Last Updated : 03 Dec, 2014 09:21 AM

 

Published : 03 Dec 2014 09:21 AM
Last Updated : 03 Dec 2014 09:21 AM

மரணத்தின் கோரத் தாண்டவம் நிகழ்ந்தபோது...

என்ன காரணம்?

1984, டிசம்பர்-2 அதிகாலை அந்தக் கொடிய விபத்து நடந்த தருணத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்த மொத்த மீத்தைல் ஐசோசயனைடின் அளவு 63 டன். 610, 611, 619 ஆகிய எண்கள் இடப்பட்ட கலன்களில் மொத்த மீத்தைல் ஐசோசயனைடும் வைக்கப்பட்டிருந்தன. விதிமுறைப்படி, இந்தக் கொள்கலன்களெல்லாம் பாதிக்கு மேல் நிரப்பப்படக் கூடாது. ஏதாவது வேதிவினை நிகழ்ந்தால் அதைத் தடுப்பதற்கான வேதிப்பொருளைச் செலுத்துவதற்காகத்தான் அப்படி ஒரு விதிமுறை. ஆனால், 610 என்ற கலனில் 42 டன் மீத்தைல் ஐசோசயனைடு வைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அந்தக் கலனின் முழுக் கொள்ளளவு இது. அப்பட்டமாக எல்லாம் மீறப்பட்டன என்பதற்கு ஓர் உதாரணம் இது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிக்கன நடவடிக்கை என்று சொல்லி முன்னரே கைவிட்டிருந்தார்கள்.

ஊழியர்களின் அறியாமை, நிர்வாகத்தின் பொறுப்பற்றதனம், அரசின் அலட்சியம் எல்லாம் சேர்ந்து இந்தப் பேரழிவை நிகழ்த்தியது.

மரணத்தின் திசை

போபாலின் ஹமீதியா மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை நிகழ்த்தியபோது தெரிந்த அறிகுறிகள் சுட்டிக்காட்டிய திசை ஒன்றுதான்: ஹைட்ரோசயனைடு அமிலம். அந்த அமிலத்துக்கு ஒரு எதிர்மருந்து இருக்கிறது: சோடியம் தையோசல்ஃபேட். இந்தக் கண்டுபிடிப்பை பெரிய டாக்டரிடம் தெரிவித்தபோது அவர் நம்பவில்லை. ஹைட்ரோசயனைடுக்கு இங்கே என்ன வேலை என்பதுதான் அதற்குக் காரணம். உயர் வெப்பநிலையில் மீத்தைல் ஐசோசயனைடிலிருந்து ஹைட்ரோசயனைடு அமிலம் உருவாகக் கூடும் என்பது அந்த பெரிய டாக்டருக்குத் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்திருந்தால் ஏராளமானோரை உடனடியாகக் காப்பாற்றியிருந்திருக்கலாம்.

இறப்பிலும் ஆதாயம் தேடி…

முன்வாசலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தை அனுப்பி போபால்வாசிகளைக் கொன்ற அமெரிக்கா, பின்வாசல் வழியாக வேறு சிலரையும் அனுப்பியது: அமெரிக்க வழக்கறிஞர்கள்! பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்கள் இப்படியெல்லாம் பேசினார்கள்: “யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சும்மா விடக் கூடாது. நாங்கள் உங்களுக்காகவே வந்திருக்கிறோம். அமெரிக்காவில் அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்து, உங்களுக்கு உரிய நிவாரணம் வாங்கித்தருகிறோம். சாதாரணத் தொகையல்ல: ஆளுக்கு ரூ. 10 லட்சம். மொத்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எங்கள் கட்டணம்.”

உண்மையான வில்லன்

உண்மையான வில்லன் மீத்தைல் ஐசோசயனைடு அல்ல, ஹைட்ரோசயனைடு அமிலம்தான். போபால் பேரழிவில் பெரும்பாலான மரணங்களுக்கும் பாதிப்புகளுக்கும் காரணம் அதுதான். உயர் வெப்பநிலையில் மீத்தைல் ஐசோசயனைடு பல்வேறு வாயுக்களாகப் பிரிகிறது. அதில் ஒன்றுதான் ஹைட்ரோசயனைடு அமிலம்.

கடவுளைச் சந்திக்கும்போது…

பேரழிவுக்கு மத்தியில்தான் மனிதர்களின் உன்னத குணங்களும் அற்ப குணங்களும் வெளிப்படும் என்பது உண்மை. ஒரு முஸ்லிம் பெண்ணின் பிரேதத்தை மீட்புப் பணியினர் எடுத்துச் செல்ல முயன்றபோது இந்துப் பெண் ஒருவர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். தன் கையிலுள்ள வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்களை அந்த முஸ்லிம் பெண்ணுக்குச் சூட்டிவிட்டுச் சொல்லியிருக்கிறார்: “இந்தப் பெண் என்னுடைய தோழி. கடவுளைச் சந்திக்கும்போது அவள் அழகாக இருக்க வேண்டும்.”

நடைப்பிணமான நாயகன்

நூற்றுக் கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் வி.கே. சர்மாவின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. மருத்துவமனையில் பிணங்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த புகைப்படக்காரர் ஒரு உடலிலிருந்து சிறு அசைவு தென்பட்டதைப் பார்த்து உடனடியாக டாக்டரிடம் தெரிவிக்க, இறந்துகொண்டிருந்த அந்த உயிரை டாக்டர் காப்பாற்றினார். அது வேறு யாருமல்ல. வி.கே. சர்மாதான். உயிர்பிழைத்தாலும் வி.கே. சர்மா நடைப்பிணம் போன்றுதான் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக் கணக்கானோரைக் காப்பாற்றிய அவருக்கு இந்திய அரசு கொடுத்த நிவாரணத் தொகை எவ்வளவு தெரியுமா? 35,000 ரூபாய்தான்.

உயிரைக் காப்பாற்றிய ஈரத் துண்டு

ஈரத் துண்டு எத்தனை பேர் உயிரை அப்போது காப்பாற்றியது தெரியுமா? பிறருடைய உயிரைக் காப்பாற்றச் சென்றவர்கள்கூட ஈரத் துண்டை முகத்தில் பொத்திக்கொண்டுதான் சென்றார்கள். வலுகுறைப்பானாகத் திறம்படச் செயல்பட்டது ஈரத் துண்டு. பிழைத்தவர்களில் பலரும் கும்பிடும் தெய்வங்களுள் ஈரத் துண்டும் ஒன்று.

அதீத மூச்சு ஆபத்தே

விஷவாயு கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தபோது அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தப்பிச்செல்ல முயன்றவர்கள்தான். வேகமாக ஓடியபோது அதிகக் காற்றை உள்ளிழுக்க நேர்ந்ததால் விரைவாக அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அவர்களோடு ஒப்பிட்டால், வீடுகளில் ஒடுங்கி இருந்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சற்றுக் குறைவே.

நாயகன்

போபால் ஸ்டேஷன் மாஸ்டர் வி.கே. சர்மாதான் உண்மையான ‘நாயகன்’. விஷவாயுவின் அசுரத் தாக்குதலுக்கு மத்தியில் அந்த ஸ்டேஷனை நெருங்கிக்கொண்டிருந்த கோரக்பூர் ரயிலின் பயணிகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே! லாந்தர்களுடன் அவர் அனுப்பிய ஆட்களாலும் ரயிலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பிளாட்ஃபாரத்தை நோக்கி ரயில் வந்துகொண்டிருப்பதைப் பார்த்த சர்மாவுக்குப் பகீரென்றிருந்தது. உடனடியாக ஒலிபெருக்கியில் உருது, இந்தியில் எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தார். மேலிட ஆணை இல்லாமல் ரயிலை உடனடியாகக் கிளம்பாமல் ஓட்டுநர் காத்திருந்தார். முகத்தில் பொத்திய ஈரத் துணியுடன் பிணக் குவியல்களைத் தாண்டி வேகமாக ஓடிய சர்மா, ஓட்டுநரிடம் அவசரஅவசரமாகத் தகவல்களைத் தெரிவிக்கவும், ரயில் உடனடியாகப் புறப்பட்டது.

எல்லாம் இழந்த பின்னும்…

சஜீதா பானுவின் நிலைதான் இன்னும் மோசம். போபால் பேரழிவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், யூனியன் கார்பைடு கம்பெனியில் ஏற்பட்ட வாயுக் கசிவில் அவள் தன்னுடைய கணவர் முகம்மது அஷ்ரஃபை இழந்திருந்தார். அதாவது, அந்த விஷவாயுவின் முதல் பலியே அஷ்ரஃப்தான். போபால் பேரழிவின்போது தன்னுடைய குழந்தை ஒன்றையும் சஜீதா இழந்தார். இருந்தும், இன்று வரை அவருக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

மரணத்தின் பால்

அந்தப் பேரழிவின்போது பலரையும் காப்பாற்றிய டாக்டர் சர்க்காரால் அதற்குப் பிறகு ஒருபோதும் அந்தக் காட்சியை மறந்திருக்க முடியாது. போபால் ரயில்வே பிளாட்ஃபாரத்தில் பிணக் குவியல்களுக்கு மத்தியில் ஏதோ அசைவைக் கண்டிருக்கிறார். அருகே வந்து பார்த்தார்: இறந்துகிடந்த தன் தாயின் உயிரற்ற மார்பை ஒரு குழந்தை சப்பிக்கொண்டிருந்தது!

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x