Published : 26 Feb 2015 09:04 AM
Last Updated : 26 Feb 2015 09:04 AM
தனக்கென்று தனிப்பட்ட வடிவத்தைக் கொண்டிருக்காதது நீரின் சிறப்புகளுள் ஒன்று. தான் இருக்கும் கொள்கலன், இடம் ஆகியவற்றை நிரப்பி அவற்றின் வடிவத்தை நீர் பெறும். இதைப் போலவே நீரின் முக்கியமான இயல்பு ‘ஓட்டம்’. நீரை அணை போட்டு வைத்தாலும் எப்போதும் ஓடுவதற்குத் தயாரான மோன நிலையிலேயே காத்திருக்கும். ஆகவேதான் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும்போது நீரின் இயல்போடு அல்லது நீருடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புபடுத்திச் சொல்வார்கள். கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும்போது ‘நீர் வழிப்படூஉம் புணைபோல’ என்கிறது. இலக்கிய நடையைப் பொறுத்தவரை ஆற்றொழுக்கான நடை என்றும் சொல்வதுண்டு. ‘வாழ்க்கை ஓட்டம் நீரோட்டம் போல’ என்றும் சொல்வதுண்டு. நீரோட்டம் என்ற சொல்லுக்கு வேறொரு பயன்பாடும் இருக்கிறது. நவரத்தினக் கற்களின் உள்ளே இருக்கும், புகை பாய்ந்ததுபோன்ற மினுமினுப்புக்கும் நீரோட்டம் என்று பெயர்.
நீரின் இன்னொரு சிறப்பான பண்பு மென்மை. தனது மென்மையால் வெற்றிகொள்வது நீரின் இயல்பு. ‘வலியதை எளியது வெல்லும்’ என்று சொல்கிறது சீனத்தின் தாவோ தே ஜிங் நூல். மென்மையிலிருந்து கிடைப்பது மேன்மை. ஆகவேதான், மேன்மைக்கு நீர்மை என்றொரு பெயரும் உண்டு.
‘சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மையுடையார் சொலின்’ என்கிறார் வள்ளுவர். மேன்மையான குணத்தை உடையவர் பயனற்ற சொற்களைச் சொல்வாரெனில், அப்போதே அவரது மேன்மை நீங்கிவிடும் என்பதுதான் இதன் பொருள். நீர்மைக்கு மேன்மை, நட்புணர்வு, அழகு, ஒளி, ஒழுக்கம் ஆகிய பொருளும் உண்டு.
இப்படி மேன்மை கொண்ட மென்மையையும் சற்றே பலவீனமாகவும் கருதுவதுண்டு. ஆகவே, நீரிலிருந்து ‘நீர்த்தல்’, ‘நீர்த்துப்போதல்’ ஆகிய சொற்கள் உருவாகின்றன. இந்தச் சொற்கள் ஆரம்பத்தில் எதிர்மறைத் தொனியில் பயன்படுத்தப்படவில்லை என்பதுபோலவே தெரிகிறது. ‘நீர் போல ஆகிவிடுதல், நீரின் தன்மையை அடைதல், ஈரமாதல்’ ஆகிய பொருளில் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காலப்போக்கில் சற்றே எதிர்மறைப் பொருளும் வந்துசேர்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ‘அந்த எழுத்தாளருடைய (எழுத்து) நடை நீர்த்துப்போய்விட்டது’ என்றும் ‘பாடல்கள் அந்தப் படத்தின் கதையை நீர்த்துப்போக வைக்கின்றன’ என்றும் சொல்வதுண்டு.
தொடர்ந்து வரும் வாரங்களிலும் நீரின் கைகள் நீளும்.
சிறு விவாதம்
சென்ற வாரப் பகுதியைப் பற்றிய சிறு விவாதம் ஒன்று ஃபேஸ்புக்கில் உருவாகியிருக்கிறது. நீரின் செயல்களைக் குறித்த வினைச்சொற்கள் என்று ‘அமிழ்த்துதல், ஓடுதல், ஊற்றெடுத்தல்’ முதலான சொற்களைக் கொடுத்திருந்தோம். அந்தச் சொற்கள் எப்படி வினைச்சொற்களாகும், அவை தொழிற்பெயர்கள் அல்லவா என்று தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இலக்கணச் சுத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால், பேராசிரியர் சொல்வதுதான் சரி. ஆனால், நமது பத்தியில் அப்படிக் கொடுக்கப்பட்டதற்கு மரபு சார்ந்த சில காரணங்கள் உண்டு.
வினைச்சொற்களை மேற்கண்ட வடிவத்தில் கொடுப்பதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன. தமிழகம் கொண்டாடத் தவறிய பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த தமிழ்ப் பேரகராதியில் (தமிழ் லெக்ஸிகன்) வினைச்சொற்கள் மேற்கண்ட வடிவத்தில்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ‘அமிழ்’, ‘அமிழ்த்து’ ஆகிய சொற்கள் எப்படிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்:
இதைப் போலவே நா. கதிரைவேற்பிள்ளையும் ‘அடித்தல், ஓடுதல், கடித்தல்’ என்றே தனது அகராதியில் வினைச்சொற்களைக் கொடுத்திருக்கிறார். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் வினைச்சொற்களுக்கு வினையடி வடிவமே கொடுக்கப்பட்டிருக்கிறது. (இந்த அகராதியில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் இந்தப் பத்தியாளருக்கு உண்டு).
இந்தப் பத்தியில் வினையடிகளின் வடிவத்தில் வினைச்சொற்கள் கொடுக்கப்படாததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ‘அடி, ஓடு, கடி, படு, பிடி, பீடி’ என்று ஏராளமான சொற்கள் இதே வடிவத்தில் பெயர்ச்சொற்களாகவும் இன்னபிற இலக்கண வகைகளைச் சேர்ந்தவையாகவும் இருக்கின்றன. இந்தப் பத்திக்கென்று இருக்கும் சிறு இடத்தில் இவற்றையெல்லாம் தொடர்ந்து விளக்கிக்கொண்டிருக்க முடியாது. அந்தக் குழப்பத்தைத் தவிர்க்கவே ‘அடித்தல், ஓடுதல்’ போன்ற வடிவங்களே இந்தப் பத்தியில் பொதுவாகக் கொடுக்கப்படுகின்றன. அதைப் போலவே, சில வினைச்சொற்களையும் அவற்றின் வினையடிகளையும் பொதுமக்களும் வெகுஜன இதழ்களின் வாசகர்களும் பெரும்பாலும் தொடர்புபடுத்திப் பார்க்கத் தெரியாமல் இருக்கலாம். ‘தேங்காய் விற்றேன், பிட்டுத் தந்தேன், நூல் நூற்றார், மனம் ஒத்து, கோத்துத் தா, தம்பி செத்துப்போய்விட்டான், காவல் காத்தேன்’ போன்ற தொடர்களில் உள்ள வினைச்சொற்களின் வினையடிகள் முறையே ‘வில், பிள் (பிட்டு), நூல் (நூற்றார்), ஒ, கோ, சா, கா’.
இப்படிச் சொன்னால் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கும் என்பதால் கோத்தல், ஒத்துப்போதல் போன்ற வடிவங்கள் தேவைப்படுகின்றன.
இந்த இடத்தில் ‘அறிவோம் நம் மொழியை’ பத்தியின் நோக்கத்தைப் பற்றிச் சொல்வது அவசியம் என்று தோன்றுகிறது. இந்தப் பத்தி வெகுஜன இதழ்களின் வாசகர்களுக்கானது. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கானது. தமிழாசிரியர்கள் சிலர் இந்தப் பத்தி வரும்போதெல்லாம் வகுப்பில் மாணவர்களை விட்டுப் படிக்கச் சொல்வதாகத் தெரிவிக்கிறார்கள். முற்றிலும் இலக்கணரீதியிலான பத்தி என்பது பெரும்பாலான வாசகர்களையும் மாணவர்களையும் அந்நியப்படுத்திவிடக்கூடும் என்பதால், இலக்கண நுட்பங்கள் இந்தப் பத்தியில் கூடுமானவரை தவிர்க்கப்படுகின்றன. வினைச்சொல், பெயர்ச்சொல் முதலான சில அடிப்படை இலக்கண வகைகளின் பெயர்கள் மட்டுமே இங்கே பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்ப் பேரகராதியின் அடியொட்டிக் கொஞ்சம் சுதந்திரமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மொழியின் சொல் வளத்தையும் நுட்பத்தையும் ரசனைபூர்வமாக அறிமுகப்படுத்துவதும், வட்டார வழக்குகளின் சிறப்பையும் அழகையும் வெளிப்படுத்துவதும், ஆங்கிலச் சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களை வாசகர்களின் பங்கேற்போடு உருவாக்குவதும்தான் இந்தப் பத்தியின் நோக்கங்கள்.
பாராட்டு மட்டுமல்ல, ஏதாவது பிழைகள் நேர்ந்து விட்டாலோ, பிழைகள் போன்று தங்களுக்குத் தோன்றினாலோ உடனே வாசகர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள். அப்போதெல்லாம் திருத்தங்களும் வெளியிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ‘தித்தித்தான் குருவி’ (ஆட்காட்டிக் குருவி), ‘ஒவ்வாமை முறி’ போன்ற சொற்கள்குறித்த பதிவு களில் திருத்தங்களைக் காணலாம். வாசகர்களின் கருத்துக்களும் பங்கேற்பும் இந்தப் பத்தியைச் செழுமைப்படுத்துகின்றன என்பதால், அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்வது அவசியம்! நன்றி வாசகர்களே!
வழக்கமான பகுதிகள் அடுத்த வாரம் இடம்பெறும்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT