Published : 04 Dec 2014 02:08 PM
Last Updated : 04 Dec 2014 02:08 PM
ஐம்பூதத்தில் முதலாவதாகக் காற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
‘காற்றுக்குக் காது நிலை’ என்றார் பாரதியார். ‘காற்றுக்கென்ன வேலி’ என்றார் கண்ணதாசன். தமிழில் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்திலிருந்து மறையாமலும், பெருவழக்காகவும் இருக்கும் சொற்களுள் காற்றும் ஒன்று. காற்று என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் ‘கால்’ என்னும் சொல்தான்.
காற்று என்ற சொல்லைக் குறிப்பதற்கே தமிழில் பல சொற்கள் இருக்கின்றன. வடமொழியிலிருந்து பெற்ற ‘வாயு’ போன்ற சொற்களும் இவற்றுள் அடங்கும். காற்றைக் குறிக்கும் சொற்களின் பட்டியல் இங்கே (இயன்ற இடங்களில் குறிப்புகளோடு). காற்றின் வகைகள் அடுத்த வாரம் இடம்பெறும்:
அக்கினிசகன் - (அக்கினியின் நண்பனான காற்று), அசிரம், அரி, அவி, அன்றமை, அனிலம், அனிலவன், ஆசுகம், ஆடி, ஆலி, ஈகை, உயிர்/ உயிர்ப்பு (உயிருக்கு ஆதாரமானது காற்று என்பதால்…), உலம், உலவை, ஊதை (வாடைக் காற்று என்ற பொருளும் உண்டு), என்றூழ், ஒலி (காற்றையும் ஒலியையும் பிரிக்க முடியுமா?), ஓதை, கம், காலசம், காலிலி (‘காலில்லாதவன் ஆனால் ஓடுவான்’ என்ற விடுகதை நினைவுக்கு வருகிறதா?), கூதிர் (பனிக் காற்று என்ற பொருளும் உண்டு), கூதை, கொண்டல் (கீழைக் காற்று என்ற பொருளும் உண்டு), கோதை (கோதுவதால் இருக்குமோ?), சஞ்சலம் (அப்படியும் இப்படியும் அலைக்கழிவதால்…), சதாகதி (இடைவிடாமல் சஞ்சரிப்பதால்…), சதீலம், சலனன் (சலனம்=அசைவு. காற்று அசைந்துகொண்டிருப்பதால்…), சிருகம், சுசனம், சுலாவு, ததுளன், தாந்தனம், தாராவணி, தானு, தூளித்துவசன், தேயுசகா, நடையுடையோன், நிச்சாரகம், நித்தியகதி (சதாகதியைப் போலவே…), நிழலி, நீரூபம், நீல், நீழல், நீளை, பரிசனன், பாஞ்சலம், பிரகம்பனம், பிரபஞ்சனன், பிரவாதம், பெற்றம், மகாபலன் (காற்று பெரும் பலம் கொண்டது என்பதால்…), மருக்கம், மருத்து, மாபலன், மாருதம், மால், மிகிரம், மிருகாங்கம், மோடனம், வகதி, வகந்தம், வகம், வங்கூழ், வடி, வந்து, வளி, வன்னிவகன், வாகம், வாடை (குளிர்க் காற்று, வடக்கிலிருந்து வீசும் காற்று என்ற பொருளும் உண்டு), வாதம், வாயு, வி, விண்டு, வீகம், வேலி (‘காற்றுக்கென்ன வேலி’ என்று சொல்வதைவிட, ‘காற்றே வேலிதான்’ என்று சொல்ல லாம்போல!) வேற்றலம்.
வட்டாரச் சொல் அறிவோம்
‘டிபன் பாக்ஸ்’ என்று ஆங்கிலத்திலும் ‘சாப்பாட்டு டப்பா’என்று பொது வழக்குத் தமிழிலும் சொல்லும் சொல்லுக்கு இன்னொரு அழகான வட்டாரச் சொல் இருக்கிறது தெரியுமா? ‘தி இந்து’வின் இணையதளத்தில் ‘அறிவோம் நம் மொழியை’ பகுதியின் எதிர்வினையில் துரைராஜ் ஆனந்தராஜ் என்ற வாசகர் அளித்திருந்த எதிர்வினை இது: “ஒரு சிறுமி, தன் பாட்டி வீட்டுக்குப் போய்விட்டு வந்த பின், ‘திண்டிக் கூட்டை மறந்துவிட்டேன்’ என்றாள். புரியவில்லை. ‘என்ன?’ என்று கேட்டேன். ‘அதுதான் டிபன் பாக்ஸ்’ என்றாள்.
‘திண்டி’ என்ற சொல்லுக்கு ‘உணவு’ என்பது பொருள். ‘திண்டிக் கூடு’ என்பது எந்த வட்டாரத்தின் பயன்பாடு என்பதை அந்த வாசகர் தெரிவிக்கவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!
கடந்த முறை ‘தித்துத்தூ குருவி’ என்று சொல்லி யிருந்தோம் அல்லவா, அது ‘தித்தித்தான் குருவி’ என்று தோழி திருத்தினார்.
சொல் தேடல்:
ஆங்கிலச் சொல் ஒன்றுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன என்று கேட்டவுடன், புதுப் புதுச் சொற்களைப் பெரும்பாலான வாசகர்கள் உரு வாக்கி அனுப்புகிறார்கள். வரவேற்கத் தகுந்தது. ஆனால், புதுச் சொல்லை உருவாக்கும் முன்பு, அதற்கு ஏற்கெனவே தமிழில் இருக்கக்கூடிய சொல்லைப் பார்க்கத் தவறுகிறார்களோ என்ற ஐயம் சிலமுறை ஏற்படுகிறது. கடந்த வாரம் கேட்டிருந்த ‘ஸோல்ஸ்டிஸ்’ சொல்லுக்கும் வாசகர்கள் அப்படித்தான் செய்திருந்தார்கள்.
இந்தச் சொல்லுக்குத் தமிழில் புழங்கிய, புழங்கும் சொற்களில் சில: அயனம், மகராயனம்.
இந்த வாரத்துக்கான சொல் தேடல்:
‘பாராசூட்’ (parachute) என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT