Last Updated : 04 Apr, 2014 10:33 AM

 

Published : 04 Apr 2014 10:33 AM
Last Updated : 04 Apr 2014 10:33 AM

மார்ட்டின் லூதர் கிங்: ஒரு சமத்துவக் கனவு

1929-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி பிறந்த அந்தக் குழந்தைக்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்ட பெயர் மைக்கேல் லூதர் கிங். புராட்டெஸ்டாண்டு புரட்சியாளர் மார்ட்டின் லூதர் கிங்கின் மேல் கொண்ட பற்றின் காரணமாக அந்தக் குழந்தையின் தந்தை மார்ட்டின் லூதர் கிங் என்ற பெயரைப் பிற்பாடு தனது பிள்ளைக்கு வைத்தார். முன்னவருடன் வேறுபடுத்தி அடையாளம் காண்பதற்காக மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) என்று பின்னாளில் அழைக்கப்பட்டது அந்தக் குழந்தை.

தனது தந்தை பாதிரியாராக இருந்த திருச்சபையிலேயே கிங்கும் 1947-ல் சேர்ந்தார். இந்தத் திருச்சபையில்தான் சில ஆண்டுகள் கழித்துக் கீழ்க்கண்டவாறு அவர் முழங்கினார்:

“அமெரிக்காவே, நீ இலக்கற்றுப் போய்விட்டாய். உனது சகோதரர்கள் 1.9 கோடிப் பேரை மிதித்துவிட்டுச் சென்றுகொண்டிருக்கிறாய். ஏதோ சில மனிதர்கள் மட்டும், ஏதோ சில வெள்ளையர்கள் மட்டுமல்ல, எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். எழுந்திரு அமெரிக்கா, உனது இலக்குக்குத் திரும்பிவா.”

அனைவருக்கும் நாயகன்

கிங், கருப்பின மக்களுக்காகப் போராடியவர் என்றாலும், அவரது இறுதி இலக்கு, சகோதரத்துவம், சமத்துவம், சமாதானம் ஆகியவை நிறைந்த உலகுதான். அந்த உலகில் கருப்பினத்தவர் இருப்பார்கள், வெள்ளை யினத்தவர் இருப்பார்கள். ஆனால், பாகுபாடுகள் என்பது இருக்காது. போர் இருக்காது. அன்பின் வெளிச்சத்தில் ஒவ்வொரு நாளும் விடியும்.

அவர் போராட்டக் களத்தில் இறங்கிய காலகட்டத்தில் தான் ஆப்பிரிக்க நாடுகள் பலவும் ஏகாதிபத்தியத் தளை களிலிருந்து விடுபட்டுக்கொண்டிருந்தன. ஏகாதிபத்திய தளைகளிலிருந்து விடுபட்டாலும் இனவெறி நீடிக்கத்தான் செய்தது. அந்த நேரத்தில் கிங்கின் பிரவேசமும் ஆளுமையும் மற்ற நாட்டுக் கருப்பினத்தவரையும் வசீகரித்தன. கருப்பின மக்களின் அகிம்சைப் போராட்டத்தில் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற நாயகர்கள் கிடைத்தது மிகப் பெரிய உத்வேகமாக அந்த மக்களுக்கு அமைந்தது.

எதிரெதிர் நிலைகளுக்கு நடுவே…

அகிம்சைக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கிங் வெள்ளையின வெறியாளர்களுக்கும் கருப்பினத் தீவிர நிலையாளர்களுக்கும் நடுவே அகப்பட்டுக்கொண்டார்.

1968-ம் ஆண்டு, ஏப்ரல் 4-ம் தேதி அவர் சுட்டுக் கொல்லப் படுவதற்குச் சில நாட்கள் முன்பு மக்கள் திரளிடையே அவர் உரையாற்றியபோது இப்படிச் சொன்னார்:

“கலவரங்களில் ஈடுபடுவதற்கும் கோழைத்தனமான அடிபணிதலுக்கும் மாற்றாக ஒரு வழிமுறை நமக்குத் தேவை. அகிம்சைதான் நமது வலுவான ஆயுதம்.”

1966 வாக்கில் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் நடந்த உரிமைப் போராட்டங்களுக்கும் வடக்குப் பகுதி நகரங் களில் நடந்த இனக் கலவரங்களுக்கும் பிறகு, சில கருப்பினக் குழுக்கள் ‘கருப்பர்கள் அதிகாரம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தன. ஆனால், கிங் அதை மறுத்தார்:

“கருப்பினத்தவர் தங்கள் அச்சங்களிலிருந்து விடுபட வெள்ளையினத்தவரின் உதவி தேவை. அதேபோல் வெள்ளையினத்தவர் தமது குற்றவுணர்விலிருந்து விடுபட கருப்பினத்தவரின் உதவி தேவை. கருப்பர் ஆதிபத்தியம் என்ற கொள்கை வெள்ளை ஆதிபத்தியத்தைப் போன்றே தீங்கானது.”

எனக்கொரு கனவு…

அவரது நம்பிக்கையின் அடிநாதமாக இருந்தது மனிதர்களின் நற்குணத்தின் மீது அவர் கொண்ட ஆழமான நம்பிக்கைதான். 1963-ல் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கருப்பின மக்கள் வாஷிங்டனில் அணிவகுத்தபோது கிங் ஆற்றிய உரையைத் தொலைக்காட்சியில் பார்த்த கோடிக் கணக்கான அமெரிக்கர்கள் – வெள்ளையர் உட்பட- மிகவும் நெகிழ்ந்துபோனார்கள்.

உலகையே கட்டிப்போட்ட அந்த உரையின் சில பகுதிகள்:

எனக்கொரு கனவு இருக்கிறது… எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டார்கள் என்ற தனது நம்பிக்கைக்கு ஏற்ப ஒருநாள் இந்த தேசம் எழுச்சி பெறும், அந்த நம்பிக்கையின்படி இந்த தேசம் செயலாற்றும் என்று எனக்கொரு கனவு இருக்கிறது.

எனக்கொரு கனவு இருக்கிறது… எனது நான்கு குட்டிக் குழந்தைகளும் தோல் நிறத்தால் அல்லாமல் அவர்களுடைய குணத்தால் மட்டுமே மதிப்பிடப்படக்கூடிய ஒரு தேசத்தில் வாழ்வார்கள் என்று எனக்கொரு கனவு இருக்கிறது.

எனக்கொரு கனவு இருக்கிறது… அலபாமா மாகாணத் தின் கருப்பினச் சிறுவர், சிறுமிகள் வெள்ளையினச் சிறுவர் சிறுமியரோடு சகோதர சகோதரியராகக் கைகோத்துக் கொள்வார்கள் என்று எனக்கொரு கனவு இருக்கிறது.

இந்த நம்பிக்கையோடு, நமது தேசத்தில் அபஸ்வரமாக ஒலிக்கும் ஓசையையெல்லாம் சகோதரத்துவத்தின் இனிய சிம்ஃபொனியாக நம்மால் மாற்ற முடியும். இந்த நம்பிக்கை யோடு, ஒருநாள் நாமெல்லாம் சுதந்திரமானவர்களாக ஆவோம் என்ற உணர்வோடு, நாமெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து உழைக்கவும், ஒன்றாகப் பிரார்த்திக்கவும், ஒன்றாகப் போராடவும், ஒன்றாகச் சிறை செல்லவும், சுதந் திரத்துக்காக ஒன்றாகத் தோள்கொடுக்கவும் முடியும்.”

நிராயுதபாணியான உண்மை

1964, டிசம்பர் 10 அன்று சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொள்ளும்போது கிங்கின் ஏற்புரை உலகம் என்றுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று:

“இனவெறி, போர் ஆகியவற்றின் விண்மீன்களற்ற நள்ளிரவுதான் துரதிர்ஷ்டவசமாக மனிதனுக்கு விதிக்கப பட்டது என்றும் சமாதானத்தின், சகோதரத்துவத்தின் விடியல் என்பது ஒருபோதும் வரவே வராது என்றும் சொல்வதை யெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.”

மேலும் சொல்கிறார்…

“நிராயுதபாணியான உண்மை, நிபந்தனையற்ற அன்பு ஆகியவற்றின்படிதான் வாழ்க்கை அமையும் என்று நான் நம்புகிறேன். தற்காலிகமாகத் தோற்கடிக்கப்படும் நியாயம், தீமையான வெற்றியைவிட உறுதியானது என்று நான் நம்புவது இதனால்தான்.”

வெவ்வேறு வகை மக்களிடம் வெவ்வேறு விதத்தில் அவர் பேசினார். அமெரிக்க வெள்ளையின மிதவாதிகளிடம் பேசிய விதம், வெள்ளையின வெறியாளர்களிடம் பேசிய விதம், உலக மக்களிடம் பேசிய விதம், தனது இனத்துப் புரட்சிகர இளைஞர்களிடம் பேசிய விதம், படிப்பறிவற்ற ஏழை எளிய கருப்பின மக்களிடம் பேசிய விதம் ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கவை.

1963-ல் கருப்பின ஏழை எளியவர்களிடம் இப்படி உரையாற்றுகிறார்:

கிங்: உங்களை அவர்கள் அடிக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறேன்.

கூட்டத்தினர்: ஆமாம், ஆமாம்.

கிங்: உங்களை அவர்கள் இழிவாக வசைபாடுகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன்.

கூட்டத்தினர்: ஆமாம், ஆமாம்.

கிங்: உங்கள் வீடுகளில் புகுந்து மோசமான செயல்களில் ஈடுபடுவதுடன் அவர்கள் உங்களைத் தாக்குகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன்.

கூட்டத்தினர்: ஆமாம், ஆமாம்.

கிங்: உங்களில் சிலர் கத்தி வைத்திருக்கலாம். உங்களில் சிலர் ஆயுதங்கள் வைத்திருக்கலாம். அவற்றை அவற்றுக்கு உரிய இடத்திலேயே வைத்துவிடும்படி உங்களுக்கு நான் சொல்கிறேன். அகிம்சை என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள், தர்மத்தின் மார்புக் கவசத்தை அணிந்துகொள்ளுங்கள், உண்மையின் கேடயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், நிற்காமல் போய்க்கொண்டே இருங்கள்.”

சோதனைக் களம்

பேருந்துகளில் கருப்பினத்தவர் பாரபட்சமாக நடத்தப்படுவதைக் கண்டித்து மாண்ட்கமரி நகரத்தில் பேருந்துகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் அந்த மக்கள் ஈடுபட்டனர். அந்த 381 நாள் போராட்டத்தை இளம் பாதிரியார் கிங் தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்தார். தனது ஆசான்களான தோரோ, காந்தி ஆகியோரின் ஒத்துழையாமைக் கருத்துகளைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கான களமாக அந்தப் போராட்டத்தை கிங் மாற்றினார். கைதுசெய்யப்படும்போது அவர் கூறியது:

“அன்பெனும் ஆயுதத்தைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும். நம்மை வெறுப்பவர்கள் மீது கருணையும் புரிந்துணர்வும் கொள்ள வேண்டும் நாம். நம்மை வெறுக்கும்படி பலருக்கும் கற்பிக்கப்பட்டிருப்பதால் அவர்களுடைய வெறுப்புக்கு அவர்கள் முழுக் காரணம் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.”

மரணம்தான் விலையென்றால்…

என்றாவது ஒருநாள், தான் கொல்லப்படுவேன் என்று அவருக்குத் தெரியும். தன் படுகொலையைப் பற்றி முன்கூட்டியே அவர் இப்படிச் சொல்கிறார்:

“என்னுடைய வெள்ளையினச் சகோதர, சகோதரிகளை ஆன்மரீதியிலான மரணத்திலிருந்து காப்பாற்று வதற்கு என்னுடைய உடல்ரீதியிலான மரணம்தான் விலையென்றால், அதைவிட வேறு எந்தவித மீட்சியும் சிறப்பாக இருக்காது.”

இன்று மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) படுகொலை செய்யப்பட்ட தினம்.
தொடர்புக்கு: asaithambi.d@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x