Published : 15 Feb 2015 09:53 AM
Last Updated : 15 Feb 2015 09:53 AM
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 40 நகரங்களில் செயல்பட்டுவந்த ஞானவாணி வானொலியை மத்திய அரசு சமீபத்தில் எந்த முன்னறிவிப்பும் இன்றி நிறுத்திவிட்டது. முற்றிலும் கல்விக்காக மட்டுமே செயல்பட்டுவந்த வானொலி இது என்பது குறிப்பிட்டுக் கூற வேண்டிய செய்தி. சமுதாய வானொலிகள்போல் அல்லாமல் தனியார் துறை பண்பலை வானொலிகளுக்கு என்ன சக்தியில் ஒலிபரப்ப அனுமதிக்கப்பட்டதோ அதே சக்தியில் கல்வி ஒலிபரப்புக்காக தொடங்கப்பட்டதுதான் இந்த ஞானவாணி.
முதலில் அலகாபாத், பெங்களூரு, போபால், விசாகப் பட்டினம், லக்னோ மற்றும் கோவையில் தனது ஒலிபரப்பைத் தொடங்கியது ஞானவாணி. அதன் பின் படிப்படியாக நாட்டின் முக்கிய நகரங்களில் ஒலிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் முதலில் கோவை ஜி.ஆர்.டி. கலை அறிவியல் கல்லூரியில் ஒலிக்கத் தொடங்கியது ஞானவாணி. சென்னையில் அகில இந்திய வானொலியின் கலையகத்தையே தொடக்க காலத்தில் ஞானவாணி பயன்படுத்திவந்தாலும், பிற்பாடு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மாற்றிக்கொண்டது.
தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் மொத்தம் நான்கு ஞானவாணி நிலையங்கள் செயல்பட்டுவந்தன. மற்ற நிலையங்களைவிட திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலிருந்து செயல்பட்டுவந்த ஞானவாணிக்கு ஒரு முக்கியச் சிறப்பு உண்டு. அது, நேயர்களின் எண்ணிக்கை. ஒவ்வோர் ஆண்டும் அது நேயர் சந்திப்பை ஏற்பாடு செய்து நேயர்களை ஊக்குவித்தது அந்த ஞானவாணி. இதனால் நேயர் கடிதங்களின் எண்ணிக்கை கூடியதோடு மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே அதிக நேயர்களைக் கொண்ட ஞானவாணி நிலையமாக அது முன்னேறியது.
ஞானவாணி செயல்படுவதற்கான நிதியானது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழத்தின் ஊடாக ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டுவந்தது. ஆனால், கடந்த ஆண்டின் இறுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்தியா முழுவதும் இந்த ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. கடந்த முறை பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தொடங்கப்பட்டதுதான் இந்த வானொலி என்பதை அவர்கள் மறந்துவிட்டார்களோ என்னவோ.
பண்பலைகளின் காலம் இது. இந்தியாவின் முதல் பண்பலை ஒலிபரப்பு சென்னையில்தான் தொடங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? 23 ஜுலை 1977-ல் அது தொடங்கப்பட்டது. அது மட்டுமல்ல; இந்தியாவின் முதல் உள்ளூர் வானொலி சேவையும் முதன்முதலில் தமிழகத்தின் தென்கோடி நகரமான நாகர்கோவிலில்தான் (1984) தொடங்கப்பட்டது. இப்படி வானொலித் துறையில் பல முதன்மைகளைக் கொண்டது தமிழகம். ஆக, உலக வானொலி தினத்தை மற்றவர்களைவிட நாம்தான் சிறப்பாகக் கொண்டாடியிருக்க வேண்டும்.
தூசு தட்டுவோம்!
உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் இலங்கை வானொலி நிறுத்தப்பட்டபோது தமிழகத்தில் அதனை கேட்டுவந்த நேயர்கள் உண்மையிலேயே தவித்துத்தான் போய்விட்டனர். அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி இந்த ஆண்டின் உலக வானொலி தினத்தின்போது கிடைத்தது. ஆம், ஆசிய சேவையில் தமிழ் ஒலிபரப்பு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக நேயர்கள் பெரிய பெரிய ஏரியல் களையும், சக்திவாய்ந்த பூஸ்டர்களையும் பயண்படுத்தி இலங்கை வானொலியைக் கேட்க வேண்டிய அவசியம் இனி இல்லை. சாதாரணமான சிற்றலை வானொலிப் பெட்டியிலேயே இலங்கை வானொலியை இனிமேல் கேட்கலாம். இதுநாள் வரை பரணில் தூங்கிய சிற்றலை வானொலிப் பெட்டிகளைத் தூசு தட்டி எடுத்துப் பயன் படுத்துவோமாக!
சிற்றலை வானொலி என்று கூறியவுடன், இன்னொரு தகவலையும் இங்கு இணைத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சமீப காலமாக இந்தியாவில் வானொலிப் பெட்டிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும், இந்தியத் தயாரிப்புகள் அறவே கிடைப்பதில்லை. இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான வானொலிப் பெட்டிகள் சீனத் தயாரிப்புகளாவே இருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு கிடைத்த சீனத் தயாரிப்புகளில் சிற்றலை வரிசைகள் இருந்தன. ஆனால் இப்போது சந்தையில் கிடைக்கும் வானொலிப் பெட்டிகளில் சிற்றலை என்பது ஒரு வாசத்துக்குக்கூட இல்லை. ஏன், மத்திய அலை ஒலிபரப்புகளையும் கூட இனி கேட்பது சிரமம்தான்.
இன்று இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, வத்திகான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய எட்டு நாடுகளிலிருந்து ஒன்பது வானொலிகள் சிற்றலையில் தமிழ் ஒலிபரப்பைச் செய்துவருகின்றன. இவை மட்டுமல்லாது மலேசியா மற்றும் சிங்கப்பூர் வானொலிகள் இணையத்தில் 24 மணி நேரமும் தங்கள் சேவையைச் செய்துவருகின்றன. ஆனால், இது பற்றி இன்றைய இளைஞர்களுக்குக் கொஞ்சமும் தெரியாது என்பது துரதிர்ஷ்டமே! இவை அனைத்தும் சிற்றலையாக மட்டுமல்லாது இணையத்திலும் ஒலிபரப்பப்படுகின்றன. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்குதளத்திலும் இந்த வானொலிகளைக் கேட்கலாம். ஆனால், அப்படியெல்லாம் கேட்கலாம் என்று அறிமுகப்படுத்துவதற்குக்கூட இன்று ஆட்கள் இல்லை!
- தங்க. ஜெய்சக்திவேல், பிபிசி உலக சேவையின் முன்னாள் பணியாளர். தொடர்புக்கு: ardicdxclub@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT