Published : 05 Feb 2015 11:42 AM
Last Updated : 05 Feb 2015 11:42 AM
பஞ்சபூதங்கள் வரிசையில் அடுத்ததாக நீர்.
உலகில் உள்ள உயிரினங்களுக்கு மட்டுமல்ல மொழிகளுக்கும் உயிர் கொடுப்பது நீரே. பெரும்பான்மையான கலாச்சாரங்கள் ஆறுகளையோ கடல்களையோ ஒட்டித் தான் உருவாயின என்பதால், நீரையும் நீரின் வகைகளையும் நீர் தொடர்பான இன்ன பிற அம்சங்களையும் குறிக்கும் சொற்கள் ஒவ்வொரு மொழியிலும் ஏராளமாக இருக்கின்றன.
இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்தது ஒரு நீர் மூலக்கூறு என்று நீருக்கான விளக்கத்தை அறிவியல் கூறுகிறது. நம் புறநானூறு கொடுக்கும் விளக்கமோ அற்புதம்! ‘தீ முரணிய நீர்’ என்கிறது. நீரைக் கொண்டு தீயை விளக்குகிறது புறநானூறு. வெம்மையின் பிறப்பிடமும் குறியீடும் தீ என்றால், குளுமையின் பிறப்பிடமும் குறியீடும் நீர். அதனால்தான் தண்ணீர் (தண்மையான நீர்). காலப்போக்கில், சூடு + தண்மை (குளுமை) ஆகிய இரண்டு சொற்களையும் சேர்த்து ‘சுடுதண்ணீர்’ என்ற வழக்கும் உருவாயிருப்பதுதான் மொழியின் விசித்திரம்.
மொழியில் நீரின் ஆழம் எத்தனை அடிகள் என்பதைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆகவே, ‘அறிவோம் நம் மொழியை’ பகுதியின் வழக்கமான பேசுபொருட்களைவிட அதிக பாகங்களில் ‘நீர்’ பாயவிருக்கிறது. நீர்நிலைகள், நீராதாரங்களின் வகைகள், நீர் இடம்பெறும் பழமொழிகள், மரபுத் தொடர்கள், தண்ணீர் தொடர்பான பிற சொற்கள் என்று விரிவாகப் பார்க்கவிருக்கிறோம். முதலில், நீர்நிலைகள், நீராதாரங்களின் வகைகளின் தேர்ந்தெடுத்த பட்டியலைப் பார்ப்போம். இயற்கையான நீர்நிலைகள், செயற்கையான நீர்நிலைகள் ஆகிய இரண்டு வகைகளும் இங்கே இடம்பெறுகின்றன.
நீர்நிலைகள், நீராதாரங்கள்
அகழி, அணை, அருவி, ஆறு, ஊருணி, ஊற்று/ நீரூற்று, ஏரி, ஓடை/ நீரோடை, கண்மாய், கல்குட்டை, காட்டாறு, கால்வாய்/ வாய்க்கால், கிணறு, குட்டை, குளம், கேணி, சமுத்திரம், சித்தேரி/சிற்றேரி, சிற்றாறு, சிற்றோடை, சுனை, பெருங்கடல், பொய்கை, மாக்கடல், மகாசமுத்திரம்.
வட்டாரச் சொல்லறிவோம்:
இந்த முறை சென்னைத் தமிழ். சென்னைத் தமிழ் என்றாலே, பண்டிதர்களுக்கும் மொழிக் ‘கலைஞர்’களுக்கும் அருவருப்பு ஏற்படுவதை நாம் அறிவோம். சென்னை வட்டார வழக்கின் அழகு அதன் கச்சிதத் தன்மையிலும் பல மொழிகளை உள்வாங்கிய பன்முகத்தன்மையிலும் இருக்கிறது. அதைப் பயன்படுத்துபவர்கள் சமூகத்தின் கீழ் மட்டங்களில் இருப்பதாலும் அதிகம் புழங்கும் பல சொற்கள் வசைச் சொற்களாக இருப்பதாலும் ‘கனவான்’களுக்குச் சென்னைத் தமிழ் மீது ஒவ்வாமை ஏற்படுகிறது. ஆனால், அதைச் சற்றே அணுகி ஆராய்ந்தால் பல அருமைகளை உணர முடியும்.
‘பகுலு’ என்று ஒரு சொல். ‘பகுலு பிகிலு ஊதிக்கும்’ என்று சண்டையின்போது ‘உதார்’ விடுவதற்காகச் சொல்லப்படும் தொடரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஷங்கரின் ‘காதலன்’ படத்தில் ‘பேட்ட ரேப்’ பாடலில் ‘பகுலு பிகிலு செவுலு அவுலு’ என்னும் வரி இந்தச் சொல்லைப் பிரபலமாக்கியது. இதன் பொருள் என்ன?
பகுலு என்பதன் வேர்ச் சொல் ‘பகல்’. இது உருதுச் சொல். பொருள்: அக்குள் அல்லது கக்கம். தஞ்சைப் பகுதியில் இதைக் கமுக்கட்டு என்பார்கள். பிகிலு என்பது சீட்டி (விசில்).
‘பகுலு’ ஏன் ‘பிகிலு’ ஊத வேண்டும்? காதில் ஓங்கி அறைந்தால் ‘ஙொய்’ என்று ஒரு சத்தம் வரும் அல்லவா? அதை விசில் சத்தம் என்று ‘ரசனை’யோடு விளக்குவதுண்டு. அதே தர்க்கம்தான் இங்கும் பயன்படுகிறது.
கக்கத்தில் ஒரு குத்து விட்டால் அதுவும் அடி வாங்கிய காதைப் போலவே சீட்டியடிக்க ஆரம்பித்துவிடும் என்பது இந்தத் தொடர் சுட்டும் பொருள். ‘பகுலு பிகிலு’ ஊதுவதில் பொருளைத் தாண்டி ஓசை நயமும் கூடியிருப்பதைக் கவனிக்கலாம்.
இப்படி சென்னை வட்டார வழக்கின் ஒவ்வொரு சொல்லையும் தொடரையும் எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் ‘மெர்சல்’ (பிரமிப்பு) ஆகும் அளவுக்குப் பல சுவையான சங்கதிகள் தெரியவரும்.
சொல் தேடல்
ஆன்ட்டி ஹிஸ்டமின் என்ற சொல்லுக்கு வாசகர்களின் பரிந்துரைகள்:
கோ. மன்றவாணன்: ஒவ்வாமை எதிர்மம், ஒவ்வாமை முறிமம், ஒவ்வாமை முறி, ஒவ்வாமை எதிர்ப்பி, ஒவ்வாமை எதிர்மருந்து.
டாக்டர் கு. கணேசன்: ஹிஸ்டமின் எதிர்மருந்து. ஹிஸ்டமின் தடுப்பான்.
விஷத்தை முறிக்கும் மருந்தை விஷமுறி என்று அழைப்பதுபோல் ஒவ்வாமைக்கான மருந்தை ஒவ்வாமை முறி என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
அடுத்த வாரத்துக்கான சொல்தேடல்:
அரசியல், கருத்தியல் தளங்களில் சமீப காலமாக அதிகம் புழங்கும் ஒரு சொல் ‘பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ்’ (political correctness). சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்கள், ஏதாவது பாதிப்புக் குள்ளானவர்கள் போன்றோருக்கு எதிரான நிலைப்பாடு எடுக்காமலும், அவர்களைச் சங்கடப்படுத்தும் விதத்தில் கருத்துக் கூறாமல் இருப்பதற்கு ‘பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ்’ என்று சொல்வார்கள். இந்தச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன? சொல்லை அப்படியே மொழிபெயர்க்காமல் அந்தச் சொல் உணர்த்தும் கருத்தாக்கத்துக்கு ஏற்ற ஒரு சொல்லை வாசகர்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.
- (‘வட்டாரச் சொல்லறிவோம்’ பகுதிக்கு உதவியவர் அரவிந்தன்)
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT