Last Updated : 29 Dec, 2014 10:49 AM

 

Published : 29 Dec 2014 10:49 AM
Last Updated : 29 Dec 2014 10:49 AM

அட்டைகாசம்!

ஒரு புத்தகத்தை வாங்கத் தூண்டுவது எது? புத்தகங்களின் தலைப்புகள், எழுத்தாளரின் பெயர் இப்படிப் பல காரணங்களைச் சொல்லலாம். ரசனையான படங்களுடன் வித்தியாசமான அட்டை வடிவமைப்பு இருந்தால், மேற்சொன்ன காரணிகளின் அவசியம் இல்லாமலேயே புத்தகத்தை எடுக்கக் கை நீளும். அப்படியான அட்டைப் படங்களை உருவாக்கும் வடிவமைப்பாளர்களுள் ஒருவர்தான் விஜயன்.

இந்தப் புத்தகக் கண்காட்சிக்காக எதிர் வெளியீடு, கருப்புப் பிரதிகள் போன்ற பதிப்பகங்கள் வெளியிடும் 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விஜயனின் கணினிவண்ணத்தில் மிளிர்கின்றன.

நதிநீரில் விழும் கட்டிடங்களின் பிம்பங்கள், தலைகீழாகத் தொங்கும் நகரம் போன்ற தோற்றப் பிழையைக் கொடுக்கின்றன. நதியின் மறுகரைக்கு நடுவே பாய்கிறது ஒரு அம்பு. இப்படி ஒரு அட்டைப் படம். புத்தர் சிலைகளின் பிம்பங்கள் விழும் நீரில் அமைதி உறைந்திருக்கிறது, இன்னொரு புத்தகத்தின் அட்டையில். இப்படியெல்லாம் நுட்பமான ரசனையின் வீச்சை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜயன்.

“இப்படித்தான் செய்யணும்னு முன்னாடியே திட்டமிட மாட்டேன். புத்தகத்தோட மையக் கரு பத்தி, எழுத்தாளர், பதிப்பாளர் சொல்றதைக் கேட்டுக்குவேன், அதுபற்றிய சினாப்சிஸையும் படிச்சுருவேன். மனசுல ஒரு ஐடியா உருவாகிடும். வேலை செய்யச் செய்ய அந்த வடிவம் தானா முழுமையாகிடும்” என்கிறார் அவர்.

கணினித் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பெற்றிருக்கும் விஜயன், 1999-ல் குமுதம் இதழில் வடிவமைப்பாளராகப் பணிபுரியத் தொடங்கினார். மூன்றரை ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர், சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அட்டை வடிவமைப்பு, பக்க வடிவமைப்பு செய்துவருகிறார். “கடையில அல்லது கண்காட்சி அரங்குல வெச்சிருக்குற புத்தகங்கள்ல சிலதைப் பாத்தவுடனே ஒரு ஈர்ப்பு வரும். அது என்ன மாதிரியான புத்தகமா இருந்தாலும் சரி! வடிவமைச்சா அப்படித்தான் வடிவமைக்கணும்னு நெனைப்பேன். அதைத்தான் நான் செய்றேன்” என்கிறார். அடிப்படையில் இவர் ஓவியர் இல்லை என்றாலும் ஓவியங்கள், வண்ணங்கள் மீதான ஈடுபாடு, இவரது கலைத் திறனைச் செழிக்கச் செய்திருக்கிறது.

வடிவமைப்புத் தொழில்நுட்பங்களைச் சொந்த மாகவே கற்றுக்கொண்டவர் இவர். 2007-ல் புத்தகங்களுக் கான அட்டைகளை மட்டும் கண்காட்சியாக வைத்துப் புதுமைசெய்தவர்.

அட்டை வடிவமைப்புக்காக ஓவியங்களைப் பயன்படுத்துவது தனிக்கலை. ஓவியத்தின் தன்மை மாறாமல் அதை மெருகேற்றி, புத்தகத்தின் உள்ளடக்கம் அட்டையில் வெளிப்படுமாறு செய்ய வேண்டும். “அது ஒரு சவால்தான். சில சமயங்கள்ல ஓவியத்தை அப்படியே வைத்துவிட்டு அட்டையை வடிவமைத்தாலே போதுமானதா இருக்கும்” என்கிறார் விஜயன்.

- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x