Published : 14 Feb 2015 08:31 AM
Last Updated : 14 Feb 2015 08:31 AM
கலாச்சாரக் காவலர்களுக்குப் பிரச்சினை அந்நிய கலாச்சாரமா அல்லது காதலா?
சிலர் ஜீன்ஸ் அணிந்திருக்கிறார்கள், மற்றவர்கள் சாதாரண முழுக்கால் சட்டை. கையிலோ சட்டைப் பையிலோ மேலைநாட்டு அறிவியலின் இறக்குமதியான செல்ஃபோன், ஒருவர்கூட மகாராஷ்டிரத்தின் பாரம்பரிய உடையை அணிந்திருக்க வில்லை. 2013-ல் காதலர் தினத்தன்று இளம் காதலர்களை அடித்தும் உதைத்தும் துரத்துகிறார்கள். அந்தப் படையில், இல்லையில்லை சேனையில், பெண்களும் அடக்கம். அந்த சேனையின் ஆண்கள் கண்ணியமானவர்கள். அவர்கள் பெண்கள் மீது கை வைக்க மாட்டார்கள். ஆகவே, பெண்களைப் பெண்களே ‘கவனித்து’க்கொள்கிறார்கள். பெண்களின் கன்னத்தில் அறை மேல் அறை கொடுத்துத் துரத்துகிறார்கள். கவனிக்க, சேனையின் வீராங்கனை களில் அநேகமாக யாரும் சேலை உடுத்தியிருக்க வில்லை. நம்புங்கள், இவர்கள்தான் நமது இந்தியக் கலாச்சாரத்தைக் காப்பாற்றுபவர்கள்!
இந்த சேனையாவது ‘கண்ணிய’மானது, ஆண் களை ஆண்களே அடிப்பார்கள், பெண்களைப் பெண்களே அடிப்பார்கள். கர்நாடகத்தில் இருக்கும் சேனை அப்படியல்ல. கலாச்சாரத்தைக் காப்பாற்றும் போது கண்ணியமா முக்கியம்? பெண்களை அடித்து உதைத்தாவது கலாச்சாரத்தைக் காப்பாற்றிவிட வேண்டுமே என்ற ‘உன்னத நோக்க’த்தில் செயல்படு பவர்கள். அடிப்படையில் யோசித்துப்பார்த்தால் இவர்களுக்கு மேலை நாகரிகமான ‘காதலர் தினம்’ என்பது பிரச்சினையே அல்ல. காதல்தான் பிரச்சினை. இவர்கள் மேலை நாகரிகத்தைக் கண்டு அஞ்சவில்லை, காதலைக் கண்டுதான் அஞ்சுகிறார்கள். காதலைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? ‘கலாச்சாரம், கலாச்சாரம்’ என்று உயிரை விட்டுக் கத்திக்கொண்டிருக்கிறார்களே அந்தக் கலாச்சாரம் என்பது என்னவென்று உள்ளே போய்ப் பார்த்தால் அவர்களின் அச்சத்துக்குக் காரணம் புரியும்.
கலாச்சாரத்தின் இரண்டு முகங்கள்
‘கலாச்சாரம்’ என்ற சொல்லில் ‘கலை’ என்பது ஒரு பகுதியாக இருக்கிறது. ஒரு சமூகத்தின் வெவ்வேறு கலைகள் ஒன்றுசேர்ந்துதான் அதன் கலாச்சாரத்தின் ஒரு முகத்தை வடிவமைக்கின்றன. கலாச்சாரத்தின் இந்த முகம் இறுகிப்போன முகமல்ல. முரண்களுடன் உறவாடி, தொடர்ந்து வளரக் கூடியது. நமது கோயில்கள், இலக்கியம், ஓவியம் எல்லாவற்றிலுமே மரபு, மரபுக்கு எதிரான போக்கு ஆகிய இரண்டு அம்சங்களையும் நாம் காணலாம். இந்தக் கலாச்சாரமும் காலம் காலமாக பிற கலாச்சாரங்களால் தாக்கம் பெற்றிருக்கிறது; மாறுதல் அடைந்திருக்கிறது. அதேபோல், பிற கலாச்சாரங்கள் மீதும் நமது கலாச்சாரம் தாக்கம் செலுத்தியிருக்கிறது. அவற்றை மாறுதல் அடையச் செய்திருக்கிறது. கலாச்சாரத்தின் ஒரு முகம்தான் இது. மிகவும் உயிரோட்டமான முகம் இது.
இன்னொரு முகம் இருக்கிறது. அது இறுகிப்போன ஒரு முகம். அதற்கு மரபு ஒன்றே பெருமை, அதாவது தனது பெருமைக்குக் காரணங்கள் எவையென்பதை உணராமல், பெருமைக்காக இருக்கும் பெருமை. இந்தப் பெருமையைக் கட்டமைத்திருப்பது சாதியமும் மதவாதமும் பழமைவாதமும்தான். கலாச்சாரத்தின் முதல் முகத்துக்குக் காதல் எவ்வளவு அத்தியாவசியமானதோ அந்த அளவுக்குக் கலாச்சாரத்தின் இன்னொரு முகத்துக்குக் காதல் பரம எதிரி. காதலுக்கு சாதி கிடையாது, மதம் கிடையாது என்பதால் எல்லாக் கட்டுக்கோப்புகளும் மீறப்பட்டுவிடும். இன்னும் அடிப்படையாக, கலாச்சாரக் காவலர்களின் மொழியில் சொன்னால் ‘ரத்தக்கலப்பு’ ஏற்பட்டுவிடும். ‘ரத்தக்கலப்பு’ என்ற ஒரே காரணம்தான் காதலை எதிர்க்க வைக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞரும் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் மேற்கத்திய நாகரிகமான காதலர் தினத்தைக் கொண்டாடாமல், ரோஜாப் பூக்கள் பரிமாறிக்கொள்ளாமல் ‘இந்திய’ மரபுப்படி மல்லிகைப் பூவை(!) கொடுத்துத் தங்கள் காதலைத் தெரிவித்துக்கொள்ள இந்தக் ‘கலாச்சாரக் காவலர்கள்’ அனுமதிப்பார்களா? மேலும், அந்தக் காதலர்கள் மணம் புரிந்துகொள்ளவும் அவர்கள் அனுமதிப் பார்களா? இது போன்ற கேள்விகளைக் கேட்டாலே ‘கலாச்சாரம்’ என்ற சொல்லுக்கு நாம் கொடுத்திருக்கும் அர்த்தம் என்ன என்பது தெளிவாகப் புரிந்துவிடும்.
எதில் இருக்கிறது நம் கலாச்சாரம்?
நமது கலாச்சாரம் தற்போது எதில் இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள்! ஆடையலங்காரங்களைப் பொறுத்தவரை அந்நியக் கலாச்சாரத்திடம் எப்போதோ சரணடைந்துவிட்டோம். உணவுப் பழக்கத்திலும் அப்படியே. அடுத்து, பன்னாட்டுப் பெருநிறுவனங் களுக்கு மன்மோகன் காலத்தில் இந்தியாவின் கதவுகள் அகலமாகத் திறந்துவிடப்பட்டன. ‘கலாச்சாரக் காவலர்கள்’ தங்களின் ஆஸ்தான நாயகராக வழிபடும் மோடியோ அந்தக் கதவுகளும் இருக்கக் கூடாது என்ற முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆக, தொழில்கள், தொழில்நுட்பத்திலும் அந்நியக் கலாச்சாரத்திடம் ஒட்டுமொத்தமாகச் சரணடைந்துவிட்டோம். ஒரு பக்கம் சங் பரிவாரங்களின் ‘வேத காலத்துக்குத் திரும்பு வோம்’ கோஷம். இன்னொரு பக்கம் சங் பரிவாரக் குழந்தையின் ‘மேக் இன் இந்தியா’ கோஷம். இந்த முரண்-பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது நம்மவர் களுக்குக் கலாச்சாரம் முக்கியமல்ல, ‘கலாச்சார அரசியல்’தான் முக்கியம் என்பது படும்.
நீங்கள் போரிட வேண்டியது எங்கே?
‘காதலர் தினம்’ அந்நியக் கலாச்சாரம்தான். இல்லையென்று சொல்லவில்லை. உலகமயமாதல், தாராளமயமாதல், வணிகமயமாதல் முதலான ‘மயமாதல்’களால் சமூகத்தின் ஒட்டுமொத்த அம்சங்களும் அந்நியமயமாகும்போது காதல் மட்டும் எப்படித் தப்பிக்கும்? ‘கலாச்சாரக் காவலர்’களின் போராட்டம் அந்நியமயமாதலுக்கு எதிரானதா, அல்ல காதலுக்கு எதிரானதா என்ற கேள்வியே நமக்கு எழுகிறது. அந்நியமயமாதலுக்கு எதிரானது என்றால் நீங்கள் போராட வேண்டிய இடம் காதலர்கள் கூடும் பூங்காக்கள் அல்ல, ‘மேக் இன் இந்தியா’வின் கர்ப்பகிருஹமான இந்திய நாடாளுமன்றத்தின் முன்னால்தான். ஆனால், அப்படிச் செய்ய மாட்டோம். நமது அடிப்படைப் பிரச்சினை ‘அந்நியமயமாதல்’ அல்ல, ‘அந்நிய ரத்தக்கலப்புமயமாதல்’தானே! அதற்குக் காரணமாக இருக்கும் காதல்தானே நமக்குப் பெரும் எதிரி.
கலாச்சாரக் காவலர்கள் தனியானவர்கள் அல்ல. எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் அவர்களுக்குத் தோழர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய தெல்லாம் மாற்று சாதி, மாற்று மதக் கலப்பு தங்கள் சமூகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான். மற்ற விவகாரங்களில் ஒருவரையொருவர் எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் இதில் மட்டும் சாதி, மத வேறுபாடுகளைத் துறந்து ஒன்றுகூடுவார்கள். ஆக, காதல் மதங்களை மட்டுமல்ல மத அடிப்படைவாதிகளையும் ஒன்றுசேர்க்கிறது!
அவரவர் உரிமை
உங்களுக்குக் காதலோ காதலர் தினமோ பிடிக்காமல் இருக்கலாம். அது உங்களின் விருப்பம், உங்களின் உரிமை. அதேபோல், பிறர் காதலிப்பதும், காதலர் தினம் கொண்டாடுவதும் அவர்களின் விருப்பம், அவர்களின் உரிமை. இந்த இரண்டு தரப்பினரின் உரிமைகளும் விருப்பங்களும் பரஸ்பரம் திணிக்கப்படுவது தவறு. அதை வன்முறை மூலம் செய்வது பெருங்குற்றம்!
காதல் என்பது தனிப்பட்ட விஷயம். தயவுசெய்து அதில் வன்முறையைக் கலந்துவிட வேண்டாம். காதலைப் பற்றி நமது மொழியின் மகாகவி ஒருவர் சொன்னதைத் தாண்டி நாம் என்ன சொல்லிவிட முடியும்?
“காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்;
காதலினால் சாகாமலிருத்தல் கூடும்
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்."
-ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
ஓவியம்: முத்து
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT