Last Updated : 09 Feb, 2015 09:09 AM

1  

Published : 09 Feb 2015 09:09 AM
Last Updated : 09 Feb 2015 09:09 AM

நெல்லைப் போற்றிய காலம் அது!

பொங்கல் மட்டுமல்ல, பொங்கலுக்குப் பிந்தைய காலமும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது.

கதையிலும் காவியத்திலும் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு சம்பவங்கள் ஒரு உச்சத்துக்குச் செல்லும். இப்படியே பயிர்த் தொழிலின் உச்சமாக வருவது தைப்பொங்கல். மஞ்சுவிரட்டும் சேர்ந்துகொண்டதால் காவியச் சுவைக்குப் பஞ்சமில்லை. ஆனால், பொங்கல் என்ற உச்சத்துக்குப் பின்னால் உள்ள காலத்தைப் பற்றிய கலாச்சாரப் பதிவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன.

காவிரிப் படுகையில் பொன்னாகவும், இளமஞ்சள் பட்டாகவும் மின்னிக் கிடந்த வயல்வெளி தை மாத அறுவடைக்குப் பின்னும் ஒரு புது அழகைப் பூசிக்கொள்ளும். பட்டப் பகலாக எரிக்கும் தை மாத நிலவில் இந்த வெளியைப் பார்க்க வேண்டும். குட்டானாகவும், கோட்டை மதிலாகவும் ஆங்காங்கே வைக்கோல் போர். களம் புழங்கியபின் முன்னிரவில் வயல் குறுக்காகவே நடந்து வீட்டுக்குத் திரும்பலாம். கழனியின் சேறு ஒட்டாத மெழுகாக உலர்ந்து காலுக்கு மெத்தென்று இருக்கும். மார்கழியில் வீசிவைத்த உளுந்தும் பயறும் ஐந்து, ஆறு இலைகளுடன் நெல்லின் தாளோடு தாளாக உரசி உறவாடும். புதுக் கருக்கு அழியாமல் நிமிர்ந்து நிற்கும் தாளுக்கு முத்தாகவும் மணியாகவும் நெல்லை வாரி வழங்கிய பெருமிதம். நடக்கும் காலுக்கு விலகி மடங்கும் தாளின் சரசரப்பு தவிர வேறு அரவம் கேட்காது. வாய்க்காலில் தன்ணீர் இஞ்சினாலும் திட்டுத் திட்டாகக் கிடந்து நிலவைப் பிடித்துக் காட்டும் குட்டைகள். முன்பனியின் குளிரும் வெண்ணிலவின் குளிர்ச்சியும் பின்னிவரும் உணர்வு அப்படியே தனக்கு வேண்டுமென்று உடம்பு தவித்துப்போகும். மற்றதைக் காட்ட வந்ததா, தன்னையே காட்டிக்கொள்ள வந்ததா என்று வெளி நிறைத்து மயக்கும் முழு நிலவின் ஒளி.

பச்சை உடம்பாகும் இயற்கை

பகலிலோ வெயில் இருக்கும்; ஆனால், நிழல் தேடி ஒதுங்கத் தோன்றாது. சாரம் சுவறாமல் நிலம் காய்ந்திருக்கும்; ஆனாலும் செடியிலோ கொடியிலோ வாட்டம் இருக்காது. பிரசவித்த பச்சை உடம்பாக இருக்கும் இயற்கை. பரங்கியும் பூசணியும் சுரையும் எல்லாமே பூவோ பிஞ்சோ காயோ வைத்திருக்கும். உலர்ந்து, காக்கா கால் ஓடியிருக்கும் வயலில் சில நாட்கள் சென்றால் வெடிப்பு ஒடும். ஆனலும் உளுந்தும், பயறும் பனியிலேயே தழைத்து நெல் தாளை மூடிவிடும். இதை ஒதுக்கி, ஊருக்கும் ஊருக்குமாக ஒற்றையடிப் பாதை பிறக்கும். தண்ணீர் காலத்தில் சாலை வழியாகச் சுற்றிச்செல்வதால் அடுத்த கிராமம்கூட எட்டிச் சென்றதாகத் தெரியும். ஆனால், அறுவடைக்குப் பின் நினைத்த இடத்தில் வயலில் இறங்கி நினைத்த ஊருக்கு நடக்கலாம். தை பிறந்தால் தூரம் குறைய வழி பிறப்பதும், அப்போது சாலைகள் அந்நியமாவதும் டெல்டாவின் விந்தை.

தை வெள்ளியில் பிள்ளையார் கும்பிடுவதுதான் பொங்கலுக்குப் பின் வரும் முதல் வழிபாடு. மறுசுழற்சி ஒன்றின் தொடக்கத்துக்கு இலக்கணம். வீட்டு வாசலிலோ கொல்லையிலோ பசுஞ்சாணத்தில் பிடித்த பிள்ளையாரும் அகல் விளக்குமாக அந்திப் பொழுதில் எளிமையாக நடக்கும். கண்டுமுதலான நெல் வயல் களத்திலேயே பட்டறையாகக் கிடக்கும். வயல் காய்ந்த பிறகு வரப்பை உடைத்து மைல் கணக்கில் வண்டிச் சோடு உருவாகும். நெல், அந்தச் சோடு வழியாகவே வண்டியில் வந்து வீடு சேரும். வயலில் கிடக்கும் வைக்கோல் போரையும் போரடித்து, திரைத்து, இப்படியே கொண்டுவந்து போர் போட்டு, தலைகூட்டுவார்கள். சாலைகள் ஈடுகொடுக்க முடியாத போட்டிச் சாலைகளாகவே வண்டிச்சோடு உருவாகும்.

அறுவடையான கையோடு நெல்லை விற்றுவிடுவது வழக்கமில்லை. தொழிலாளியானாலும் ஆறு, ஏழு மூட்டை நெல்லை இருப்புக் கட்டினால்தான் அவருக்கு நிம்மதி. பண்ணைகளில் கண்டுமுதலான நெல்லை கணக்குத் தலைப்பில் வரவு வைப்பதுபோல் நான்காகப் பங்கீடு செய்வார்கள். ஒரு பத்தாயத்தில் சாப்பாட்டு நெல், ஒரு பத்தாயத்தில் அடுத்த ஆண்டுக்கான தரிசு கூலி நெல், பிறகு விதைக் கோட்டை கட்டுவதற்கு, கடைசியில் ரொக்கச் செலவுக்காக விற்பதற்கு. வயலில் ஆட்டுக் கிடை, மாட்டுக் கிடை கட்டும் செலவுக்கு போரடி நெல்லைத் தனியாக வைத்துக்கொள்வார்கள். கருக்காயை மறுபடி தூற்றி அதிலிருந்து அரிசிக் கருக்காய் சேர்த்துக்கொள்வார்கள்.

மாட்டுக்கும் ஒரு பங்கு

விற்பதற்கான நெல் அதிகம் இருந்தால் அதை சேர் கட்டிவைத்து ஆடி மாதம்தான் விற்பார்கள். நெல் தாளை பெரிய வட்டமாகப் பரப்பி, அதில் நெல்லைக் கொட்டக் கொட்ட வைக்கோல் பிரியாலேயே சுற்றி, சுவராக்கி, கூரை வேய்ந்ததுபோல் மூடிவிடுவார்கள். ஆயிரம் கலம் நெல்லைக்கூட இப்படிச் சேர் கட்டலாம். திருவானைக்கா கோயில் பிரகாரத்தில் அப்படி சேராகவே செங்கல்லால் கட்டிய களஞ்சியம் உண்டு. ஞாயிற்றுக் கிழமையில் நெல் விற்பதில்லை. அது நெல்லைப் போற்றிய காலம்.

ஐந்து வேலி நிலம் உள்ளவர்களும் மரப் பத்தாயம் இல்லாமல் மண் குதிரிலேயே நெல்லை இருப்புவைத்திருப்பார்கள். நீள் சதுரமாக இருக்கும் மண் குதிர்கள் சில வீடுகளின் உள் சுவர்களாகவே இருந்தன. வட்டமாக இருக்கும் சக்கரக் குதிரும் உண்டு. குதிரும் பத்தாயமும் அடுக்கிய உறைகளாக இருக்கும். உறை எத்தனை கலம் நெல் பிடிக்கும் என்று துல்லியமாகச் சொல்வார்கள். அந்துப் பூச்சி அண்டாமல் இருக்க குதிரில் கஞ்சங்கோரை செருகியிருக்கும். விதை நெல்லை அமாவசையில் காயவைத்து, கோட்டையாகக் கட்டி வைத்துக்கொள்வார்கள். வருடப் பிறப்புக்குப் பிறகுதான் பத்தாயம் திறந்து நெல் எடுப்பது வழக்கம். பச்சையாகவோ புழுக்கியோ நெல் அரைத்து வந்தால், அது மனிதர்களுக்காக அரிசிக் கூண்டுக்கும், மாட்டுக்காகத் தவிட்டுக் கூண்டுக்கும் பிரிந்து செல்லும். வைக்கோலாக, தவிடாக, கழனியாக, கஞ்சியாக மாட்டுக்கு ஒரு பங்கில்லாத விவசாயம் இருந்ததில்லை. நெல்லை உரலில் குத்தி அரிசியாக்கிய காலமும் இருந்தது. கல்யாணத்துக்குப் பெண் தேடுபவர்களிடம் “நாள் ஒன்றுக்கு ஒரு கலம் நெல் குத்துவாள்” என்று பெண்ணைப் பரிந்துரைப்பார்கள். நெல்லைப் புழுக்கி அரிசியாக விற்பதற்கென்றே வலியங்காரத் தெரு இருந்தது. இந்த அரிசிக்கு வலியன் அரிசி என்றே பெயர்.

பார்த்த இடமெல்லாம் நெல்

எவ்வளவு நெல்லானாலும் மரக்காலைக் கொண்டே அளப்பார்கள். அளக்கும் மரக்காலைப் பொலியில் பாய்ச்சுவதும், அது ஒரு விரலில் சுழன்று நெல் பிடிக்கும் கூடையில் கொட்டுவதும் இமைப் பொழுதில் நடக்கும். அடிவைக்கும் இடமெல்லாம் நெல்லாகத்தான் இருக்கும். ஆனாலும், ஒரு மணிகூட வீணாகாது. அளந்து போட்ட நெல்லிலிருந்தும் ஐந்து, ஆறு மணிகளை அளந்த மரக்காலில் திரும்பப் போட்டுக்கொள்வார்கள். அப்போது நெல்லுக்கு இருந்த மதிப்பைச் சொல்லி மாளாது. பித்தளைப் படியில் நெல்லை நிறைத்து அதன் மேல் நல்ல விளக்கு வைத்திருக்கும் நிறைநாழியோடு மணப்பெண் மாப்பிள்ளை வீட்டுக்குள் நுழை வாள். மணமக்கள் உட்காரும் புதுப்பாயின் கீழே நெல்லைப் பரப்பி வைப்பார்கள். தாலிகட்டும்போது நெல் கோட்டை மேல் மணப்பெண்ணை உட்காரவைப்பது சிலரது வழக்கம். பிறந்த வீட்டுக்கு மறுவுண்ண வந்து புகுந்த வீடு புறப்படும் பென்ணுக்கு நெல்லைப் போட்டுத்தான் ஆசி கூறுவார்கள்.

குதிர், பத்தாயம் எல்லாம் இப்போது காண முடியாது. உரலும் உலக்கையும் குந்தாணியும் அருங்காட்சி உருப்படிகள். பின்னர் வந்த அரவை மில்களும் ஓய்ந்து, பாழ்பட்டுக் கிடக்கின்றன. நெல்லின் மேலிருந்த ஆசையில் எஞ்சிய நாற்றை வாய்க்காலிலும் நட்டுவைத்து அறுவடை செய்வார்கள். பழையவற்றைப் பண்பாட்டின் எச்சங்களாக்கி, புதியவை வந்து புகுந்துகொண்டன. மறைந்தவை பழைய முறைகளும் வழக்கங்களும் மட்டுமல்ல. பயிர்த்தொழில் மீதிருந்த காதலும், கல்லாமல் கற்ற கைத்திறன்களும்தான்.

- தங்க. ஜெயராமன்,

ஆங்கிலப் பேராசிரியர், ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ கவிதைத் தொகுப்பைத் தமிழில் மொழிபெயர்த்தவர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x