Last Updated : 09 Jan, 2015 10:19 AM

 

Published : 09 Jan 2015 10:19 AM
Last Updated : 09 Jan 2015 10:19 AM

மாமனிதரின் மறுவருகை

காந்தி இந்தியாவுக்குத் திரும்பி 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்தபோது அவருக்கு 45 வயது. அதே வருடம் ஜனவரியில் கோகலேக்கு எழுதிய கடிதத்தில் சி.எஃப். ஆண்ட்ரூஸ், காந்தி ஏன் இந்தியா திரும்ப வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்கிறார்: “அவர் தென்னாப்பிரிக்காவில் செய்ய வேண்டிய வேலை முடிந்துவிட்டது- மேன்மையுடன் முடிந்துவிட்டது. ஆனால், அது அவரை ஏறத்தாழ நொறுக்கிவிட்டது. அவர் இங்கிருந்து திரும்பிச் செல்வதுதான் அவருக்கும் நல்லது, (இங்கிருக்கும் இந்திய) சமூகத்துக்கும் நல்லது. அவருக்கு முன்னால் மற்றவர்கள் ஒன்றுமே இல்லை. எனவே, அவர் இங்கு இருந்தால் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் உருவாகவே முடியாது.”

காந்தி 1914-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டிருந்தால்…

23 வருடங்கள், அதுவும் இளமையின் வருடங்கள், ஒருவரது வாழ்வில் மிகவும் முக்கியமானவை. இந்த வருடங்களில் காந்தி தனக்கென்று ஏதும் சேர்த்துக் கொள்ளவில்லை. 1914-ம் ஆண்டு மார்ச் மாதம் அவரைக் கொலை செய்ய முயற்சி நடப்பதாக அவர் அறிந்தார். தனது மருமகன் மகன்லால் காந்திக்கு எழுதிய கடிதத்தில் “அவ்வாறு நடந்தால் அது வரவேற்கத்தக்கது. எனது பணிக்கு ஏற்பட்ட மிகச் சரியான முடிவாக இருக்கும்” என்று காந்தி குறிப்பிடுகிறார்.

கொலை செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று குடும்பத்துக்குத் தெளிவான குறிப்புகள் கொடுத் திருந்தார். அவற்றில் ஒன்று விவசாயிகளைப் போல எளிமையாக வாழ வேண்டும் என்பது. அதற்குத் தேவையான பணத்துக்கு அவரது நண்பர் பிராண் ஜீவன் மேத்தாவை நம்பியிருந்தார் (பிராண் ஜீவன் மேத்தா- பர்மாவில் வாழ்ந்துகொண்டிருந்தவர். இவருக்காகத் தான் காந்தி தனது புகழ் பெற்ற ‘ஹிந்த் ஸ்வராஜ்’ நூலை எழுதினார்).

காந்தி அப்போதே கொலை செய்யப்பட்டிருந்தால், அவர் வரலாற்றின் ஒரு அடிக்குறிப்பாக ஆகியிருப்பார். இந்திய சுதந்திரப் போராட்டம் சென்ற தடங்கள் வேறாக இருந்திருக்கும். அவரது தென்னாப்பிரிக்கச் சோதனைகள் ஒரு மிகச் சிறிய அரங்கில் நடத்தப்பட்டவை. அங்கிருந்த இந்தியர்கள் இரண்டு லட்சத்துக்கும் குறைவுதான். பல கோடி மக்கள் கொண்ட இந்தியப் பேரரங்கு காந்திக்குக் கிடைத்தது வரலாற்றில் குறிப்பிடத் தக்க தற்செயல்களுள் ஒன்று!

விடைபெற்ற காந்தி

காந்தி இந்தியா திரும்பப்போகிறார் என்று தெரிந்ததும் தென்னாப்பிரிக்க இந்தியர்கள் பல சமூகக் குழுக்கள் மத்தியில் அவரைப் பேச அழைப்பு விடுத்தார்கள். காந்தி பேசிய குழுக்களில் ஒன்று துப்புரவுத் தொழிலாளர்களுடையது. அவர் பேசும்போது “நீங்கள் எங்கள் சகோதரர்கள். உங்களை அவமரியாதை செய்வது எங்களது தகுதி எவ்வளவு குறைவானது என்பதைத்தான் காட்டுகிறது. அது ஒரு பெரிய அறப் பிழை. கீதையின் சொற்களுக்கு மாறானது” என்று சொன்னார்.

காந்தியைச் சிறையில் அடைத்த ஜெனரல் ஸ்மட்ஸ் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். “துறவி எங்கள் கரைகளை விட்டுச் சென்றுவிட்டார் – நிரந்தரமாக என்று நம்புகிறேன்” என்று தனது நண்பருக்கு எழுதினார்! இந்தியாவில் தான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை காந்தி கூட்டம் ஒன்றில் சொன்னார். “நான் வன்முறையில்லாமல் போராடுவதில் முழுமையடை யாதவன். முழுமையடைய முடியுமென்றால் அது இந்தியாவில்தான் முடியும்.”

அவர் ஆகஸ்ட் 1914-ம் ஆண்டு லண்டன் வந்தடைந்த போது அங்கு இந்தியத் தலைவர்கள் பலர் முகாமிட்டிருந் தார்கள். காந்திக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் அவரது போராட்டமுறையை வாழ்த்திப் பேசியவர்களில் சரோஜினி நாயுடுவும் ஜின்னாவும் முக்கியமானவர்கள்.

இந்தியாவில் காந்தி

1915-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி பம்பாய் துறை முகத்தில் காந்தி இறங்கியபோது, முதல் உலக மகா யுத்தம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் குடிமகன் என்ற முறையில் அவர் போரை ஆதரித்தாலும், இந்தியாவின் எதிர்காலம் பற்றிய கவலை அவருக்கு நிச்சயம் இருந்தது.

பூனாவுக்குச் சென்ற அவர் கோகலேயைச் சந்தித்து ‘இந்தியாவின் தொண்டர்கள் ’ அமைப்பில் சேர்ந்து பணியாற்ற விரும்பினார். தான் இருந்த காலனியில் அவர் செய்த முதல் காரியம் கழிப்பறைகளைச் சுத்தம் செய்தது. ‘தொண்டர்கள்’ அதிர்ந்துபோனார்கள். கோகலேயிடம் சென்று முறையிட்டார்கள். கோகலே காந்தியைக் கூப்பிட்டுக் கழிப்பறைகளை அவர் சுத்தம் செய்யத் தேவையில்லை என்று சொல்லி அவரது மனதை மாற்றுவதற்குள் பெரும்பாடு பட்டுப்போனார்.

கோகலேயின் ஆணைப்படிதான் காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்து, இந்தியாவை அறிய முற்பட்டார். எங்கு சென்றாலும் ரயிலின் மூன்றாம் வகுப்பில் சென்ற அவர் மக்களோடு மக்களாக இயங்கி அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு புரிதலை அடைந்தார்.

வள்ளியம்மையும் மற்ற தியாகிகளும்

1915-ம் ஆண்டு மார்ச் மாதம் அவரும் கஸ்தூர்பா காந்தியும் சென்னையில் இறங்கினார்கள். காந்தி தங்கியது சென்னை தம்புச் செட்டித் தெருவில் இருந்த நடேசன் வீட்டில். நடேசன் அன்றைய காங்கிரஸின் மிதவாதத் தலைவர்களில் முக்கியமானவர். காந்தியின் ‘ஹிந்து ஸ்வராஜ்’ புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பதிப்பித்தவர். காந்தியின் அறையில் இரு கட்டில்களும் நாற்காலியும் மேஜையும் இருந்தன. காந்தி அறைக்குள் நுழைந்ததும் செய்த முதல் காரியம் அவற்றை அகற்றியதுதான். எங்களுக்குத் தரையே போதும் என்று அவர் நடேசனிடம் சொன்னார்.

காந்திக்கு அளிக்கப்பட்ட வரவேற்புரையில் அவருக்குப் புகழ் மாலைகள் சூட்டப்பட்டன. காந்தி அளித்த பதில் வரலாற்றுப் புகழ் பெற்றது: “நீங்கள் சொன்னவற்றுக்கு நான் பத்து சதவீதம் தகுதியானவன் என்று வைத்துக்கொண்டாலும், துன்பப்படும் மக்களுக்காக தியாகம் செய்த தமிழ் மக்களைப் பற்றிச் சொல்ல உங்களிடம் வார்த்தைகள் இருக்கின்றனவா?

நாகப்பனையும் நாராயணசாமியையும் பற்றிச் சொல்ல உங்களிடம் வார்த்தைகள் இருக்கின்றனவா? பதினாறு வயதில், எலும்பும் தோலுமாக மாரிட்ஸ்பர்க் சிறையிலிருந்து விடுபட்டு உயிரிழந்த தில்லையாடி வள்ளியம்மையைப் பற்றிப் பேச உங்களிடம் வார்த்தைகள் இருக்கின்றனவா? நான் இவர்களை ஊக்குவித்தேன் என்று சொல்கிறீர்கள். நான் உடன் படவில்லை. இவர்கள்தான், எந்தப் பலனையும் எதிர்பாராத தங்கள் சேவையின் மூலம் என்னை ஊக்குவித்தனர்.”

இந்தியாவின் விடுதலைப் போராட்டம் எப்படியிருக்கப் போகிறது என்பதற்கு ஒரு முன்னோட்டமாக காந்தி இங்கு கூறியது அமைந்தது.

“இந்துக்கள் மட்டுமன்று, முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், பார்ஸிகள், போன்ற இந்திய மக்களின் எல்லாப் பிரிவினரும் போராடினார்கள். இந்தியாவின் ஒவ்வொரு அங்கமும் போராட்டத்தில் பங்கு பெற்றது. தாங்கள் எதிர்கொள்ளும் அபாயம் என்ன என்பதும் இந்தியர்களான தமது லட்சியம் என்ன என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள்தான் - அவர்கள் மட்டும்தான் - வன்முறையை ஆத்ம சக்தியால் எதிர்கொண்டார்கள்.”

காந்தி காந்தியாகத்தான் இருந்தார்

மாயவரத்தில் அவர் ‘மகாஜனங்கள்’ கூட்டம் ஒன்றில் ஆற்றிய உரையில் சொன்னார்: “பஞ்சம சகோதரர் களை நான் தற்செயலாகச் சந்தித்தேன். அவர்கள் குடிக்கத் தண்ணீர் இல்லை, வாழ்வதற்கு வேண்டிய பொருட்களை வாங்க முடியவில்லை. நிலம் வாங்குவது இயலாது. இந்த நிலை நீடிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? இதுவா இந்து மதம்? எனக்குத் தெரியவில்லை… ஒருவேளை இது இந்து மதத்தின் ஒரு அங்கம் என்று நிறுவப்பட்டால் நான் இந்து மதத்தையே எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தத் தயங்க மாட்டேன்.”

காந்தி காந்தியாகத்தான் எப்போதும் இருந்தார்.

- பி.ஏ. கிருஷ்ணன்,
‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x