Published : 29 Jan 2015 11:35 AM
Last Updated : 29 Jan 2015 11:35 AM
காற்றுகுறித்த பதிவுகளின் தொடர்ச்சியாக, காற்றோடு தொடர்புடைய எஞ்சிய சொற்களையும் வழக்குகளையும் இப்போது பார்க்கலாம்:
அதிர்ஷ்டக் காற்று (இது காற்று இல்லை, ஒரு நம்பிக்கை), இறுகால் (ஊழிக் காற்று), உப்புக்காற்று, ஊதைக்காற்று (வாடைக்காற்று), ஊழிக்காற்று, எதிர்க் காற்று, கடற்காற்று, கரைக்காற்று, காற்றடக்கி (1. துருத்தி, 2. நீர்க்குமிழி), காற்றருந்துதல் (1. காற்றை விழுங்குதல், 2. சோம்பலாக இருத்தல்), காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காற்றழுத்தம், காற்றாட, காற்றாடி, காற்றாடுதல் (கடை, திரையரங்கம் போன்றவற்றில் ஆட்கள் இல்லாமல் மந்தமாகக் காணப்படுதல்), காற்றாலை, காற்றிசைக் கருவி (புல்லாங்குழல், நாகசுரம் போன்றவை), காற்றுக்கடுவல் (பெருங்காற்று), காற்றுகறுப்பு, காற்றுதல் (1. வெளிப்படுத்துதல், 2. அழித்தல்), காற்று நுண்ணறை (நுரையீரல் உள்ளே இருக்கும் சிறிய பாகம்), காற்றுப்பெயர்தல் (காற்று வீசும் காலம் தொடங்குதல்), காற்று பிரிதல் (குடலில் இருக்கும் காற்று ஆசனவாயின் வழியே வெளியேறுதல்), காற்று மண்டலம், காற்றுமானி, காற்றுவாக்கில் (செய்திகளை நேரடியாக அல்லாமல் செவிவழியாகக் கேட்பது தொடர்பாக வரும் சொல்), காற்றுவாங்கு (1. காற்றை அனுபவித்தல், 2. வியாபாரம், தொழில் போன்றவை மந்தமாக இருத்தல்), காற்றொடுக்கம் (காற்று வீசாமல் இருக்கும் நிலை), காற்றோட்டம், சிம்பியடித்தல் (காற்று துள்ளலாக வீசுதல்), சீத்தடித்தல் (காற்று சுழன்றடித்தல்), சண்டமாருதம் (புயல்), சூறைக்காற்று, செஞ்சாமாருதம் (மழையோடு கூடிய காற்று), தணுப்புக் காற்று (குளிர்க் காற்று), தரைக்காற்று, தென்மேற்குப் பருவக்காற்று, நடைக்காற்று (பரவி வீசும் காற்று), நேர்க்காற்று (அனுகூலமான காற்று), பருவக்காற்று, பேய்க்காற்று (சுழல் காற்று), மந்தமாருதம் (மெதுவாக வீசும் காற்று), மலையமாருதம் (மலையிலிருந்து வீசும் காற்று), வடகிழக்குப் பருவக்காற்று, வடகோடை (வடமேற்குக் காற்று), விசைக்காற்று (ஒருவர் விரைந்து செல்லும் வேகத்தால் உண்டாகும் காற்று),
சொல்தேடல்:
சில வாரங்களுக்கு முன்பு ‘பாராசூட்’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கேட்டிருந்தோம். வாசகர்களின் பரிந்துரைகள் இங்கே…
பாரத் ஜம்புலிங்கம்:
வான்வழிக் குடை, வான்குடை மிதவை.
பத்மாவதி வீரவாகு:
வான்குடை.
சந்திரா மனோகரன்:
வான்குடை, இறங்கு வான்குடை, இறங்கு மிதவை.
கோ. மன்றவாணன்:
வான்குடை, குதிகுடை, இறங்குகுடை, காப்புக்குடை, காற்றுக்குடை, தரையிறங்கு குடை, கவசக்குடை, குடைக்கவசம், கவசக்கூடு, மிதவைக்குடை, காப்பு மிதவை, இறங்கு மிதவை.
கிருத்தி ஜனார்தனன்:
காற்றுந்து, காற்றோடம்.
ஹுயூமன் பீயிங்:
குடை காப்பான்.
இந்த வாரச் சொல்தேடல்:
ஆன்ட்டி ஹிஸ்டமின் (antihistamine) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
- ஆசை, தொடர்புக்கு: asaithambi@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT