Published : 16 Dec 2014 10:00 AM
Last Updated : 16 Dec 2014 10:00 AM
இளையோரின் வாசிப்புப் பழக்கம் குன்றிவருகிறது என்ற கவலை தமிழக அறிவுலகத்தோருக்கு ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளில், தீபாவளி மலர்களில், சமூக வலைதளங்களில் இளைய தலைமுறை பற்றிய கவலை ததும்புகிறது. வெற்றுப் புலம்பல் தரும் இன்பம் அலாதியானதுதான்.
இளைய தலைமுறையின் படிக்கும் பழக்கம் குறைவாக உள்ளது, அதை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது சரி. ஆனால், முன்னர் இருந்ததைவிட இப்போது குறைந்து வருகிறது என்பது சுத்தமான கட்டுக்கதை. இந்தத் தலைமுறை படிக்கும் அளவுக்கு இதற்கு முன்னர் எந்தத் தலைமுறையும் தமிழ்ச் சமூகத்தில் படித்தது இல்லை. இளைய தலைமுறை ஈடுபாடு காட்டாத எந்தத் துறையும் வளர முடியாது. புத்தகத் தொழில் வளர்ச்சி இன்று மிகவும் துலக்கமாக உள்ளது. வாசிக்கும் சாதனம் அச்சிட்ட நூலாக மட்டும் இல்லை. அது கணினியாக, மின் வாசிப்பானாக, கைபேசியாக விரிவடைந்துவருகிறது.
இன்று பலரும் கைக்கடிகாரம் கட்டுவது இல்லை. இதனால் மணி பார்க்கும் பழக்கம் குன்றிவிட்டது என்று முடிவு கட்டினால் அது அபத்தம். மணி பார்க்கும் பொறி இன்று கைபேசியாக மாறிவிட்டது. அவ்வளவுதான். மணி பார்ப் போரின் எண்ணிக்கையும் பார்க்கத் தெரிந்தோரின் எண்ணிக்கையும் பார்க்க வேண்டிய தேவையும் முன் எப்போதையும்விட அதிகரித்திருக்கிறது.
பின்தங்கலின் வெளிப்பாடு
100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் பதிப்புத் துறை அரும்பியபோது இங்கு நவீனக் கல்வி கற்றோர் யார்? இந்து உயர் சாதியினர், உயர் நிலைக் கிறிஸ்தவர்கள், மேட்டுக்குடி முஸ்லிம்கள். பிற சமூகத்தினர் இதில் கையளவு அடங்குவார்கள். இன்று அடிப்படைக் கல்வி கிட்டத்தட்ட முழுச் சமூகத்தையும் அரவணைத்துள்ளது. பொருளாதார மேம்பாடு அனைத்துச் சமூகங்களிலும் ஒரு பகுதியினருக்கேனும் ஏற்பட்டுள்ளது.
தகவல் தொடர்புத் துறையும் ஊடகங்களும் புரட்சிகரமான வளர்ச்சியைக் கண்டுள்ளன. நகரமயமாதல் துரிதப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள், வாசிப்புப் பழக்கம் விரிவடையத் தூண்டுபவையாகும். நமது அறிவுஜீவிகளுக்கு 50 வயதானதும் சமகாலத்துடன் தொடர்புகள் குன்றி, கடந்த காலத்தில் மனம் திளைக்கத் தொடங்குகிறது. இந்தப் பின்தங்கலின் ஒரு வெளிப்பாடுதான் இளைய தலைமுறை பற்றிய அரற்றல்.
முன்னர் தமிழ் நூல்கள் 1,200 பிரதிகள் அச்சிடப்பட்டன. இன்று சராசரியாக 500 பிரதிகள்தான். எனவே, படிக்கும் பழக்கம் குறைந்துவருகிறது என்று முடிவு செய்வது பெரும் பிழை.
முன்னர் பல நடுத்தர வர்க்க இல்லங்களில் பலசரக்கை ஓரிரு மாதங்களுக்குச் சேர்த்து மொத்தமாக வாங்கி விடுவார்கள். மாட்டு வண்டியில் மொத்தமாக வந்து வீட்டில் இறங்கி விடும். இன்று அப்படி இல்லை. எனவே, இன்று மக்கள் சாப்பிடுவது குறைந்துவிட்டது என்று கணக்கிட முடியுமா? நல்ல உணவு உண்ப தென்பது முன்பைவிட இன்று சமூகத்தில் பரந்து விரிந்துள்ளது.
ஆனால், இன்று யாரும் மாதக் கணக்கில் பலசரக்கு வாங்குவதில்லை. மூலைக்கு மூலை பலசரக்குகள் கிடைக்கின்றன. பலரிடமும் வாகனங்கள் உள்ளன. பெண்கள் தனியாக வாகனத்தில் சென்று தேவையானவற்றைப் பார்த்து வாங்கிவருகிறார்கள். பலசரக்குகள் வார இறுதியிலும், தேவைப்பட்டால் அன்றாடமும் வாங்கப்படுகின்றன. இந்த முன்னேற்றத்தை வீழ்ச்சியாகக் காண்பது போன்ற பிழைதான் ஒரு பதிப்பில் அச்சிடப்படும் நூல்களின் எண்ணத்தை வைத்துப் பதிப்புத் துறையில் வீழ்ச்சியைக் காண்பது.
குறைந்த பிரதிகள்
முன்னர் நூல்கள் அச்சுக்கோத்து அச்சிடப்பட்டன. மறுஅச்சிடுவது ஆகக் கடினமானது. ஒவ்வொரு முறையும் புதிதாக மெய்ப்புப் பார்க்க வேண்டும். எனவே, நூல்களைக் குறைந்த எண்ணிக்கையில் அச்சடிக்க முடியாது. ஆகக் குறைந்தது 1,200 பிரதிகள்தான். இவை விற்பனையாக எடுத்த காலம் ஐந்து அல்லது பத்து வருடங்கள். எழுத்தாளர்கள், சமூகத்தின் கல்வி கற்ற மிகக் குறுகிய வட்டத்திலிருந்தே உருவானார்கள். எனவே, அன்று ஆண்டுதோறும் வெளிவந்த பொருட்படுத்த வேண்டிய நூல்களின் எண்ணிக்கை அதிக பட்சம் 50 இருக்கும். இன்று அச்சுத் தொழில்நுட்பம் பெரும் பாய்ச்சலைக் கண்டுள்ளது. மறுஅச்சு செய்வது, ஒரு பக்கத்தை ஒளிநகல் செய்வதுபோல எளிதானது. தேவைப்பட்டால், ஒரு நூலின் ஒரு பிரதியை அச்சிடும் வசதிகூட இன்று சென்னையிலும் சிவகாசியிலும் உள்ளது. எனவே, பெரும் எண்ணிக்கையில் நூல்களை அச்சிட வேண்டிய கட்டாயம் நீங்கிவிட்டது.
மூன்று மாத அல்லது ஆறு மாதத் தேவைக்கேற்ப நூல்களைப் பதிப்பகங்கள் அச்சிடுகின்றன. உயர் தொழில்நுட்ப அச்சகங்கள் மேலும் சகஜமாகி, கட்டணங்கள் நியாயமாகக் குறையும்போது உடனடித் தேவைக்கு மட்டும் நூல்களை அச்சிடும் காலம் இனி உருவாகும். அதாவது, பதிப்பகங்களிடம் நூல் களின் கையிருப்பு கிட்டத்தட்ட இருக்காது. கிடங்குகள் தேவைப்படாது. இவை எல்லாம் வளர்ச்சியின் அடையாளங்கள்.
சமகாலத்தில் சமூகத்தின் எல்லாத் தரப்பிலிருந்தும் எழுத்தாளர்கள் உருவாகிவருகிறார்கள். எனவே, ஆண்டுக்கு வெளிவரும் முக்கியமான நூல்களின் எண்ணிக்கை 10 மடங்கு உயர்ந்துள்ளது. 1980-களைவிட இன்று பதிப்புத் தொழில் பற்பல மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு ஆதாரமாக - ஆண்டவனே நம்முன் விஸ்வரூபம் எடுத்து நிற்பதுபோல - சென்னைப் புத்தகச் சந்தை மிகச் சிறப்பாக நடக்கிறது. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் குறிப்பிடத் தகுந்த புத்தகச் சந்தைகள் தொடர்ந்து நடக் கின்றன. இவையெல்லாம் தமிழகத்தின் எந்தப் பொற் காலத்திலும் நடந்தது இல்லை.
கல்வித் துறையின் தோல்வி
முன்புபோல மாணவர்கள் தற்போது பொதுநூல்களைப் படிப்பதில்லை என்று கல்வியாளர்கள் உணர்கின்றனர். ஆனால், இன்று தமிழ் வாசிப்பும் ஆய்வும் சிந்தனையும் பதிப்பும் கல்வியும் வளர்ச்சியும் அதிகமும் கல்வி நிறுவனங் களில் நடப்பது இல்லை. எனவே, அவை சமூக நிலைமையின் காலக்கண்ணாடியாக இன்று இல்லை. இது கல்வித் துறையின் தோல்வி. இளைய தலைமுறையின் தோல்வி அல்ல. இன்றைய தலைமுறைக்குத் தமிழைக் கற்பிப்பதும் அவர்களை வாசிக்கத் தூண்டுவதும் ஊடகங்கள்தான். அதாவது சினிமா, தொலைக்காட்சி அலைவரிசைகள், பதிப்பகங்கள், இதழ்கள், சமூக வலைதளங்கள்.
இளையோர் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் குடும்பச் சூழல், பள்ளிச் சூழல் இங்கு உள்ளதா? நமது குடும்ப அமைப்பிலும் பள்ளியிலும் பாடப்புத்தகம் அல்லாத நூலைப் படிப்பது தண்டனைக்கு உரிய குற்றம். ஆசிரியர்களும் பெற்றோர்களும் படிக்கும் பழக்கத்துக்கு எதிராக அணிவகுத்திருப்பதை மீறித்தான் இன்றைய இளை யோர் ஓரளவு நூல்களை வாசிக்கிறார்கள். இந்நிலையில், இளையோரைப் பழிப்பதும் சமூகத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை மறுப்பதும் சமூக விரோதச் சிந்தனை களாகும். சமூக மாற்றத்தை அங்கீகரிக்க மறுப்பது என்பது சமூக மாற்றத்தையே தடுக்க விரும்பும் மனோபாவத்தின் வெளிப்பாடு.
நமது இளையோர் படிக்கும் பழக்கம் உலகின் வளர்ந்த நாடுகளின் அளவீட்டை எட்ட வேண்டும் எனில், இன்னும் நூறு மடங்கு வளர்ச்சி காண வேண்டும். ஆனால், இந்த வளர்ச்சி இளையோரைப் பழிப்பதால் ஏற்படாது. அவர்கள் வளரும் சூழல், கல்வி முறை, ஆசிரியர் மனோபாவம், பெற்றோர் மனநிலை மாற வேண்டும். படிக்கும் பழக்கத்தின் முக்கியத் துவத்தை உணர்ந்து அதை ஊக்குவிக்கும் சமூகமாக நாம் புத்துருவாக்கம் பெற வேண்டும். பொது அறிவும் விழிப் புணர்வும் விமர்சன நோக்கும் கொண்ட மாணவனை, குடி மகனை வளர்த்தெடுக்கும் ஆற்றல் இச்சமூக அமைப்பில் ஏற்பட வேண்டும். ‘நீரளவேயாகுமாம் நீராம்பல்’என்பது நமது இளைய தலைமுறைக்கும் பொருந்தும்.
- கண்ணன், இதழாசிரியர், பதிப்பாளர். ‘பிறக்கும் ஒரு புது அழகு’, ‘அதிகாரத்தின் வாசனை’ இவரது கட்டுரை நூல்கள். தொடர்புக்கு: kannan31@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT