Last Updated : 13 Jan, 2015 09:14 AM

 

Published : 13 Jan 2015 09:14 AM
Last Updated : 13 Jan 2015 09:14 AM

பாரீஸ் ஏன் பாரீஸாக இருக்கிறது?

தொலைக்காட்சியில் பார்த்தபோது, எழுந்து நின்று அந்தப் பெருங்கூட்டத்தின் கூடவே சேர்ந்து உச்சஸ்தாயியில் கத்த வேண்டும் போல் இருந்தது: “நானும் சார்லி!”

ஒரு மொழியில் ‘மக்கள் எழுச்சி’ என்பதுபோல, ஜனநாயகத்தை உந்தித் தள்ளும் இரு சொற்களின் சேர்க்கைக்கு, ஊடகவியலாளர்களை வசீகரிக்கும் ஒரு தலைப்புக்கு இணை இல்லை. வரலாற்றில் மிக அரிதான தருணங்களே இந்த ஜோடி சொற்களை உண்மையாகப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகின்றன.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் முஹம்மது அப்பாஸ் என 40 உலகத் தலைவர்கள் மத்தியில் நின்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸிஸ் ஹோலந்த் “இன்று பாரீஸ் உலகின் தலைநகரம்” என்று முழங்கியது கூடுதலான வர்ணனை அல்ல; ‘பாரீஸ் சார்லி ஹெப்டோ பேரணி’ வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய மக்கள் எழுச்சி. கருத்துச் சுதந்திரம் மீதும் படைப்பாளிகள் மீதும் தாங்கள் கொண்டிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தி, பிரெஞ்சு மக்கள் வெளியிட்டிருக்கும் சர்வதேசப் பிரகடனம்!

பிரான்ஸ் வரலாற்றிலேயே மிகப் பெரிய பேரணி என்கிறார்கள் பிரெஞ்சு ஊடகவியலாளர்கள். பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை ஒருவர் 10 லட்சம் என்கிறார்; இன்னொருவர் 20 லட்சம் என்கிறார்; மற்றொருவர் 30 லட்சம் என்கிறார்; வேறொருவர் இரண்டாம் உலகப் போரில் நாஜிக்கள் பிடியிலிருந்து பிரான்ஸ் விடுவிக்கப்பட்டபோது வீதிகளில் கூடிய எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகம் என்கிறார். ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ எனும் மூன்று வார்த்தைகளைத் தன்னுடைய புரட்சி முழக்கமாக்கிக்கொண்ட தேசம், இந்தப் பேரணியில் மூன்று வாக்கியங்களில் அந்த மூன்று வார்த்தைகளைப் புதைத்து முழங்கியது:

“நாங்கள்தான் சார்லி, நாங்கள்தான் காவலர்கள், நாங்கள்தான் பிரான்ஸின் யூதர்கள்!” அவர்கள் உச்சரிக்காமல் உரக்க முழங்கிய இன்னொரு முழக்கம்: “வா, முடிந்தால் எங்களையும் சுடு!” (வரலாறு இதை மறக்காதிருக்கட்டும்: பேரணியின்போது சில இடங்களில் மசூதிகள் தாக்கப்பட்டதையும் தாண்டி ஒருமித்து வெளிப்பட்ட பேரணியின் முழக்கத்தில் கலந்திருந்த பல்லாயிரக் கணக்கான குரல்கள் முஸ்லிம்களுடையவை.)

உலகின் அரசியல் பொருளாதார அதிகாரத் தலை நகரத்தின் இடம் மாறிக்கொண்டே இருக்கலாம். பண் பாட்டுத் தலைநகராக ஏன் பாரீஸ் அசைக்க முடியாமல் நீடிக்கிறது என்பதற்கான காரணம் இதுதான்!

பிரெஞ்சுக் கலாச்சாரத்தில் எப்போதுமே முதல் மரியாதைக்குரியவை புத்தகங்களும் எழுத்தாளர்களும். படைப்பாளிகள்தான் ஒரு சமூகத்தின் முன்னத்தி ஏர்கள் என்பதை முழுமையாக உணர்ந்தவர்கள் அவர்கள். ஒரு ஊழியர், “ நான் நாவல் எழுதப்போகிறேன்; எனக்கு ஒரு வருஷம் விடுமுறை வேண்டும்” என்று கேட்டு, முழுச் சம்பளத்தோடு வீட்டில் உட்கார்ந்து பிரான்ஸில் நாவல் எழுத முடியும். பிரெஞ்சு சமூகமும் அரசும் அந்த வாய்ப்பை வழங்குகின்றன.

“பிரான்ஸில் அடித்தட்டு மக்கள் வீடுகளில்கூடக் குறைந்தது 500 புத்தகங்களைப் பார்க்க முடியும். ஒரு நல்ல செல்வாக்குள்ள எழுத்தாளருக்கும் தொழிலதி பருக்கும் சினிமாக்காரருக்கும் சம்பாத்தியத்தில் அங்கு வேறுபாடே இருப்பதில்லை” என்பார் பிரெஞ்சு சூழலுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டவரான நண்பர் வெ. ராம். பிரெஞ்சுப் பண்பாட்டுத் துறைச் சந்தையில் இன்றைக்கும் அதிகம் வருமானம் ஈட்டித்தருவது பதிப்புத் துறை (400 கோடி யூரோ). இதுவரை அதிகம் விற்ற பிரெஞ்சு படைப்புகளான ‘அந்நியன்’, ‘குட்டி இளவரசன்’ இரண்டுமே பிரெஞ்சில் மட்டுமே ஒரு கோடி பிரதிகளைத் தொட்டவை.

தமிழகத்தை நாம் பிரான்ஸுடன் ஒப்பிட முடியும். தமிழகத்தின் மக்கள்தொகை 7.2 கோடி. பிரான்ஸின் மக்கள்தொகை 6.6 கோடி. 2014-ல் அதிகம் விற்ற பிரெஞ்சு நாவலான வாலரி த்ரியேவெயியேவின் ‘தாங்கஸ் ஃபார் திஸ் மொமென்ட்’ 6 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. 2014-ல் அதிகம் விற்ற தமிழ் நாவலான ஜோ டி குரூஸின் ‘கொற்கை’ (சாகித்ய அகாடெமி விருது பெற்றது) எத்தனை பிரதிகள் விற்றது என்று விசாரித்தேன். 3,000 பிரதிகள் என்கிறார்கள்.

தமிழ்ச் சமூகத்துக்கும் பிரெஞ்சு சமூகத்துக்கும் இடையேயான இடைவெளி இங்கே 5,97,000 பிரதிகள். ஒரு சமூகம் லட்சக் கணக்கில் சுதந்திர, ஜனநாயகக் குரலோடு எழுத்தாளருக்கு ஆதரவாகக் குவிவதற்கும், ஒரு சமூகம் ஒரு எழுத்தாளரின் வீட்டை எரிப்பதற்கும், இன்னொரு எழுத்தாளரை ஊரை விட்டுத் துரத்துவதற்கும் இடையே கடக்க வேண்டிய தொலைவும் அதுவே!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x