Last Updated : 18 Feb, 2015 09:40 AM

 

Published : 18 Feb 2015 09:40 AM
Last Updated : 18 Feb 2015 09:40 AM

ஒரு மனிதன், ஒரு தேசம், ஒரு கனவு!

முதல்முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடப் போகிறார்கள் ஆப்கானிஸ்தான் அணியினர். ஐந்து உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கேற்ற கென்யா போன்ற அணிகள்கூட இப்போது நடைபெறும் உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற முடியவில்லை. ஆனால், தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சிக்கி, கடுமையாகப் பாதிக்கப் பட்ட ஆப்கானிஸ்தான் இன்று உலகக் கோப்பைக்குக் கம்பீரமாகத் தகுதி பெற்றிருக்கிறது. இது எப்படிச் சாத்தியமானது?

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசினால், தாஜ் மாலிக் ஆலம் என்ற மனிதரின் பெயரும் கூடவே ஒட்டிக் கொண்டு வந்துவிடும். 1987-ல் உலகக் கோப்பை நடைபெற்றபோது பாகிஸ் தானில் உள்ள அகதிகள் முகாமில் சிறுவனாக இருந்தவர் இவர். அகதிகள் முகாமில் கிரிக் கெட் கற்றுக்கொண்ட அவர், விளையாட்டுகளுக்குக் கூடத் தடை விதித்திருந்த தலிபான்கள் ஆட்சியின்போதே, ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை நிர்மாணிக்கும் முயற்சி களை முன்னெடுத்தவர். ‘ஆப்கன் கிரிக்கெட் கிளப்’ என்ற பெயரில் அணியைத் தயார் செய்தார்.

தலிபான்கள் வீழ்ச்சிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி உருவாகக் காரணமாக இருந்தது மட்டுமின்றி, அந்த அணிக்கு முதல் பயிற்சியாளராகவும் இருந்தார். கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி, அணி யின் நிர்வாகி, அணித் தேர்வாளர் எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. இவரின் கடும் முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய ஆப்கன் அணி, இன்று உலகக் கோப்பையில் பங்கேற்கிறது.

ஏற்கெனவே 20 ஓவர் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியிருந்தாலும், ஒரு நாள் உலகக் கோப்பையில் ஆப்கன் அணி விளையாட வேண்டும் என்பதுதான் தாஜ் மாலிக்கின் பெருங்கனவு. அந்தக் கனவு பிப்ரவரி 18-ம் தேதி நனவாகிறது. அன்று வங்க தேசத்துக்கு எதிராக உலகக் கோப்பை முதல் லீக் போட்டியில் விளையாடுகிறது ஆப்கானிஸ்தான் அணி.

கலைகளுக்கும் விளையாட்டுக்கும் எப்போதுமே ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆன்மாக்களை இணைக்கும் சங்கிலிகள் அவற்றுக்கு உண்டு என்பதுதான் அது. யுத்த பூமியான ஆப்கனின் வரலாற்றில் கிரிக்கெட் நல்ல மாறுதலைக் கொண்டுவரட்டும்!

- டி. கார்த்திக், karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x