Published : 03 Feb 2015 10:39 AM
Last Updated : 03 Feb 2015 10:39 AM
ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் 2011-ல் ஐ.மு. கூட்டணி அரசை அசைத்துப் பார்த்த அண்ணா ஹசாரே, தற்போது மோடி அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கத் தயாராகிவிட்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் லோக்பால் கோரிக்கையுடன் பொதுமக்களைத் திரட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்தபோது, அவரைப் பற்றிச் சரியாகத் தெரியாதவர்கள்கூட, ‘மே அண்ணா ஹூன்’ (நானும் அண்ணாதான்) என்று எழுதப்பட்ட காந்தி குல்லாவைத் தலையில் அணிந்தபடி வளையவந்தார்கள்.
ஊழல் குற்றச்சாட்டுகளால் திணறிக்கொண்டிருந்த காங்கிரஸ் அரசுக்கு எதிராக டெல்லியின் மத்தியதர வர்க்கம் தெருக்களில் இறங்கிக் குரல் கொடுத்தது புதிய எழுச்சியாகப் பார்க்கப்பட்டது. இரண்டாம் சுதந்திரப் போராட்டம் என்று சிலர் உணர்ச்சிவசப்பட்டதும் நடந்தது. அன்று அவருடன் அர்விந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி, பிரஷாந்த் பூஷண், வி.கே. சிங், ராம்தேவ் பாபா என்று ஒரு பெரும் படையே இருந்தது. அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த ராம்லீலா மைதானத்தைச் சுற்றி, தேசியக் கொடி முதல் பானி பூரி வரை வகைவகையான கடைகள் முளைத்திருந்தன. செய்தி சேனல்களின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரே பரபரப்புதான்!
காங்கிரஸ் அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை மிகச் சரியாக அறுவடை செய்தது பாஜகதான். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்கும் விஷயத்தில் மெத்தன மாக இருப்பதாகவும், காங்கிரஸ் அரசு மீது பாஜக தலைவர்கள் பாய்ந்தார்கள். அண்ணா ஹசாரே குழுவினரின் போராட்டத்தின் பின்னணியில் வலதுசாரிகளும் பெருநிறுவனங்களும் இருப்பதாக வும் விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியை அர்விந்த் கேஜ்ரிவால் தொடங்கி, டெல்லி முதல்வராகி, அதே வேகத்தில் ராஜினாமாவும் செய்துவிட்டார். பாஜகவுக்குள் தனது செல்வாக்கை உயர்த்திக்கொண்ட மோடி, மக்களவைத் தேர்தலில் வென்று பிரதமராகவும் ஆகிவிட்டார்.
இந்நிலையில், கருப்புப் பண மீட்பு விவகாரத்தில் பாஜக அரசு பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை என்று தற்போது அண்ணா ஹசாரே பேசத் தொடங்கி யிருக்கிறார். வலுவான லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் மோடி அரசுக்கு அக்கறையில்லை என்று கூறும் அண்ணா, விரைவில் மக்களைத் திரட்டி, பாஜக அரசுக்கு எதிராகப் போராடப்போவதாகவும் எச்சரித்திருக்கிறார். நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்திருப்பது அவரைக் கோபப்படுத்தியிருக்கிறது. இதையடுத்து ராலேகான் சித்தி கிராமத்துக்குப் படையெடுத்த சேனல்கள், அவரை மொய்க்கத் தொடங்கிவிட்டன. அதே சமயம், தற்போது அவருடன் சேர்ந்து களத்தில் குதிக்க ஒரு வலுவான குழு இல்லை என்றே கருதப் படுகிறது. ஆனால், “எனக்கு மக்களின் துணை இருக்கிறது. என் உடலில் உயிர் இருக்கும் வரை மக்கள் பணியில் ஈடுபடுவேன்” என்று உறுதியாகச் சொல்கிறார் அண்ணா.
அவரது இயக்கத்தில் முனைப்புடன் செயலாற்றிய அர்விந்த் கேஜ்ரிவாலும், கிரண் பேடியும் தற்போது டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருக்கிறார்கள். அண்ணா ஹசாரே உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வழிபடுவதுபோல கேஜ்ரிவாலைக் கிண்டல் செய்து பாஜக வெளியிட்ட விளம்பரமும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் டெல்லி தேர்தலைப் பற்றியோ அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் கிரண் பேடியைப் பற்றியோ கருத்து சொல்லவே மறுக்கிறார் அண்ணா. “வேறு ஏதாவது கேளுங்கள்… டெல்லி விவகாரமே வேண்டாம்” என்று சேனல்களைச் செல்லமாகக் கடிந்துகொள்கிறார். ஆம் ஆத்மி கட்சியை அர்விந்த் கேஜ்ரிவால் தொடங்கியபோது அதைக் கடுமையாக விமர்சித்தவர்கள் அண்ணா ஹசாரேவும், கிரண் பேடியும்தான். டெல்லி முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி தேர்வுசெய்யப்பட்ட பின்னர், அவரது தொலைபேசி அழைப்புகளையும் அண்ணா புறக்கணித்துவிட்டார்.
“பாஜக அரசுக்குப் போதிய அவகாசம் கொடுத்தாகி விட்டது. ஆனால், ஆக்கபூர்வமாக இந்த அரசு எதுவும் செய்யவில்லை” என்று அறச்சீற்றத்துடன் கூறிவருகிறார் அண்ணா. டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அண்ணா என்ன வெடிகுண்டைப் போடப்போகிறார் என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் பாஜக மீது பரிவு காட்டிய அண்ணா, இப்போது அதன்மீது பாய் வதற்குத் தயாராகிவிட்டார். அண்ணா உண்மையில் யார் பக்கம் என்பதை யாரறிவாரோ?
- வெ. சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT