Published : 19 Jan 2015 09:55 AM
Last Updated : 19 Jan 2015 09:55 AM
“காசுக்காக எழுதாத தமிழ் எழுத்தாளனைக் காசு தராமல் எப்படி ஏமாற்ற முடியும்?” என்று கேட்டார் ஒரு மூத்த எழுத்தாளர். மனங்கசந்த கூற்று இது. தமிழ் செழிக்க தமிழ்ப் பதிப்புலகமும் செழிக்க வேண்டும். தமிழும் பதிப்புலகும் செழிக்க தமிழ் எழுத்தாளர்கள் செழிக்க வேண்டும். தமிழால் வாழ்பவர்களின் - பிழைப்பவர்களின் அல்ல- எண்ணிக்கை பெருகினால் தமிழும் பெருகும். தமிழால் செழிக்க வேண்டியவர்களின் பட்டியலில் முதன்மையான இடம் தமிழ் எழுத்தாளர்களுக்கு உண்டு. தமிழ் எழுத்தாளர் ஊக்கத்துடன் எழுத்துப் பணியில் ஈடுபடவில்லை எனில், தமிழ் எப்படிச் செழிக்கும்? தமிழ் பதிப்புத் துறை எப்படி வளரும்?
இன்று தமிழ் எழுத்தாளர் தமது ஆற்றலால் பல துறைகளிலும் புகுந்து புறப்படத் தொடங்கியிருப்பது வரவேற்கப்பட வேண்டியது. அதே நேரம், பிற துறைகளில் தமது எழுத்தாற்றலை விற்காமல், தனது ஆர்வத் துறையிலேயே செயல்பட்டு, எழுத்தாளர் வாழும் சூழல் ஏற்படுவது அவசியமானது. தமிழ்த் திரைப்படத் துறையில் பங்களிப்பவர் அனைவருமே அதனாலேயே வாழ்வதும் செழிப்பதுமே அதனை வளர்ச்சியடைந்த துறையாக்குகிறது.
முன்னேற்றம் இல்லாமல் இல்லை!
தமிழ் எழுத்தாளர் நிலைமையில் முன்னேற்றம் இல்லாமல் இல்லை. காப்புரிமைபற்றிய விழிப்புணர்வு இன்று நிச்சயம் ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் புதுமைப்பித்தன் குடும்பத்தின் காப்புரிமைக்கு எதிராகத் தமிழகத்தின் முன்னணி முற்போக்கு எழுத்தாளர்கள், அறிஞர்கள் பலரும் திரண்டனர். அத்தகைய இழிநிலை இன்று ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், இன்றும் தமது எழுத்து வருமானத்தை நம்பி வாழாத எழுத்தாளரும்கூட பதிப்பாளர் பற்றிய பல மனக்குறைகள் கொண்டுள்ளார்கள். முன்னர் மவுனத்தில் வெதும்ப வேண்டியிருந்தது. இன்று ஃபேஸ்புக்கில் குமுற முடிகிறது. சமயத்தில் ஆதரவு திரட்டிக் கொஞ்சம் சாதிக்கவும் முடிகிறது. முன்னேற்றம்தான்.
முந்தைய தலைமுறைப் பதிப்பாளர்கள் பலரும் புத்தகப் பிரியர்கள் அல்ல, வாசகர்கள் அல்ல, எழுத்தின் ஆற்றலை உணர்ந்தவர்கள் அல்ல. சக்தி கோவிந்தன் போன்ற அற்புதமான விதிவிலக்குகள் உண்டு எனினும், அவர்கள் அதிகமும் நூல் பதிப்பித்தலை வெறும் தொழிலாக மட்டுமே கண்டவர்கள். இன்றைய தலைமுறைப் பதிப்பாளர்கள் அப்படி அல்ல. இவர்கள் கற்றவர்கள், எழுத்தோடு உயிரோட்டமான தொடர்புடையவர்கள், பதிப்புத் தொழிலின் பண்பாட்டுப் பெறுமானத்தை அறிந்தவர்கள்.
இருப்பினும், எழுத்தாளர் குமுறுவது இன்றும் தொடர்கிறது என்பது ஒரு பதிப்பாளராக எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. தமிழின் இத்தகு சிறுமைகளை அகற்றாமல் பெருமை பேசுவது அபத்தம். நாம் மதிக்காத தமிழ் எழுத்தாளர்களை அகில இந்தியாவும் உலகமும் ஏன் கண்டுகொள்ள வேண்டும்?
எழுத்தாளரிடம் மட்டும்தான்...
காப்புரிமைத் தொகை (ராயல்டி) எழுத்தாளரின் அடிப்படை உரிமை. அதை மறுக்க எந்த நியாயமும் இல்லை. எந்த நூலைப் பிரசுரிப்பது என முடிவு செய்வது பதிப்பாளர் உரிமை. ஆனால், பிரசுரித்த பின்னர் விற்பனையான நூல்களுக்குக் காப்புரிமைத் தொகையை வழங்குவது அவர்தம் கடமை. இதில் புதிய / பழைய எழுத்தாளர், இளையர் / மூத்த எழுத்தாளர், புகழ் பெற்றவர் / பெறாதவர் என்ற எந்தப் பாகுபாட்டுக்கும் இடம் இல்லை.
பிரசுரித்த நூல் விற்பனையாகவில்லை என்பதால், பதிப்பாளர் அச்சகத்தில் சலுகை கேட்க முடியாது, தாள் வியாபாரியிடம் இனாம் கேட்க முடியாது. ஆனால், எழுத்தாளரிடம் மட்டும் நெஞ்சம் நிமிர்த்தி விற்ற நூல்களுக்கான காப்புரிமைத் தொகையை மறுத்துப் புதிய அறம் பேச முடிகிறது. புத்தகம் குறைவாக விற்பனையானால் காப்புரிமைத் தொகையை மறுப்பவர்கள், அதிகம் விற்பனையானால் ஊக்கத்தொகையையும் சேர்த்துக் கொடுப்பார்களா என்ன?
1944-ல் கு.ப.ரா. காலமானபோது கே.எஸ். வெங்கட்ரமணி இப்படி எழுதினார்:
“… என் நண்பர் கு.ப. ராஜகோபாலன் காலமானார். சென்ற 35 வருஷ காலமாக (1909-1944) ஒரு மாறாத காட்சியைத்தான் கண்கூசாமல் கண்டுகொண்டுவருகிறேன். எழுத்தாளர்கள் பாதரக்ஷைகூட இல்லாமல் கப்பிக்கல் ரோட்டில் நடந்துபோகிறார்கள். அவர்களைக் கட்டி மேய்த்துத் ‘தீனி’போடுகிறேன் என்கிற இடையர்கள் (புத்துயிர் பிரசுராலய சொந்தக்காரர்கள்) மோட்டார் கார்களில், வைரத் தோடுகள் மினுமினுக்க மெய்ம்மறந்து போகும் காட்சியைக் காண்கிறேன். உழவன் வீட்டில் நெல் குதிர் ஏது?”
இன்று இக்கூற்று அப்படியே பொருந்தக்கூடியது அல்ல. ஆனால், 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் இதைப் படிக்கும்போது சமகாலக் காட்சிகள் சில மனக்கண்ணில் தோன்றி மறைகின்றன என்பது தமிழ்ப் பதிப்புலகத்துக்குப் பெருமை பயக்கவில்லை. எழுத்தாளர்கள் தமது உரிமைகளுக்காகப் போராட வேண்டும். பதிப்பாளர்கள் கூட்டமைப்பு காப்புரிமைத் தொகை வழங்காத பதிப்பாளர்களையும் திருட்டுப் பதிப்பு வெளியிடுபவர்களையும் உறுப்பினர் நீக்கம் செய்ய வேண்டும்.
- கண்ணன்,
பதிப்பாளர்,
இதழாசிரியர்.
தொடர்புக்கு: kannan31@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT