Published : 04 Feb 2015 08:59 AM
Last Updated : 04 Feb 2015 08:59 AM
இந்தியா இன்னும் விவசாய நாடுதான் என்பதை இந்திய அரசு மறந்துவிட்டது.
விவசாயக் கடன் தள்ளுபடியால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை என்ற சர்ச்சைக் குரிய கருத்தை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சமீபத்தில் கூறியுள்ளார். விவசாயிகளின் தற்கொலைக்குக் கடன் சுமைகள் எந்த அளவுக்குக் காரணம் என்பதைக் கண்டறிவது அவசியம் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்தியாவில் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்வது என்பது ஒன்றும் புதிதல்ல. வறட்சியையும் இயற்கைச் சீற்றங்களையும் காரணம் காட்டி, பல்வேறு காலகட்டங்களில் மாநில அரசுகளும் மத்திய அரசும் விவசாயக் கடன்களைச் சிறிய அளவில் தள்ளுபடி செய்திருக்கின்றன. ஆனால், நாடு தழுவிய அளவில் கடந்த 2008-ம் ஆண்டுதான் கடன் தள்ளுபடித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலமாக 3.69 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளும், ஏறக்குறைய 60 லட்சம் இதர விவசாயிகளும் சுமார் ரூ. 60,000 கோடி கடன் தள்ளுபடி பெற்றுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
1990-91-ம் ஆண்டு வரை ‘விவசாயிகள் தற்கொலை’ என்ற வாசகத்தை எந்தச் செய்தித்தாளிலும் பார்த்தறியாத நம் நாட்டில், 1995-96-க்குப் பிறகு, தினந்தோறும் பல்வேறு ஊடகங்களிலும் விவசாயிகள் தற்கொலையைப் பற்றிச் செய்திகள் வெளியாகத் தொடங்கின. மகாராஷ்டிரத்தில் தொடங்கி ஆந்திரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், கேரளம் போன்ற மாநிலங்களில் மட்டுமல்லாமல், விவசாயத்தில் வளர்ச்சி அடைந்துள்ள பஞ்சாப் மாநிலத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். 1995-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மொத்தமாக 2,23,581 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று ‘தேசியக் குற்றவியல் புள்ளிவிவர அமைப்பு’ கூறியிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 44,468 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது நம்மை அதிரவைக்கிறது.
விவசாயிகளின் தொடர் தற்கொலை அவர்களுடைய குடும்பங்களைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த விவசாய வளர்ச்சியையும் எதிர்காலத்தில் பாதித்துவிடக்கூடும் என்பதால், விவசாயிகளின் கடன் சுமைகளுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காகப் பேராசிரியர் ராதாகிருஷ்ணா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு 2007-ல் அமைத்தது. விவசாயிகளின் தற்கொலைக்குக் கடன் சுமைகளும் ஒரு காரணமாக இருந்தாலும், அடிப்படைக் காரணம் கடன் தொல்லை மட்டும் அல்ல என்று அந்தக் குழு கண்டறிந்தது. அந்தப் பிரச்சினைகளைக் களைவதற்காகப் பல்வேறு பரிந்துரைகளையும் அந்தக் குழு முன்வைத்தது. அதை யெல்லாம் பரிசீலிக்காமல், அன்று ஆட்சியில் இருந்த அரசு ‘விவசாயக் கடன் தள்ளுபடித் திட்ட’த்தை மட்டும் 2008-ல் அறிவித்தது.
அடிப்படைக் காரணம்
விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றியும் சிறிதும் அறிந்திராத சிலர், இந்தக் கடன் தள்ளுபடித் திட்டத்தால் பெரிய நன்மை ஏற்படும் என்றும், தற்கொலைகளை இது முற்றிலுமாக நிறுத்திவிடும் என்றும் பகல் கனவு கண்டார்கள். ஆனால், கடன் தள்ளுபடித் திட்டத்தால் விவசாயிகளின் தற்கொலை குறையவில்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, 1995-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட காலத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு ஏறக்குறைய 41 விவ சாயிகள் தற்கொலைசெய்துகொண்டார்கள். ஆனால், கடன் தள்ளுபடித் திட்டம் (2009 முதல் 2011 வரை) அறிவித்த பிறகும் இந்த எண்ணிக்கை 43 ஆக உயர்ந் துள்ளது.
கடன் சுமை என்பது ஒரு விளைவுதானே ஒழிய விவசாயிகளின் தற்கொலைக்கு அதுவே காரணமாகி விடாது. வங்கியில் வாங்கிய கடனைத் திரும்பக் கட்ட முடியாமல் போவதற்கு விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம் குறைவு என்பது முக்கியக் காரணமாக உள்ளதாகப் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, மத்திய விவசாய அமைச்சகத்தின் அறிவுரைப்படி நடத்தப்பட்ட ஆய்வில் (2005) பயிர்ச் சாகுபடி மூலம் ஒரு விவசாயக் குடும்பத்துக்குக் கிடைக்கும் ஆண்டு வருமானம், வெறும் ரூ. 11,628 மட்டுமே என்று தெரியவந்திருக்கிறது. அதாவது, ஒரு விவசாயக் குடும்பத்தின் ஒரு நாள் வருமானம் ரூ. 32 மட்டும்தான். மகாராஷ்டிரத்தில் பருத்திச் சாகுபடி செய்யும் பெரும்பாலான விவசாயிகள் பயிர்ச் சாகுபடியில் லாபமின்மையைக் காரணம் காட்டித்தான் தற்கொலை செய்துகொண்டார்கள். அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக, 1994-95 காலகட்டத்தில் பருத்திச் சாகுபடி மூலமாக ஒரு ஹெக்டேரில் சாகுபடிச் செலவுக்கு மேலாக ஏறக்குறைய 58% லாபத்தை அந்த மாநில விவசாயிகள் ஈட்டியிருக்கிறார்கள். ஆனால், சாகுபடிச் செலவில் ஏற்பட்ட அதிவேக உயர்வால் 2009-10 காலகட்டத்தில் வெறும் 10% லாபமே கிடைத்தது. இப்படிப்பட்ட குறைந்த லாபத்தைக் கொண்டு, விவசாயி களால் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்?
செய்ய வேண்டியது என்ன?
1990-91-க்குப் பிறகு, பல்வேறு காரணங்களால் பயிர்ச் சாகுபடிச் செலவுகள் பன்மடங்காக அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் கீழ் இயங்கும் ‘விவசாயப் பொருட்களின் விலைக் குழு’வால் வெளியிடப்படும் புள்ளிவிவரங்கள் உறுதிசெய்கின்றன. ஆனால், அதே நேரத்தில் விவசாயப் பொருட்களுக்குச் சந்தையில் கிடைக்கும் விலை போதுமானதாக இல்லை என்று அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட ‘விவசாயிகள் ஆணையம்-2006’ பரிந்துரைத்தபடி விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை சாகுபடிச் செலவுக்கும் மேலாக 50% உயர்த்தி வழங்க உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும்.
விவசாயிகளின் உற்பத்திச் செலவுகளைக் குறைத்து, பயிர்ச் சாகுபடியில் லாபம் ஈட்டுவதற்கு விவசாயத் துறையில் அரசின் நிரந்தர முதலீடு அவசியம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஆனால், விவசாயத் துறையில் 1990-91-க்குப் பிறகு அரசின் நிரந்தர முதலீடு வளர்ச்சி பெறவில்லை என்பது பலருக்கும் தெரியாத உண்மை. விவசாயிகளின் கடன் சுமை அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். எனவே, அரசின் நிரந்தர முதலீட்டை அதிகரித்து நீர்ப்பாசன வசதி, பயிர் ஆராய்ச்சி, தரமான விவசாய அங்காடிகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வழிவகை செய்து அவர்களைக் கடன் சுமைகளிலிருந்து மீட்க வேண்டும்.
கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்துகொண்ட பெரும்பாலான விவசாயிகள், நிரந்தர நீர்ப்பாசன வசதியில்லாமல் பருவகால மழையை நம்பி மானாவாரி பயிர்ச் சாகுபடி செய்பவர்களே. கடன் தள்ளுபடி செய்வதால் மட்டும் இவர்களுக்கு நிரந்தரமான நன்மை கிடைக்கப்போவதில்லை. எங்கெல்லாம் நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்த முடியமோ அங்கெல்லாம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டாக வேண்டும். நீராதாரங்கள் குறைவாக உள்ள பகுதிகளில் மகாராஷ்டிரத்தில் பின்பற்றுவதுபோல ‘சொட்டு நீர்’ மற்றும் ‘தெளிப்பு நீர்’ பாசன வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
விவசாயிகளால் விவசாயிகளுக்காக…
விவசாயத்தில் லாபமின்மையைக் காரணம் காட்டி, 40% விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு தொழில் களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருப்பதாகச் சமீபத்திய ஆய்வொன்று கூறுகிறது. விவசாயிகளுக்குப் பாதகமான சந்தை அமைப்புதான் இதற்குக் காரணம். நீண்ட காலமாகச் சந்தையில் இடைத்தரகர்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதால், விவசாயப் பொருட்களை வாங்குவதற்காக நுகர்வோர் செலவு செய்யும் தொகையில் 30% கூட விவசாயிகளால் பெற முடியவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இடைத் தரகர்களின் ஆதிக்கத்தை ஒழித்து, விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கு ‘தேசிய விவசாயக் கொள்கை’யில் கூறப்பட்டுள்ளதுபோல, விவசாயிகளால் மட்டும் மேலாண்மை செய்யப்படும் சந்தைகளை நாடு முழுவதும் ஏற்படுத்த அரசு முயற்சி செய்ய வேண்டும்.
வருமானமே இல்லாத ஒரு தொழிலை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் விவசாயிகளால் செய்து கொண்டிருக்க முடியும்? இந்தியா இன்னும் விவசாய நாடுதான் என்பதை அரசு மறந்துவிடுகிறது. எனவே, பிற தொழில்கள்மீது காட்டும் அக்கறையைவிடப் பல மடங்கு அக்கறையை விவசாயத்தின் மீதும் விவசாயிகள் மீதும் அரசு காட்டியாக வேண்டும். இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் விவசாயிகளைத் தவிர்த்துவிட்டு எந்த வளர்ச்சியையும் நாம் எட்டிவிட முடியாது?
- அ. நாராயணமூர்த்தி,
பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, அழகப்பா பல்கலைக்கழகம். தொடர்புக்கு: na_narayana@hotmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT