Published : 12 Jan 2015 09:41 AM
Last Updated : 12 Jan 2015 09:41 AM
மேல்படிப்புக்காக ஜெர்மனிக்குச் சென்றிருக்கும் குடும்ப மருத்துவரின் மகள் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தபோது, படிப்பின் பளுவைப் பற்றி அவரிடம் கேட்டேன். ஓய்வெடுக்க முடியாத அளவு பாடத்திட்டங்கள், விடுப்பு எடுக்க இயலாத அளவுக்கு கெடுபிடியான விதிமுறைகள், சமையல் உள்ளிட்ட சொந்தத் தேவைகளைத் தாமே கவனித்துக்கொள்ள வேண்டிய சூழல். இவற்றினிடையே 'சுப்பாராவ் சிறுகதைத் தொகுப்பை உடனே அனுப்பி வை, வாசிக்க வேண்டும்' என்று தந்தைக்குக் கடிதம் எழுதியவர் அவர்.
அலட்டிக்கொள்ளாமல் அவர் சொன்ன பதில்: “நேரத்தை நமக்கானதாக ஆக்கிக்கொண்டால் எல்லாம் சாத்தியம்தான்... என் சக மாணவர் ஒருவர் அங்கே கவிதைப் போட்டிகளில் பரிசு வாங்கிக்கொண்டிருக்கிறார், அதற்கு என்ன சொல்கிறீர்கள்?”
85 வயதைத் தொட்டுக்கொண்டிருக்கும் கல்வியாளர் ச.சீ. இராஜகோபாலன் முக்கிய நாளிதழ்கள், வார-மாதப் பத்திரிகைகள் மட்டுமல்லாமல் இலக்கிய இதழ்கள், வெளிநாட்டிலிருந்து தருவிக்கும் அறிவியல் ஏடுகள் என வாசித்துக்கொண்டும், தமது சொந்தக் கருத்தோட்டங்களை எழுதிக்கொண்டும் இருக்கும்போதே, ஒரு மின்னஞ்சல் விடாது வாசித்து, தக்க பதிலும், எதிர்வினையும் போடத் தவறுவதில்லை. முகநூலிலும் இருக்கிறார் என்று கருதுகிறேன்.
புதுக்கோட்டை பிளஸ்-டூ மாணவர் ஷியாம் சுந்தரவேல், தனது பயிற்சித் தேர்வுகளுக்கிடையே தந்தையிடம் கெஞ்சி அனுமதி பெற்று, அவரையும் உடன் அழைத்துக்கொண்டு திருச்சியில் நடைபெற்ற ‘தி இந்து-தமிழ்’ வாசகர் திருவிழாவில் பங்கேற்றுத் திரும்பியிருக்கிறார். படிப்பையும் பார்த்துக்கொள்கிறார்.
- சைதன்யா
அசோகமித்திரன் படிக்க வேண்டும்!
தசைச்சிதைவு நோய்க்கு ஆளாகியிருந்தாலும் நம்பிக்கையின் சிகரத்தில் வசிக்கும் சேலம் சகோதரிகள் வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி இருவரும் புத்தகத்தைத் தூக்கி மடியில் வைத்துப் படிக்கச் சிரமங்கள் இருந்தாலும் ஓயாது படிப்பவர்கள். ஜெயமோகனின் வெண் முரசு அத்தியாயங்களைச் சூடாக அன்றன்று மடிக் கணினியில் வாசித்துவருகிறோம் என்கிறார்கள். பெரிதும் பேசப்படும் கவிஞர் இசையின் சமீபத்திய கவிதைத் தொகுப்பையும் படித்தாயிற்று என்கிறார்கள். “எந்த எழுத்தாளரை இன்னமும் வாசிக்கவில்லையே என்று ஏங்குகிறீர்கள்?” என்று கேட்டால், “அசோகமித்திரன்” என்று பதில் வந்தது.
அவசரமாக ஒரு பரிசுப் புத்தகம் தர வேண்டுமே என்று மறைந்த மருத்துவர் மாணிக்கவாசகத்தின் ‘தூங்காமல் தூங்கி’என்ற அற்புதமான நூலின் பிரதியை ஓசைப்படாமல் எனது மாமியாருடைய அலமாரியிலிருந்து களவாடி எடுத்துச் சென்ற அன்று மாலையே அவரிடம் பிடிபட்டுவிட்டேன். இரண்டு தோள்பட்டையிலும் எலும்புத் தேய்வினால் 24 மணி நேரமும் வலியெடுத்து உதறிக்கொண்டிருக்கும் கைகளைப் பொருட்படுத்தாமல் படுத்தவாறே புத்தகங்களை வாசித்துத் தள்ளும் அவரது உள்ளத்துக்கு நெருக்கமான புத்தகம் அது. வேறு பிரதியை வாங்கித் தந்ததும்தான் விட்டார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கும் நண்பர்-இளைஞர் ஒருவர் இருக்கிறார். அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் எப்படிக் கசக்கிப் பிழியப்படுகிறார்கள் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அனைத்து வேலைப் பளுவுக்கும் நடுவில், எதிர்கால வேலை உத்தரவாதம் பாதிக்கப்பட்டிருக்கும் அந்தச் சூழலிலும்கூட, வேலை பார்க்கும் அந்த நண்பர் மெனக்கெட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு கைபேசியில் அழைத்து, சென்னை புத்தகக் காட்சியில் என்னென்ன நூல்கள் வாங்கலாம் என்று ஆலோசனை வேண்டும் என்றார்.
போய்த்தான் பாருங்களேன்!
‘நேரம் இல்லை’, ‘வாய்ப்பு இல்லை’, ‘ஆசை உண்டு’, ‘ஏனோ சாத்தியப்படவில்லை’ என்றெல்லாம் தங்களைத் தாமே சமாதானப்படுத்திக்கொள்ளும் அன்பர்கள், சும்மாவாவது ஒரு நடை புத்தகக் காட்சி அரங்கத்துக்குள் சென்றால், குடும்பங்களாக வரும் நண்பர்கள் அவர்களுக்குக் கண்ணில் படக்கூடும். ‘இவர் கூடவா இங்கேயெல்லாம்!' என்று பரஸ்பரம் பார்த்துச் சிரிக்கும்படி வேறொருவரும் அங்கே கடை, கடையாய் அலைந்துகொண்டிருப்பதையும் காண நேரிடலாம்.
அப்படிப் புத்தகக் காட்சிக்குச் செல்பவர்கள் “அட, ஆமாம் இந்தப் புத்தகத்தைப் பற்றி யாரோ பேசிக்கொண்டிருந்தார்களே” என்றபடி ஏதாவதொரு நூலைக் கையிலெடுக்கவே செய்வார்கள். வேடிக்கை பார்ப்பதற்காகப் புத்தகக் காட்சியில் நுழைந்தால்கூடப் போதும், ஆர்வமிக்க வாசகராக அவர்கள் வெளியே திரும்புவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில், புத்தகங்களைப் படிப்பதைப் போல அவற்றைப் பார்ப்பதும் பெரு மகிழ்ச்சியல்லவா?
- ச.சீ.ராஜகோபாலன்
பெரிய்ய்ய்ய பட்டியல்!
ஆங்கிலம் 93, தமிழ் 35, இந்தி 1, ஆக 129 புத்தகங்கள்! இது என்ன பட்டியல் என்கிறீர்களா? எனது குட்டித் தோழி சைதன்யா (ஐந்தாம் வகுப்பு, ‘ஓநாயும் ஆட்டுக் குட்டியும்’ படம் நினைவிருக்கிறதா?) கடந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சிக்கு நான்கு முறை சென்று வாங்கி வந்த நூல்கள் இவை. தனது தங்கை படிக்க இவரே தேர்ந்தெடுத்து வாங்கிய 10 புத்தகங்கள் தனி. கதைத் திரட்டுக்கள் மட்டுமின்றி அறிவியல், வரலாறு, இலக்கணப் பயிற்சி இவற்றையும் உள்ளடக்கியது இந்தப் பட்டியல். சைதன்யாவின் பட்டியலைப் படிக்கும்போது சட்டென்று கண்ணில் பட்ட ஒரு புத்தகத் தலைப்பு: ‘லஸ்ஸி, ஐஸ்கிரீம் அல்லது ஃபலூடா’.
வாசிப்பின் திருவிழாவில் ஒரு நூலின் தலைப்பே இத்தனை ருசியைத் தருமானால், வாசித்துத் திளைப்பதற்கு இன்னும் பல மடங்கு சுவை காத்திருக்கிறது புத்தகக் காட்சியில். திருவீதி உலா செல்லத் தயாராவோம்.
- எஸ்.வி. வேணுகோபாலன்,
எழுத்தாளர்,
தொடர்புக்கு: sv.venu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT