Published : 30 Jan 2015 09:36 AM
Last Updated : 30 Jan 2015 09:36 AM
1920-லிருந்து 1948 வரை காந்தி பற்றி 46-க்கும் மேல் சிந்துப் பாடல்கள் வந்திருக்கின்றன.
தென்திருவிதாங்கூரின் கிருஷிகர் (விவசாயிகள்) கூட்டம் 1948 பிப்ரவரி 1-ம் தேதி நடந்தது. அது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட கூட்டம். கூட்டத்தில் சமஸ்தான காங்கிரஸ் அனுதாபிகள் இருந்தார்கள். அன்றைய கூட்டம் இரங்கல் கூட்டமாக மாறியது. தற்செயலாக அங்கே வந்த தூத்துக்குடி தியாகி மாசிலாமணி ‘பரந்தாமனே சந்திர பிம்பமே’ என்ற பாட்டை இசையுடன் பாடியபோது கூட்டத்தில் இருந்தவர்கள் சத்தமிடாமல் அழுதார்கள். தொடர்ந்து பேசியவர்கள் காந்தியைச் சுட்டவர்பற்றியோ, சுட்ட காரணம்பற்றியோ முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் ஊகங்களைக் கொட்டினார்கள்.
கிராமத்துப் பாடகர்களும் கூத்துக் கலைஞர்களும் பாமர மக்களும் காந்தி படுகொலையை இந்தியாவின் இழப்பாகவே நினைத்துத் தங்கள் உணர்வை வெளிப்படுத்தினார்கள். படித்தவர்களைப் போல கொலையின் காரணங்களை அவர்கள் விவாதிக்கவில்லை. இந்தியாவின் இழப்பையும், சாதாரணக் குடிமக்களிடமும் அன்பு செலுத்திய ஒரு தலைவர் மறைந்துவிட்டாரே என்ற ஆதங்கத்தையும் அவர்கள் சிந்துப் பாடல்களாக ஆக்கியிருக்கிறார்கள்.
மகாத்மா காந்தி திருப்புகழ் காவடிச்சிந்து
காந்தி இந்தியாவுக்குத் திரும்பிய ஐந்து ஆண்டுகளுக்குள் மதுரை, கும்பகோணம் போன்ற இடங்களிலிருந்துகூட காந்தியைப் பற்றி நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து என்று சிறு பிரசுரங்கள் வந்துவிட்டன. 1920-ல் கும்பகோணம் தையல்நாயகி அம்மன் அச்சகம் ‘மகாத்மா காந்தி திருப்புகழ் காவடிச்சிந்து’ என்னும் சிறு பிரசுரத்தை வெளியிட்டது. சொந்தக் குடும்பத்தைக் கவனிக்காமல் நாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்த மகாத்மா என்ற வர்ணனையை இதில் காணலாம்.
1920-ம் ஆண்டிலிருந்து 1948-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் 28 ஆண்டுகளில் காந்திபற்றி 46-க்கும் மேல் சிந்துப் பாடல்கள் வந்திருக்கின்றன. ஆறுமுகம்பிள்ளை என்பவர் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை மலைக்குக் காவடி எடுத்துச் செல்பவர்கள் இந்தக் காவடிச்சிந்தைப் பாடுங்கள் என்னும் விளம்பரத்துடன் காந்தி பற்றிய காவடிச்சிந்தை வெளியிட்டிருக்கிறார் ( ஞானசம்பந்தம் விலாசம் பிரஸ், மதுரை, 1922). இந்தக் காவடிச்சிந்து காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றியது. தகவல் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் இதில் உண்டு. சிந்து முடிவில்,
கருணை காந்திமுனியைப் போற்றித் தங்கக்
காவடி தோளின்மேல் ஏற்றி - கொழுங்
கனலேறிய மெழுகாய் உருகிய காந்தியே கதி
காண்பார் இன்பம் பூண்பார்
என முடிகிறது. அண்ணாமலை ரெட்டியாரின் வரிகளை இந்தப் பாடகர் அப்படியே எடுத்தாளுகிறார்.
கடவுளாக அறிவித்துக்கொள்ளுங்கள்!
காந்தி படுகொலைக்குச் சரியாக 12 நாட்களுக்கு முன்பு தன் கடைசி உபவாசத்தை அவர் முடித்துவிட்டு, மவுலானா அபுல்கலாம் ஆசாத் கொடுத்த பழரசத்தைக் குடித்து முடித்த பிறகு, மெத்தப் படித்த தியாகி ஒருவர் கேள்வி நேரத்தில் இப்படிக் கேட்டார்: “நீங்கள் கடவுளின் அவதாரம் என்பதை முறைப்படி அறிக்கையாக விட்டுவிடலாமே?”
காந்தி, “பேசாமல் உட்கார்ந்து வாயை மூடிக்கொண்டிரும்!” என்று புன்சிரிப்புடன் சொன்னார். காந்தி அவரை அடக்கினாலும் இந்தியக் கிராமங்களில் பலர் அவரைக் கடவுளின் அவதாரமாகத்தான் கொண்டாடினார்கள்.
சுப்பிரமணிய அய்யர் என்பவர் ‘யங் இந்தியா’ பத்திரிகையில் ‘ஆட்சேபகரமான வழிபாடு’ (04.06.1931) என்னும் தலைப்பில் ‘தென்திருவிதாங்கூரில் புகழ்பெற்ற ஒரு கோயில் தேர்த் திருவிழாவில் உங்கள் படத்தைத் தேரில் வைக்க வேண்டும் என்று சிலர் மல்லுக்கு நிற்கிறார்கள்... அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள்’ என்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
காந்தியின் கிருஷ்ணாவதாரம்
1925-ல் ‘மகாத்மாவின் கிருஷ்ணாவதார நொண்டிச் சிந்து’ என்ற சிறு பிரசுரம் சிதம்பரத்திலிருந்து வந்திருக்கிறது. இதில் காந்தி கிருஷ்ணனாகவும் வெள்ளைக்காரர்கள் கம்சனாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். ‘களியலாட்டம்’ என்ற நாட்டுப்புறக் கலை நிகழ்வின் இறுதியில்,
மனநம்பிக்கை கொண்டு எல்லோரும்
கைராட்டை சுற்றுவோம் - மகானை நம்பி
சுயராட்டை பற்றுவோம் - அந்தப்
பரமன் காந்தி திருவாக்கியம் - என்றுமே
அது நமக்கு சிலாக்கியம்
கங்காள மணிவோம் மங்களம்
எனப் பாடி முடித்த வழக்கம் 30-களில் இருந்ததை
70-களில் கேள்விப்பட்டிருக்கிறேன்.
கோட்சேவின் கொடும்பாவி
காந்தி கொல்லப்பட்டபோதுதான் ஒட்டுமொத்த இந்தியாவிலும் அவர் எப்படி அறியப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தது. அவர் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த வெள்ளிக்கிழமை இரவில் மொத்த இந்தியாவும் பரபரப்பானது. காந்தி இறந்த செய்தி கிடைத்த அடுத்த நாள், மதுரையில் கோட்சேவின் கொடும்பாவியை எரித்து ஒப்பாரி பாடியிருக்கிறார்கள். இது சிறு பிரசுரமாய் வந்திருக்கிறது (காமாட்சி அம்மன் பிரஸ், மதுரை 1948, பெப்ரவரி).
கப்பல் கரை சேர்ந்ததென்று
கரையிலே பார்த்தோமே
கப்பலைக் கவிழ்த்திவிட்டான்
கொலைகார கோட்சேயும்
தோணிதுறை சேருதென்று
தோதாக நிக்கயிலே
துப்பாக்கிக் குண்டாலே
போட்டுவிட்டான் உன்மேலே.
என்னும் இந்த ஒப்பாரி 118 வரிகள் கொண்டது. சுட்டவனை மன்னித்துவிடுங்கள் என்று போலீஸாரிடம் காந்தி கெஞ்சிக் கேட்டுக்கொண்டதாகவும் இந்த ஒப்பாரியின் இறுதியில் வருகிறது.
காந்தியின் அஸ்தி 1948 பிப்ரவரி 12-ல் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டபோது, தமிழகத்தில் சில கிராமங்களில் பெண்கள் பொது இடங்களில் கூடி ஒப்பாரி பாடியிருக்கிறார்கள். திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் அருகே பெண்கள் கூடி அழுதுகொண்டே பாடினார்களாம். இந்தப் பாடல்கள் சிறு பிரசுரங்களாக, இலவசமாக அப்போது விநியோகிக்கப்பட்டன.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்கூட ‘காந்தி மகாத்மாவின் மரணதுயர் கீதங்கள்’ என்ற பிரசுரம் இலவசமாய் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இதில், 10 மெட்டுகளில் அமைந்த பாடல்கள் உள்ளன. ‘மாலை நேரமிதோ’ என்ற மெட்டில் அமைந்த பாடல் ‘மகாத்மா சுடப்பட்டதை வானொலியில் கேட்ட காது செவிடாகாதோ?’ என்று ஆதங்கப்படுகிறது.
நாதுராம் கோட்சேவும் நாராயண் ஆப்தேவும் 1949 நவம்பர் 15-ல் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டனர். கோட்சே தூக்கிலிடப்பட்டபோது, தென்மாவட்ட கிராமியக் கலை நிகழ்ச்சிகளில் கோட்சேவைப் பழித்துப் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. மதுரை கரகாட்டக் கலைஞர் பெரியசாமி ஒருமுறை என்னிடம், “அந்தச் சமயத்தில் தெருக்கூத்தில் திரௌபதியைத் துகிலுரித்த துச்சாதனனுடன் கோட்சேவை ஒப்பிட்டுப் பாடுவார்கள். கூத்து முடிந்த பிறகு, பார்வையாளர்கள் அந்தப் பாட்டை முணுமுணுத்துக்கொண்டே போனார்கள்” என்றார்.
நல்லதங்காளும் காந்தியும்
தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சிகளில் நல்லதங்காள் கூத்துக்குப் பார்வையாளர்கள் நிறையவே வருவார்கள். நல்லதங்காள், கணவனின் நாட்டில் கொடிய பஞ்சம் வந்ததால் ஏழு குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் அண்ணன் நல்லதம்பி வீட்டுக்குச் செல்லுகிறாள். அப்போது அண்ணன் ஊரில் இல்லை. அண்ணி மூளியலங்காரி நல்லதங்காளைக் கொடுமைப்படுத்தி விரட்டிவிடுவாள். அவள் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ளச் செல்லும்போது உளுவத்தலையன் என்ற பாத்திரம்,
மூளியலங்காரி மூதேவி பெண்டாட்டி
காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேயின் பொண்டாட்டி
ஓய் தாயரம்மா தாயாரே
சுண்ணாம்புக் காளவாயில் வைக்க வேணும் தாயாரே
கோட்சேயை வைக்க வேணும் தாயாரே
என்று பாடிக்கொண்டே வருவான்.
கூத்து முடிவில் நல்லதம்பியின் மனைவி மூளியலங்காரியைச் சுண்ணாம்புக் காளவாயில் தள்ளுவான் உளுவத்தலையன். அப்போது நல்லதம்பி “இவளைப் போல் உருவம் செய்து நாற்சந்தியில் வை; எல்லோரும் காறி உமிழட்டும்” என்பான்; உளுவன் “சாமி ஆக்ஞை; கொலைகாரன் கோட்சேவுக்கும் ஒட்டுருவம் (சுடுமண் சிற்பம்) செய்து மூளியலங்காரி பக்கத்துல வைக்கணும். நாலு பேரு அவன் மேலயும் உமிழணும்” என்பான்.
கோபால ராவ் 1948-ல் நடத்திய இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தி விஸ்தாரமாகச் சொன்ன சுப்பையா ராவ் “அந்த மகாத்மா போன பின்னால யாரெல்லாமோ பெரிய பெரிய தலைவர்களெல்லாம் செத்துப்போயிருக்காங்க; அப்போவெல்லாம் நல்லதங்காள் கூத்துல உளுவத்தலையன் எதுவும் பேசலையே!” என்றார்.
காந்தி என்ற மாபெரும் ஊடகம்
பத்திரிகைகளோ அகில இந்திய வானொலியோ வேறு ஊடகங்களோ நுழையாத கிராமங்களில், கொஞ்சமும் படிப்பறிவில்லாத பாமரர்களிடம் காந்தி பற்றி இப்படியான மதிப்பீடு எப்படி வந்தது? காந்திக்கு முன்னும் பின்னும் இப்படி நிகழவில்லையே? ஆட்சியில் இருப்பவன் என்ற காரணத்துக்காகத்தான் ‘திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்றும் சொல்லத் தோன்றியது. இந்தப் பொக்கைவாய் கிழவருக்கு என்ன இருந்தது? காந்தியின் சுயசரிதை, அவரைப் பற்றிய நூல்களெல்லாம் இந்திய விடுதலைக்குப் பின்னர்தான் மலிவு விலையில் பரவலாக விற்கப்பட்டன என்பது வரலாறு. அதற்கு முன் காந்தி எப்படி அறியப்பட்டார்? அதன் சூட்சமம் இன்றும் சரியாகத் தெரியவில்லை.
- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர், ‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT