Published : 22 Feb 2015 12:49 PM
Last Updated : 22 Feb 2015 12:49 PM

புலிகள் தேசத்தில் நடப்பது என்ன?

| பல்லாயிரக் கணக்கான புலிகள் வசித்த இந்திய வனத்தில் இன்று 2,226 புலிகள் மட்டுமே இருக்கின்றன என்பதிலிருந்தே புலிகள் மீதான நம் அக்கறையின்மையைப் புரிந்துகொள்ளலாம். அக்கறையின்மைக்கே இத்தனை புலிகள் பலியாயின எனில், அது வெறுப்புணர்வாக மாறினால்.. |

"இந்தியாவில் 30% புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. உலகிலேயே அதிக எண்ணிக்கையாக இங்கு 2,226 இருக்கின்றன" என்று சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பெருமையாக அறிவித்தபோது, கானுயிர் ஆர்வலர்கள் மகிழ்வதற்குப் பதிலாக அச்சமடைந்தார்கள். அவர்கள் பயந்ததுதான் இப்போது கூடலூர் வனப் பகுதியில் நடந்துகொண்டிருக்கிறது. புரியும்படி சொல்வதென்றால், அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாதவரின் வீட்டில் பத்துப் பிள்ளைகள் பிறந்ததுபோலத்தான் இதுவும்!

வளமையின் குறியீடு '570'

உலகில் புலிகள் வாழும் 14 நாடுகளில் எந்த நாடும் செய்யாத சாதனையை இந்தியா நிகழ்த்தியிருக்கிறது. உலகிலேயே அதிகமான புலிகள் (2,226) இந்தியாவில் மட்டுமே வசிக்கின்றன. உலகின் 70% புலிகள் நம்மிடம் இருக்கின்றன.

குறிப்பாக, இப்போது பிரச்சினை பற்றி எரியும் கூடலூர் வனப் பகுதியான முதுமலை - பந்திப்பூர் - நாகர்ஹோளே வயநாடு கூடுகிற கூடலூர் வனப் பகுதியை உலகில் புலிகள் (570) அதிகம் வசிக்கும் பகுதியாக அரசு அறிவித்துள்ளது. அந்த 570 என்பது வெறும் எண் அல்ல. உலகின் மிகமிக வளமையான வனங்களில் ஒன்று என்பதன் குறியீடு அது. அதில்தான் இப்போது ஒரு புலி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறது.

ஆம், கொன்றுதான் ஆக வேண்டும்!

ஏற்கெனவே, இங்கு இதேபோல ஒரு புலி கொல்லப்பட்டிருக்கிறது. அப்போதும் இப்போதும் பலர், 'அதைக் கொன்றிருக்கத்தான் வேண்டுமா?' என்று கேட்கிறார்கள். ஆம், வேறு வழியில்லை. அந்தப் புலியைக் கொல்லத்தான் வேண்டும். அது ஆட்கொல்லியாக மாறியது அதற்கு நேர்ந்த விபத்து. அது அறியாமல் மனித ரத்தத்தைச் சுவைத்தது, அதற்கு நேர்ந்த சாபம். இனி, அதனால் மீண்டும் மனித ரத்தத்தைச் சுவைக்காமல் இருக்கவே முடியாது. அதனைக் கொல்லவில்லை எனில், மக்களின் கோபம் மொத்தப் புலிகளின் மீது திரும்பியிருக்கும். வயலோரத்திலும் தோட்டத்து ஓரத்திலும் பார்க்கும் எந்தப் புலியையும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் துரத்திக் கொல்வார்கள்.

பல்லாயிரக் கணக்கான புலிகள் வசித்த இந்திய வனத்தில் இன்று 2,226 மட்டுமே இருக்கின்றன என்பதிலிருந்தே புலிகள் மீதான நம் சமூகத்தின் அக்கறையின்மையைப் புரிந்துகொள்ளலாம். அக்கறையின்மைக்கே இத்தனை புலிகள் பலியாயின எனில், அது வெறுப்புணர்வாக மாறினால் புலி இனமே இல்லாமல் போய்விடும். அதனால், அந்தப் புலியைக் கொன்றதுதான் சரி!

வனத்தை ஆக்கிரமித்துள்ள பெரும் நிறுவனங்கள்!

ஒரு புலி ஆட்கொல்லியாக மாறியது விபத்து என்றாலும்கூட, அந்த விபத்துக்குக் காரணம் சில பெரும் நிறுவனங்களும் சில செல்வந்தர்களின் பேராசையும்தான். வளமையான கூடலூர் பகுதி வனத்தை உலகில் மிக அதிகம் புலிகள் வாழும் பகுதி என்று அறிவித்தபோதே, இங்குள்ள சில பெரும் முதலாளிகள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஈட்டி மரங்களுக்குப் பெயர் பெற்ற வனம் இது. அதனால், அவர்கள் ஈட்டிவரும் லாபமும் அபரிமிதமானது.

ஒருகாலத்தில் இந்தப் பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் ச.கி.மீட்டர் வனம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் இருந்தது. அப்போது செல்வந்தர்கள் பலர் வனத்தைப் பயன்படுத்திக்கொள்ள சமஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். பிற்காலத்தில் அது அரசுடைமை ஆக்கப்பட்டது. ஆனால், வனத்தைப் பயன்படுத்தியவர்களில் பலரும் அரசிடம் வனத்தை ஒப்படைக்காமல் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளார்கள். ஜென்ம பூமி பிரச்சினை எனப்படும் இது, நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டுவருகிறது. இதனால், மூன்று மாநிலப் பகுதிகளிலும் ஆயிரக் கணக்கான ஹெக்டேர் வனப் பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டு, பன்னாட்டுத் தேயிலைத் தோட்டங்களாகவும் சொகுசு விடுதிகளாகவும் உள்ளன.

புதிய புலிகளுக்கு வனம் எங்கே?

இந்தச் சூழலில் தற்போது பெருகியுள்ள புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கில்கொள்ள வேண்டும். 2010-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டுக்குள் (1,706 2,226) 520 புலிகள் அதிகரித்துவிட்ட சூழலில், இந்தியாவில் அவற்றுக்குச் கணிசமான அளவு காடுகள் அதிகரித்திருக்க வேண்டும். மாறாக, இங்கே ஏற்கெனவே இருக்கும் வனங்களே ஆக்கிரமிப்பில் இருக்கின்றன.

புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை. ஒவ்வொரு புலியும் அதன் இரை ஆதாரத்தை அடிப்படையாகக்கொண்டு தனக்கென்று 5 ச.கி.மீட்டர் முதல் 50 ச.கி. மீட்டர் வரை தனது எல்லையாக நிர்ணயித்துக்கொள்ளும். எனவே, பெருகியுள்ள ஒவ்வொரு புலிக்கும் இரை ஆதாரத்துடன் கூடிய - வேறு புலிகள் இல்லாத - குறைந்தபட்சம் ஐந்து ச.கி.மீட்டர் வனப் பகுதியேனும் தேவை. அதுஇல்லாதபோது இதுபோன்ற ஆட்கொல்லி புலிகள் உருவாவதை தவிர்ப்பது சிரமம்.

சரி, புலி ஏன் நமக்குத் தேவை?

முதல் காரணம், பூமி மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. புலிகளுக்கும் இங்கு உயிர் வாழ அடிப்படை உரிமை இருக்கிறது. இரண்டாவது காரணம், பூமியின் வளமை. மனிதர்கள் இல்லாத புவியில் புலிகள் பாதுகாப்பாகவே வசிக்கும். ஆனால், புலிகள் முதலான உயிரினங்கள் இல்லாத உலகில் மனிதர்கள் வசிப்பதே இயலாது. சங்கிலித் தொடராக இருக்கும் இயற்கையின் உயிர்க் கண்ணிகளுள் ஒன்று புலி. தண்ணீர் இல்லாத காட்டில் தாவரங்கள் இல்லை. தாவரங்கள் இல்லாத காட்டில் மான்கள் போன்ற இரைவிலங்குகள் இல்லை. இரைவிலங்குகள் இல்லாத காட்டில் புலிகளும் இல்லை. தண்ணீர் இல்லாமல் நாமும் இல்லை. எனவேதான் புவிக்குப் புலிகள் தேவை.

*

ஆட்கொல்லி உயிரினம் | சட்டம் என்ன சொல்கிறது?

1972-ம் ஆண்டு வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 9 (1)-ன் கீழ் புலி/ சிறுத்தை ஆகியவற்றுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வது கட்டாயம். ஆனால், அதே வன விலங்குகள் மனிதர்களைக் கொன்றால், அவற்றை வனப் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 11(1) (ஏ)-ன் கீழ் கொல்லலாம்.

* ஒரு விலங்கு ஆட்கொல்லியாக மாறிவிட்டதா என்பதை அறிவியல்பூர்வமான சோதனைகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். கால்தடம் சேகரிக்கப்பட வேண்டும். அது உலவும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கால்தடம் மற்றும் உடல் வரிகள் அல்லது புள்ளிகளைக் கொண்டு ஆட்கொல்லிப் புலி / சிறுத்தையின் அடையாளத்தை உறுதிபடுத்திய பின்பே அதனைக் கொல்ல வேண்டும்.

* ஆட்கொல்லிப் புலி வேறு; ஆளைக் கொல்லும் புலி வேறு. முதல் வகை, மனிதர்களை அடித்துத் தின்பது. இரண்டாவது, இரைவிலங்கு என்று தவறாக மனிதரைக் கணித்தோ தன்னுடைய பாதுகாப்புக்காகவோ கொல்வது. இது விபத்து. இதுபோன்ற சூழலில் அடித்துக் கொன்றுவிட்டு, உடலைச் சாப்பிடாமல் சென்ற புலியைக் கொல்லலாமா, கூடாதா என்பதை சம்பந்தப்பட்ட தலைமை வனப் பாதுகாவலர் முடிவு செய்ய வேண்டும்.

* ஆட்கொல்லி உயிரினத்தைச் சுட்டுக்கொல்லும் பொறுப்பு ஏற்கெனவே இதுபோன்ற ஆட்கொல்லியைச் சுட்டுக் கொன்ற அதிகாரியிடம் மட்டுமே அளிக்க வேண்டும். அவருக்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

* வனத்தை ஒட்டிய மக்கள் வசிப்பிடங்களில் ஆட்கொல்லிப் புலிகள் இருக்கின்றன என்று அடிக்கடி தகவல்கள் கிளம்பும். இந்தத் தகவலுக்கும் உள்நாடு, வெளிநாட்டு வேட்டை கும்பலுக்கும் தொடர்புகள் இருக்கின்றனவா, அரசியல் அழுத்தங்கள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் தலைமை வனப் பாதுகாவலர் கண்டுபிடிப்பது மிகவும் அவசியம். ஏனெனில், இந்தியாவைப் பொறுத்தவரை இப்படியான சூழல்கள் வேட்டைக் கும்பல்களுக்கு சாதகமாகவே அமைகின்றன.

* வன உயிரினங்களை வேட்டையாடும் இச்சையை ஊக்குவிக்கும் என்பதால், ஆட்கொல்லி உயிரினத்தைச் சுட்டுக் கொன்றவருக்கு வெகுமதி அளிக்கக் கூடாது.

* கொல்லப்பட்ட ஆட்கொல்லி உயிரி னத்தைச் சம்பந்தப்பட்ட பகுதியின் வன அதிகாரிகள், கிராம வனக் குழுத் தலைவர், தொண்டுநிறுவனப் பிரதிநிதிகள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். பின்பு அதனை எரித்து, அது சாம்பலானதை உறுதிசெய்வது அவசியம்.

- டி.எல்.சஞ்சீவிகுமார், sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x