Last Updated : 05 Jan, 2015 09:24 AM

 

Published : 05 Jan 2015 09:24 AM
Last Updated : 05 Jan 2015 09:24 AM

அமெரிக்கா-கியூபா உறவு: இப்படியும் ஓர் ராஜதந்திரம்

செயற்கை முறை கருத்தரிப்பு அமெரிக்கா-கியூபா உறவில் எவ்வாறு ஒரு புதிய சகாப்தத்தை உண்டாக்கியது?

அமெரிக்கா - சீனா உறவில் சிக்கல் இருந்த காலகட்டத்தில், பாண்டா ராஜதந்திரம் மற்றும் பிங்பாங் ராஜதந்திரம் ஆகிய சொற்கள் மிகவும் பிரபலமாயின. தற்போது அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையேயான புது உறவுக்கான வியப் பூட்டும் ஒரு புதிய சொல்: விந்து ராஜதந்திரம்.

ராஜதந்திர உத்தியில் சென்ற மாதம் ஒரு முக்கியமான சாதனை நிகழ்ந்துள்ளது. கலிஃபோர்னியச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் கியூபா உளவு அமைப்பின் தலைவரான ஜிரார்தோ ஹெர்னான்டஸ் 2,245 மைலுக்கு அப்பால் உள்ள தன் மனைவியைக் கருத்தரிக்க அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை உறுதிசெய்திருக்கிறது.

‘வாஸ்ப்’ எனப்படும் கியூபாவின் உளவு அமைப்பின் தலைவரான ஜிரார்தோ ஹெர்னான்டஸ், கடந்த வாரம் ஹொஸே மார்த்தி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் ஹெர்னான்டஸின் மனைவி பெரீஸும் அவரை வாழ்த்தினார்கள். தொலைக்காட்சிகளில் அப்போது ஒளிபரப்பான அந்த நிகழ்வில், ஹெர்னான்டஸின் மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

எப்படி நிகழ்ந்தது?

இது எப்படி? கியூபர்கள் வியந்தார்கள். ஹெர்னான்டஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருக்கிறார். அவர் 2001-ல் ‘பிரதர்ஸ் டு த ரெஸ்கியூ’ என்ற அமைப்பைச் சேர்ந்த இரு பயணியர் விமானங்களை கியூபாவின் விமானத்திலிருந்து சுட்டு, கொலைக் குற்றத்தில் ஈடுபட்டமைக்காகக் குற்றம்சாட்டப்பட்டவர். அப்போது நான்கு கியூபா-அமெரிக்கர்கள் கொல்லப்பட்டார்கள். ஹெர்னான்டஸ் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றார்.

ஹெர்னான்டஸ் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்த தோடு மட்டுமின்றி, அவர் மனைவியும் கியூபா உளவுத் துறைக்காகப் பணியாற்றியதன் காரணமாகச் சிறையில் இருந்த தன் கணவரைச் சந்திக்க அமெரிக்காவால் அனுமதிக்கப்படாமல் தடைவிதிக்கப்பட்டதாக கியூபா அரசு கூறியது.

இப்போதுதான் சிக்கல். எங்கு பார்த்தாலும் புரளி. அந்தக் குழந்தைக்குத் தந்தை யார்? ஹெர்னான்டஸ் சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர்கள் இருவரும் ரகசியமாகச் சந்திக்க கியூபா அரசு உதவியிருக்குமா? உண்மை என்னவோ வேறு விதமாக இருந்தது. ஹெர்னான்டஸ், தன் மனைவியின் கருத்தரிப்புக்குக் காரணம், ‘‘உயர்நிலைப் பேச்சுவார்த்தைகள்தான்’’ என்றார்.

ரிமோட் கன்ட்ரோல்

“இந்தப் பேச்சுவார்த்தைகளின் காரணமாகக் கிடைத்த பலன்களில் ஒன்று இதுதான்” என்று ஹெர்னான்டஸ் கர்ப்பமாக உள்ள தன் மனைவியின் வயிற்றைச் சுட்டிக் காட்டினார். தடவிக்கொண்டே “ரிமோட் கன்ட்ரோல் மூலமாகச் செய்ததுபோல்தான் எல்லம் நடந்தது. இருப்பினும் அனைத்தும் சுபமாகவே முடிந்தது” என்றார்.

காஸ்ட்ரோ மற்றும் கியூபாவின் உயர்நிலை அரசியல் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்ட நிகழ்வில், அந்தத் தம்பதியினரும் விடுதலை செய்யப்பட்ட மற்ற உளவாளிகளும் இருந்தார்கள். அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சியில் பேசும்போது ஹெர்னான்டஸ், “எல்லோரும் என்னிடம் இதுபற்றியே கேட்கிறார்கள். அவர்களுடைய பேச்சுகளையும் அனுமானங்களையும் கேட்கும்போது வேடிக்கையாக இருந்தது. உண்மையை நாங்கள் காப்பாற்ற வேண்டி அமைதியாக இருந்தோம். அனைத்தையும் முழுமையாக எங்களால் கூற முடியாது. நல்லது நடக்கக் காரணமாக இருந்தவர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது.”

இது தொடர்பான வெளியுறவுப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது ஹெர்னான்டஸின் விந்தணு சேகரிக்கப்பட்டு, கியூபாவுக்கு அனுப்பப்பட்டு, ஹெர்னான்டஸின் மனைவி பெரீஸ் செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கப்பட்டார் என்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்கள் சிஎன்என் நிறுவனத்திடம் கூறினார்கள்.

பதிலுக்குப் பதில்

கியூபாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஆலன் கிராஸுக்கு, நல்ல சூழலை உருவாக்கித்தருவதற்கு ஈடாக அமெரிக்கா இந்த வேண்டு கோளை ஏற்றதாக அமெரிக்க நீதித் துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்தார். இரு நாட்டுச் சிறைக் கைதிகள் பரிமாற்றத்தின்போது, கடந்த மாதம் கிராஸ் விடுதலை செய்யப்பட்டார்.

“தன் கணவர் மூலமாகக் குழந்தை பெற விரும்பிய பெரீஸின் வேண்டுகோளை அமெரிக்கா ஏற்று, அதற்காக உதவியதை நாங்கள் உறுதி கூறுகிறோம். அவரது வேண்டு கோள் செனட்டர் லெய்ஹீயிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்தான் க்யூப சிறையில் கிராஸ் இருந்தபோது, அவரது சூழலை மேம்படுத்த வேண்டியிருந்தார்” என்று செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ரோடென்புஷ் கூறினார்.

க்யூபாவுடனான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ள லெய்ஹீயுடன் உதவிய டிம் ரைசர், ‘‘ஹெர்னான்டஸ் குழந்தை பெற்றுக்கொள்ள உதவியது, கியூபா நிர்வாகத்தினர் கிராஸை சிறையில் நல்ல முறையில் நடத்தத் துணைபுரிந்ததோடு மட்டுமின்றி, இந்த ஒரு சாதனையை நிகழ்த்த ஒரு முக்கியமான சலுகையாகவும் இருந்தது’’ என்றார்.

“இவர் சிறையில் இறந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவரது மனைவி குழந்தை பெற்றுக்கொள்ள இது ஒன்றே சந்தர்ப்பம்” என்றும் ரைசர் சிஎன்என் நிறுவனத்திடம் கூறினார். தங்களின் பெண் குழந்தை இன்னும் இரு வாரங்களில் பிறக்கவிருப்பதாகவும் அவளுக்கு ஹீமா என்று பெயரிட உள்ளதாகவும் ஹெர்னான்டஸ் கூறினார்.

தி கார்டியன், தமிழில்: பா. ஜம்புலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x