Published : 08 Jan 2015 12:54 PM
Last Updated : 08 Jan 2015 12:54 PM
காற்றின் வகைகளைச் சொல்லச் சொன்னால் நாம் எத்தனை வகைகளைச் சொல்வோம்? மிஞ்சிமிஞ்சிப் போனால் நான்கைத் தாண்டாது. தென்றல், வாடை, கீழைக் காற்று, மேலைக் காற்று என்று சொல்வோம். ஆனால், ஒரு கடலோடியிடம் போய்க் கேட்டால் வகை வகையாகச் சொல்லி நம்மை மலைக்க வைப்பார். என்ன காரணம்? காற்றுதான் அவர்களின் வாழ்க்கை. காற்றின் போக்குக்குத்தான் அவர்களின் படகுகளும் வாழ்க்கையும் போய்க்கொண்டிருக்கின்றன.
நமது ‘தி இந்து’ நாளிதழில் வெளியான ‘நீர் நிலம் வனம்’ தொடரின் முதல் பாகமான ‘நீர்’ கடலோடிகள் வாழ்க்கையை நமக்குத் திறந்து காட்டியது. அதில் ஓர் அத்தியாயத்தில் சென்னை கோவளத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காற்றின் வகைகளை விளக்கியிருப்பார்:
“காத்துல பல வகை உண்டு. பெரும் வகை எட்டு. நேர்வாடைக் காத்து, நேர்சோளக் காத்து, நேர்கச்சான் காத்து, நேர்கொண்டல் காத்து, வாடைக் கச்சான் காத்து, வாடைக்கொண்டல் காத்து, சோளக்கச்சான் காத்து, சோளக்கொண்டல் காத்து.
அதாவது, இப்படி வெச்சுக்குங்க. வடக்குலேர்ந்து தெற்கே அடிக்குறது நேர்வாடை. தெற்குலேர்ந்து வடக்க அடிக்குறது நேர்சோளம். கிழக்குலேர்ந்து மேற்கே அடிக்குறது நேர்கொண்டல். மேற்கு லேர்ந்து கிழக்கே அடிக்குறது நேர்கச்சான்.
ஒவ்வொரு காற்றுக்கும் ஒரு குணம்
இதேபோல, வடகிழக்குலேர்ந்து தென் மேற்குல அடிக்குறது வாடைக்கொண்டல். தென்மேற்குலேர்ந்து வடகிழக்குக்கு அடிக்குறது சோளக்கொண்டல். வடமேற்குலேர்ந்து தென் கிழக்குக்கு அடிக்குறது வாடைக்கச்சான். தென்கிழக்குலேர்ந்து வடமேற்குக்கு அடிக்குறது சோளக்கச்சான்.
இந்த ஒவ்வொரு காத்துக்கும் ஒரு குணம் இருக்கும். காத்துக்கேத்த மாரி நீரோட்டம் மாறும். மீன்பாடும் மாறும்.”
இந்தப் பக்கம் கோவளத்து மீனவரிடம் கேட்டோம். மருத நிலமான தஞ்சைப் பகுதியில் ஒருவரிடம் காற்று பற்றிக் கேட்டுப்பார்த்தால் என்ன?
திருவாரூர் மாவட்டத்தின் கோரையாற்றங் கரையில் உள்ள தென்கோவனூரைச் சேர்ந்த வரும், தமிழகத்தின் மிகச் சிறந்த ஆங்கிலப் பேராசிரியர்களுள் ஒருவருமான தங்க. ஜெயராமன் சொல்கிறார்.
“விவசாயிகளோட வாழ்க்கையும் காற்ற நம்பித்தான் இருக்கு. காற்றும் தண்ணியும் சேர்ந்து உருவாக்குன கலாச்சாரம்தான் தஞ்சைக் கலாச்சாரம்.
உங்களுக்கு சனிமூலைக் காற்று தெரியுமா? வடகிழக்குத் திசையிலருந்து வீசுற காற்றைத்தான் அப்படிச் சொல்வோம். அதுக்குக் குணவடக் காற்றுன்னும் ஒரு பேரு இருக்கு. ஐப்பசியில ஆரம்பிச்சு மார்கழி, தை வரைக்கும்கூட சனிமூலைக் காற்று வீசும். இந்தக் காற்று சீரா வீசிக்கிட்டிருந்தா மழை வராது. பலமா அடிச்சா அது மழைக்கான அறிகுறி. அதே மாதிரி அந்தக் காற்று நிற்கிற காலத்தில மழை வரும். சனிமூலைக் காற்றடிச்சா வயல்ல நெல்லு தூத்துறதுக்கு ரொம்பவும் தோதா இருக்கும். அதனால, அந்தத் திசையை மறைக்கிறா மாதிரி வைக்கோல் போர் போட மாட்டாங்க.
மேற்கிலேருந்து கோடைக் காலத்துல வீசும் காற்று தரையை வறண்டி வறண்டி வீசும். அந்த மாதிரி காற்று வீசுறப்ப சாயங்காலமா மேற்கே வானத்தைப் பார்த்தா செக்கச்சேவேலுன்னு இருக்கும். அந்த வானத்தைச் செக்கர்வானமுன்னு சொல்லுவாங்க. அப்படி அந்த வானத்த ஆக்குற காற்றுக்குச் செங்காற்றுன்னு பேரு. மேற்கிலேருந்து வீசுறதுனால அந்தக் காற்றுக்கு மேலைக்காற்றுன்னும் பேரு. கோடையில மேலைக்காற்று வீசுனா மழைக்கு அறிகுறி. வங்காள விரிகுடாவுல காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியிருக்குன்னு அர்த்தம்.
அப்படியே காற்று வீசாம நின்னுபோயி இறுக்கமாவும் புழுக்கமாவும் இருந்துச்சுன்னா வானம் கமறிடுச்சுன்னு சொல்லுவோம். அது மழைக்கான அறிகுறி.
சைக்கிள் காற்று
மே, ஜூன், ஜூலை மாதங்கள்ல மேலைக்காற்று நல்லா வீசுறப்போ சைக்கிளில் போகும்போது மிதிக்கவே முடியாது. அப்படியே ஸ்தம்பிச்சு நின்னுடும். மேற்கிலேருந்து கிழக்க போறதுன்னா மிதிக்கவே வேண்டாம். சைக்கிள் தன்னாலேயே ஓடும். அதைத்தான் காற்றடிக் காலமுன்னு சொல் வோம். அந்தக் காலங்கள்ல குழந்தைகளை சாயங்கால நேரத்துல வெளிய தெருவ அனுப்புறது கிடையாது. அடிக்கிற காற்றுல தேள், பூச்சி யெல்லாம் அதிகமா இழையும். மரத்துலேருந்து வேற நெறைய கொட்டும்.
காற்றடிக் காலத்தில எவ்வளவுக்கு எவ்வளவு காற்று பலமா வீசுதோ அந்த அளவுக்கு மேட்டூருல தண்ணி நல்லா மேலே ஏறும்னு யூகம் பண்ணிப்போம். அப்படிக் காற்றடிச்சா மேற்குத்தொடர்ச்சி மலையில தென்மேற்குப் பருவக்காற்றுல நல்லா மழை பெய்யிதுன்னு அர்த்தம். அது இங்கே வெறும் காற்றாத்தான் அடிக்கும். அதே நேரத்தில காற்றோடு மழையும் சேந்து அந்தப் பருவத்துல அடிச்சுதுன்னா மேற்குத் தொடர்ச்சி மலையில மழை கம்மினு அர்த்தம். ஏன்னா, அந்த மழை அங்கேருந்து தப்பிச்சு இங்கே வந்துருது. அது நல்லதில்ல. விவசாயத்துக்குப் பாதகம். அந்தப் பருவத்துல வயலெல்லாம் பொறுக்கா காயணும். அப்போ போயி காற்றோட மழையும் சேந்துகிச்சுன்னா வயலக் காய விடாம பண்ணிடும். கோடை உழவ மறுபடி மறுபடி பண்ண வச்சுடும்.
காற்ற பற்றி எவ்வளவோ சொல்லலாம். ‘ஆடிகாற்றுல அம்மியும் பறக்கும்’னு சொல்லுறதக் கேள்விப்பட்டிருப்பீங்க. அந்தச் சொலவடைக்கு அடுத்த வரி ஒண்ணு இருக்கு. அதைக் கேள்விப் பட்டிருக்கிங்களா. ‘ஆடிக்காற்றுல அம்மியே பறக்கும்போது இலவம்பஞ்சுக்கு என்ன கேடு’ன்னு சொல்லுவோம். அதாவது, பெரிய பெரிய ஜாம்பவான்களே சாயிறப்ப சாதாரண ஆளுங்க தப்பிக்க முடியுமாங்கிற அர்த்தத்துல அப்படிச் சொல்லுவோம்.
கீழத் தஞ்சைப் பகுதியில முன்னாடியெல்லாம் புயலடிக்கப்போவுதுன்னே சொல்ல மாட்டோம், காற்றடிக்கப்போவுதுன்னுதான் சொல்லுவோம். காற்றுன்னு சொன்னாலே அதுக்குப் புயலுன்னும் ஒரு அர்த்தம் இருக்கு.
அதே மாதிரி, சூறைக் காற்று வீசுனா ஐயனாரு குதிரையில வர்றாருன்னு ஒரு நம்பிக்கையும் இருக்கு. அப்புடியே, நெடுவாடைக் காற்று (நேர்வடக்கிலிருந்து வீசும் காற்று), சாரக் காத்துன்னு சொல்லிக்கிட்டே போகலாம்.”
பெரும் காற்றடித்து ஓய்ந்ததுபோல இருந்தது.
(‘அறிவோம் நம் மொழியை’ பகுதியின் வழக்கமான அம்சங்கள் வரும் வாரங்களில் இடம்பெறும்.)
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT