Published : 07 Dec 2014 12:13 PM
Last Updated : 07 Dec 2014 12:13 PM
தமிழகத்தின் தேவதாசி ஒழிப்பு இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு கூறாக - சமூக விடுதலையின் விழிப்புணர்வாகவே பேசப்பட்டது. இதே காலகட்டத்தில் திருவிதாங்கூரின் தேவதாசி ஒழிப்பு சத்தமில்லாமல் நடந்தது. அதே காலத்தில் தேவதாசிகள் தொடர்பான பொதுவான கலைகள்/ வட்டாரம் சார்ந்த கலைகள் போன்றவற்றைப் பொதுவான சமூகத்துக்கு நகர்த்திவிடலாம் என்ற முயற்சி பெரும்பாலும் நடக்கவில்லை. (விதிவிலக்கு சதிர்-பரதம்) அந்தக் காலத்தில் - டிஜிட்டல் கேமரா, கணிப்பொறி எனத் தொழில்நுட்பங்கள் எவையுமில்லை.
இந்தக் கலைகள்பற்றிய எழுத்துப் பதிவுகள்கூடப் பெருமளவில் இல்லை. இதனால், அந்தக் காலத்திலேயே பல கலைகள் அடையாளம் இல்லாமல் ஆகிவிட்டன. என்றாலும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறை பேராசிரியர் செ. ராமானுஜன், திருக்குறுங்குடியில் நிகழ்ந்த ஒரு நாடகத்தை 1996-ல் மீட்டெடுத்திருக்கிறார். அந்த நாடகத்தின் பிரதியைத் தேடிக் கண்டுபிடித்துப் பிரதி செய்திருக்கிறார். இதற்கு டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த அனிதா ரத்னம் பெரிதும் உதவியிருக்கிறார்.
கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் தொடங்கி, மறுநாள் துவாதசியில் முடிவு பெறும் விரத நாள் இரவில் இந்த நாடகம் நடக்கிறது. ஒரு வகையில் இதன் சடங்குகளும் புராணப் பின்னணிகளும் தத்துவார்த்தமும் இதைக் காப்பாற்றிவந்திருக்கின்றன.
ராமானுஜருக்குத் தனிக் கோயில்
தமிழகத்தில் கைசிக நாடகம் திருக்குறுங்குடிக் கோயிலில் மட்டுமே நடக்கிறது. திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கும் திருக்குறுங்குடி, ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மகேந்திரகிரி மலையடிவாரத்தில், நம்பியாற்றின் அருகே இருப்பது. பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் என நால்வரும் பாடிய தலம். ராமானுஜர் வந்த தலம். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ஆலயத்தின் ஆகம முறைகளை ராமானுஜர் மாற்ற முற்பட்டபோது, நம்பூதிரிகள் ராமானுஜரைக் கட்டாயமாக அப்புறப்படுத்தி, திருக்குறுங்குடி திருப்பாற்கடல் ஆற்றில் வட்டப்பாறையில் கொண்டுபோய்க் கிடத்தினார்கள் என்றும் ஒரு கதை உண்டு. ராமானுஜருக்கும் இங்கு தனிக் கோயில் உண்டு.
திருமங்கையாழ்வார் பரமபதம் அடைந்த தலம் இது. இந்த ஆழ்வாருக்கு இந்தக் கோயிலில் தனிச் சந்நிதி உண்டு. மணவாள முனிவருக்கும் உண்டு. திருக்குறுங்குடி கோயிலின் இறைவன் குறுங்குடி நம்பி. நின்ற கோலம்; தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார். வாமன நட்சத்திரம் எனப்படும் இந்தக் கோயில் கோபுரம் 5 நிலைகள், 5 பிராகாரம், 18 ஏக்கர் பரப்புடையது. இந்தக் கோயிலில் அமர்ந்த நம்பி கோலத்துக்கும் கிடந்த நம்பி கோலத்துக்கும் தனிச் சந்நிதி உண்டு. ஆண்டாளும் வழிபாடு பெறுகிறாள். ஸ்ரீதேவி, பூதேவி, பிருகு முனிவர், மார்க்கண்டேயர் ஆகியோர் இருக்கின்றனர்.
இந்தக் கோயிலின் பழமை நம்மாழ்வார் காலத்துக்கும் முன்னால் செல்கிறது. கி.பி. 9-ம் நூற்றாண்டு மாறஞ் சடையனின் கல்வெட்டு இங்கே இருந்தது. இது இப்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. கிருஷ்ண தேவராயர், வேணாட்டரசர்கள் இந்தக் கோயிலுக்கு நிபந்தம் கொடுத்துள்ளனர். இங்குள்ள சிற்ப மண்டபம், யாளி மண்டபம் பார்க்கத் தகுந்தவை. விஜயநகர நாயக்கர் கட்டுமானம்.
கைகொடுக்கும் கைசிக விமோசனம்
கைசிக நாடகக் கதை, பூதேவியிடம் விஷ்ணு சொல்வதாக வராக புராணத்தில் வருகிறது. சாம்பான், ஆதனூர் நந்தனார் ஆகியோரைப் போன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான் கைசிக நாடகத்தில் வரும் நம்பாடுவார். பிரம்மராட்சசனாக இருந்த பிராமணனுக்கே விமோசனம் கொடுத்தவர் நம்பாடுவார். ஒரு வகையில், சாதியத்துக்கு எதிரான புரட்சியாக இது கருதப்படுகிறது. இவரது கைசிகம் விமோசனம் கொடுக்கும் என்பது நம்பிக்கை.
இந்த நாடகத்தின் பழமை ராமானுஜரின் காலம் வரை செல்கிறது. கைசிகம் என்பது ராகம்; இதை பைரவி என்றும் கூறுகிறார்கள். நம்பாடுவார், நம்பியைப் பாடிய பாடலை தொண்டரடிப் பொடியாழ்வார் திருவரங்கநாதனுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடியதற்கு ஒப்பாக வைணவர்கள் கூறுவார்கள்.
கைசிக நாடகம் அபிநயம், பாட்டு, விளக்கம் என அமைந்தது. மூல ஏட்டுப் பிரதியில் 40 ராகங்கள் உள்ளன என்கிறார் பேரா. ராமானுஜம். இந்த நாடகம் செவ்வியல் நாடகம் என்றாலும், நாட்டார் வழக்காற்று வடிவத் தாக்கமும் உண்டு. நாடகத்தில் வரும் பிரம்ம ராட்சசனின் முகமூடியைக் கொண்டுசெல்வது சடங்காகவே நிகழ்கிறது. தஞ்சை மாவட்டம் நார்தேவன் குடிக்காடு, ஆர்சுத்திப்பட்டு ஆகிய ஊர்களில் நடைபெறும் இரணிய நாடக நிகழ்ச்சியிலும் முகமூடி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, நாடக மேடைக்குக் கொண்டுசெல்லப்படும். இப்போது முகமூடியைக் கற்பூரமேந்தி வழிபடுவார்கள்.
சுவாமியே பார்வையாளர்
கைசிக நாடகத்தை அழகிய நம்பி பார்வையாளராகப் பார்க்கிறார் என்பது சம்பிரதாயம். கோயில் சடங்கு சார்ந்த பல கலைகளில், கோயிலில் நிகழும் கலையை இறைவன் கேட்கிறார்/ பார்க்கிறார் என்ற ஐதீகத்துக்கு வேறு சான்றுகளும் சொல்ல முடியும். கேரளத் தோல்பாவைக் கூத்து நிகழும் பகவதி கோயில்களில் பகவதியே முதல் பார்வையாளர். பார்க்க யாரும் இல்லை என்றாலும் பகவதி பார்க்கிறாள் என்ற திருப்தியோடு தோல்பாவைக் கூத்துக் கலைஞர் நிகழ்ச்சியை நடத்துவார். அதைச் சொல்லவும் செய்வார். இந்தக் கூறுகள் இக்கலைகளைத் தொடர்ந்து பாதுகாத்துவந்திருக்கின்றன.
குறுங்குடி மடத்திலிருந்த பழைய கைசிக ஓலைப் பிரதியையும் கேரளப் பல்கலைக்கழகத்தின் கையெழுத்து நூலகத்தில் இருந்த ஒரு பிரதியையும், மரபு வழியே நடத்திய நாடகத்தின் ஒலிப்பதிவையும் ஒப்புநோக்கி ஒரு மூலப் பிரதியை ராமானுஜம் தயாரித்திருக்கிறார். அரங்கம் அறக்கட்டளை உதவியுடன் காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது (2014).
குறுங்குடி ஜீயர் மடத்து ஓலையில் வீரபத்திர நட்டுவனார் பெயர் இருந்தாலும், இந்தப் பிரதியின் ஆசிரியர் அவர் அல்ல. இந்த நாடகம் ராமானுஜரின் சீடர் பராசர பட்டரின் மணிப்பிரவாள நடை போன்ற ஒரு நடையில் அமைந்திருக்கிறது. கலித்துறை, வெண்பா, சிந்து பாடல் வடிவங் களும் வருகின்றன.
கொடுத்த வாக்கு
கைசிக நாடகக் கதை இதுதான்: நம்பாடுவார் ஒடுக்கப் பட்ட குலத்தில் பிறந்தவர். குறுங்குடி அழகிய நம்பியைப் பாடுவதையே வழக்கமாகக்கொண்டிருந்தவர் அவர். ஒருமுறை நம்பாடுவார் நேரம் தவறி இரவில் காட்டு வழியில் வரும்போது, பிரம்மராட்சசன் தடுக்கிறான். அவன் பிராமணன்; யாகத்தைத் தவறாகச் செய்ததால் சாபம் பெற்றவன். ராட்சசன் நம்பாடுவாரை நிறுத்தி, உன் உடலைப் புசிக்கப்போகிறேன் என்கிறான். நம்பாடுவாரோ நான் அழகிய நம்பியைப் பாடிச் சேவித்துவிட்டுத் திரும்பி இதே இடத்துக்கு வருவேன்; அப்போது நீ என்னைப் புசித்துக்கொள்ளலாம் என்கிறார். ராட்சசனும் நம்பாடுவார் சொன்னதை நம்பி அனுப்புகிறான்.
நம்பாடுவார் நம்பியைச் சேவித்தார். பின் ராட்சசனிடம் செல்லப் புறப்பட்டார். காட்டு வழியே அவர் நடக்கும்போது முதியவரின் வேடத்தைத் தாங்கி வருகிறார் திருமால். "வழியில் ராட்சசன் ஒருவன் நிற்கிறான். வேறு வழியில் போய்விடு" என்கிறார். நம்பாடுவாரோ, "மாட்டேன், ராட்சசனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டேன்; அவனைச் சந்திக்கத்தான் போகிறேன்" என்கிறார்.
நம்பாடுவாரைப் பார்த்தபோது ராட்சசனின் மன நிலை மாறிவிட்டது. நம்பாடுவாரைப் புசிக்க அவன் விரும்ப வில்லை. அழகிய நம்பியின் முன் அவர் பாடிய பாடலைத் தற்போது பாடுமாறு கேட்கிறான். நம்பாடுவார் மறுக்கிறார். தொடர்ந்து இருவரும் உரையாடுகிறார்கள். ராட்சசன் தன் பாவம் தீர நம்பாடுவாரின் புண்ணியத்தைத் தானம் கேட்கிறான். இறுதியில் நம்பாடுவார், பிராமணனாகிய பிரம்ம ராட்சசனுக்கு அருள் வழங்குகிறார்.
சூடிக் களைந்த பூமாலை
இந்த நாடகத்தின் கதை விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் எழுதிய 'ஆமுக்த மால்யதா' (சூடிக் களைந்த பூமாலை தந்தவர்) என்னும் தெலுங்கு காவியத்திலும் வருகிறது. 'ஆமுக்த மால்யதா' கி.பி. 1515 1520 ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆண்டாளின் கதையைக் கூறும் இந்தக் காவியத்தில் யமுனாச்சாரியார் கதையும் (ராமானுஜரின் குரு) வருகிறது. 'ஆண்டாள் முகத்தில் சோகம்' என்ற ஒரு நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டு, தாசரியின் (நம்பாடுவார்) கதையைக் கூறுகிறார் கிருஷ்ண தேவராயர். 'ஆமுக்த மால்யதா' கூறும் கதை குறுங்குடி மூலக் கதையிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது. இந்தக் காவியப் பாடல்கள் நாடகத்தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கின்றன.
குறுங்குடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இந்த நாடகம், இந்தக் கார்த்திகையிலும் நடந்தது. நான் முதலில் இந்த நாடகத்தைப் பார்த்தபோது குறுங்குடி நம்பியுடன் குறைவான பார்வையாளர்களே இருந்தார்கள். இந்த ஆண்டு, கடந்த செவ்வாய்க் கிழமை இரவில் ஆரம்பித்து, புதன்கிழமை அதிகாலை நேரம் வரை நாடகம் நடந்தது. கைசிக நாடகம், கலையும் சடங்கும் இணைந்த ஓர் அற்புதக் கலவை. மண்டபம் நிரம்பிவழிந்ததைப் பார்த்த போது இன்னும் கொஞ்ச காலமாவது இந்த நாடகம் உயிர் வாழும் என்ற சிறு நம்பிக்கை பிறந்தது.
- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர், 'சடங்கில் கரைந்த கலைகள்', 'சிவாலய ஓட்டம்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: perumalfolk@yahoo.com | படங்கள்:திருப்பதிசாரம் சுந்தரம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT