Published : 24 Feb 2015 09:12 AM
Last Updated : 24 Feb 2015 09:12 AM
சிறிய திருடர்கள் மாட்டிக்கொள்வார்கள், பெரிய திருடர்கள் வழக்கம்போல் தப்பித்துக்கொள்வார்கள்!
அது 1996 என்று நினைக்கிறேன். பவர்கிரிட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக நான் இருந்தேன். உயர் அதிகாரிகளின் கூட்டமொன்றில் ஒரு பெரிய நிறுவனத்துக்கு எதிரான நிலைப்பாட்டை நான் எடுக்க நேர்ந்தது. கூட்டத்தில் இருந்த அதிகாரிகளில் அநேகமாக எல்லோரும் நிறுவனத்துக்கு ஆதரவாக இருந்தாலும், நான் எதிர்த்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. விஜிலன்ஸ் துறை என்னிடம் இருந்தது.
கூட்டம் முடிந்து சில மணி நேரங்களிலேயே அமைச்சரிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. அப்போது மின் உற்பத்தித் துறையின் அமைச்சர் வேணுகோபாலாச்சாரி. தெலுங்கு தேசக் கட்சிக்காரர். அறையில் நுழைந்ததுமே என்னைக் காய்ச்ச ஆரம்பித்துவிட்டார். உடனே முடிவை மாற்ற வேண்டும், இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்றெல்லாம் சொன்னார். “மாற்ற வேண்டுமென்றால் எழுத்துமூலமாக உத்தரவு கொடுங்கள்” என்றேன். “வெளியே போ” என்று கோபமாகச் சொன்னார். வெளியே வந்தபோது வரவேற்பு அறையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெரிய புள்ளி ஒருவர் அமைச்சரைச் சந்திக்கக் காத்துக்கொண்டிருந்தார்!
நம்ம கடை
இந்தக் கதையை ஏன் சொல்கிறேன் என்றால், அன்றிலிருந்து சென்ற ஆண்டு முடிவடைந்த ஆட்சி வரை அரசு அலுவலகங்களில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சென்றுசேர்வதற்கு அதிக நேரம் எடுத்ததில்லை. ரஞ்சன் பட்டாச்சாரியாவிடம் ‘காங்கிரஸ் நம்ம கடை’ என்று முகேஷ் அம்பானி சொன்னார் என்று நீரா ராடியா ஒலிநாடாக்கள் தெரிவிக்கின்றன. இது முழுவதும் உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் மட்டுமல்ல, ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சிகளும் பெரிய நிறுவனங்களின் கடைகளாகத்தான் செயல்பட்டுவந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
நிலைமை மாறிவிட்டது
ஆனால், பல பார்வையாளர்களும், எனக்குத் தெரிந்த சிலரும் நிலைமை மாறிவிட்டது என்கிறார்கள். அரசு பெருமுதலாளிகளுக்கு எதிராகத் திரும்பிவிட்டது என்பது இதற்குப் பொருளல்ல. முன்பெல்லாம் ‘அரசுக் கடை’களில் வேலை செய்பவர்களில் செயலாளரிலிருந்து பணியாளர் வரை யாரை வேண்டுமானாலும், உங்களது ‘நிதி’ நிலைமையைப் பொறுத்து அணுக முடியும். அணுகுவதை எளிதாக்க டெல்லியில் ‘தொடர்பு’ அதிகாரிகள் நிறையப் பேர் இருந்தார்கள். ஆனால், மோடி அரசு வந்தவுடன் ‘தொடர்பு’ அதிகாரிகளின் நடமாட்டம் கணிசமாகக் குறைந்துவிட்டது என்றும், கோப்புகளில் என்ன எழுதப்பட்டிருக்கின்றன என்பதை அதிகாரிகளை அணுகித் தெரிந்துகொள்வது இப்போது அவ்வளவு எளிதல்ல என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள். ‘உங்களுக்குச் சாதகமான முடிவை நாங்கள் எடுப்போம் என்று சொன்னால், எங்களை முழுவதுமாக நீங்கள் நம்ப வேண்டும்’ என்பதுதான் மோடி அரசின் நிலை என்று சொல்லப்படுகிறது. ஆனால், பெருமுதலாளிகள் அவ்வளவு எளிதாக நம்பக் கூடியவர்கள் அல்ல. நிலைமை உண்மையாக மாறிவிட்டதா, அல்லது இது புதுத் துடைப்பம்தானா என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டுதான் இருப்பார்கள். இந்தப் பின்புலத்தில்தான் சாஸ்திரிபவனில் நடந்த சம்பவங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கேட்க வேண்டிய கேள்விகள்
களவாடப்பட்ட கோப்புகளும் ஆவணங்களும் முக்கிய மானவையா இல்லையா என்ற புரிதல் களவாடியவர் களுக்கு இருக்குமா?
உள்ளே நுழைந்து இவற்றைக் களவாடியவர்களுக்குக் களவாடப்பட்டவற்றின் மதிப்பு தெரிந்திருக்கக்கூடிய சாத்தியமே இல்லை. இவர்கள் அனைவரும் கடைநிலை ஊழியர்கள். எனவே, படித்து என்ன எழுதியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டிருக்கும் வாய்ப்பும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோன்று கடைநிலை ஊழியர்களை வைத்துக் களவாட வைப்பது காலம்காலமாக நடந்துவந்திருக்கிறது. கடைநிலை ஊழியர்களை வைத்துத் திருடும் தொழிலை பாகிஸ்தான் டெல்லியில் தீவிரமாகச் செய்துகொண்டிருந்தது. இன்னும் செய்துகொண்டிருக்கலாம்.
ஒரு ஆவணத்தைக் குறிப்பிட்டு அதைத் திருடிக்கொண்டு வா என்று சொல்லியிருக்கும் வாய்ப்பு இருக்கிறதா?
வாய்ப்பு இருக்கிறது. கதவுகள் உடைக்கப்பட்டிருக் கின்றன என்ற செய்தி இத்தகைய முயற்சி எடுக்கப் பட்டிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. ஆனால், முயற்சி வெற்றியடைந்ததா, இல்லையா என்பது விசாரணை முடிந்த பிறகுதான் தெரியவரும்.
இது போன்று மொத்தமாக ஆவணங்களை வாங்குவதால் பெரும் நிறுவனங்களுக்கு என்ன லாபம்?
திருடப்பட்ட நூற்றுக் கணக்கான ஆவணங்களிலிருந்து, சில முக்கியமான ஆவணங்கள் கிடைக்கலாம். பழைய புத்தகக் கடையில் தேடிக்கொண்டிருப்பவருக்கு, முக்கியமான, கிடைத்தற்கரிய புத்தகம் ஒன்று கிடைப்பது போலத்தான் இது. திருடர்களுக்குக் கொடுத்திருக்கக் கூடிய பணம் இந்த நிறுவனங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.
அரசு அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்களா?
அதிகாரிகள் சம்பந்தப்படவில்லை என்று டெல்லி போலீஸ் சொல்கிறது. அவர்கள் சொல்வது சரிதான் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், தங்களிடம் புழங்கும் ஆவணங்களைத் தாங்களே திருட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. அப்படித் திருட வேண்டிய தேவையிருந்தாலும், இது போன்று பூட்டுகள், கதவுகளை உடைத்துத் திருடினால் கண்டுபிடிக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும், இந்தக் கோணத்திலிருந்து விசாரிப்பதை போலீஸ் கைவிட்டு விடாது என்றுதான் நான் எண்ணுகிறேன்.
என்ன நடக்கிறது என்பது பெருமுதலாளிகளுக்குத் தெரிந்திருக்குமா?
பொதுவாக என்ன நடக்கிறது என்பது தெரிந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஆவணமும் எப்படி வந்தடைந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை, அறியவும் விரும்ப மாட்டார்கள். எனவே, அவர்களுக்குத் தெரிந்துதான் நடந்தது என்று நிறுவுவது கடினம். நமது சட்டங்கள் திருத்தப்படாதவரை பெரு முதலாளிகள் தப்பித்துக்கொண்டுதான் இருப்பார்கள். அம்புகள் மீதுதான் நாம் குற்றம்சாட்ட முடியும்.
புரியாத புதிர்கள்
பத்தாயிரம் கோடி ஊழல் என்று கைதுசெய்யப்பட்ட சைக்கியா சொல்லியிருக்கிறார். ஊழல் என்று அவர் சொல்வதோடு திருடப்பட்ட ஆவணங்களைத் தொடர்புபடுத்துவது எவ்வாறு என்பது தெளிவாக இல்லை. ஊழலை வெளிக்கொண்டுவந்ததால்தான் பழிவாங்கப்படுகிறேன் என்று அவர் கூறுகிறாரா அல்லது ஆவணங்களில் ஊழலைப் பற்றிய தகவல்கள் இருக்கின்றன எனக் கூறுகிறாரா என்பதும் தெளிவாக இல்லை.
மேலும், அரசின் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் பல மாதங்களுக்கு முன்னரே தகவல் அறிந்து துப்புத்துலக்கத் தொடங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. அமெச்சூர்தனமாக நடத்தப்பட்டிருக்கும் இந்தத் திருட்டுகளைக் கண்டுபிடிக்க ஏழெட்டு மாதங்கள் எடுத்திருக்கும் என்பது நம்ப முடியாததாக இருக்கிறது. வேறு யாருக்காவது எச்சரிக்கை கொடுப்பதற்காக இந்த நாடகம் நடத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
நிதிநிலை அறிக்கை சம்பந்தமான ஆவணங்களும் திருடப்பட்டிருக்கின்றன என்று டெல்லி போலீஸ் சொல்கிறது. நிதிநிலை அறிக்கை சம்பந்தமான முக்கியத் தகவல்களெல்லாம் ‘பரம ரகசியம்’ என்ற வகைக்குள் அடங்கும். ‘பரம ரகசிய’ ஆவணங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்குத் தெளிவான வரைமுறைகள் இருக்கின்றன. இது போன்ற சிறுதிருடர்கள் கைகளில் அவை சிக்கியிருக்கும் வாய்ப்பே இல்லை. அதிகாரியின் கவனக் குறைவால் நடந்தது என்றால், இதற்குள் அவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பார். அப்படி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. ‘நிதிநிலை அறிக்கை’ என்ற தலைப்பிட்ட ஆவணங்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கை சம்பந்தமான முக்கியமான தகவல்கள் கொண்ட ஆவணங்கள் என்று சொல்ல முடியாது.
நடந்தவற்றைப் பற்றி இதுவரை வந்த தகவல்களை ஆராய்ந்தால் இதைப் பெருந்திருட்டு என்று சொல்ல முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், சிறுதிருட்டுகள் விளம்பரப்படுத்தப்பட்டால் பெருந் திருடர்கள் சிறிது காலமாவது ஒதுங்கியிருப்பார்கள்.
- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT