சட்டப் பயிற்சியுடனும், தனிப்பட்ட குணாதிசயம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதோடு, தனிப்பட்டவர்களின் விருப்பங் களால் செல்வாக்கு பெறக் கூடாது. இதனால்தான் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளைத் தவிர்க்கும்படி கூட்டு முடிவுக்கான அமைப்பு உருவாக்கப்பட்டது.
இப்படிப்பட்ட நியமனப் பிரச்சினைகளில் கருத்து வேறு பாடு ஏற்பட்டால் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் இந்திய தலைமை நீதிபதியையோ, சட்ட அமைச்சரையோ அணுகி முறையிடாமல் முறையற்ற போக்கைக் கடைபிடிப்பது தவறு.”
கடந்த காலத்தில் நியமனப் பரிந்துரைகளை எதிர்த்து வழக்கறிஞர்கள் போட்ட வழக்கில் உச்ச நீதிமன்றமே இப்படித் தீர்ப்பு வழங்கிய பிறகும் வழக்கறிஞர்கள் மறுபடியும் நேரடிப் போராட்டத்தில் இறங்கியுள்ள செயல் அவர்கள் சட்டத்தை மதிக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பி யுள்ளது. மேலும், எல்லா சமூகத்தினருக்கும் இடமளிக்கும் வகையில் உயர் நீதிமன்றங்களில் போதுமான பதவிகள் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்திலும் அப்பதவிகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்படவில்லை. இச்சூழ்நிலையில், நியமன நடைமுறையில் ஒளிவுமறைவற்ற தன்மை கோருவதும், அதில் தங்களது கருத்துகளுக்குப் பங்களிக்குமாறு போராடு வதும் வழக்கறிஞர்களது கோரிக்கைகளில் உள்ள முரண் பாட்டைத்தான் காட்டுகிறது. தற்போதுள்ள கொலிஜிய நடைமுறை மாற்றப்பட்டாலொழிய ஒளிவுமறைவற்ற நீதிபதி நியமன நடைமுறை வரப்போவதில்லை. மாற்றப் பட்டாலும் புதிய நீதிபதிகள் நியமனச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் சங்கங்களையோ, அதன் தலைவர்களையோ கலந்தாலோசிக்கும்படியான சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட வில்லை. இதேரீதியில் போனால், அனைத்து அரசமைப்பு சட்டப் பதவிகளிலும் நியமனம் செய்யப்படுபவரைப் பற்றித் தங்களைக் கலந்தாலோசிக்க வேண்டுமென்று வழக்கறிஞர்கள் கோருவார்களா? இன்றைய வழக்கறிஞர்களின் போராட்டங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது மட்டுமல்லாமல் வழக்காடிகளின் உரிமைகளையும் புறக்கணிக்கிறது!
- கே. சந்துரு,
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு), சமூக-அரசியல் விமர்சகர். தொடர்புக்கு: saraskrish1951@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT