Published : 28 Apr 2014 10:00 AM
Last Updated : 28 Apr 2014 10:00 AM

வரலாறு முக்கியம் அமைச்சரே..!

ஒரு தமிழ்த் திரைப்படம்குறித்து மீண்டும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. ‘தெனாலிராமன்’ என்ற திரைப்படம் கிருஷ்ணதேவராயர் என்ற அரசரை அவதூறு செய்வதாகவும் சில காட்சிகள் அவரது புகழுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது; சில சமரச நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஒருவழியாகத் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு ஏகப்பட்ட மனைவிகளும் குழந்தைகளும் இருந்ததாகத் திரைப்படம் சித்தரிக்கிறது என்பது போராட்டக்காரர்களின் மிக முக்கியக் குற்றச்சாட்டு. திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே ஒருவிதமான பரபரப்பு கிளம்பிவிட்டது.

கி.பி.1509-ல் விஜயநகரப் பேரரசின் முதன்மையான அரசராக இருந்த கிருஷ்ணதேவராயரின் தனிப்பட்ட வாழ்க்கைபற்றித் திட்டவட்டமான தகவல்களை வரலாற்று ஆய்வாளர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிசெய்ய வேண்டும்.

ஜனநாயக மாண்புக்கு எதிரானது

தணிக்கைக் குழுவின் அனுமதி பெற்ற ஒரே காரணத்துக்காகத் திரைப்படங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், திரைப்படத் தணிக்கைக் குழுவின் சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படம்குறித்து எழும் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதுகுறித்து ஒரு வரையறை வேண்டும்.

தணிக்கைக் குழு என்பது அரசின் ஓர் அங்கம்; இறையாண்மை பெற்ற ஓர் அரசுக்கு மேலான அதிகார மையமாகச் செயல்படும் அதிகாரம் எந்தத் தனி நபருக்கோ அல்லது குழுக்களுக்கோ இல்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படி செய்யத்துணிவது அடிப்படையான ஜனநாயக மாண்புக்கு எதிரானது; எதிர்கால இந்தியாவுக்கும் நல்லதல்ல. ஒரு திரைப்படம்குறித்த விமர்சனம் கருத்தியல்ரீதியாகவும் அல்லது சட்டரீதியாகவும் மட்டுமே இருக்க வேண்டும்.

ஒரு படைப்பாளிக்குச் சரியானது என்று தெரியும் ஓர் அம்சம், பிறருக்குத் தவறான சித்தரிப்பாக இருக்கலாம்; அதன் விளைவாக ஆக்கபூர்வமான விவாதம் உருவாவது மட்டுமே எந்த ஒரு கலைப் படைப்பின் அடிப்படை நோக்கமாக இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும். ஒரு படைப்பாளி தனக்கு இந்தச் சமூகம் அளித்திருக்கும் அடிப்படையான சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, தரமற்ற அவதூறுகளில் இறங்குவது எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவுக்கு விமர்சனம், எதிர்ப்பு என்ற பெயரில் நிகழும் வன்முறையும் ஆபத்தானதே.

அதிலும், ஒரு வரலாற்று ஆளுமை மீதான சித்தரிப்புகுறித்து அறுதியிட்டுச் சொல்லும் அளவுக்குத் திட்டவட்டமான தரவுகள் இல்லாத நிலையில், திரைப்படம்குறித்த விமர்சனம் ‘மிரட்டல்’ மொழியைக் கையாளத் தொடங்கினால், நாம் மிக மோசமான வன்மம் நிறைந்த காலத்தை அண்மிக்கிறோம் என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.

தலைவர்கள் கையில் வரலாறு

வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு என்ற பொதுப்புத்தியில் இருந்து நாம் விடுபட வேண்டும். நமது நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ள நமது வரலாற்றைத் தெளிவாகப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். இன்று நமது அரசியல், சமூகத் தலைவர்களின் கையில் வரலாறு சிக்கித் தவிக்கிறது.

ஒவ்வொரு சாதிக் குழுவுமே தாங்கள் இந்த மண்ணில் ஆண்ட பரம்பரை என்று சொல்வதைச் சர்வசாதாரணமாக தமிழகத்தில் கேட்க முடியும். ஒவ்வொரு சாதிக் குழுவும் தங்களது அரசியல் பயணத்தின் முதல்படியாக தமிழகத்தின் வரலாற்றைத் தங்களது இனம் சார்ந்து விளக்க முற்படுவதைப் பார்க்க முடிகிறது. சமூகத் தலைவர்கள் ஓசையின்றி வரலாற்று ஆசிரியர்களாக உருமாறுவது தமிழகத்தில் மிகமிகச் சாதாரணம். இவர்களது வரலாற்று விளக்கத்துக்கு எதிராக வைக்கப்படும் அனைத்து வாதங்களுமே தங்களது சாதி அல்லது இனத்தின் எதிரிகளின் சதி என்ற அளவில் மட்டுமே பார்க்கப்படும் நிலை சமகாலத் தமிழக வரலாற்றின் மோசமான அவலம். விளைவு, நமக்கு உருப்படியான வரலாற்று ஆய்வுகள் உருவாக வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

கற்பனையும் புனைவும் கலந்த மொழிபு (narrative) வரலாறாக முன்வைக்கப்படுகிறது. பல்லாயிரம் சமணர்கள் மதுரைக்கு அருகில் கழுவேற்றப்பட்டனர் என்பது மாதிரியான முன் தீர்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தகவல்கள் வரலாற்றுத் தரவுகளாக முன்வைக்கப்படுகின்றன. இதற்கான சான்று எங்கே என்று எவருமே கேட்பதில்லை; திரும்பத் திரும்ப இது ஒரு வரலாற்று உண்மையாக நிலைநிறுத்தப்படுகிறது. ஆக, ஆய்வு நோக்கில் வரலாற்றைப் பார்க்க வேண்டும் என்ற சிந்தனை நமக்குத் துளிர்க்கவே இல்லை.

சமுதாய நோய்

தமிழகப் பல்கலைக் கழகங்களின் வரலாற்றுத் துறைகளில் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைச் சற்றே பாருங்கள், நமது வரலாற்றுப் பிரக்ஞை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று தெளிவாகப் புரியும்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு 1,000 கிலோ மீட்டர் தூரத்தில் ஆட்சி செய்த ஒரு மன்னர் பற்றி நாம் இன்று பெருமையோடு பேசிவருகிறோம். அன்று பலதார மணம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக நியதியாகக்கூட இருந்திருக்கலாம்; யாருக்குத் தெரியும்? அது பற்றி உறுதியாகச் சொல்லத் தகுதி பெற்றவர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமே. வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் விவாதம் எழுந்திருந்தால், நமது சிந்தனை முதிர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்ல முடியும்.

ஆனால், நாங்கள் சொல்வதற்கு எதிராகப் பேசினால், திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம், வன்முறையில் இறங்குவோம் என்று ‘எச்சரிக்கை’ செய்யும் அளவில் மட்டுமே நமது சிந்தனை இருக்கிறது. இது, ஒரு சமுதாயமே நோயுற்றதன் வெளிப்பாடுதான். எங்கோ ஆப்கானிஸ்தானில் மட்டுமே அடிப்படைவாதிகள் வன்முறையில் இறங்குகிறார்கள் என்று தவறாக யாரும் நினைத்துவிட வேண்டாம். நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதை நாம் ஒப்புநோக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது; வருத்த மாகத்தான் இருக்கிறது. ஆனால், வேறு வழியில்லை.

அவதூறுகளே வரலாறு

விருப்பு வெறுப்பின்றி கடந்த காலத்தை அணுகும் பார்வை நமக்கு இன்னமும் உருவாகவில்லை என்பது மட்டுமல்ல, நமது இன்றைய சமூக மதிப்பீடுகளை வைத்து ஒரு மன்னரைப் புகழ்ந்தோ இகழ்ந்தோ சித்தரிப்பது எவ்வளவு அபத்தம் என்பதுகூட நமக்குப் புரியவில்லை. இன்று அதிதீவிரத்தோடு தொடரும் உலகமயமாதலினால், பல இன, மொழி, சமூகக் குழுமங்கள் பெரும் பதற்றத்தோடு தங்களது சுய வரலாற்றை மறு ஆக்கம் செய்ய விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று வரலாறு நமக்கு முக்கியமாகியிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தங்களது இன வரலாறு அரசியல் முக்கியத்துவம் கொண்டது. இன்றைய போட்டி அரசியலில், அதிகாரத்தைக் கைப்பற்றவும், மக்களை அணிதிரட்டவும் அரசிடமிருந்து சலுகைகள் பெறவும் சில வரலாற்றுப் புனைவுகள் அவசியமாகின்றன.

‘ஆண்ட பரம்பரை’ சில சதியால் இன்று தாழ்ந்துவிட்டது என்ற சொல்லாடல் மிக முக்கியம். இது போன்ற ‘பலிகடா’ உணர்வு மக்களை அணிதிரட்ட அத்தியாவசியமாகிறது. அதனால், ‘வீழ்ந்த மக்களின் அணிதிரட்டலில்’ வன்முறை என்பது அங்கீகரிக்கப்பட்ட, தவிர்க்க முடியாத ஓர் அம்சம் என்று பலர் ஏற்கிறார்கள். போர்க்குணம் என்று சகிக்க முடியாத உயர்வு நவிற்சியோடு இந்த வன்முறையைச் சிலாகித்துப் பேசும் நபர்கள், நமது ஜனநாயகத்துகுப் பெரும் கெடுதல் செய்கிறார்கள்.

கருத்தியல் உலகில், கலை உலகில் மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்ளவும், எதிர்வினையாற்றவும் திராணியில்லாதவர்கள் மட்டுமே வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை தெளிவாகிறது. இந்த வன்முறையாளர்கள் தங்களுடைய இன்றைய அரசியல் தேவைகளுக்காக, அவதூறுகளை வரலாறாக நிறுவ முயல்வது நமது கையாலாகாத நிலையின் வெளிப்பாடுதான். தமிழ்நாட்டின் வரலாறுபற்றி அரசியல் மேடைகளில் கடந்த அரை நூற்றாண்டாக எத்தனையோ பேர் பேசிவிட்டனர்.

ஆனால், நமது வரலாறுபற்றி மிக முக்கிய ஆய்வுகளைச் செய்தவர்களில் மிக அதிகமானவர்கள் வெளிநாட்டு ஆய்வாளர்களே என்ற எளிய உண்மை நமது போதாமையை இனியாவது மாற்றும் என்று நம்புவோம்.

- இரா.திருநாவுக்கரசு,தொடர்புக்கு: rthirujnu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x